இந்தியாவின் ஐ.டி திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லி நிரூபித்தவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. 76 வயதான அவர் தனது வெற்றி ரகசியத்தை இப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வெற்றி ரகசியம் என்ன தெரியுமா?
தான் தொடங்கிய தொழில் மீது அவர் காட்டிய அக்கறைதான் அந்த வெற்றிக்குக் காரணம். பொதுவாக, பிசினஸ்மேன்கள் தங்கள் அலுவலகத்துக்கு எப்போது போவார்கள்?

பலரும் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்விடுவார்கள்; இன்னும் சிலர் காலை 9 மணிக்கே போய்விடுவார்கள். ஆனால், நாராயண மூர்த்தி தினமும் எத்தனை மணிக்கு தன்னுடைய அலுவலகத்துக்குப் போவார் தெரியுமா? காலை 6.20 மணிக்கு... பெங்களூரின் நடுங்கும் குளிரில் அந்த அதிகாலை வேளையில் அவர் அலுவலகம் போனால், அன்றையை வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டு, இரவு 8 - 9 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.
இப்படி தினமும் 14 மணி நேரம் வேலை செய்வதை அவர் சில ஆண்டுகளுக்கு மட்டும் செய்யவில்லை. நிறுவனத்தை ஆரம்பித்தது தொடங்கி, அவர் ஓய்வு பெற்ற 2011-ம் ஆண்டு வரை செய்தார் என்பது ஆச்சர்யமான தகவல்.
அது மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்புவதற்கு பல தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தைக் கட்டியெழுப்ப அவர் செய்த மிகப் பெரிய தியாகம், அவரின் இரு குழந்தைகளும் வளரும்போது அவர்களுடன் போதிய அளவு நேரத்தை செலவழிக்க முடியாமல் போனதுதான்.

நாராயண மூர்த்திக்கு ஒரே ஒரு மகன், ஒரே ஒரு மகள். மகன் ரோஷன்; மகள் அக்ஷதா. இந்த இருவரும் காலையில் எழுந்திருக்கும்போதே அப்பா நாராயண மூர்த்தி அலுவலகம் சென்றிருப்பார்; குழந்தைகள் படித்து முடித்த தூங்கச் செல்லும்போது அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வருவார் அப்பா நாராயண மூர்த்தி.
ஆனால், அப்பாவின் அலுவலகப் பணியின் நெருக்கடியைக் குழந்தைகள் உணராதபடிக்கு அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தார் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. ஒரு தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய அறிவையும், தாயிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாசத்தையும் கொஞ்சமும் குறையாமல் குழந்தைகளை வளர்த்தார் சுதா மூர்த்தி.
அது மட்டுமல்ல, ``குழந்தைகளின் அனைத்து சான்றுகள், அவர்களின் அனைத்து சாதனைகள், அவர்களின் முனைவர் பட்டம் (Ph.D), அவர்களின் ஸ்டான்போர்ட் கல்வி, அனைத்தும் அற்புதமாக முடிந்தது அவளால்தான்” என்று தன் மனைவி சுதா மூர்த்தி பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நாராயண மூர்த்தி.

அது மட்டுமல்ல, 1981-ம் ஆண்டு தன் கணவர் நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்க ரூ.10,000 கடன் தந்ததே சுதா மூர்த்திதான். இன்று அந்த நிறுவனம் 80 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது; 3.35 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமனார், இன்ஃபோசிஸ் என்கிற மாபெரும் நிறுவனத்தை உருவாக்கியவர் என்கிற பெருமை கொண்ட நாராயண மூர்த்தி இன்றைய இளைஞர்களின் கனவு ஹீரோ என்றால் அது மிகையில்லை!