தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

230 பில்லியன் டாலர்... இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு!

பொருளாதாரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதாரம்...

பொருளாதாரம்

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று சொன்னது அந்தக் காலம். மத்திய அரசின் ஆயிரம் கெடுபிடிக்கு இடையிலும் தென் இந்தியா அதிலும் குறிப்பாக, தமிழகம் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுவருகிறது என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக வெளியாகி இருக்கும் புத்தகம்தான் இப்போது பரபரப்பாக விற்பனை ஆகிறது. `தெற்கும் வடக்கும் – இந்தியாவின் பெரும் பிளவு’ (South Vs North: India’s Great Divide) என்பதுதான் இந்தப் புத்தகத்தின் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் நீலகண்டன், தரவுகள் பகுப்பாய்வில் நிபுணத்துவம் கொண்டவர்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

‘ஒரே நாடு, ஒரே வரி’, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என எல்லாவற்றையும் ‘ஒரே’மயமாக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசாங்கம். ஆனால், இந்த முயற்சி நம் நாட்டுக்கு எந்த வகையிலும் சரிப்பட்டு வராது என்பதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு, நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான வளர்ச்சி நிலையில் இருப்பதுதான். சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கின்றன என்பதை இந்திய அரசு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் பல தரவுகளின் உதவியோடு சொல்லியிருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் நீலகண்டன். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் மற்ற மாநிலங் களைவிட தமிழகம் எந்தளவுக்கு சிறப்பாக இருக்கிறது என இந்தப் புத்தகம் சொல்வதைப் பார்ப்போம்.

விவசாயத்தில் தமிழகம்...

நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பொருளாதாரத்தில் வேளாண்மைத் துறையானது முக்கியமான பங்கு வகித்தது என்றாலும், பல காரணங்களால் இன்றைக்கும் இத்துறையானது பல பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பதுடன் அதிகமான மக்கள் ஈடுபட்டிருக்கும் துறையாகவும் இருந்துவருகிறது. மத்தியப் பிரதேசத்தின் மாநில உற்பத்தியில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 21% ஆகும். ஆனால், இது தமிழ்நாடு, கேரளாவில் 4 சதவிகிதமாகவும், தெலங்கானா, மகாராஷ்டிராவில் 5 சதவிகித மாகவும் இருக்கிறது.

‘‘கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் உணவு உற்பத்தியை மட்டுமே பிரதானமாக நம்பியிருந்த எந்த நாடும் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையவில்லை. அதற்காக, வேளாண்மை தேவையில்லை என அர்த்தமில்லை. ஆனால், அத்துறை சந்தித்துவரும் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வு உருவாக்க அந்தந்த மாநிலங்களிடம் விட்டுவிடுவது நல்ல பலனை அளிக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

இந்தியாவிலேயே நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டிலும் கேரளாவில் சுமார் 48% ஆகும். எந்த மாநிலம் விவசாயம் சார்ந்து இருக்கிறதோ, அந்த மாநிலத்தில் நகரமயமாக்கல் மிகவும் குறைவு என்பதுடன், மாநில உற்பத்தியின் விகிதமும் குறைவாக இருக்கும் என்பதைப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

230 பில்லியன் டாலர்... இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு!

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழகம்...

அடுத்து, வேலைவாய்ப்பு. இந்தியப் பொருளா தாரத்தின் பெரிய துறையான விவசாயத் துறையில் அதிக மக்கள் வேலை செய்துவந்தாலும் அதிலிருந்து வரும் வருமானம் குறைவாகும். எனவே, மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு என்பது முக்கியமாகும்.

2011-12 முதல் 2017-18 வரையான காலத்தில் 10 மில்லியனில் இருந்து 14 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டன. அதாவது, வருடத்துக்கு சராசரி யாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆண்டுதோறும் கல்லூரியில் படித்துவிட்டு, வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை சுமார் 1.25 கோடி ஆகும். கல்லூரி செல்லாமல் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களின் எண்ணிக்கை இதைவிட நான்கு மடங்காகும்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை தேவைப்படும் எண்ணிக்கையில் ஒரு சிறு துளிதான். வன்முறை மற்றும் புரட்சி ஏற்பட்ட நாடு களை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமாக இருந்த பல காரணங்களில் வேலையின்மை யும் ஒன்றாகும்.

2017-18-ம் ஆண்டு கணக்கின் படி, தமிழகத்தில்தான் தொழிலா ளர்களின் எண்ணிக்கை (20.95 லட்சம்) அதிகமாகும். இதை அடுத்து, மகாராஷ்டிரா (14.14 லட்சம்), குஜராத் (14.03 லட்சம்). தொழில்ரீதியில் வளர்ச்சி யடைந்த மாநிலங்களின் உற்பத் தியில் வேளாண் துறையின் பங்கு குறைவாகவும், உற்பத்தி, சேவை, தொழில்துறைகளின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 22%, குஜராத் 32.6%, மகாராஷ்டிரா 20.3%, உத்தரப் பிரதேசம் 16.3%, பீகார் 8% ஆகும். ஆக, தமிழ்நாடு மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் தொழிற் சாலைகள் என வரும்போது தமிழ்நாட்டில் 37,787 தொழிற் சாலைகளும் குஜராத்தில் 26,586 தொழிற்சாலைகளும் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

230 பில்லியன் டாலர்... இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு!

சராசரி வருமானமும் அதிகம்...

சராசரி தினக்கூலி (வேளாண் துறை சாராத மற்ற தொழில்கள்) தமிழ்நாட்டில் ரூ.438, குஜராத்தில் ரூ.234, கேரளாவில் ரூ.670 ஆகும். அதிக மக்கள் தொகையும் அதிக பிறப்பு விகிதமும் உள்ள மாநிலங் களின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் என்பது உண்மையாகும்.

‘‘உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங் களின் ஜனத்தொகை சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமாகும். இது அமெரிக்க மக்கள் தொகையைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகும். இந்த மாநிலங்கள் அனைத்திலும் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சுமார் 39,254 ஆகும்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 37,787 தொழிற்சாலைகள் இருக் கின்றன. இதனால்தான் `ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற ஒரே கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது’ என முக்கியமான புள்ளிவிவரத்தைத் தந்து நம்மை அதிர வைக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

வரி இழப்பை ஏற்படுத்திய ஜி.எஸ்.டி...

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதுடன், அதிக வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும் என்று சொல்லி அனை வரையும் நம்ப வைக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது விவர மறிந்த அனைவருக்கும் தெரியும்.

ஜி.எஸ்.டி வரிமுறையானது வரி வசூலிப்பை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து பொருள்களையும், சேவை களையும் நுகரும் இடத்துக்கு மாற்றியது. இதனால் தமிழ் நாட்டில் அல்லது மகாராஷ்டி ராவில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு அந்த மாநிலங் களால் வரி வசூலிக்க முடிய வில்லை. இதனால் உற்பத்தி அதிகமாக நடை பெற்று வந்த மாநிலங்கள் நிதிப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டன.

அந்த மாநிலங்கள் வகுத்த சமூகநலக் கொள்கைகளை அந்த மாநிலங்களில் நிறைவேற்ற நிதி போதவில்லை. இதனால் தமிழகத்துக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கேரளா எனப் பல மாநிலங்களுக்கும் பிரச்னைதான்.

230 பில்லியன் டாலர்... இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு!

நல்ல சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்...

‘‘எந்தவொரு அரசும் அதனுடைய குடிமக்களின் பொருளாதார நலத்தை மேம்படுத்த வேண்டுமெனில், ஆரோக்கியத்தையும், உற்பத்தித்திறன் கொண்ட வேலையைப் பெறக்கூடிய கல்வியையும் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். போட்டி போட்டுக் கொண்டு மாநிலங்கள் நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் கற்பனைக்கெட்டாத அளவுக்கு பல சலுகைகளை முதலீட்டாளர்களுக்கு அளிப்பதென்பது நீண்ட காலப் பார்வையில் பொருளாதார ரீதியில் அந்த மாநிலங்களுக்கு இழப்பாகும்.

இதற்கு மாறாக அரசும், நல்ல ஆளுகையும், தொழில் ஆரம்பிக்க சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது நீண்ட கால நோக்கில் பல நல்ல பலன்களைக் கொடுப்பதாக அமையும்’’ என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

ஆக, சுகாதாரம், கல்வி, சமூக நலனில் அக்கறை கொண்டு பல பிரச்னைகளுக்கிடையே செயலாற்றி வரும் மாநிலங்கள் பொருளாதார ரீதியிலும் முன்னேறிய மாநிலமாக இருக்கும் என்பதற்கு இன்றைக்கு இந்தியா விலேயே இரண்டாவது பணக்கார மாநிலமாக 230 பில்லியன் டாலர் மதிப்பு மாநில உற்பத்தியுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலங்களுக்கென்று அதிக உரிமைகளை வழங்கினால் அவற்றின் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்!