Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7.சும்மா வருமா வேலை

 

எங்கே தேடுவேன்..? 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

மிகப் பழைய திரைப் படப் பாடல். என்எஸ்கே பாடியது. 
'எங்கே தேடுவேன்..? பணத்தை எங்கே தேடுவேன்..?' 
யாராவது வேலை கேட்டு, 'பயோடேட்டா' தந்தால், இந்தப் பாடல்தான் ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வரும். 
 
ஐந்து, ஆறு பக்கங்களுக்கு நீளும் பயோடேட்டாவில், வேலை கேட்போரின் 'தகுதிகள்' என்னவென்று, பல சமயங்களில் 'தேடித் தேடி'த்தான் கண்டுபிடிக்க வேண்டும். (இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும், சரியாகவே இருக்கும்!) 
 
 
கிராமத்து இல்லங்களில், அன்றைக்கு சமைக்க வேண்டிய அரிசியை ஒரு முறத்தில் கொட்டி, அதைச் சிறு சிறு குவியலாகத்  தள்ளித் தள்ளி, அதில் ஏதேனும் கல் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஏறத்தாழ அதுபோன்ற ஒரு சூழலுக்கு, பணி தருவோரை நாம் தள்ளவே கூடாது. 
 
இந்த அம்சத்தை மனதில் வைத்து, 'பயோடேட்டா' எழுதுவோமா..? 
(ஆமாம்..., விண்ணப்பம், 'பயோடேட்டா' எல்லாம், ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றனவே.. அது ஏன்? 
தாய்மொழி முழுவதுமாக, அறவே தவிர்க்கப் படுகிறதே... கேட்பார் யாருமே இல்லையா...?)
 
1. பெயர். 
2. வயது, பிறந்த தேதி. 
3. கல்வித் தகுதி. 
4. கூடுதல் கல்வித் தகுதி.
5. பணியில் முன் அனுபவம். 
6. கல்வி அல்லாத பிற தகுதிகள். 
7. பணிக்கு நேரடியாகத் தொடர்பில்லாத பிற அனுபவங்கள் 
8. அறிந்துள்ள மொழிகள்  
9. ஈடுபாடு உள்ள பிற துறைகள் ('ஹாபி' உள்ளிட்டவை) 
10. பிற விவரங்கள் (எதுவும் இருப்பின்) 
11. எதிர்பார்க்கும் பணி நிலை, சம்பளம் முதலியன.
12. சான்றுக்கான ('ரெஃபரன்ஸ்') நபர்கள்குறித்த விவரங்கள் 
13. தன் ஊர், தன் குடும்பம் பற்றிய பின்னணி (விருப்பப் பட்டால் மட்டுமே) 
14. சுய விளக்கம்
15. நிலையான முகவரி 
16. தற்போதைய அஞ்சல் முகவரி  
17. மின்னஞ்சல் முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் முதலியன.
18. இணைப்புகள் குறித்த விவரங்கள். 
19. ஓரிரு வரிகளில் சுய உறுதிமொழி. ('செல்ஃப் டிக்ளரேஷன்') 
20. கையெழுத்து. 
 
 - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 
மேற்குறிப்பிடப் பட்டுள்ள பட்டியலை, தயவு செய்து பதிவிறக்கம் ('டவுன்லோட்') செய்து வைத்துக் கொள்ளவும். 
அப்போதைக்கு அப்போது, 'ரெஃபரன்ஸ்'க்காக இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆனால், அப்படியே இதே பட்டியலை, 
இதே வரிசைப்படியேதான், எழுத வேண்டும் என்பது இல்லை. இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே சொன்னோம். 
 
மீண்டும் சொல்கிறோம். 'சுய குறிப்பு' என்பது, ஒவ்வொருவரும் தானே சுயமாகத் தீர்மானித்து எழுத வேண்டிய ஒன்று.  
வழிகட்டிக் குறிப்பாக மட்டுமே இந்தப் பட்டியலை எடுத்துக் கொள்ளவும். இனி, ஒவ்வொரு அம்சமாக எடுத்துப் பார்ப்போமா..? 
 
 
1 & 2. வயது & பிறந்த தேதி.
 
மிக நிச்சயமாக, சான்றிதழ்களில் உள்ளபடியேதான் குறிப்பிட வேண்டும். 
 
பள்ளிச் சான்றிதழ் தொடங்கி, பட்டப் படிப்பு அல்லது அதற்கும் மேல் நாம் பெறுகிற ஒவ்வொரு சான்றிதழிலும் 
இந்த இரண்டும் சரியாகக் குறிப்பிடப் பட்டு இருக்கின்றனவா என்பதைத் தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். 
 
தயவு செய்து நம்புங்கள். பள்ளிச் சான்றிதழில் ஒன்றாகவும், பல்கலைக் கழகச் சான்றிதழில் வேறாகவும் என்று, 
 
தவறான பெயர், பிறந்த நாளுடன் கூடிய சான்றிதழ்கள் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 
மிகக் கணிசமானது. இந்தத் தவறை அவ்வப்போது சரி செய்து கொண்டுவிட வேண்டும். 
சில ஆண்டுகள் கழித்து என்றால், 'பகீரதப் பிரயத்தனம்' (அப்படி என்றால்..?) செய்ய வேண்டி இருக்கும். 
 
பல நாட்கள் அலைந்து திரிந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டுமானால் (இதில், 
இளைஞர்களை விடவும் அவர்களின் பெற்றோருக்குத்தான் அதிக உளைச்சல்!) ஒவ்வொரு சான்றிதழ் பெறுகிற போதும், 
அதில் உள்ள அத்தனை கட்டங்களும் சரியான தகவலைத்தான் கொண்டு இருக்கிறதா என்பதை உடனுக்குடன்  உறுதி செய்து கொள்ளவும்.  
 
சரி. சான்றிதழ்களில் இவ்வாறு குளறுபடி நேர்ந்திருந்தால்...? குழப்பத்துக்கு இடமே இல்லை. 
பள்ளி நிறைவு (எஸ்எஸ்எல்சி) சான்றிதழில் இருப்பதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 
இந்தியாவைப் பொறுத்த வரை, எஸ்எஸ்எல்சி சான்றிதழ்தான், 'அடிப்படை ஆவணம்'. 
வாழ்நாள் முழுவதும் (சில சமயங்களில், 'அதற்கு' பிறகும்) இது ஒன்றுதான் சரியான 'சாட்சி'. நினைவில் கொள்க. 
  
ஒருவேளை, சுய குறிப்பு / விண்ணப்பத்தை, தமிழில் எழுதுவதாக இருந்தால் (!!!), பெயரின் தலைப்பு எழுத்து ('இனிஷியல்') எழுதும் போது கவனமாக செயல்படவும். 
 
தந்தையின் பெயர் 'கேசவன்' என்று இருந்தால், தலைப்பு எழுத்து 'கே' என்று தமிழில் எழுதலாம்.  
தந்தையின் பெயர் 'கண்ணன்' ஆனால், தலைப்பு எழுத்து 'க' என்றுதானே இருக்க வேண்டும்..? பலர் ஆனால், 
அப்பொழுதும் 'கே' என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். (அந்த அளவு, ஆங்கிலத்தின் பாதிப்பு!) 
அசிரத்தையாக இருப்பதனால், இதுமாதிரியான பிழை நேர்கிறது. 
 
விண்ணப்பத்தின் போதுதான் என்று இல்லாமல், பொதுவாகவே, தன் பெயரை, 'தமிழிலும்' எழுதுவதை வழக்கமாகக் கொண்டால், இந்தத் தவறு நேர சாத்தியமே இல்லை. (தமிழ் நாட்டில் நாம், என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது...?) 
 
அடுத்து வருவது, வயது & பிறந்த தேதி. மிக முக்கியமானதை ஏற்கனவே பார்த்தோம். மேலும், இரண்டு சிறு குறிப்புகள். 
வயது. பல பேருக்கும் உள்ள ஐயம். எந்த வயது..? நிறைவடைந்த வயதா..? தற்போது நடந்து கொண்டு இருக்கும் வயதா..? 
 
'age in completed years' என்றுதான், ஆங்கிலத்தில் குறிப்பிடப் படுகிறது. பதில் கிடைத்து இருக்குமே..? 
 
பிறந்த தேதியை எப்படிக் குறிப்பது...? முழுக்கவும் எண்களிலா..? 'எண்ணும் எழுத்தும்' கலந்தா..? அதாவது, 
18-11-1986? அல்லது 18 நவம்பர் 1986? நல்ல தீர்வு இருக்கிறது. காசோலையில் (அதுதாங்க.. 'செக்') தொகையை எப்படி எழுதுகிறோம்..? எண்ணிலும், எழுத்திலும். இருமுறை. ஏன் அப்படி..? காசோலையின் மிக முக்கிய பகுதியே, தொகைதானே...? 
 
இதில் குழப்பத்துக்கு அல்லது இரு கருத்துக்கு ('ambiguity') இடமே இருக்கக் கூடாது. அதே விதிமுறைப் படிப் பார்த்தால், நம்முடைய விண்ணப்பம்/ சுய குறிப்பின் மிக முக்கிய பாகம் - பிறந்த தேதி. ஆகவே, ஏன் நாம் எண்ணிலும் எழுத்திலும் தனித் தனியே தரக் கூடாது...? அதாவது, 18-11-1986; பதினெட்டு, நவம்பர், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஆறு. ஒரு யோசனை மட்டுமே. நீங்களே தீர்மானித்து முடிவெடுங்கள். 
 
இனி, பார்ப்போம் - கல்வித் தகுதி! அட... நம்ம 'ஏரியா'!!!! 
 
- வளரும். 
 
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close