Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாட்டுப் படிப்பு... நில்... கவனி... புறப்படு!


வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்புகிறவர்கள் இன்றைக்கும் நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சன்சீ சர்வதேச கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ரவிசாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

1. நீங்கள் படிக்கப் போகும் கல்வி நிறுவனம் அந்த நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கக் கல்வித் துறை அல்லது உயர் கல்வி அங்கீகரிப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுடன் எந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். பல நாடுகளில் போலி அங்கீகரிப்பு நிறுவனங்கள் வழங்கிய அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  இதுமாதிரியான நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. மற்ற நாடுகள் என்றால், நீங்கள்தான் விசாரித்தறிய வேண்டும்.

2. இந்திய வங்கிகள் ஏதாவது ஒன்று, நீங்கள் படிக்கப்போகும் வெளிநாட்டில் கிளை வைத்திருக்கிறதா என்று பாருங்கள். அப்படி ஒரு வங்கி இருந்தால், அதன் மூலமாக இந்தியாவிலிருந்து பணம் செலுத்த முடியும். செலுத்தப்படும் பணம் நீங்கள் இருக்கும் நாட்டின் கரன்சியாக வங்கியே மாற்றித்  கொடுக்கும். இப்படி வேறு நாட்டில் உள்ள வங்கிக் கிளைக்குப் பணம் அனுப்ப குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். குறைவான கட்டணத்தில் தரமான சேவை வழங்கும் வங்கி எது என்பதை அறிந்து, அதில் கணக்கைத் தொடங்கலாம்.

3. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மாணவர் அடையாள அட்டையை வைத்திருப்பது பல நேரங்களில் உதவியாக இருக்கும். இந்த அட்டை 133 நாடுகளில் செல்லுபடியாகும். இந்த அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க http://www.isic.co.in/identity-cards-request-form.php என்கிற லிங்கை க்ளிக் செய்யலாம். இந்த அட்டையைப் பயன்படுத்திப் பல பிராண்டட் கடைகளில் செய்யும் பர்சேஸ்களுக்கும், ஹோட்டல் பில் களுக்கும் சலுகை பெறலாம். தவிர, இது ஒரு சர்வதேச போட்டோ ஐடியாகவும் பயன்படும்.

4. சர்வதேச இளைஞர் பயண அட்டையையும் மேற்கூறிய லிங்கிலேயே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் பயணக் கட்டணங்கள் சலுகைக் கட்டணத்தில்  கிடைக்கும். இந்த அட்டையை 12 -30 வயதுள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும். பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகம், கலாச்சார மையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பிடங்களைக் குறைந்த கட்டணத்தில்  சுற்றிப் பார்ப்பது, பல நாடுகளின் உள்நாட்டுப் போக்குவரத்துகளில் பயணச் சலுகைகள், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் கட்டணச் சலுகை இதன் மூலம் கிடைக்கும்.

5. வெளிநாடுகளில் படிப்புக்கு செலவழிக்கும் தொகையில் பாதிக்கு மேல் தங்கும் இடம் மற்றும் உணவுக்கு மட்டுமே செலவாகும். நீங்கள் கல்லூரி விடுதியில் தங்க விரும்பினால், அதற்கான கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஆனால், கல்லூரிக்கு வெளியே டார்மெட்ரியில் (dormitory)  தங்கினால், கல்லூரி விடுதியை விடக் குறைந்த வாடகையே ஆகும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்காக மேன்ஷன் போன்ற அமைப்புகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக, நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூருக்கு அருகில் பிரின்ஸ் ஜார்ஜ் பார்க் என்கிற இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட நல்ல டார்மெட்ரிகள், குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.

6. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி, தொலை பேசி எண் போன்றவைகளைக் கூகுள் ட்ரைவில் பதிந்து கொள்ளுங்கள். ஒருவேளை தற்செயலாக உங்கள் உடமைகள் தவறினாலும் இன்டர்நெட் மூலம் முகவரியைக் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போனவுடன் அந்த நாட்டின் சிம் கார்டை பயன்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். ஆகையால் நிரந்தரமாக உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் மெயில் ஐடிகளே உதவும்.

7. நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டின் அடிப்படை சட்ட திட்டங்களைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, சிங்கப்பூரில் சூயிங்கம் மென்றுதுப்ப தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை மீறினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

8. பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் கல்விக்கு ஸ்காலர்ஷிப்களை வழங்கி வருகின்றன. அதில் நீங்கள் படிக்கப் போகும் கோர்ஸ்களுக்கு  ஸ்காலர்ஷிப் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. சில ஸ்காலர்ஷிப்கள் முதுகலை படிப்புக்கும் கிடைக்கிறது எனவே, இளங்களைப் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டாலே முதுகலைப் படிப்பை இலவச மாகப் படிக்கலாம். ஸ்காலர்ஷி பற்றிய விவரங்களை அறிய http://www.abroadplanet.com/scholarships/ லிங்கை சொடுக்குங்கள்.

9.வெளிநாட்டுப் படிப்புகளுக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டுக் கல்விக் கடனுக்குக் கட்டும் வட்டியை 80 E பிரிவின் கீழ் காட்டி வருமான வரிச் சலுகை பெறலாம். சில வங்கிகள் கல்விக் கட்டணத்தின் முழுத் தொகையையும் கடனாக வழங்குகிறது. சில வங்கிகள்  30 லட்சம் ரூபாய், 50 லட்சம் ரூபாய் என்று ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே கடனாக வழங்குகிறது. சில வங்கிகள் விமானப் பயணத்துக்கும் சேர்த்து கடன் வழங்குகிறது. வெளிநாட்டுக் கல்விக் கடனை வாங்கும்போது எத்தனை வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும், படிப்பு முடிந்தபின் எத்தனை வருடம் வரை வட்டி கணக்கிடப்படாது என்பது போன்ற தகவல்களை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

10. உங்களுக்கு வழங்கப்பட் டிருக்கும் விசா காலத்துக்கு ஒரு குறிபிட்ட காலம் ஸ்டே பேக் காலமாக வழங்கப் பட்டிருக்கும். படிப்பு முடிந்த உடன் ஊருக்கு வந்துவிடாமல் அந்த ஸ்டேபேக் காலத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டிலேயே வேலை தேடுங்கள். அதோடு இருக்கும் காலத்தில் நிரந்தர அட்டை வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ஆலோசியுங்களேன்.
படம்: தி.குமரகுருபரன்

மு.சா.கெளதமன்


3.5.15 தேதியிட்ட நாணயம் விகடன் இதழிலிருந்து...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close