நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கடன் வலையில் சிக்க வைக்கும் ‘Buy Now Pay Later’ உஷார் மக்களே உஷார்!

கடன் வலையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் வலையில்...

கவர் ஸ்டோரி

காசு கொடுக்காமல் ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக வந்திருக்கும் திட்டம்தான் ‘Buy Now; Pay Later.’ அதாவது, முதலில் பொருள்களை வாங்கிவிட்டு, பிறகு பணம் கட்டுவது.

பிரகாஷ், பிரபல ஐ.டி நிறுவனத்தின் உயர் பதவியில் வேலை செய்து வருகிறார். இந்த பி.என்.பி.எல் திட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு உண்டு. வீட்டுக்குத் தேவையான பொருள்கள் முதல், கேட்ஜெட்டுகள் என ஆடம்பரமாக ஷாப்பிங் செய்வதில் அவருக்கு அலாதி பிரியம். கை நிறைய சம்பளம் என்பதால், அதைக்கொண்டு இந்த திட்டத்தின் மூலம் வாங்கும் கடனை சரியான நேரத்தில் செலுத்தியும் வந்தார். ஒரு நாள் அவரது வேலை திடீரென போய்விட, கடனைக் கட்ட முடியாத சிக்கலில் பிரகாஷ் மாட்டிக்கொள்ள, இப்போது கடனை அடைக்கும் வழி தெரியாமல் தவிக்கிறார். இவரைப் போலத்தான் பி.என்.பி.எல் திட்டத்தால் பலரும் படாதபாடுபட்டு வருகிறார்கள்.

கிரெடிட் கார்டைப் பார்த்து பலரும் பயப்படுவது போல, இன்று ‘பை நவ்; பே லேட்டர்’ திட்டத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித் திருக்கிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகம் என்பதைப்போல, ‘பை நவ்; பே லேட்டர்’ திட்டத்தில் வழங்கப்படும் கடனுக்கும் வட்டி அதிகம். அதுமட்டுமல்லாமல், கிரெடிட் கார்டு டியூவை சரியான நேரத்தில் கட்டாமல் போனால் விதிக்கப்படும் அபராதத்தைவிட, இந்தத் திட்டத்தில் வசூலிக்கப்படும் அபராதம் அதிகம்.

பயனாளிகள், வியாபாரிகள், இ-காமர்ஸ் தளங்கள், ஃபின்டெக் கம்பெனிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் இந்தத் திட்டம், 2019-ல் சில மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைக்கொண்டிருந்தது. ஆனால், கோவிட்-19 காலகட்டத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டு, இன்றைக்கு எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பாக மாறியிருக்கிறது பி.என்.பி.எல்.

பி.என்.பி.எல் திட்டம் எப்படிச் செயல்படு கிறது, இந்தத் திட்டம் பற்றி அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன, இந்தத் திட்டத்தால் ஒருவரது சிபில் ஸ்கோர் எப்படிக் குறைகிறது, இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷுடன் பேசினோம்.

“அத்தியாவசிய மான பொருள்கள் முதல் வீட்டுக்குத் தேவையான அப்ளையன்சஸ் வரை பெரும் பாலானவற்றுக்கு கடன் அளிக்கப்படும் காரணத்தால் மக்களுக்கு மிகவும் விருப்பமான திட்டமாக பி.என்.பி.எல் திட்டம் மாறியுள்ளது. ஆனால், ஆசை வலையைத் தூண்டி, ஆபத்தை ஏற்படுத்தும் திட்டம் இது என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இ-காமர்ஸ் தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, தற்போது அனைத்துப் பெரும் கடைகளிலும் அளிக்கப்பட்டு வருகிறது.

‘காசு கொடுக்காமல் எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிக்கோங்க, அப்புறமா காசு கொடுங்க’ என்று சொல்லும்போதே அதில் ஏதோ ஒரு சூட்சுமம் ஒழிந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே புரிந்துவிடும். ஆனால், மக்களில் பலர் அவசரத் தேவைக்குக் காசில்லாமல் நம்மால் பொருள் வாங்க முடிகிறது என்று நினைத்து, இந்த வலையில் சிக்குகிறார்கள். அதற்காக இந்தத் திட்டம் பயனற்றது, பாதாளத்துக்குள் தள்ளக்கூடியது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால் அனைத்துக் கடன் திட்டங்களும் நல்ல திட்டங்கள்தான். ஆனால், இன்று மக்களில் பெரும் பாலானவர்களுக்கு கடன் வாங்கும்போது இருக்கும் ஆர்வமும் அக்கறையும் அதைத் திருப்பிச் செலுத்துவதில் இல்லை என்பதுதான் பிரச்னை.

கடன் வலையில் சிக்க வைக்கும் ‘Buy Now Pay Later’ உஷார் மக்களே உஷார்!

பி.என்.பி.எல் திட்டம் என்றால் என்ன?

இது ஒரு குறுகிய காலக் கடன் வகையைச் சேர்ந்தது. இந்த வசதியை உபயோகிக்க விரும்பும் பயனாளர், முதலில் பான், ஆதார் போன்ற மினிமம் கே.ஒய்.சி விவரங்களைக் கொடுத்தால், இந்தத் திட்டத்தின் மூலம் அவரின் மாதாந்தர பில்கள், வாகன வசதி, வங்கி விவரங்கள் போன்றவற்றை சோஷியல் மீடியா / ஆன்லைன் டேட்டாமூலம் அறிந்து அவரின் தகுதிக்கேற்ப கடன் அளவை நிர்ணயம் செய்யப் படுகிறது.

ஆன்லைன் தளத்தில் அவருக்குத் தேவையான பொருளைத் தேர்ந்தெடுத்தபின், ‘பே லேட்டர்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், சில இ.எம்.ஐ ஆப்ஷன்கள் தோன்றும். அதில் தனக்கு வசதியான ஒன்றை க்ளிக்கியதும் அந்த பில்லுக்கான பணம் உடனடியாக வியாபாரிக்கு ஃபின்டெக் கம்பெனியால் வழங்கப்படும். இந்தச் செயல்பாடுகள் அனைத் தும் நடக்க மொத்தமாக எடுத்துக் கொள்ளப்படும் நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே.

பணம் பெற்ற வியாபாரி குறித்த பொருளைப் பயனாள ருக்கு அனுப்பிவிடுவார். 15 - 45 நாள்கள் வரை கடனாக வழங்கப் படும் இந்தக் கடன் தொகையைப் பயனாளர், குறித்த காலத்துக்குள் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பி.என்.பி.எல் திட்டத்தில் ரூ.500 முதல் ரூ.30,000 வரை அவரவர் தகுதிக்கேற்றவாறு கடன் தரப்படுகிறது. கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்து வோருக்கு ரூ.1 லட்சம் வரைகூட கடன் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குறித்த காலத்துக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், அதிக வட்டி, கட்டணம் என்று ஏதும் கிடையாது. மாதம் முழுவதும் ஷாப்பிங் செய்த பின், ஒரே பில்லில் பணத்தை செட்டில் செய்யலாம்.

‘இம்பல்ஸ் பையிங்’ மனநிலை..!

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு செல்லும்போது, மளிகை லிஸ்ட்டில் இருக்கும் பொருள்களை மட்டும் வாங்காமல், ரேக்கில் இருக்கும் பொருள்களைத் தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆஃபர் விலையில் கிடைக்கிறதே என்பதற்காக வாங்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. இப்படிச் செய்யப்படும் ஷாப்பிங்கை ஆங்கிலத்தில் ‘இம்பல்ஸ் பையிங்’ என்று சொல்வதுண்டு. இப்படி யான ஒரு மனநிலையை பி.என்.பி.எல் திட்டம் மக்களிடம் எளிதில் உருவாக்குகிறது. ஏனெனில், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும்போது, நம்மிடம் பணம் இல்லாவிட்டால் என்ன, பி.என்.பி.எல் திட்டத்தின் மூலம் பிறகு கட்டிவிடலாம் என்கிற அசட்டுத் தைரியத்தையும் நமக்கு தந்துவிடுகிறது. அப்படி இல்லாமல், இந்த வசதியைத் தேர்வு செய்யும் போது கவனிக்க சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறேன்.

கடன் வலையில் சிக்க வைக்கும் ‘Buy Now Pay Later’ உஷார் மக்களே உஷார்!

தவணைத் தேதி...

குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் பணம் செலுத்தக்கூடிய நிதி வசதி நம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, 15 நாள்கள் அல்லது 30 நாள்களைத் தவணைக் காலமாக நிர்ணயிக்கும்போது, அந்த நாள்களுக்குள் நாம் பி.என்.பி.எல் மூலம் பெற்ற மொத்தக் கடன் தொகையையும் திருப்பிச் செலுத்தி விட வேண்டும். அதற்கான தகுதி, பொருளாதார வசதி நம்மிடம் இருக்க வேண்டும். வாங்கிய தொகையை இ.எம்.ஐ-ஆக மாற்றி அதைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தும்போது, கடன் பெற்றவர்கள் காலம் தவறாமல் திரும்பக் கட்டும் ஒழுக்கத்தை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இந்தத் திட்டங்களில் இருக்கும் மறைமுகக் கட்டணங்கள் குறித்தும் வாடிக்கையாளர்கள் தெளிவு பெற வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இந்த சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் 29% வட்டி வரை தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. அதனால் தாமதக் கட்டணத்தில் சிக்காமல் தப்பிப்பவர்களுக்கே இந்தத் திட்டம் லாபகரமானதாக இருக்கும். அதே போல, தேவை யில்லாத பொருள்களை இஷ்டத்துக்கு வாங்கிக் குவிக்கும் மனநிலை கொண்டவர்களுக்கு இந்தத் திட்டம் லாபகரமாக இருக்காது. மிக அவசியமான பொருள்களை மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் வாங்குகிறவர்களுக்கு லாபமே” என்றார் தெளிவாக.

ஆப்பு வைக்கும் 1,100 ஆப்ளிகேஷன்கள்...

மைஅஸெட் கன்சாலிடேஷன்.காம் (Myassetsconsolidation.com) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிதி ஆலோசகரான சுரேஷ் பார்த்தசாரதியிடம் இந்தத் திட்டம் பற்றிக் கேட்டோம்.

“இந்த பி.என்.பி.எல் திட்டத்தில் சில டாக்குமென்ட்டு களைத் தந்து, உடனடியாகக் கடன் பெறுவது பலரும் விரும்பும் விஷயமாக இருக்கிறது. ‘கிரெடிட் ஸ்கோர் அளவு எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இப்போதே பொருளை வாங்குங்கள். பிற்பாடு பணத்தைச் செலுத்தலாம்’ என்று இந்தத் திட்டம் சொல்வதால், ‘அட, இது ரொம்ப நல்ல திட்டமா இருக்கே’ என்று நினைத்து, இதை எளிதில் தேர்வு செய்துவிடுகின்றனர். இப்படி வாங்கிய கடன் தொகையைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியாதபோதுதான் பலரும் பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் வங்கிக் கடன் கிடைக்காதபோது, இந்த முறையில் பொருள் களை வாங்கிவிடுகிறார்கள். இன்றைய நிலையில், அவசர மருத்துவச் செலவு, வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க, இரு சக்கர வாகனம் வாங்க, சுற்றுலாச் செலவு செய்ய, வீடு பராமரிப்பதற்கான செலவு செய்ய பலரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைய நிலையில் பி.என்.பி.எல் திட்டத்தின் மூலம் கடன் கொடுப்பதற்காக 1,100 ஆப்ளிகேஷன்கள் (Apps) இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால், இந்த அனைத்து ஆப்ளிகேஷன்களும் சரியான முறையில் கடன் கொடுத்து கடன் வசூல் செய்கின்றனவா எனில், இல்லை என்பதே பதில்.

இந்த ஆப் லோனை அணுகுவர்களில் பெரும்பாலான வர்கள் அடித்தட்டு மக்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு முறையான மாத சம்பளம் இருக்காது என்ப தால், அவர்களுக்கு எளிதாக வங்கிகளில் கடன் கிடைக்காது. அணுகுவதற்கு எளிதாக இருப்பதால், அவர்களுக்கு இந்த பி.என்.பி.எல் திட்டம் முதல் சாய்ஸாக இருக்கிறது. பல மேலைநாடுகளில் இந்த மாதிரியான கடன்களை வாங்க நிறைய வரையறைகள் உள்ளன. ஆனால், அது போன்ற வரையறைகள் நம் நாட்டில் இல்லை.

ஒரு பொருளைப் பார்த்த உடனே அதை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை இன்று மக்களுக்கு அதிகரித்துள்ளது. மக்களின் அந்த ஆசைதான் இந்த மாதிரியான திட்டங்களைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றன. இந்தத் திட்டங்களால், ஒருவர் ஒரே நேரத்தில் பல இடத்தில் கடன் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் வாங்கும்போது, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்து வதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக உள்ளன. அது மட்டுமல்லாமல், கடன் தவணைக்காகத் தேதியையும் நினைவில் வைத்துக்கொண்டு, அதைச் சரியான நேரத்தில் செலுத்துவதிலும் சிக்கல் உருவாகிறது.

சிபில் ஸ்கோர் குறையும்...

இந்தக் கடனை வாங்குவதால், நம்முடைய கிரெடிட் ஸ்கோர் கணிசமாகக் குறையும். கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத் தாமல்போனால் மட்டுமல்ல, அதிகமான கடன்களை வைத்திருந்தாலும் சிபில் ஸ்கோர் கணிசமாகக் குறையும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதன் பயனாளர்களுக்கு சம்பளம் வரும் தேதியும், கடன் திட்டத்துக்கான தவணை செலுத்தும் தேதியும் ஒன்றாக இருந்தால் பிரச்னை இல்லை. வெவ்வேறாக இருக்கும்போது தவணையை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தத் திட்டங்களில் கடன் காலத் தவணைக்கு ஏற்றாற்போல் வட்டி விகிதம் மாறுபடுகிறது. இன்றைய நிலையில், அதிக பட்சம் 25% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது போக, தவணையை உரிய நேரத்தில் கட்டவில்லை எனில், அபராதம் தனியாக வசூலிக்கப்படும்.

கடனை வாங்கும்முன்...

முதலில், வாங்கும் கடன் எதற்காக என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகு வாங்குங்கள். ஒரு பொருளை நீங்கள் பார்த்துவிட்டீர்கள் எனில், அதை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். அது அத்தியா வசிய தேவையா என்று பார்க்க வேண்டும். தேவை எனில்கூட, ஒரு சில நாள்கள் யோசித்துப் பார்த்து விட்டு, அதற்குப் பிறகு அதைக் கடன் மூலம் வாங்குவது நல்லது.

பி.என்.பி.எல் முறையின் மூலம் முதலில் பொருளை வாங்காமல், வங்கியில் கடன் கிடைக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில், வங்கிக் கடன்களுக்கு 9.5% - 16% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வங்கியில் கடன் கிடைக்காத நிலையில், இந்த வசதியைப் பயன் படுத்தலாம். தவிர, எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிதானித்து முடிவெடுங்கள். ஏனெனில், அதைத் திருப்பிச் செலுத்தும் தகுதி கடன் வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

இளைஞர்களே அதிகம்...

திருப்பிச் செலுத்துவது பற்றியெல்லாம் யோசிக்காமல் அதிக அளவில் கடனை வாங்கி, சிக்கல்களில் சிக்குபவர் களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருக் கிறார்கள். ஏனெனில், இன்று கேட்ஜெட் மோகம் அவர் களுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு ஸ்மார்ட் போன் வாங்க பி.என்.பி.எல் திட்டம் வாயிலாக 25,000 ரூபாயைக் கடனாக எடுத்துவிட்டு, ஆறு மாதத் தவணையில் அதைத் திருப்பி செலுத்தினால் அதற்கான வட்டி 19 - 20 சதவிகிதமாக இருக்கும். இந்த நிலையில், கணிசமான தொகையை நீங்கள் வட்டியாகச் செலுத்த வாய்ப்புள்ளது.

கடன் வாங்குவது சுலபமான விஷயம்தான். ஆனால், வாங்கிய கடனை சரியாக அடைக்க முடியாதபோதுதான் நாம் பெரும் சிக்கலில் மாட்டிவிடுகிறோம். நமது தேவை எதுவாக இருந்தாலும் முதலில் பணத்தைத் தயார் செய்து கொண்டு, பிறகு பெற நினைத்தால் பிரச்னையே இல்லை. ‘There is no free lunch’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். யாரும் நமக்கு எந்தவித பலனும் இல்லாமல் கடன் தர மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், நாம் இந்த பி.என்.பி.எல் கடன் வலையில் சிக்க மாட்டோம்!

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

* ஒரே ஒரு பி.என்.பி.எல் திட்டத்தைப் பயன்படுத்துங்கள்.

* தாமதக் கட்டணங்களைத் தவிர்க்க தவணைக் காலத்துக்குள் தவணைக்கான தேதியைக் குறித்து வைத்துக்கொண்டு, அந்தத் தேதிக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்துங்கள். தேவை எனில், உங்களுடைய ஸ்மார்ட்போனில் ரிமைன்டர் வசதியை ஏற்படுத்தி வைப்பது நல்லது.

* பி.என்.பி.எல் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருள்களை மட்டும் வாங்குங்கள்.

* பயன்படுத்தும் தொகையை மொத்தமாக திருப்பிச் செலுத்த முயற்சி செய்யுங்கள். அப்படி உங்களால் முடியவில்லை எனில், அதிகபட்ச இ.எம்.ஐ மூன்று மாதங்களாக மட்டுமே இருக்கட்டும். அதற்கு மேல் இ.எம்.ஐ செலுத்தும் ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டாம்.

* பி.என்.பி.எல் திட்டத்துக்கான தவணையைச் செலுத்த கிரெடிட் கார்டை லிங்க் செய்து வைக்காதீர்கள். மாறாக, டெபிட் கார்டை லிங்க் செய்து வைக்கலாம்.

அ.பாலமுருகன்
அ.பாலமுருகன்

கையில காசு வச்சுகிட்டு பொருள் வாங்குங்க!

அ.பாலமுருகன், சென்னை.

“சில ஆண்டுகளாக பி.என்.பி.எல் திட்டத்தைப் பயன்படுத்தி முதலில் பொருள்களை வாங்கிவிட்டு, பிறகு பணத்தைக் கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தேன். கையில் காசு இருந்தாலும், என்னுடைய முதல் சாய்ஸ் பி.என்.பி.எல் திட்டத்தைப் பயன்படுத்துவதுதான். கையில் இருக்கும் காசை முதலில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திவிட்டு, பிறகு கடன் தவணையின்போது கடனையும் முறையாகக் கட்டிவிடுவேன். ஒரு சில சமயங்களில் தவணையை மறந்துவிட்டு அபராதமாக அதிக தொகையையும் கட்டியிருக்கிறேன். நம்மேல்தானே தவறு என நினைத்து அப்போதெல்லாம் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இந்தப் பழக்கம் நாளாக நாளாக என்னை அடிமைப்படுத்துவதை உணர்ந்தேன். தேவையில்லாத பொருள்களை எல்லாம் வாங்கி அதற்கு காசை செலவழிப்பது போன்று உணர்ந்தேன். ஆராய்ந்து பார்த்ததில், இந்த பி.என்.பி.எல் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு இருந்த எனது செலவு பட்ஜெட்டும், அதற்குப் பிறகான செலவு பட்ஜெட்டும் பல மடங்கு அதிகரித்திருந்தது. அந்த மாதத்தில் இருந்து நான் இந்த ஆப்ஸனைப் பயன்படுத்துவதில்லை. கையில் இருக்கும் காசைக் கொண்டு மட்டுமே, தேவையான பொருள்களை வாங்க முடிவு செய்துவிட்டேன்.’’