Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவிழ்ந்த காவேரி சீட்ஸ்!

 சர்வதேச முதலீட்டாளர் மாநாடு: பாலோ அப்!

''அடுத்த மாதம் 9, 10 தேதிகளில் சென்னையில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வருவார் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பது மட்டுமல்ல, ஆளும் கட்சித் தரப்பிலிருந்து யாருமே வரவில்லை. அதாவது, கரைவேட்டிகளையே பார்க்க முடியவில்லை. இப்படி யாரும் வராமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க அதிகாரிகளே நடத்திய நிகழ்ச்சியாக இருந்தது. 

 
இதை ஒரு வகையில் பாசிட்டிவ்-ஆன விஷயமாக பார்க்கலாம். தொழில் வளர்ச்சி போன்ற விஷயங்களில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதை விட்டுவிட்டு, அதை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டால், ஓரளவுக்கு நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். அதனால் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பல நடவடிக்கைகளை அவர்கள் சுதந்திரமாக எடுத்தனர். அந்த மாதிரியான ஒரு மாற்றத்தை தமிழக அரசாங்கம் இப்போது செயல்படுத்த ஆரம்பித்துவிட்டதோ என்னவோ!
ஆனால், பெரிய அளவில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மாதிரி இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை. ஒருவேளை செப்டம்பர் 9, 10 தேதிகளில் தமிழக அரசாங்கம் அறிவிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடமைக்கு நடத்தப்படுகிற மாதிரியான ஒரு உணர்வு பல தொழிலதிபர்களிடம்! 
 
பெயர் மாறியது எஃப்.டி.ஐ.எல்!
 
என்.எஸ்.இ.எல் பிரச்னையில் சிக்கிய எஃப்.டி.ஐ.எல். நிறுவனத்தின் பெயர் '63 மூன் டெக்னாலஜிஸ்' என்று மாற்றப்பட்டுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை அன்று நடந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த பெயர் மாற்றத்துக்கான ஒப்புதல் கொள்கை அளவில் தரப்பட்டுள்ளது. இனி இதற்கு பங்குதாரர்களும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.
 
தரைரேட்டில் நிலக்கரி!
 
இரும்பு விலை குறைந்துவிட்டது; கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், நிலக்கரி விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதை யாருமே பேசிய மாதிரி தெரியவில்லை. ஒரு டன் நிலக்கரி விலை ஃப்யூச்சர் சந்தையில் தற்போது 52.85 டாலராக வர்த்தகம் ஆகிறது. 2003-ம் ஆண்டு நவம்பரில்தான் இந்த விலை இருந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டுதான் நிலக்கரி விலை உச்சபட்ச விலையை எட்டியது. அதிலிருந்து சுமார் 75% தற்போது விலை குறைந்திருக்கிறது. இதனால் உலக அளவில் முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள் நிலக்கரி தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததை திரும்ப எடுத்து வருகிறது. உதாரணமாக, நார்வேஜியன் கவர்ன்மென்ட் பென்ஷன் ஃபண்ட் நிலக்கரி தொடர்பாக இருந்த நிறுவனங்களில் உள்ள முதலீடு அனைத்தையும் திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டது. கோல் இந்தியா, அதானி பவர், என்.டி.பி.சி. உள்பட நிலக்கரி தொடர்புடைய நிறுவனங்களில் இந்த ஃபண்டு நிறுவனம் செய்து வைத்திருந்த 622 கோடி முதலீட்டை சமீபத்தில் விற்றிருப்பது முக்கியமான தகவல். அடுத்த சில மாதங்களுக்கு நிலக்கரி தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு விலை பெரிய அளவில் லாபம் தர வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.
 
கவிழ்ந்த காவேரி சீட்ஸ்!
 
காவேரி சீட்ஸ் நிறுவனம் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை குறைந்திருக்கிறது. கடந்த 7-ம் தேதி இதன்  பங்கு விலை 756 ரூபாயைத் தொட்டது. கடந்த சில தினங்களில் மட்டுமே இதன் பங்கின் விலை 35 சதவிகிதத்துக்கு மேல் விலை குறைந்திருக்கிறது.
 
பருத்தி விதை விற்பனையை இந்த நிறுவனம் அதிக அளவில் நம்பி இருந்தது. ஆனால், பருத்தி விதை விற்பனை கணிசமாகக் குறைந்திருக்கிறது. பருத்திக்கு சரியான விலை கிடைக்காததால், பருத்தி விதையை விவசாயிகள் வாங்கவில்லை. இதனால் இந்த நிறுவனத்தின் விற்பனை ஏறக்குறைய 20% வரை குறைந்திருக்கிறதாம். இந்த பங்கின் விலை இறங்குமுகத்தில் இருப்பதால், இந்தப் பங்கில் புதிதாக முதலீடு செய்வதில் கொஞ்சம் நிதானம் காட்டலாம் என்கிறார்கள்.
 
சாப்ட்வேரை குறிவைத்த மியூச்சுவல் ஃபண்டுகள்!
 
சாப்ட்வேர் நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த முதலீடு கடந்த ஜூலை மாதத்தில் உச்சபட்ச அளவை எட்டி இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்ந்ததை ஒட்டி ஐ.டி. நிறுவனங்கள் நல்ல லாபம் தரும் என்கிற எதிர்பார்ப்பில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்து வருகின்றன. கடந்த ஜூலை மாதக் கடைசி நிலவரப்படி, மொத்தம் 38  ஆயிரம் கோடி ரூபாயை ஐ.டி. பங்கில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 27 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இந்தத் துறையில் முதலீடு செய்திருந்தனர் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள். 
 
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கித் துறையில் 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆட்டோ துறையில் 28 ஆயிரம் கோடி ரூபாயும் ஃபைனான்ஸ் துறையில் 24 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளது.''  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close