இளமையில் முதலீடு... வெற்றிக்கான தாரக மந்திரம்!
- சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர் (Wisdomwealthplanners.com)
சிவபிரகாசம், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், அவர் தனது தாய் தந்தை கூறிய வழியில் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும், அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர், தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். அது மட்டுமில்லாமல், குழந்தையின் உயர்கல்வி, திருமணம், ஓய்வூதியம் மற்றும் சொந்த வீட்டைக் கட்ட எப்படி முறையாகத் திட்டமிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இன்றைய இளைஞர்களிடம் இத்தகைய நிதித் திட்டம் பற்றிய விழிப்பு உணர்வு இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாக இருக்கிறது. மேலும், இதுநாள்வரை கடன் அட்டை வாங்காமலும், கடன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என்று முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ்க்கையை மிகக் கச்சிதமாக வாழ்ந்து வருகிறார் சிவபிரகாசம்.
இவரது வருங்காலச் செலவுகளுக்கான நிதித் திட்டம் வருமாறு...
வரவு மற்றும் செலவு!
மாதம் 29,000 ரூபாய் சம்பாதிக்கும் சிவபிரகாசத்திற்கு, வீட்டு வாடகை, போக்குவரத்து, மளிகை மற்றும் இதர குடும்பச் செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் 22,500 ரூபாய்ச் செலவாகிறது. மீதி இருக்கும் 6,500 ரூபாயை முதலீட்டிற்காகவும், இன்ஷூரன்ஸ் செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உடனடியாகச் செய்ய வேண்டியது!
இதுவரை அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், எந்தவொரு காப்பீடும் எடுத்து வைக்கவில்லை. இது மிகவும் தவறு. உடனடியாக அவர் குறைந்தது ரூ.50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு எடுத்தல் வேண்டும். அது வருடாந்திர பிரீமியம் கட்டும் திட்டமாக இருந்தால் நல்லது. இதற்காக அவர் மாதாமாதம் ரூ.700 லிக்விட் ஃபண்ட் மூலம் சேமிக்கலாம்.
மேலும், தனக்காகவும் தன் மனைவி மகனுக்காகவும் குறைந்தது ரூ.3 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். இதற்காக அவர் மாதாமாதம் ரூ.500 சேமிக்க வேண்டும்.
மகனின் கல்விக்கு!
இவருடைய மகன் அர்ஜுன் ராகவ், கல்விக்கு இன்னும் 16 வருடம் இருக்கிறது. இன்று தேவைப்படக்கூடிய ரூ.5 லட்சம், ரூ.15 லட்சம் என 7% பணவீக்கத்தில் உயர்ந்துவிடும். இதற்காக, மாதம் 2,600 ரூபாயை குறைந்தபட்சமாக 12% லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கல்விச் செலவுக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
மகனின் திருமணத்துக்கு!
அர்ஜுன் ராகவுக்குத் திருமணம் 27-வது வயதில் என எடுத்துக் கொண்டால், இன்று தேவைப்படக்கூடிய திருமணச் செலவு ரூ.5 லட்சம், இன்னும் 25 வருடத்தில் ரூ.27 லட்சம் என 7% பண வீக்கத்தில் உயர்ந்துவிடும். இதற்காக மாதாமாதம் ரூ.1,450-ஐ 12% லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிச்சயமாக திருமணத் தேவைக்கான தொகையை ஈட்டிவிடலாம்.
முதலீட்டுக் காலம் நீண்ட காலம் என்பதால் ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு வகை ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது. அதுமட்டுமில்லாமல் சிவபிரகாசத்திற்கு வயது குறைவு என்பதால் ரிஸ்க் எடுக்கும் தகுதியும் அதிகமாகவே இருக்கிறது.
ஓய்வுக்காலத்துக்கு!
அத்தியாவசிய தேவைகளுக்காகத் தற்போது தேவைப்படும் 15,000 ரூபாய், இன்னும் 32 வருடத்தில் (அவரது 60-வது வயதில்) ரூ.1,40,000-ஆக உயர்ந்திருக்கும். ஆகையால், அவருக்கு 60 முதல் 80 வயது வரையிலான காலகட்டத்திற்கு மூன்று கோடி ரூபாய்த் தேவைப்படும். இந்தப் பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டில் சேமித்து வைத்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு நிம்மதியாக வாழலாம்.
இந்தத் தேவையை இன்றிலிருந்து 6,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம், அடையலாம். ஆனால், தற்போது அனைத்து முதலீடும் போக 1,250 ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது. இதை வைத்து இப்போது முதலீட்டை ஆரம்பித்துவிட்டு, அதிக வருமானத்துக்கு ஏற்பாடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ஓய்வுக்காலத் தேவைக்கு முதலீடு செய்வது அவசியம். இந்த முதலீட்டை வருடாவருடம் டாப்-அப் செய்ய வேண்டும்.
வீடு அவசியம்தான்... இப்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்!
இன்னும் 10 வருடத்தில் சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். முக்கியத் தேவையான ஓய்வுக்கால முதலீட்டிற்குப் பற்றாக்குறை காணப்படும்போது, வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளாமல் சொந்த வீடு ஆசையை அடைய முடியாது. அதனால் தற்போது தள்ளிப்போடுவது நல்லது. வருமானம் அதிகரிக்கும்போது முன்பணத்துக்கு முதலீட்டை ஆரம்பித்து, வீட்டுக் கடன் வாங்கி இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.