இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான நபர்களிடமிருந்து ரூ.48,000 கோடி அளவுக்கு நிதி திரட்டி நிலம் தருவதாக ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் விவகாரம் 8 ஆண்டுகளாகியும் முடியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துவிட்டு திரும்பக் கிடைக்காமல் மோசடிக்குள்ளான தமிழக மக்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள செபி அலுவலகத்தை ஆண்டுக்கு இரண்டு முறை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் கடந்த வாரம் புதன்கிழமை அன்றும் பி.ஏ.சி.எல் மோசடிக்கு ஆளான மக்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
இந்த முறை போராட்டத்தை தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைத்திருந்தது. போராட்டம் குறித்து விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடிவேலு பேசினார்.
``2014-ல் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் மோசடிகள் அம்பலமாயின. பி.ஏ.சி.எல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து செபி நடவடிக்கை எடுத்து நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கியது. அதோடு பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளையும் கைப்பற்றி செபியிடம் ஒப்படைத்தது.

இந்தச் சொத்துகளை விற்று பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் தருவோம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிட லோதா கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. முதலீடு செய்தவர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் வாங்கிக் கொண்டார்கள்.
பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளும் கைவசம் உள்ளன. அவற்றை விற்று மக்களுக்கு கொடுப்பதில் யாருக்கு என்ன பிரச்னை என்று புரியவில்லை.
முதலீடு செய்தவர்களில் பலர் இறந்துவிட்டனர். இப்போது அவர்களுடைய குடும்பத்தினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படியே தலைமுறை தலைமுறையாக வந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலையில் எழுதியிருக்கிறதா? மத்திய அரசும் செபியும் விரைவில் நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணம் எங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தடுத்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் செபிக்கும் இருக்கிறது. எனவே, விரைவில் நடவடிக்கை எடுத்து முதலீடு செய்தவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, தமிழகம் முழுக்க இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களிடம் பணத்தைக் கட்டி ஏமாறாமல் இருக்க, மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்!