கடுமையான தரச் சோதனைக் கட்டுப்பாட்டின் மூலம் சீன பொம்மை இறக்குமதியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மத்திய அரசாங்கம், அடுத்தகட்டமாக சீன மின்விசிறி மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களின் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என கூறியுள்ளது.

நிதி ஆண்டு 22-ல் இந்தியாவில் மின்விசிறியின் இறக்குமதி அதிகபட்சமாக 132% உயர்ந்தது. 6.22 மில்லியன் டாலராக இருந்த இறக்குமதியில், சீனாவில் இருந்து மட்டும் 5.99 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல, ஸ்மார்ட் மீட்டருக்கான நிதி ஆண்டு 22-ன் இறக்குமதி அதிகபட்சமாக 3.1 மில்லியன் டாலராக இருந்த நிலையில், அதில் சீனாவின் பங்கு மட்டும் 1.32 மில்லியன் டாலராக இருந்தது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கு தரச் சோதனைக் கட்டுப்பாட்டை 2020-ல் மத்திய அரசு கொண்டு வந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளில் பொம்மை இறக்குமதி 70% குறைந்துள்ளது. அதாவது, நிதி ஆண்டு 2019-ல் 371 மில்லியன் டாலராக இருந்த நிலையில், நிதி ஆண்டு 22-ல் 110 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மை 80% குறைந்து 59 மில்லியன் டாலராக இருந்து வருகிறது.

மேலும், நிதி ஆண்டு 23-ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் சீனாவுடனான ஏற்றுமதி 36.2% சுருங்கி, 7.8 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், அதன் இறக்குமதி 52.4 பில்லியன் டாலராக இருந்து சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் திறன் கொண்ட அனைத்துத் தயாரிப்புகளிலும் தரக் கட்டுப்பாடுகளை முழுவீச்சில் கொண்டுவரத் தொடங்கி இருக்கிறது மத்திய அரசாங்கம்.
கொரோனா காலத்துக்குப் பிறகு, தொழில்துறை மேம்பாட்டுக்காகவும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புக்காகவும், இந்த தரக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2020-ல் 20 தரக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும், 2000 முதல் 2019 வரை 19 தரக்கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2020-ல் எஃகு மற்றும் இரும்புத் தொழில்களுக்கு பி.ஐ.எஸ் (BIS) எனும் தரக்கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மை, ஃபேன் போன்ற பொருள்களுக்கு தரக்கட்டுப்பாடு விதித்திருப்பதால், குறைந்த விலையில் இறக்குமதி ஆகும் பொருள்கள் இனி நம் நாட்டில் கிடைக்காமல் போகும். அதே சமயத்தில், நமது நாட்டில் பொம்மை உற்பத்தி, ஃபேன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நம் நாட்டில் தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- மா.பிரதீபா