அபரிமிதமான வளர்ச்சி ஒருபக்கம், எட்டப்படாத இலக்கு இன்னொரு பக்கம் என பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது இந்திய ரயில்வே துறை.
இந்தியாவில் ரயில்வே துறை இந்தியப் போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாக இருக்கிறது. இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களிலேயே ரயில்வே துறையானது, சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

2022-23-ம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.95,486-கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயைவிட 38% அதிகம் ஆகும். ரயில் பயணிகள் மூலம் ரூ.25,276 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயைவிட ரூ.13,574 கோடி அதிகம்.
கோவிட் தொற்று நோய் வெகுவாகக் குறைந்ததையொட்டி, ரயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதாவது, ரயில்வே துறை 100 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. தவிர, நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்தின் மூலம் கொண்டு செல்லப்படும் ஒரு பில்லியன் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரக்குப் போக்குவரத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரையில் வந்துள்ள வருவாய் கடந்த ஆண்டைவிட 20% அதிகரித்து, ரூ.65,000 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.1,91,278 கோடியாக இருக்கும் நிலையில், வரவிருக்கும் அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த வருமானம் கடந்த ஆண்டைவிட 30% முதல் 35% வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேயின் வருவாயானது கணிசமாக உயர்ந்துவரும் நிலையில், அதன் சொத்துக்களைப் பணமாக்குவதில் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான ``தேசிய சொத்து பணமாக்குதல் பைப்லைன்” திட்டத்தை செயல்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்டது. முதல் ஆண்டில் ரயில்வே துறைக்கென நிர்ணயிக்கப்பட்ட ரூ.17,800 கோடி என்ற இலக்குக்கு எதிராக ரூ.800 கோடியை மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
- ஶ்ரீ கணேஷ்