அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கொரோனாவால் சறுக்கிய துறைகள் மீளுமா?

கொரோனாவால் சறுக்கிய துறைகள் மீளுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனாவால் சறுக்கிய துறைகள் மீளுமா?

- சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு இயக்கம்

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்ததால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கைச் செயல்படுத்திவருகின்றன. பல்வேறு துறைகளின் நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன. ஏராளமானோர் வேலையை இழந்து, சொல்ல முடியாத துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். மக்களும் தமிழ்நாடு அரசும் மீண்டெழ வேண்டும். அதற்கு என்னதான் தீர்வு?
- சுரேஷ் சம்பந்தம்
- சுரேஷ் சம்பந்தம்

தப்பிப் பிழைத்த தமிழ்நாடு!

கொரோனா இரண்டாவது அலையிலும்கூட தமிழ்நாடு வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு தப்பிப் பிழைத்திருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள அனைவரும் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், பொருளாதாரம் மீளவும், வேலைவாய்ப்புகள் புத்துயிர் பெறவும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. அதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைத்து, மையங்களை அதிக அளவில் அரசு ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே உள்ள பயத்தைப் போக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றால் முதலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது சுற்றுலாத்துறையே. இந்தத் துறையைச் சேர்ந்த சுமார் 50 சதவிகிதம் பேர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அடுத்ததாக உணவகங்கள், உணவு விடுதிகள், சில்லறை வர்த்தகம், கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய ஐந்து துறைகள் பாதிப்புக்குள்ளாகி யிருக்கின்றன. இவற்றில் சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் துறை ஆகியவை முழு ஊரடங்கை நீக்கிக்கொண்ட பிறகு மீண்டுவிட வாய்ப்புகள் அதிகமுண்டு. ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடையது கட்டுமானத்துறை. சென்னை உட்பட பல இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் இன்னும் விற்காமலேயே உள்ளன. அதற்குக் குறைந்தது இரண்டு வருடங்களாவது பிடிக்கும். அதனால், ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டாலும்கூட புதிய கட்டுமானப் பணிகள் உடனடியாக நடக்காது. இதனால், அதுசார்ந்த தொழில்களும், தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆகவே, கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நல்லது.

கொரோனாவால் சறுக்கிய துறைகள் மீளுமா?

தமிழ்நாட்டில் ஆண்களும் பெண்களும் சமமாகக் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர் (GER - Gross Enrollment Ratio) அதிகமாக உள்ளது. அதாவது, பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்று சேருபவர்கள் அதிகம். தமிழ்நாட்டில் படித்த பெண்களில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தர வேலைகளில் இருக்கிறார்கள். மீதியுள்ள 70 சதவிகிதப் பெண்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் கொரோனா பெருந்தொற்றால் தங்களுடைய வேலைகளை இழந்திருக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தருபவர்களாக இருந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. நாடு முழுவதும் 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 23 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

CMIE (Centre For Monitoring Indian Economy) நடத்திய மற்றோர் ஆய்வில், ‘2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன’ என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதில், மாத ஊதியம் பெறும் 34 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் எட்டு சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இப்படி கொரோனா தொற்று பாதிப்பால் 2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் கீழே (-7.3%) சென்றுவிட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பெருந்தொற்றுக்கு இடையேயும் நல்லது நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் ‘ப்ளூ காலர்’ வேலைகள் எனப்படும் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்குச் செல்வதில்லை. இந்த வேலைகளை வடமாநில இளைஞர்களே அதிகம் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏற்பட்ட வேலையிழப்பால் தமிழ்நாட்டுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் சுமார் 530 பொறியியல் கல்லூரிகளும் 600-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றுவரும் மாணவர்கள் பெரும்பாலும் `வொயிட் காலர்’ வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். முழு ஊரடங்கால் இந்தத் துறை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

பிரபல வேலை தேடும் சமூக வலைதளமான ‘லிங்க்டுஇன்’-ல் இப்போதும் இந்திய அளவில் 4,80,000, தமிழ்நாட்டில் 36,000, கர்நாடகாவில் 1,30,000 வேலைவாய்ப்புகள் தயாராக இருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள தகுதியுள்ள எவரும் பக்கத்திலுள்ள பெங்களூரில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். அதுமட்டுமல்ல, வீட்டிலிருந்தே பணியாற்ற ‘ஃப்ரீலேன்ஸர்.காம்’, ‘அப்வொர்க்.காம்’ (freelancer.com, upwork.com) ஆகிய இரண்டு இணையதளங்கள் பெரிய அளவில் உதவுகின்றன. அதேபோல உங்களுடைய அறிவை, திறனை மேலும் வளர்த்துக்கொள்ள udemy.com மற்றும் udacity.com போன்ற இணையதளங்களை அணுகலாம். இவற்றில் சில இலவசமாகவும் கிடைக்கின்றன. பல படிப்புகளுக்குக் குறைந்தபட்ச கட்டணத்தையே நிர்ணயித்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் மட்டுமே வருமானமல்ல!

மதுக்கடை விஷயத்தில் என்னுடைய பார்வை வேறு. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது என்னைப் பொறுத்தவரை சாத்தியமேயில்லை. மதுக்கடைகள் வழியாக ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டுகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 லட்சம் கோடி ரூபாய். இந்த 18 லட்சம் கோடி ரூபாயில் 30,000 கோடி என்பது மிகச் சொற்பமே. `எதற்கு ஜி.டி.பி-யோடு ஒப்பிடுகிறீர்கள்... அதற்குப் பதிலாக தமிழ்நாட்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடலாமே?’ என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

தமிழ்நாட்டின் பட்ஜெட் ரூ.2.5 லட்சம் கோடி. பட்ஜெட்டுக்காக ஒன்றிய அரசிடமிருந்து 50,000 கோடி ரூபாய் கடன் வாங்குகிறோம். ஆக, மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், மதுக்கடைகள் வழியாக வரும் வருமானம் என்பது வெறும் 30,000 கோடி மட்டுமே. இது கிட்டத்தட்ட 10 சதவிகிதத்துக்கும் குறைவு. ஆனால், நம் சமூகத்தின் பொதுப்புத்தியில் தமிழ்நாடு அரசு மதுக்கடை வருமானத்தால்தான் இயங்குகிறது என்பதுபோல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்கத் தவறான புரிதல். தேவைக்கு அதிகமாகவே நமது ஆற்றலை மதுக்கடைகள் குறித்துப் பேசுவதில் செலவிடுகிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும்.

நார்டிக்ஸ் நாடுகளான டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்றவற்றில் சோஷலிச சிந்தனைகள் வேரூன்றி இருக்கின்றன. எனவே, அங்கேயுள்ள அரசாங்கங்கள் மதுக்கடைகளை தாங்களே ஏற்று நடத்துகின்றன. அதிலிருந்து வரும் வருமானத்தை மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வுக்கும் செலவிடுகின்றன. மதுக்கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால், அதனால் கிடைக்கும் வருவாய் சுயநல லாபத்துக்குத்தான் பயன்படுமே தவிர, மக்களின் நலனுக்குப் பயன்படாமலேயே போய்விடும். ஆகவே, மதுக்கடைகளை அரசே நடத்துவதுதான் சரியானது. நார்டிக்ஸ் நாடுகளின் அரசுகளின் முன்மாதிரியைக் கொண்டுதான் தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை நடத்துகிறது.

கடன் சுமைக்கு என்ன தீர்வு?

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடுபோலத்தான். கிட்டத்தட்ட ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பிரான்ஸ், ஜெர்மனிபோல தமிழ்நாட்டின் பரப்பளவும் இருக்கிறது. உணவு, உடை, கலாசாரம், மொழி எனத் தனித்த அடையாளங்கள் பிரான்ஸ், ஜெர்மனிக்கு இருக்கின்றன. ஆனால், அவை ஐரோப்பிய யூனியனால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதுபோலத்தான் தமிழ்நாடும். இந்தியாவையும் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். ஆகவே, வீட்டு பட்ஜெட்டைப்போல நாட்டின் பட்ஜெட்டை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் சறுக்கிய துறைகள் மீளுமா?

கூடுமானவரை வீட்டு பட்ஜெட்டில் கடனைத் தவிர்ப்பது நல்லது. அதை நாட்டின் பட்ஜெட்டோடு ஒப்பிடக் கூடாது. ஏனென்றால், மேக்ரோ எகானமிக்ஸ் பட்ஜெட்டும், ஃபேமிலி பட்ஜெட்டும் வேறு வேறு. ஆக, தமிழ்நாட்டின் மீதான கடன் சுமை ஒரு பிரச்னையே அல்ல. நாம் நிறைய கடன் வாங்கலாம். எந்த அளவுக்கு என்றால், தமிழ்நாட்டின் ஜி.டி.பி எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்குக் கடன் வாங்கலாம். ஆனால், நாம் வாங்கும் கடனைக் கொண்டு தமிழ்நாட்டுக்கு என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். வாங்கும் கடனை தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் மற்ற தொழில் சார்ந்தவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். இதை அஸெட் இன்வெஸ்ட்மென்ட் என்பார்கள். அதாவது, கடன் வாங்கி அதன் வழியே வருமானத்தைப் பெருக்க வேண்டும். இவையெல்லாம் நிறைவேறினால், விரைவில் நாம் மீள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை!