Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சும்மா வருமா வேலை..? : நான் யார் தெரியுமா

சும்மா வருமா வேலை..?
      4. நான் யார் தெரியுமா..?
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


பூ, மலர், புஷ்பம்... என்ன பேர் சொல்லி அழைத்தாலும், அது அதுவேதான்.
'பயோடேட்டா', 'ரெஸ்யூம்', 'ப்ரொஃபைல்', 'கரிகுலம் விட்டே'... எல்லாம் ஒன்றுதான். சுய குறிப்பு.

'என்னைப் பத்தி என்ன நெனைச்சுக் கிட்டு இருக்கே..? நான் யாரு தெரியுமா..? யாரு தெரியுமா..?' என்று 'உதார்' விடுகிற  பலரை நாம் பார்த்து இருக்கிறோம். இவங்கள்ல யாருமே, தான் யாருன்னு 'கடைசி வரைக்கும்' சொல்றதே இல்லை.  யாரும் எதிர்பார்க்கறதும் இல்லை. இருந்துட்டுப் போகட்டும். இதே கேள்வியை, ஒரு கல்லூரியில, பயிலரங்கத்துல முன் வைச்சா...?

இதைப் படிக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனாலும், நாம் சொல்றப்போ வியப்பா இருக்கும்.
நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருக்கிற ஒரு அவையில, 'உங்களைப் பத்தி ரெண்டு நிமிஷம்.. எதாவது சொல்லுங்க..' என்கிற கோரிக்கையை வைப்போம். எத்தனை பேர் எழுந்து பேசுவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

நீங்கள் சொல்வது கேட்கிறது. 'மைக்குல.. பல பேர் முன்னால பேசறதுல அச்சமோ.. கூச்சமோ இருக்கலாம்..' 
'ஏத்துக்கறேன். பேச வேண்டாம். ஒரு பேப்பர்ல, அரைப் பக்கத்துக்கு எழுதிக் குடுக்கட்டும்'..

'எந்த மொழிலயும் எழுதலாம். இலக்கணப் பிழை பற்றிய கவலை எல்லாம் வேண்டாம்... கட்டுரையாகக் கூட எழுத வேண்டாம். வெறுமனே குறிப்புகளாகவோ, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வடிவிலோ, அல்லது உங்களுக்கு எது எளிமையாகப்படுகிறதோ அந்த வகையில் எழுதுங்கள்; அல்லது சொல்லுங்கள்..'

ஊஹூம். ஓரிருவர் கூட முன் வருவதில்லை. 'என்ன எழுதறது...? தெரியலையே....' என்கிறவர்கள்தாம் ஏராளம்.


இதுதான் பிரசினையே. 'சொல்லிக் கொள்கிறாற்போல்' எதுவும் இல்லை. இதில் எதுவும் தவறு இல்லை.
இப்போதுதானே வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தில் இருக்கிறார்கள்..? புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், ஒரு சில வாரங்கள் கழித்து, அதாவது பட்டப் படிப்பு முடித்த கையோடு, வேலை கேட்டு, இதே இளைஞர்கள், 'பயோடேட்டா' எழுதி அனுப்புகிறார்கள். ஒவ்வொரு 'பயோடேட்டா'வுமே, மூன்று, நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அது எப்படி...?

யாரையும் தவறு சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. யதார்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளத்தான் இந்தச் செய்தி. தன்னைப் பற்றி, தானே ஒருசில வரிகள் எழுத, பேச இவர்களுக்குக் கற்றுத் தருகிற வாய்ப்பை நமது கல்வி அமைப்பில் நாம் உண்டாக்கவில்லை. அதற்காகச் சொல்கிறோம்.

விஷயத்துக்கு வருவோம். முதலில், விண்ணப்பம் மற்றும் சுய குறிப்பு, இரண்டுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில், அனுப்புநர், பெறுநர் உண்டு. அதனாலேயே அது, பொதுவாக கடித வடிவில் இருக்கும்.


ஐயா, அம்மையீர், (Sir / Madam) என்று தொடங்கும். முகவரி தொடங்கி, முடிவு வரையில், குறிப்பிட்ட பணிக்குத் தன்னைப் பரிசீலிக்குமாறு ஒரு கோரிக்கை அல்லது வேண்டுதல் அதில் அடங்கி இருக்கும்.

சுய குறிப்பு முற்றிலும் வேறு வகை. ஒருவரின் கல்வி, பிற தகுதிகளை, காலக் கிரயப்படி (in chronological order)  தெரியப்படுத்துவதே 'பயோடேட்டா'வின் நோக்கம். இது, இவருக்கு என்று குறிப்பிட்டு எழுதப்படுவதில்லை. ஆகவே ஒருவகையில் இது 'பெர்மனன்ட் டாக்குமெண்ட்' எனலாம். அவ்வப்போது, தகுதி, அனுபவம் கூடக் கூட, அவற்றை சுய குறிப்பில் சேர்த்துக் கொண்டே வரலாம்.

'இதெல்லாம்தான் தெரியுமே...! 'பயோடேட்டா' எப்படி எழுதுவது..? ஒரு நல்ல 'ப்ரொஃபைல்' என்பது எப்படி இருக்க வேண்டும்..?'

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, பணி அனுபவம் என்கிற வரிசையில்தான் சுய குறிப்பு எழுதுவது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில், புதிய 'ஸ்டைல்' நடைமுறையில் இருக்கிறது.


அதன்படி, எடுத்த எடுப்பிலேயே, 'நான் ரொம்ப பெரிய ஆளாக்கும்... எனக்கு கடமைதான் உயிரு... பிரமாதமா வேலை செஞ்சி, உங்க கம்பெனியை உலகத்துலயே நம்பர் ஒன் நிலைக்குக் கொன்டு வர்றதுதான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியமே..' என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கிற 'சுய' குறிப்பு வகை, பிரபலமாகி விட்டது. இது சரியா, தவறா..?

'இதுதான் சரி.., இது தவறு..' என்று தீர்மானமாகச் சொல்வதற்கு இல்லை. எந்தவொரு 'ரெஸ்யூம்', 'ப்ரொஃபைல்', 'பயோடேட்டா'வுமே, அது எழுதப்படுகிற 'ஸ்டைல்' அதாவது, நடையில் யாரையும் கவர்வது இல்லை. 'உள்ளே' இருக்கிற,

                                                                           பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 

'சரக்கு'தான் ஒரு 'பயோடேட்டா'வை, சிறந்ததாகவோ சாதாரணம் ஆனதாகவோ மாற்றுகிறது. ஆங்கிலத்தில் சொல்வதானால், 'இட் இஸ் நாட் தி ஸ்டைல்; பட் தி கன்டென்ட் தெட் மேட்டர்ஸ்'.

விண்ணப்பம் எழுதுகிற போது, படிப்பவரைக் கவர்கிற மாதிரி அமைக்கப் பட வேண்டும்.
சுய குறிப்பு ஆனால், பிறரைக் கவர்கிற 'அம்சங்கள்' கொண்டதாக இருக்க வேண்டும்.
'சொல்வதற்கு' நிறைய இருக்கிற, அதாவது 'அடர்த்தி' நிறைந்த, 'பயோடேட்டா'தான் தனித்து நிற்கும்.
துரதிர்ஷ்டவசமாக, அடர்த்தி என்பதை நீளம் என்று தவறாகப் பொருள் கொண்டு விட்டோம்.
விளைவு, பல பக்கங்கள் நீள்கிற 'பயோடேட்டா'. 

முன்னரே சொல்லி இருக்கிறோம். கால வரிசைப்படி எழுதுவது மிக முக்கியம். இது அடிப்படை விதி.
இதன்படி, பிறந்த தேதி தொடங்கி, பள்ளிக் கல்வி, கல்லூரிப் படிப்பு, பணி அனுபவம் என்று தொடர்வதுதான்
'லாஜிக்கல் சீக்வன்ஸ்'. இதையே பின்பற்றலாம். இதை விடுத்து, அங்கங்கே 'தாவுகிற' வகையில் எழுதப்படும் சுய குறிப்பு, பொதுவாக விரும்பப்படுவது இல்லை. அதனால், அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தவே சாத்தியக் கூறுகள் அதிகம். 

1, 2, 3, 4 என எண் இட்டு, ஒவ்வொரு குறிப்புக்கு இடையிலேயும் கோடு வரைந்து, அட்டவணை போல வழங்கப்படும். சுய குறிப்புப் பட்டியல்தான் பெரிதும் பின்பற்றப் படுகிறது. அதுவே நல்லது. இனி...

1. பெயர். சான்றிதழில் உள்ளது போலவே. ஒரு எழுத்து கூடப் பிசகாமல், பிழை இன்றி இருக்க வேண்டும்.
பட்டப் பெயர், செல்லப் பெயர்... வேண்டாம். 'என்று அழைக்கப்படும்' அதாவது 'alias' எல்லாம் தேவையில்லை.
 

'இதுதான் என் பேரு. எனக்கு இன்னோரு பேரும் இருக்கு..' போன்ற சினிமாத்தனமான 'பில்ட்'அப்'களுக்கு,
'பயோடேட்டா'வில் இடம் இல்லை. ஆரோக்கியமான ஓர் உண்மை. இத்தகைய தவறுகளை, இன்றைய இளைஞர்கள் செய்வதே இல்லை. கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டு இருக்கிற வரவேற்கத் தகுந்த முன்னேற்றம் இது.

ஒரே ஒரு குழப்பம் மட்டும் பலருக்கு இருக்கிறது. தலைப்பு எழுத்துக்கள் அதாவது 'இனிஷியல்ஸ்', பெயருக்கு முன்னால்  வர வேண்டுமா..? பின்னாலா..? உதாரணத்துக்கு, 'கே. சீனுவாசன்', 'சீனுவாசன். கே' இரண்டில் எது சரி..? இது விஷயத்தில் 'ஹார்ட் அண்ட் ஃபாஸ்ட் ரூல்' எதுவும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தலைப்பு எழுத்தை முதலில் எழுதுவதுதான் மரபாக இருந்து வருகிறது. அதையே பின்பற்றலாம்.

அடுத்ததாக, தலைப்பு எழுத்துகளின் விரிவாக்கம் (expansion of initials) தேவையா...?
ஆம் எனில், யாருக்கு, எதற்காக இந்த விவரம்..?

'பாஸ்போர்ட்' போன்ற அரசாங்க அனுமதிச் சீட்டுகள் பெறுகிற போது, தலைப்பு எழுத்துகளுக்கு விரிவாக்கம் அவசியம் தேவைப்படுகிறது. காரணம், ஒரே பெயர், பிறந்த தேதி, மற்றும் அதே தலைப்பு எழுத்துகளுடன் பலர் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வேறுபடுத்திப் பார்ப்பதற்காக, இந்தத் தகவல் தேவையாகிறது. அதாவது ஏராளமான எண்ணிக்கையில், பலர் விண்ணப்பிக்கிற போது, (பொதுப் போட்டித் தேர்வு, ஒரு உதாரணம்) விரிவாக்கம் தேவை. ஏதேனும் தனியார் நிறுவனத்தில் ஒரு சிலர் மட்டுமே விண்ணப்பிக்கிற சமயங்களில், இது தேவையில்லை.

அடுத்து வருவது, வயது மற்றும் பிறந்த தேதி. ஊம். உங்கள் கேள்வி, காதில் விழுகிறது.
'இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே... பிறந்த தேதி சொன்னால் போதாதா...?
தனியே, வயதைக் குறிக்கச் சொல்கிறார்களே.. எதற்காக..?'

(வளரும்).

 
முந்தைய அத்தியாயத்தைப் படிக்க


'

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close