மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டார்கெட் குரோர்பதி @ 40... இளைஞர்களைப் பணக்காரர் ஆக்கும் சூப்பர் மந்திரங்கள்!

டார்கெட் குரோர்பதி @ 40
பிரீமியம் ஸ்டோரி
News
டார்கெட் குரோர்பதி @ 40

நிதி சேமிப்பு - புதிய தொடர்

பணம்... இதைக் கொண்டு சந்தோஷத்தை வாங்க முடியாது என்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், பணம் இல்லா விட்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.

மில்லினியல்கள் (Millennials) என்று சொல்லப்படுகிற இளைஞர்களின் வாழ்க்கை முறை (Lifestyle) வித்தியாசமானதாக இருக்கிறது. அவர்களில் சிலர் வாழ்க்கைக்குப் பணம் மிக முக்கியமானது என நினைக்கிறார்கள்; வேலைக்குச் சேர்ந்தவுடன் பணத்தை சேமிக்க, முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

பல இளைஞர்கள் வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல என்று நினைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை அனுப விக்கவும் அதுதொடர்பான நினைவுகளைச் சேர்த்து வைக்கவும் கண்டபடி செலவு செய்கிறார்கள். அதாவது, வேலைக்குச் சேர்ந்த உடனே வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது, அதிக விலை உயர்ந்த போன், லேப்டாப் வாங்குவது, கார் வாங்குவது என செலவு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். பலர் தங்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடுவதற் காகவே பல விஷயங்களுக்குச் செலவு செய் கிறார்கள். இதில் எது சரி, எது தவறு என அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பணம் என்பது நல்லதா கெட்டதா, அதை வாழ்க்கையில் எந்த அளவுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்கிற முடிவை இவர்களால் எடுக்க முடியவில்லை.

இப்படிக் கண்டபடி செலவு செய்பவர்களில் ஒரு பிரிவினர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், அந்தப் பணம் முழுவதையும் அந்த மாதமே செலவு செய்துவிடுகிறார்கள். இன்னொரு பிரிவினர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், ரூ.55,000 செலவு செய்கிறார்கள். அதாவது, இவர்கள் வரப்போகிற சம்பளத்தைக் கணக்கு செய்து, கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், ஓவர் டிராப்ட் கடன்களை வாங்கி செலவு செய் கிறார்கள். இந்தப் பிரிவினர் மிகப் பெரிய செலவாளிகளாக இருக்கிறார்கள்.

தேவை இல்லாத பொருள்களை, சம்பாதிக்காத பணத்தில் (கடன்) வாங்குவது இன்றைய இளைஞர் களிடையே காணப்படும் முக்கியமான பணப் பண்பாக இருக்கிறது. முக்கியமாக, அவர்கள் வெறுக்கும் மற்றும் அவர்களை வெறுக்கும் நபர்களைக் கவர வேண்டும் என்பதற்காகத் தேவை இல்லாத பொருள்களை கடனில் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

நமது நாட்டில் சுமார் 90% இளைஞர்கள் (Millennials) நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தாமே எடுப்பதாக டாடா ஏ.ஐ.ஏ நிறுவனம் எடுத்துள்ள அண்மை சர்வே தெரிவிக்கிறது. சுமார் 22 முதல் 25 வயது நிரம்பிய இளைஞர்களில் கணிசமானவர்கள் தன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்டு முதலீடு செய்கின்றனர். ஆனால், 25 - 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 90% நபர்களும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 95% பேரும் யாரிடமும் நிதி ஆலோசனை கேட்காமல் தாங்களே முதலீட்டு முடிவுகளை எடுப்பதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது. அதாவது, இவர்களிடம் அதிக கிரெடிட் கார்டு கடன் மற்றும் தனிநபர் கடன்கள் இருக்கின்றன.

இப்படி அவர்களே சுயமாக முதலீட்டு முடிவுகளை எடுப்பது அவர்களை நிதிச் சிக்கலில் மாட்டிவிடுவதுடன், பெரும் கடன் சிக்கலில் மாட்டவும் வைத்துவிடுகிறது. அதிலிருந்து மீண்டுவரவே பின்னர் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு இளைஞர்கள் மட்டுமே காரணம் என்று நாம் 100% சொல்ல முடியாது. காரணம், அவர்கள் இப்படி இருப்பதற்குக் பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்பும் முக்கிய மான காரணமாகும்.

டார்கெட் குரோர்பதி @ 40... இளைஞர்களைப் பணக்காரர் ஆக்கும் சூப்பர் மந்திரங்கள்!

முந்தைய தலைமுறையில் புத்தாடை என்பது வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை தான் வாய்க்கும். அதாவது, தீபாவளி, பொங்கல், குல தெய்வக் கோயில் விழா மற்றும் பிறந்த நாளின்போது மட்டுமே புத்தாடை எடுக்க முடியும்; கிடைக்கும். இன்றைக்கு அப்படி அல்ல; நினைத்தால் ஷாப்பிங் சென்று புதுப்புது ஆடைகளை வாங்குகிறோம்; ஆன்லைனில் ஆர்டர் போடுகிறோம்.

போன தலைமுறையில், வெளியில் போய் கடையில் சாப்பிடும் அனுபவத்தை எடுத்துக்கொண்டால், மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் இருக்கும். தந்தை அரசு ஊழியர் அல்லது பெரிய தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தால் சம்பளத் தேதி அன்று ஹோட்டல் சென்று சாப்பிடுவ தாக இருக்கும். முந்தைய தலை முறையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஹோட்டலில் சாப் பிட்டது, இப்போது வாரத்துக்கு மூன்று முறையாக மாறியிருக் கிறது. கிட்டத்தட்ட வார இறுதி நாள்களில் எல்லாம் ஹோட்டலில் சென்று சாப்பிடுவதாக இருக்கிறது.

முந்தைய தலைமுறையில் நடுத் தர வருமானப் பிரிவினர் குடும்பத் தில் பைக் என்பது மிகப் பெரிய ஆடம்பரப் பொருளாக இருந்தது. இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் ஆளுக்கு ஒரு பைக் ஏன் கார்கூட இருக்கிறது.

பிள்ளைகளுக்கு நிறைய செலவு வாய்ப்புகளைக் கொடுத்து அவர் களைச் செலவாளியாக்கி வைத்திருக்கிறோம். மேலும், நாம் பட்ட கஷ்டம் நம் பிள்ளைகள் படக் கூடாது என அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்து, அவர்களைக் ‘கெடுத்து’ வைத்திருக்கிறோம். இன்னும் பல பெற்றோர், பிள்ளைகள் கேட்கா மலே அவர்களுக்கு விலை உயர்ந்த செல்போன், பைக், கார் போன்ற வற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை மிகவும் மோசமாகக் கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதாவது, பெற்றோர்களும் பிள்ளைகளைத் தவறாக வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் வரவைவிட அதிகமாக செலவு செய்வதால், சேமிப்பு என்பது இல்லாமல் இருந்துவருகிறது. அவர்கள் அதிக வட்டியிலான கடன்களை வாங்கி செலவு செய்கிறார்கள். அவர் களைக் கேட்டால் ‘வாழ்க்கையை அனுபவிக்கிறோம்’ என்பார்கள். ஆனால், அவர்களின் இந்த எண்ணம் சரியா?

டார்கெட் குரோர்பதி @ 40... இளைஞர்களைப் பணக்காரர் ஆக்கும் சூப்பர் மந்திரங்கள்!

இளைஞர்களின் சேமிப்பு ஃபார்முலா...

இளைஞர்கள் அவர்களின் வருமானத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறார் எனில், அதில் 30% அதாவது, 15,000 ரூபாயை நீண்ட கால முதலீட்டுக்கு என முதலிலேயே எடுத்து வைத்து விட வேண்டும். அது பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, பணி ஓய்வுக்காலம் ஆகியவற்றுக்கான முதலீடாக இருக்கலாம். அல்லது 15, 20 வருடம் கழித்து தொடங்கப்போகிற வணிகம் அல்லது வணிகத்துக்கான மூலதனமாக இருக்கலாம்.

நாம் அனைவரும் நிகழ்காலத்தையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்; எதிர்காலத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஒரு நல்ல ஸ்மார்ட்போன் தேவை; கார் தேவை; விருந்துகளுக்கு போக வேண்டும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வேண்டும். இந்த அனுபவங்கள் எல்லாம் தேவைதான். அதை மறுப்பதற்கில்லை. அதாவது, நடப்பு வாழ்க்கை முறையும் மிக முக்கியமானதுதான். அதற்குத் தானே திங்கள்கிழமை தொடங்கி வார இறுதி வரை கஷ்டப்பட்டு உழைக்கிறோம். இது போன்ற குறுகிய காலத் தேவைகளுக்கு ஒருவர் அவரின் சம்பளத்தில் 30% தொகையை ஒதுக்க வேண்டும். ரூ.50,000 சம்பள உதாரணத் தின்படி ரூ.15,000-ஐ ஒதுக்க வேண்டும்.

இந்த ஆண்டு கோடையில் கொடைக்கானல் போக நினைக்கிறீர்கள். அதற்கு குடும்பத்துடன் சென்றுவர சுமார் ரூ.25,000 ஆகலாம். இந்த நிலையில், மூன்று மாதம் ரூ.15,000 வீதம் சேர்த்தால், மொத்தம் ரூ.45,000 சேர்ந்துவிடும். இதைக் கொண்டு கொடைக்கானல் சென்று சுற்றிப் பார்ப் பதுடன், நன்றாகச் செலவு செய்யவும், அனுபவிக்கவும் சொகுசாகவும் இருந்துவிட்டு வரவும் முடியும்.

எந்த ஒரு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட காலத் தேவை என்றாலும் பணத்தைச் சேர்த்து வைத்து, முதலீடு செய்வதன் மூலம் செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். தேவை இல்லாமல் கடனில் சிக்கக் கூடாது!

மீதம் இருக்கிற 40% தொகையை குடும்பச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, ரூ.50,000 சம்பளத்தில் 20,000 ரூபாயைக் கொண்டு வீட்டு வாடகை, இதர குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். பெற்றோருடன் இருக்கிறீர்கள் எனில், இந்தத் தொகையை தேவையின் அடிப்படையில் பெற்றோருக்கு அவர்களுக்குத் தேவையான செலவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அந்தத் தேவை இல்லை எனில், மிச்சமாகும் பணத்தை நீண்ட கால சேமிப்புக்கு மாற்றிவிட வேண்டும். அப்போது தான் சுமார் 22-25 வயதில் வேலைக்கு சேர்ந்தால் கிட்டத் தட்ட 40, 45, 50 வயதிலாவது கோடீஸ்வரர் ஆக முடியும்.

இளைஞர்கள் அவர்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தை எதிர்காலத்துக்கும், 30 சதவிகிதத்தை நிகழ்கால விஷயங் களை அனுபவிக்கவும், 40% தொகையை குடும்பச் செலவு களுக்கும் எனப் பிரித்து செலவு செய்யும்போது, அது நல்லதோர் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கும்!

(குரோர்பதி ஆவோம்)