இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 7.85 லட்சம் கட்டிய புது வீடுகள் விற்காமல் அப்படியே உள்ளது என்ற தகவல் ரியல் எஸ்டேட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராப்டைகர் (Proptiger) என்ற பிரபல வீட்டு தரகு நிறுவனம் விற்கப்படாத வீடுகள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் செப்டம்பர் 30, 2022 வரை சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 7,85,260 கட்டிய வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. கடந்த காலாண்டில் (ஏப்ரல் - ஜூலை) 7,63,650 கட்டிய வீடுகள் விற்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு அகமதாபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 24 மாதங்களில், கொல்கத்தாவில் குறைந்தளவு விற்கப்படாத கட்டிய வீடுகள் இருப்பதாகவும், டெல்லியில் கடந்த 62 மாதங்களாக விற்கப்படாத கட்டிய வீடுகள் அதிகமாக உள்ளது என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

சென்னையில் 32,180 கட்டிய வீடுகள் கடந்த 27 மாதங்களாக இருக்கின்றன என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
அகமதாபாத்தில் 65,160 கட்டிய வீடுகளும்,
பெங்களூருவில் 77,260 கட்டிய வீடுகளும்,
டெல்லியில் 1,00,770 கட்டிய வீடுகளும்,
ஹைதராபாத்தில் 99,090 கட்டிய வீடுகளும்,
கொல்கத்தாவில் 22,530 கட்டிய வீடுகளும்,
புனேவில் 1,15,310 கட்டிய வீடுகளும் விற்கப்படமால் அப்படியே இருக்கின்றன. மேலும் இந்த ஆய்வை நடத்திய ப்ராப்டைகர் நிறுவனம், இந்த 8 நகரங்களில் உள்ள கட்டிய வீடுகளை முழுமையாக விற்க இன்னும் 32 மாதங்கள் ஆகலாம் என்று கணித்துள்ளது.