
தலையங்கம்
புத்தாண்டு நம்மை வரவேற்கத் தயாராக இருக்கும் சமயம் இது. அதே நேரம், 2021-ம் ஆண்டை விடை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பொருளாதார ரீதியில் இந்த ஆண்டு முழுக்க நாம் செய்த காரியங்கள் என்னென்ன, எவற்றையெல்லாம் சரியாகச் செய்திருக்கிறோம், எவற்றையெல்லாம் தவறாகச் செய்திருக்கிறோம், எதில் நமக்கு லாபம் அல்லது நஷ்டம் கிடைத்திருக்கிறது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் நாம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது சறுக்கியிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்க வேண்டிய நேரம் இது.
‘காலண்டரில் தினமும் தேதியைக் கிழிப்பது முக்கியமல்ல; அந்தத் தேதியில் நீ என்ன கிழித்தாய் என்பதுதான் முக்கியம்’ - சமீபத்தில் வாட்ஸ்அப்களில் வைரலாக வலம்வந்த மீம்ஸ் பொன்மொழி இது. ஆண்டுகள் என்பது வெறும் நம்பர்கள் அல்ல. 2019, 2020, 2021 என்று எண்களைத் தாண்டிச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒவ்வோர் ஆண்டிலும் நாம் எந்தளவு முன்னேறி இ்ருக்கிறோம் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தெரிந்துகொண்டால் மட்டுமே எதிர்காலத்துக்கான வியூகத்தை நம்மால் சரியாக வகுக்க முடியும்.
கடந்த ஆண்டு முழுக்க நாம் சம்பாதித்தது எவ்வளவு, செலவு செய்தது எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால்தான், நாம் சிக்கனமாக இருந் திருக்கிறோமா, ஊதாரித்தனமாக இருந்திருக்கிறோமா என்பது தெரியும்.
கடந்த ஆண்டில் நாம் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீட்டின்மூலம் நமக்கு லாபம் கிடைத்திருக்கிறதா அல்லது நஷ்டம் வந்திருக்கிறதா என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால், நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டோமா அல்லது மடத்தனமாக நடந்துகொண்டோமா என்பது தெரியும்.
நாம் செய்த முதலீடு லாபமே தந்திருந்தாலும், அதைவிட சிறப்பான லாபம் வேறு எதிலாவது கிடைத்திருக்கிறதா, அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்குகள் என்ன என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஆண்டுதோறும் கணக்கிட்டுப் பார்ப்பதன்மூலமே நம்முடைய ‘நிகரமதிப்பு’ (Networth) அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
இந்தக் கணக்குவழக்கை செய்ய நாம் ஆடிட்டர்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே ஆடிட்டர்கள். ஒரு மாலைப் பொழுதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து, இந்தக் கணக்குவழக்கை செய்து பார்த்தால், குடும்பத்தின் பொருளாதார நிலை எல்லோருக்கும் தெரியும். பணத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்கிற அறிவும் அனுபவமும் அனைவருக்கும் கிடைக்கும்.
2022-ல் நாம் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் எனில், இப்போது செய்வதற்கு இதைவிட சிறப்பான விஷயம் வேறு எதுவும் இருக்காது!
- ஆசிரியர்