நடப்பு ஆண்டு அதாவது, 2023-க்கான உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு துபாயில் வருகிற மார்ச் 18 முதல் 20 வரை நடைபெற உள்ளது. உலக அளவில் பல நாடுகளில் உள்ள தமிழ் மக்களையும் தமிழ்நாட்டில் தொழிலில் முதலீடு செய்ய வைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் நடக்க உள்ளது. இந்த மாநாடு குறித்து அறிவிக்கும் கூட்டத்தில் ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனர், தலைவர் முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத், வரவேற்புக்குழு தலைவர் அபித் ஜூனைத், வி.ஜி.பி குழுவின் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம், ஹோட்டல் பிரசிடென்ட் குழுமத்தின் தலைவர் அபூபக்கர் மற்றும் தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த மாநாட்டின் நிறுவனர், தலைவர் முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் கூறியதாவது: ``ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் 2023 மார்ச் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்த மாநாட்டில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, மஸ்கட், தோஹா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், இந்த மாநாட்டில் பொருளாதார மேம்பாட்டுக்கான பணிகளைப் பற்றியும், இந்தியாவில் இருக்கக்கூடிய தொழில்களைப் பற்றி பிற நாடுகளுக்கும் தெரியப்படுத்து வதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும்’’ என்றார்.
ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கலாநிதி மாறன், துபாயில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசின் முழு ஆதரவும், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களைத் தமிழகத்தில் முதலீடு செய்ய வரவேற்பதாகவும் கூறினார்.
ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அபித் ஜூனைத் கூறுகையில், ``தமிழர்களுக்கு இந்த மாநாடு ஒரு கேட்டலிஸ்டாகச் செயல்படும், தமிழர்களை முதலீடுகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த மாநாடு அமையும். இந்தியாவுக்கும் ஐக்கிய அரசு எமிரேட்டுக்குமான வணிகத் தொடர்பு இன்னும் பத்து வருடங்களில் 10% அதிகரிக்கும். மேலும், துபாயில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர்களும் துபாய் வாழ் இந்திய தொழில்முனைவோர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழகத்துக்கு அதிகப்படியான முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் முக்கியமான நோக்கம், உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் இணைத்து இதன் மூலம் தமிழும் தமிழின் கலாசாரமும் மேம்பட வேண்டும் என்பதே. இதற்குமுன் நடந்த எட்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டைவிட இந்த மாநாடு சிறப்பாக அமையும், இந்த மாநாட்டில் பல அமர்வுகள் இடம்பெறும். தனித்தனி துறை சார்ந்து பங்கேற்கும் முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய துறை சார்ந்த பல பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய தொழில்முனைவோர்களுக்கு சமூகத்தில் கார்ப்பரேட்டின் பொறுப்புகளையும் எடுத்துரைக்க உள்ளனர். தமிழர்களுக்காகவே பிரத்யேகமான ஒரு அமர்வாக `தமிழ் அஸ் எ பிசினஸ் லாங்குவேஜ்’ (Tamil As A Business Language) என்கிற தலைப்பில் தனிப் பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்த மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழு ஆதரவோடு நடைபெறுவதாகவும், இந்த மாநாட்டில் தங்கம் தென்னரசு, அன்பரசன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்களும் இன்னும் பலரும் கலந்துகொள்ள இருப்பதாகவும், இந்த மாநாடு உலக அளவில் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும் என்றும் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.