
ஆன்லைன் ஷாப்பிங்
`சேமிப்போ செலவோ... இனி எல்லாமே ஆன்லைன்தான்’ என மாறிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது.
ஜவுளி நிறுவனங்கள் பலவும் இப்போது தங்கள் பிராண்டின் ஆன்லைன் ஷாப்பிங்கை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அப்படியொரு ஜவுளி நிறுவனத்தின் ஆன்லைன் பொறுப்பாளர் சுஷ்மிதா பொல்லினேனி.
‘`2011-ம் ஆண்டு நவம்பர் மாதம். அப்பாவிடம் சென்று, `எதிர்காலம் முழுக்க முழுக்க ஆன்லைன் ஷாப்பிங்காதான் இருக்கப் போகுதுப்பா. நாமும் நம்ம ஆன்லைன் தளத்தில் கவனம் செலுத்தணும்’ என்று சொன்னேன். ஆன்லைன் ஷாப்பிங்மீது அப்பாவுக்கு அப்போது நம்பிக்கை இல்லை. என்றாலும், எனக்கு சப்போர்ட் செய்தார். அந்த நம்பிக்கையை, இன்று நான் காப்பாற்றியிருக்கிறேன்’’ என முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் சொல்கிறார் மகள் சுஷ்மிதா. அப்பா... சென்னை, குமரன் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.கேசவன். ஆன்லைன் ஷாப்பிங் பணிகள் தவிர, ‘பொல்லினேனி’ என்கிற புதுமையான ஆன்லைன் சில்க்ஸ் ஸ்டோரையும் நிர்வகித்து வருகிறார் இவர்.

``இ.து முழுக்க முழுக்க பட்டு மெட்டீரியலுக்கான தளம். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், பார்ட்டி சில்க்ஸ், பிரின்டட் சில்க்ஸ், சில்க் லெஹங்காஸ், டிசைனர் பிளவுஸ்கள், குழந்தைகளுக்கான பாரம்பர்ய பஞ்சகச்சம் என அனைத்து வகை பட்டுகளும் ஆன்லைனில் கிடைக்கும்” எனும் சுஷ்மிதா, ஆன்லைன் பிசினஸ் அனுபவங்களைப் பகிர்கிறார்.
‘`மற்ற துணிகளைப்போல, பட்டை அதன் நிறத்துக்காகவோ, டிசைனுக்காகவோ மக்கள் வாங்க மாட்டார்கள். அதன் தன்மைக்காகவே வாங்குவார்கள். அதை அறிய, பட்டைத் தொட்டுப்பார்க்க வேண்டியிருக்கும். அப்படி யிருக்கும்போது, `ஒன்லி ஆன் ஆன்லைன்’ என்கிற என் கான்செப்டை, `தொட்டுப் பார்க்க முடியாது’ என்பதற்காகவே மக்கள் நிராகரித்துவிடும் அபாயம் அதிகம். இருப்பினும், எப்படியாவது இதில் வாடிக்கையாளர் திருப்தியைப் பெற வேண்டும் என நினைத்தேன்.

இதில் நிறைய சிரமங்கள் இருந்தன. மிகப்பெரிய சிரமம் என்னவெனில், கஸ்டமர்ஸ் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். டே-லைட், நைட்-லைட், லோ-லைட் என அவர்கள் கேட்கும் லைட்டிங்கில், அவர்கள் விரும்புகிற ஆங்கிளில் வைத்து போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்து அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். சிலருக்கெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பியிருக்கிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சோர்வின்றி பதில் தருவோம். அந்தப் பொறுமைக்குக் கிடைத்த பரிசே, எங்கள் வெற்றி’’ எனக் கூறும் சுஷ்மிதா, அடிப்படையில் லாஜிஸ்டிக்ஸ் பட்டதாரி. ஃபேஷன் கோர்ஸும் பயின்றிருக்கிறார். இப்்போது நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் ஃபேஷன் டிசைனராக இருக்கிறார் சுஷ்மிதா.
இனி பட்டில் என்ன டிரெண்ட் எதிர்பார்க்கலாம்?
‘`இதுவரை பட்டில் பேஸ்டல் கலர், சாஃப்ட் சில்க்ஸ் ஆகியவை டிரெண்டாக இருந்தன. இனி ஃபியூஷன் காஸ்ட்யூம்ஸ் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கலாம். உதாரணமாக ஆர்கான்ஸா - லினெனில் காஞ்சிபுரப் பட்டு, கலம்காரி காஞ்சிபுரப் பட்டு, இக்கட் (Ikat) காஞ்சிபுரம் பட்டு போன்றவை.

ஜாம்தானி (Jamdani), பனாராஸ், போச்சம் பள்ளி (Pochampally) பட்டு வகைகளில், பழைமையான டிசைன்ஸ், கலர்ஸை சமீபமாக மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் வின்டேஜ் கலர்ஸ், டிசைன்ஸுக்கு இந்த வருடம் நிறைய ஸ்கோப் இருக்கிறது.
பட்டு எந்தவொரு ஃபேப்ரிக்குடனும் பிளெண்ட் ஆகிவிடும் என்பதால், சில்க்ஸ் மற்றும் ரா சில்க்ஸில் சல்வார், கவுன், அனார்கலி போன்றவற்றுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. இது இந்த வருடம் இன்னும் கூடலாம்.

பேஸ்டல் கலர் மீதான க்ரேஸ், இன்னும் அதிகமாகும். ஆச்சர்யப்படும் வகையில் மக்கள் டார்க் நிறங்களில் ஆர்வம் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பார்ப்போம்!”
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
முதலில் பட்ஜெட்டை முடிவு செய்து கொள்ளுங்கள்.
எந்த நிறத்தில், என்ன ஃபேப்ரிக்கில் உடை வேண்டும் என்பதை முடிவு செய்து அதன் அடிப்படையில் தேடலைத் தொடங்குங்கள். உங்கள் மனதுக்கு நிறைவு கிடைக்கும் வரை சலிப்பின்றித் தேடலாம்.
சிலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறம், டிசைன் எவை போற்றவற்றில் குழப்பம் இருக்கும். ஷாப்பிங் செய்யும் தளத்தில், உங்களுக்கான உடைகளைப் பரிந்துரைக்கும் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் இருக்கிறாரா என்று செக் செய்து அவரிடம் ஆலோசனை பெறலாம்.
ஷாப் செய்யப்போகும் ஆன்லைன் பிராண்டின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும். பட்டு எனில், அது ப்யூர் ஜரி என்பதை உறுதி செய்யவும்.
துணி விஷயத்தில் எத்தனை சந்தேகங்கள் இருந்தாலும் கேட்கவும். கஸ்டமர் சர்வீஸ் சரியில்லாத தளங்களைத் தவிர்க்கவும்.
ரிட்டர்ன் பாலிசி குறித்து முழுமையாக அறியவும்.
முக்கியமான விசேஷங்களுக்காக அதிக விலை, அதிக எண்ணிக்கையிலான பட்டாடைகள் என ஷாப்பிங் செய்பவர்கள், அனைத்து நிலை பரிசோதனைகளுக்குப் பிறகும், வாய்ப்பிருப்பின் ஒருமுறை நேரில் சென்று துணியைப் பார்த்துவிடுவது நல்லது.