
அம்மா - மகன் கூட்டணி
“ ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற பழமொழி எங்களுக்குச் சரியா பொருந்தும்” என்று தன் இளைய மகன் கிரண் வாலன்டைனைப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறார், டினா வின்சென்ட். பருமனான உடல்வாகு உடையவர்களுக்கான பிரத்யேக ‘XXL டினா வின்சென்ட்’ ஷோரூமின் நிறுவனர். சென்னையில் இயங்கும் இவருடைய தொழிலில் இவரோடு கைகோத்து ‘கேட் வாக்’குகிறார் கிரண் வாலன்டைன்!
“பொதுவா குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கனவு காண ஆரம்பிக்கும் பெற்றோர், ஒருகட்டத்துக்குப் பிறகு தங்களின் கனவுகளைத் தாண்டி பிள்ளைகளின் திறமைக்கும் ஆர்வத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. சின்ன வயசுல என் பெற்றோர் எனக்கு எந்தளவுக்கு சப்போர்ட் பண்ணினாங்களோ, அதைவிட அதிகமா என் பசங்களுக்கு நான் சப்போர்ட் பண்ண ணும்னு நினைப்பேன்.
என் எட்டு வயசுல ஆரம்பிச்சது டிசைனிங் கனவு. விசேஷங்களுக்கும் விழாக்களுக்கும் பொதுவா எல்லாருமே ரெடிமேட் டிரஸ்தான் எடுப்பாங்க. நான் எப்பவுமே ரன்னிங் மெட்டீரியல்தான் எடுப்பேன். அதை டெய்லர்கிட்ட கொடுத்து அவர் ஆச்சர்யப்படுற அளவுக்கு டிசைன் சொல்லி தைச்சு வாங்கிப்பேன். படிப்பைப் பொறுத்தவரைக்கும் சுமாரா இருந்த நான், ஒன்பதாவதுக்குப் பிறகு சூப்பரா படிச்சேன்.

நான் காலேஜ் முடிச்ச நேரம் வீட்ல கல்யாண களை கட்டுச்சு. அக்கா, அண்ணன், நான்னு எங்க வீட்டுல அடுத்தடுத்து நடந்த மூணு கல்யாணங்களுக்கும் துணிகள் எடுக்கிறதுல ஆரம்பிச்சு, யார் யாருக்கு என்ன மாடல் டிரஸ், கலர் காம்பினேஷன்னு எல்லாத்தையும் நானேதான் டிசைட் பண்ணினேன். பாராட்டும் கிடைச்சது” என்கிற டினா கரம்பிடித்திருப்பது, பழம்பெரும் நடிகர் அசோகனின் மகன், வின்சென்ட் அசோகனை.
“திருமணத்துக்குப் பிறகு, டிரஸ் டிசைன் செய்துதரச் சொல்லி பலரும் கேட்டாங்க. என் கணவர், ‘முழுநேர வேலைங்கிற பிரஷரை விட, நேரம் கிடைக்கும்போது இதை ரிலாக்ஸ்டா பண்ணலாமே’ன்னு சொன்னார். 1999-ல் மூத்தவன் கெவின் பிறந்தபிறகு நெருக்கமானவங்களுக்கு மட்டும் டிசைன் பண்ணிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அதுக்கு அடுத்த வருஷம் ‘XXL டினா வின்சென்ட்’ ஷோரூமை ஆரம்பிச்சேன். சினிமாத்துறையில் நிறைய நண்பர்கள் இருந்தாலும், ஒரு தினசரியில் கடைத்திறப்புக்கான சிறிய விளம்பரம் மட்டுமே கொடுத்து ரொம்ப சிம்பிளா ஆரம்பிச்சேன்.
பருமனானவங்களுக்கான டிசைனர் ஷோரூம்னு ஒரு புது கான்சப்ட்ல ஆரம்பித்த தன் காரணம், எனக்குக் கிடைத்த அனுபவங்கள்தாம். நான் சின்ன வயசுல ரொம்ப குண்டா இருப்பேன். ரெடிமேட் டிரஸ்ல என் சைஸுக்குப் பொருந்திப் போற ஓர் உடை கிடைச்சா... அதன் நிறமோ, டிசைனோ எனக்குப் பிடிக்காததா இருக்கும். செலெக்ட் பண்றதுக்கும் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்காது. அதனால எனக்கான டிரஸ்ஸை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் உடை வடிவமைப்பில் எனக்கிருந்த ஆர்வமும் திறமையும் வளர ஆரம்பிச்சது. பருமனானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆரம்பித்ததுதான் இந்த ஷோரூம்” என்பவருக்கு, பிரபலங்களும் சராசரி மக்களும் கலந்தே வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
“ஒரு குடும்பத்தில் அப்பா செய்யும் பிசினஸை மகன் தொடர்வது என்பது ஆச்சர்யமான விஷயமில்லை. ஆனா, அம்மாவின் பிசினஸை மகனும் தொடர்வது என்பது பெருமைப்படும் விஷயம். கிரணால்தான் அந்தப் பெருமையை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன்னு சொல்லுவாங்க. இவன் எனக்கு ஒரு நல்ல ஃபிரெண்ட்...’’ என அவர் கிரணைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது, அம்மா - மகனுக்கு இடையே நிரம்பிக்கிடக்கும் ஃபிரெண்ட்லியான உறவு.
“அம்மாவோட வாழ்க்கையில பிசினஸ் எப்படி இயல்பா ஆரம்பிச்சதோ, அதே மாதிரிதான் எனக்கும். என்னோட 15, 16 வயசுல என்னோட டிரஸ்ஸிங் சென்ஸ், டேஸ்ட், அதில் நான் காட்டுற ஆர்வம், அதை நான் என்ஜாய் பண்ற விதம் எல்லாத்தையும் பார்த்த அம்மா, ‘உனக்கு விருப்பம் இருந்தா, நான் என் பிசினஸை எப்படிப் பண்றேன்னு வந்து பார்க்கிறியா...’ன்னு ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க. அதுலயிருந்து அம்மாவோடு டிராவல் பண்ண ஆரம்பிச்சேன்” என்கிற கிரண், அப்போது பள்ளி மாணவராக இருந்திருக்கிறார்.
தொடர்கிறார் டினா... “2017-ல் ஒரு ஃபேஷன் ஷோவுக்கு டிரஸ் டிசைன் பண்ணணும். எனக்கு அப்போ உடம்பு சரியில்லை. அதனால கிரணிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைச்சேன். சொல்லப் போனா அந்த ஷோவுக்கு மெட்டீரியல் வாங்க பட்ஜெட்கூட ஒதுக்கலை. ‘ஷோரூமுக்கு போய் அங்கே என்ன மெட்டீரியல் இருக்கோ அதை வெச்சு பண்ணு’ன்னு சொல்லிட்டேன். அப்போ இவனுக்கு 18 வயசு. எல்லா வேலைகளையும் இவன்கிட்ட ஒப்படைச்சுட்டு, நான் ஒரு பார்வையாளரா மட்டுமே ஷோவுக்குப் போனேன். ஒரு பிகினரா இவனோட வேலை எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருந்துச்சு.

வழக்கமா ஒரு யங் டிசைனரிடம், ‘நீ புது பிராண்டு ஸ்டார்ட் பண்றியா?’ன்னு கேட்பாங்க. நான் இவன்கிட்ட கேட்டதும் ஆர்வமாயிட்டான். உடனே மெட்டீரியல் எடுக்க பாங்காக் போனோம். கிரணோட நான் போன முதல் பிசினஸ் ட்ரிப் அது. அங்கே அவன் மெட்டீரியல்ஸ் தேர்ந்தெடுத்த விதமே வித்தியாசமா இருந்துச்சு. நான் மெட்டீரியல் எடுக்கும்போது ஷோரூமுக்குன்னு செலெக்ட் செய்வேன். ஆனா, கிரண் ஃபேஷன் ஷோவுக்கு டிசைன் பண்ற மைண்டுசெட்ல எல்லாத்தையும் பார்த்தான்.
எங்க ஷோரூம்லயே ஓர் இடம் ஒதுக்கி, ‘கிரண் வாலன்டைன்’ எனும் பெயர்லயே பிப்ரவரி 2018-ல் இவனுக்கான பிராண்டை அறிமுகப்படுத்தினோம். டான்ஸ் கோரியோகிராபர்கள், போட்டோ கிராபர்கள்னு இண்டஸ்ட்ரியில் இருக்கும் ஸ்டைலான நபர்கள்தான் இவனுக்கான வாடிக்கையாளர்கள். செலிபிரிட்டி டிசைனர் சிட்னி ஸ்லேடன், அவருக்கு டிரஸ் வாங்கணும்னா இன்டர்நேஷனல் பிராண்டுதான் வாங்குவார். இண்டியன் டிசைனருன்னு பார்த்தா, சென்னையில அவர் கிரண்கிட்ட மட்டும்தான் வாங்கியிருக்கார். இதெல்லாமே இவனோட பிராண்டுக்கான நம்பிக்கையைக் கொடுத்தது. என்றாலும், இவன் இன்னும் படிப்பை முடிக்கலை என்பதால, இவ்ளோ சின்ன வயசுல இவனுக்கு தனியா ஒரு ஷோரூம் வேணாம்னு இப்போதைக்கு முடிவு பண்ணியிருக்கோம்” என்றார் டினா. ‘`அம்மா சொல்றதுதான் சரி. வாய்ப்பு இருக்குதுன்னு ஒரு விஷயத்தை உடனடியா செய்றதைவிட, அந்த வாய்ப்பை எப்படி நீண்டகால வளர்ச்சிக்குப் பயன்படுத்தணும்னு யோசிக்கறேன்” எனத் தெளிவாக பேசும் தன் மகனை ரசித்துக்கொண்டே தொடர்கிறார் டினா...
“சொல்லப்போனா நான் மனம்போன போக்குல வேலையைப் பார்ப்பேன். கிரணோ ஷெட்யூல், செக் லிஸ்ட்டுன்னு வொர்க் பண்ற பக்கா புரொஃபஷனல். இப்போ என்னால முன்னமாதிரி ரிலாக்ஸ்டா இருக்க முடியல... ‘அய்யோ கிரண் வந்தா கேள்வி கேட்பானேன்’னு எக்ஸ்ட்ரா பொறுப்பாளியா ஆகிட்டேன்!
மூத்த பையன் கெவினுக்கு மியூசிக்ல ஆர்வம் அதிகம். இப்போ அவன் மியூசிக் படிச்சுட்டு இருக்கான். கிரணும் அவங்க அப்பா, தாத்தா மாதிரி சினிமா இண்டஸ்ட்ரியைத்தான் தேர்ந்தெடுப்பான்னு நெனச்சுட்டிருந்தேன். ஃபேஷன் துறைக்கு இவன் வந்தது எனக்கே ஆச்சர்யம்தான்” என்கிற டினாவை இடைமறிக்கிற கிரண்...
“அவசரப்பட்டு எந்த முடிவுக்கு வந்துடாதம்மா... எனக்கு நடிப்பிலும் இன்ட்ரஸ்ட் இருக்கு” எனக் கண்ணடிக்க, “என்னடா இவன் ஆர்வமிருக்குற ஃபேஷன் துறை பத்தி படிக்காம, விஸ்காம் எடுத்துப் படிக்கறானேன்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு. அதுக்குக் காரணம் இப்போதான் வெளிவந்திருக்கு’’ என்கிறார் டினா, கிரணின் காதைத் திருகியபடி.
அம்மா - மகன் செல்ல விளையாட்டு எத்தனை வயதிலும் அழகுதான்!