
நிதித் திட்டமிடுதல்
வேலை, வணிகம், தொழிலில் பிஸியாக இருப்பவர்களால் அவர்களின் தனிப்பட்ட நிதியை (personal finance) நிர்வாகம் செய்து கண்காணிக்க நேரம் இருப்பதில்லை.

கடைசி நேரத்தில் வரி சேமிப்பு முதலீடு...
பாலாஜி என்பவர் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அலுவலகத்தில் அவர் முடித்துத் தர வேண்டிய வேலைக்கான கடைசி நாள் அது. ஆனால், அன்று காலையில் தான் அவரின் அலுவலக கணக்குப் பிரிவி லிருந்து, அவருக்கு ஒரு மெயில் வந்திருந்தது. வருமான வரி சேமிப்பு மற்றும் முதலீடுகளுக் கான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இன்று கடைசி தேதி என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. வரி சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான ஆதாரங்களைத் தரவில்லை எனில், அவரது சம்பளத்திலிருந்து கணிசமான தொகை வருமான வரிக்காகப் பிடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் அவசரமாக வருமான வரி சேமிப்பு முதலீடுகள் செய்து, அன்றைக்கே ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டில் ஃபிக்ஸட் டெபாசிட்...
மகேஷ், ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI). அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனது கோடிக்கணக்கான பணத்தை வெளிநாட்டில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருந்தார். அதற்கு வங்கிச் சேமிப்பு கணக்குக்கு இணையாக மிகக் குறைவான வருமானமே கிடைத்தது. மேலும், அந்த வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது. வரிக்குப் பிந்தைய நிலையில், அவருக்கு ஆண்டுக்கு சுமார் 2 சதவிகிதம்தான் வருமானம் கிடைத்து வந்தது. அந்த வட்டி வருமானம் மிகக் குறைவு என்று நினைத்தார். அந்தப் பணத்தை அதிக வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய அவர் இந்தியாவில் உள்ள ஒரு தொழில்முறை நிதி ஆலோசகரை (professional financial planner) சந்திக்கத் திட்ட மிட்டார்.
அவரது தற்போதைய புராஜெக்ட் முடிந்தவுடன் தொடர்புகொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆனால், அதிக வேலைப்பளு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சில காரணங்களுக் காக அவர் எந்தவொரு நிதி ஆலோசகரையும் தொடர்பு கொள்ளவில்லை.

பெரும்பாலான நிதி மற்றும் முதலீட்டு முடிவுகள் சில நிர்ப்பந்தம் அல்லது அவசரத்தின் காரணமாக எடுக்கப்படுகின்றன அல்லது கட்டாயம் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன. காரணம், நாம் அவசரமான வேலைகளை மிக முக்கியத்துவம் கொடுத்து முதலில் முடிக்க விரும்புகிறோம், மிக முக்கியமான விஷயங்களை அல்ல. நமது ஒட்டுமொத்த நிதி நோக்கங்களில் முக்கியமான பங்கு வகிக்கும் மற்றும் செல்வம் சேர்க்கும் விஷயங்களுக்கு நம்மில் பெரும்பாலானோர் எந்த அழுத்தத்தையும் தராமல் இருக்கிறார்கள். குறிப்பாக, குடும்ப பட்ஜெட் போடுதல், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குத் திட்டமிடாமல் இருக்கிறோம். மேலும், நம் வாழ்க்கை முறையைப் (Lifestyle) பாதுகாக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ், மருத்துவக் காப்பீடு, வீட்டு உரிமையாளர் பாலிசிகளை எடுக்காமல் இருக்கிறோம்.
பாலாஜியின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். நிதியாண்டின் தொடக்கத்திலேயே அவர் ஏன் வருமான வரி திட்டமிடலைச் செய்ய வில்லை, கடைசி நிமிடத்தில் ஏன் அவசரப்படுகிறார்?
காரணம், அவர் தனது வருமான வரித் திட்டமிடலை விட தனது வேலை தொடர் பான காலக் கெடுவை பற்றி அதிகம் கவலைப்படுகிறார். கடைசி நேரத்தில் அவசரமாக முதலீடுகளைச் செய்வதால், சரியான நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு கடினமான காரியமாக உள்ளது. மேலும், எது சிறந்த வருமான வரி சேமிப்பு திட்டமாக இருக்கும் என்பதை அவரால் தீர்மானிப்பது கடினம்.
பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? ஓர் ஆலோசகரின் உதவியுடன் அதே நாளில் முதலீட்டுச் சான்று பெறக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்தார். இதற்காக, அவர் இணையத்தில் தேடி நிதி ஆலோசகர் ஒருவரைத் தேர்வு செய்தார். அவர், சேமிப்பு மற்றும் முதலீடு கலந்த யூலிப் பாலிசி ஒன்றை எடுத்துத் தந்தார். பாலாஜி உயர் பதவியில் இருப்பதால், அவர் அலுவலகத் திலேயே அவருக்கு மிக அதிக தொகைக்கு டேர்ம் இன்ஷூ ரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அவருக்கு இருந்தது. அவருக்குக் காப்பீடு என்பது தேவை இல்லாத ஒன்றாகும். அப்படித் தவறான திட்டத்தை நமக்குப் பரிந்துரை செய்யும் முதலீட்டு ஆலோசகரைத் தேர்வு செய்வது சரியா? மகேஷுக் கும் இந்த நிதி ஆலோசகருக்கும் இடையிலான உறவு நீண்ட காலத்துக்கு தொடருமா?
சுமார் 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மகனின் உயர் கல்வி செலவுகள் அல்லது மகளின் கல்யாணச் செலவு களைச் சமாளிக்க இந்த முதலீடு பாலாஜிக்கு உதவி யாக இருக்குமா? சுயமாக நிதித் திட்டமிடலை மேற்கொண்டதால் தேவை இல்லாமல் யூலிப் பாலிசியை எடுத்து பிரீமியம் கட்டி வருகிறார். வரிச் சேமிப்புத் திட்டம் என்கிற பெயரில் அவர் சிக்கியிருக்கிறார்.
மகேஷ் விஷயத்துக்கு வருவோம். அவருக்கு வருமான வரிக்கு முந்தைய வருமானம் வெறும் சுமார் 3 சதவிகிதம்தான். அவர் கோடிக் கணக்கான ரூபாயை இப்படி பணவீக்க அளவுக்குக் கூட வருமானம் தராத திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தார். மிகவும் பாதுகாப்பான இந்திய லிக்விட் ஃபண்டுகள் கூட இதைவிட சுமார் இரு மடங்கு வருமானத்தைத் தருவதாக இருக்கும். அவர் தேர்வு செய்ய சிறந்த முதலீட் டுத் திட்டங்கள் அதிகமாக உள்ளன.

அதிக வருமானம்...
துரதிர்ஷ்டவசமாக அவர் சுமார் 3% வருமானத்தில் செட்டில் ஆகிவிட்டார். சரியான நிதி ஆலோசகரையும் முதலீட்டுத் திட்டங்களையும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதில் ஓரிரு நாள்கள் செலவு செய்திருந்தால், அவர் இன்னும் அதிகமாக வருமானம் ஈட்டி இருக்க முடியும்.
நாம் அனைவரும் பணத்துக்காகக் கடுமையாக உழைக்கிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நமக்காக உழைக்க வேண்டும். அதற்கு மாற்றாக, அது பெரும்பாலும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் கிடக்கிறது. பல நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள், அதிகாரி நிலையில் இருப்பவர்கள் நேரம் இல்லாத காரணத்தால் சம்பளப் பணத்தை சம்பள வங்கிக் கணக்கிலேயே போட்டு வைத்திருக் கிறார்கள். பிறகு, கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும், அதைக் கொண்டு ஏதாவது இடத்தை வாங்கிப் போடுகிறார்கள் அல்லது வீடு வாங்குகிறார்கள். இடத்தின் மூலம் வருமானம் எதுவும் வருவதில்லை. வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானமானது அதன் விலையில் சுமார் 2% - 3% அளவுக்குதான் இருக்கிறது. உதாரணமாக, ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் வீட்டின் மூலம் மாதத்துக்குக் கிடைக்கும் வாடகை என்பது ரூ.20,000 – ரூ.25,000-ஆகதான் இருக்கும். இந்தப் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்திருந்தால் இதைவிட சுமார் மூன்று மடங்கு வட்டி வருமானம் கிடைத்திருக்கும். சுயமாக நிதித் திட்டத்தை மேற்கொண்ட இவருக்கு அதிக வருமான இழப்புதான் முக்கியமான பலனாக இருக்கிறது.
கடினமாக உழைப்பதிலோ வேலையை முடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதிலோ, காலக் கெடுவுக்குள் புராஜெக்ட் டுகளை நிறைவேற்ற அதிக நேரம் செலவிடுவதில் தவறில்லை. இவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் செய்தாக வேண்டிய விஷயங்களே. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கைக்கான நிதி இலக்குகளை அதற்குரிய காலக் கெடுவுக்குள் முடிப் பதும் அவசியம் என்பதை நாம் மறக்கக் கூடாது.
நிதி இலக்குகளை அமைத்துக்கொள்வது, அந்த இலக்குகளை அடையத் தேவையான திட்டத்தை உருவாக்குவது, அந்தத் திட்டங்களை செயல்படுத்துவது மிக மிக அவசியம். இதற்கு நிச்சயம் ஒரு நல்ல நிதி ஆலோசகர் நிச்சயம் தேவை. நமக்கு வந்த நோயைத் தீர்க்க நாமே மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கிச் சாப்பிடுவது எந்தளவுக்குத் தவறோ, அந்தளவுக்குத் தவறு நமக்கான நிதித் திட்டமிடலை நாமே செய்துகொள்வது!