Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5. முக்கியமானது, முதலில்.

சும்மா வருமா வேலை..?

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

5. முக்கியமானது, முதலில்.

'அதான் பொறந்த தேதி முழுசா குடுத்துருக்கேன் இல்லை..? அப்புறம் என்ன..?

வயசு வேற தனியா சொல்லணுமாக்கும்...? இது கூட அவங்களால 'கஷ்டப்பட்டு' கண்டுபிடிச்சுக்க முடியாதாமா..?'

பிறந்த தேதி, வயது.. ரெண்டையும் ஏன் குறிப்பிடணும்..? காரணம் இருக்கிறது.

பிறந்த ஆண்டு 1988 என்று வைத்துக் கொள்வோம். 'ப்ரிண்ட்' எடுக்கும் போது ஒருவேளை 'இம்ப்ரெஷன்' சரியாக விழாமல், '8' என்பது '3' போலத் தெரிந்தால்..? 1988 என்பது, 1983 என்று ஆகி விடும். விளைவு...?

                                      - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வயதில் 5 கூடி விடும். 2015 இல் விண்ணப்பிக்கும் போது, உண்மையான வயது 27; தவறான 'இம்ப்ரெஷன்' காரணமாக 32 ஆகி விட்டது. நமக்கே நன்றாகத் தெரியும். தனியார் துறையைப் பொறுத்த மட்டிலுமாவது, ஒரே கல்வித் தகுதியுடன் பலர் விண்ணப்பிக்கிற போது, குறைந்த வயது உடையவருக்குத்தான் முன்னுரிமை. ஆக, ஒரு சிறிய தவறு, வேலைக்கான வாய்ப்பைப் பறித்து விட்டது.

பிறந்த தேதி, தவறாக 'ப்ரிண்ட்' செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்து இருந்தால்...? வாய்ப்பு பறி போயிருக்காது இல்லையா..? ஆனால் அது எப்படி 'அவர்களுக்கு' தெரியும்..? தெரியும். என்ன மாய மந்திரம்..? ஒரு மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை. பிறந்த தேதியுடன் வயதையும் சேர்த்து குறிப்பிட்டு விட்டால்...? தேதி குறிப்பிட்டதில் ஏதும் தவறு நேர்ந்து இருந்தாலும், உடனடியாகத் தெரிந்து விடும். 'க்ராஸ்-செக்' செய்து கொள்ளப் பயன்படும் என்பதால்,

பிறந்த தேதி, வயது என இரண்டையும் குறிப்பிடுவதே 'புத்திசாலித்தனம்'. 

 

சுய குறிப்பில் அடுத்து வர வேண்டியது..? வேறென்ன..? கல்வித் தகுதிகள்தான்.

 

'இதுல உங்க 'கெய்டன்ஸ்' எதுவும் வேண்டாம். ஏன்னா, இதுல குழப்பத்துக்கு வழியே இல்லை. பத்தாவதுல ஆரம்பிச்சு, கடைசியா என்ன 'க்வாலிஃபிகேஷன்' இருக்கோ, அது வரைக்கும் அப்படியே அச்சடிச்சுடுவோம் இல்லை..?'

ரொம்ப சரி. இதுல குழப்பத்துக்கு இடமே இல்லை. ஆனாலும் ஒரு சந்தேகம்.

 

'இஞ்சினியரிங்' முடிச்சு இருக்கேன்... ஒரு பெரிய நிறுவனத்துல, 'அசிஸ்டண்ட் இஞ்சினியர்' வேலைக்கு விளம்பரம் வந்துருக்கு. விண்ணப்பமும், 'பயோடேட்டா'வும் அனுப்பறேன். என் கிட்ட என்ன விவரங்களை அவங்க என்ன எதிர்பார்ப்பாங்க..?

 

'இஞ்சினியரிங்' எங்க படிச்சேன்..? என்ன ரேங்க் / மார்க் வாங்கி இருக்கேன்..? 'ப்ராஜக்ட் வொர்க்' என்ன பண்ணி இருக்கேன்..? அவங்க குடுக்கப் போற வேலையை என்னால சிறப்பா செய்து முடிக்க முடியுமா..?' இதெல்லாம்தானே அவங்க பார்ப்பாங்க..? நான் எந்த ஊர்ல எந்த ஸ்கூல்ல எஸ்எஸ்எல்சி படிச்சேன்..? பத்தாவதுல எவ்வளவு மார்க்..? ப்ளஸ் டூவுல எவ்வளவு வாங்கி இருக்கேன்..? இதெல்லாம் எதுக்கு..? யாரு கேட்டா..?

 

இந்தியாவுலதான், 10வதுல இருந்து ஆரம்பிக்கிற பழக்கம் இருக்குன்னு தோணுது.

 

கல்வித் தகுதியை, 'டிகிரி'யில இருந்து தொடங்கினா போதும். அதுல நாம என்ன 'ஸ்பெஷல்'ஆ பண்ணி இருக்கோம்..?

 

எந்த காலேஜ்.. எந்த யுனிவர்சிடி.. என்ன ரேங்க்... என்னென்ன ப்ராஜக்ட்ஸ் பண்ணோம்..

 

நம்ம டிகிரி சார்ந்து, இன்டர்-காலேஜ் லெவல்ல, எதாவது செமினார், கான்ஃபெரன்ஸ்.. இந்த மாதிரி எதாவதுல

பங்கு எடுத்து இருந்தா அது பத்தி.. இது மாதிரியான விவரங்கள், நிச்சயமா உபயோகமா இருக்கும்.

 

எடுத்த எடுப்பிலேயே, 'ஸ்கூல்'ல படிக்கும் போது, என்ன பண்ணேன்..? எந்தெந்த போட்டிகள்ல ஜெயிச்சேன்...? தேவையா..? யாருக்கு வேணும் இதெல்லாம்...?

 

நல்லா ஞாபகம் இருக்கட்டும். 'பயோடேட்டா'ங்கறது, சுய குறிப்பு. சுய புராணம் இல்லை.

 

அப்போ, 'டென்த்', 'ப்ளஸ் 2' எல்லாம் சொல்லாமலே விட்டுரலாம்னு சொல்றீங்களா..?'

'சொல்லலாம். தப்பு இல்லை. இதெல்லாம் பின்னால, 'பிற குறிப்புகள்'னு தனியே சொல்லிக்கலாம்.

 

விண்ணப்பம், 'பயோடேட்டா', நேர்முகத் தேர்வு... எதுவானும் இருக்கட்டும்.

நம்முடைய மிகச் சிறந்த தகுதி என்னவோ, அதை இயன்றவரை எடுத்த எடுப்பில் சொல்லி விட வேண்டும்.

 

எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு, 'சாவகாசமா', நமது அதிக பட்ச தகுதியைப் பற்றிப் பேசலாம் என்று விட்டு வைப்பது, எதிர்மறை விளைவுகளையே தரும்.

 

பொதுவாக, பட்டப் படிப்பு தொடங்கி, அதனோடு தொடர்புடைய பயிற்சி, அனுபவம் மற்றும் மதிப்புக் கூட்டுப் படிப்புகள் (value added courses) குறித்த விவரங்களை, 'விஸ்தாரமாக' சொல்லலாம். இதுவே மிகுந்த பயன் தரும்.

 

ஒரு நிறுவனத்தில், 'அக்கவுண்டண்ட்' பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மிக நிச்சயமாக, 'பி.காம்' படித்தவர்கள்தாம் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கவே போகிறார்கள். நிறுவனமும் அதைத்தான் எதிர்பார்க்கும்.

 

நீங்களோ, பி.காம் முடித்த கையோடு, வங்கிக் கடன்கள் குறித்த ஏதோ ஒரு படிப்பு அல்லது பயிற்சியையும் முடித்திருக்கிறீர்கள். இதை உங்கள் விண்ணப்பம் / 'பயோடேட்டா'விலும், பிரதானமாகக் குறிப்பிட்டு விட்டீர்கள்.

என்ன ஒரு 'விசேஷம்' அல்லது 'கோ'இன்சிடன்ஸ்' என்றால், அந்த நிறுவனத்தில், வங்கிக் கடன் சார்ந்த பணிகளுக்குத்தான்

 

'அக்கவுன்டன்ட்' தேவைப்படுகிறார்! எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு அந்த வேலை, 'கியாரண்டியா' கிடைக்குமா இல்லையா..? எளிமையா சொல்லணும்னா, 'அப்படியே கொத்திக்கிட்டுப் போயிடுவாங்க'.

 

மேலே சொன்ன உதாரணத்துல, உங்க 'பயோடேட்டா'வுல, நிறுவனம், எதையெல்லாம் கவனிக்கும்..?

 

உங்களுடைய வயது, கல்வித் தகுதி, பணி சார்ந்த பயிற்சி/ அனுபவம். இவ்வளவுதானே..?  நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். நீங்கள் சொன்னது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்வார்கள். பணியாணை தந்து விடுவார்கள். யோசித்துப் பாருங்கள். 'பயோடேட்டா'வில் நாம் சொல்கிற வேறு எந்த விவரத்தயும் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு என்ன ஆகப் போகிறது..? இதையே இந்தக் கோணத்தில் பார்ப்போம்.

 

(நேர்முகத் தேர்வு பற்றி, பின்னர் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்)

 

இதையே இப்படி யோசித்துப் பார்ப்போம்.

'பக்காவா' ஐந்து, ஆறு பக்கங்களுக்கு 'பயோடேட்டா' தயார் செய்து அனுப்பி விட்டோம்.

எங்கேயோ நான்காவது பக்கத்தில், 'வங்கிக் கடன்கள்' பற்றிய குறிப்பை நாம் தந்து இருக்கிறோம்.

சொல்லாமல் இல்லை. ஆனால் என்ன..? எடுத்த எடுப்பில், பிரதானமாகச் சொல்லவில்லை.

வேறு 'எங்கோ' சொல்லி விட்டோம். இப்பொழுது என்ன விளைவு இருக்கும்..?

 

நமது படிப்பின் முக்கியத்துவம், நீர்த்துப் போய் இருக்கும். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதாவது, 'பத்தோடு பதினொன்று' என்று ஆகிவிடும். இது யாருடைய தவறு..? சொல்வதை, சரியான முறைப்படி, 'சரியான நேரத்தில்' சொல்ல வேண்டும். இதற்கு மிகவும் பொருத்தமான ஒரு உதாரணம், கம்பராமாயணத்தில் உள்ளது. பல பேர் அடிக்கடி சுட்டிக் காட்டுகிற ஒன்றுதான்.

 

அசோக வனத்தில் சீதாப் பிராட்டியைக் கண்டு கணையாழியைக் கொடுத்து விட்டு மீள்கிறான் அனுமன். அவனது வருகைக்காகக் காத்துக் கொண்டு இருந்த ஸ்ரீராமன், அனுமனைக் கண்டவுடன், என்ன சொல்லப் போகிறானோ என்று ஆவலுடன் பார்க்கிறான். இலங்கையில் நடந்த கதையை விரிவாகச் சொல்கிற அனுமன், 'கண்டேன் சீதையை' என்று தொடங்குகிறான். ஸ்ரீராமனுக்கு வேண்டிய செய்தி கிடைத்து விட்டது. அதன்பிறகு, தான் என்ன சொன்னாலும் கேட்கிற மனநிலைக்கு ராமனைத் தயார் படுத்தி விட்டான் அனுமன். இதுதான் சரியான அணுகுமுறை.

 

'அய்யா சாமி..., இதுதான் என்னுடைய 'ஹையஸ்ட் க்வாலிஃபிகேஷன்'; இதுக்கு எதாச்சும் வேலை இருந்தாக் குடு..'

இதுதானே நமது கோரிக்கை...? அதற்கு எதற்கு, 'கோலிகுண்டு விளையாடிய காலத்தில் இருந்து' தொடங்க வேண்டும்..?

தேவையில்லைதான். ஆனாலும் இப்படித்தானே எல்லாரும் செய்கிறார்கள்..? ஏன்..?

'மிஸ்கன்செப்ஷன்', தவறான புரிதல்தான் காரணம்.

 

'தடாலடியாக' அதாவது நேரடியாக 'விஷயத்துக்கு' வந்து விட வேண்டும். இதைதான் யாருமே விரும்புவார்கள்.

சரிதானே..? 

 

ஆமாம்..., இந்த 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்' எல்லாம் சொல்லணுமா வேண்டாமா..? சொல்லலாம்னா, எப்போ..? எப்படி...?

 

(தேடுவோம்)

 

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close