Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

9. சும்மா வருமா வேலை..?

 

இதனை இதனால் யான் முடிப்பன்!

 

- - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

 

 

'என்ன வேணுமானாலும் படிச்சு இருங்க... அதையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்...?

எனக்கு வேண்டியது... இந்த வேலையை உங்களால எந்த அளவுக்கு சிறப்பா செய்ய முடியும்..?

உங்களால இந்த கம்பெனிக்கு என்ன பிரயோசனம்...? அதான் எனக்கு வேணும். புரிஞ்சுதா தம்பி...?'

 

'போங்க. போயி..., ஏதாவது ஒரு வேலை செஞ்சி, கொஞ்சம் அனுபவத்தோட வாங்க. கண்டிப்பா, வேலை போட்டுக் குடுக்கறேன்... உங்களுக்கு வேலை கத்துக் குடுக்கறதுக்கு நம்ம கிட்ட ஆளுங்க இல்லை.

கொறைச்ச சம்பளமா இருந்தாலும் சரின்னு எங்கயாவது சேர்ந்து, 'வேலை'ன்னு எதாவது பண்ணிட்டு வாங்க..

எனக்கு இந்த வேலை தெரியும்னு சொல்லுங்க.. உடனே, கை மேல வேலை போட்டுத் தர்றேன்..'

நமக்குத் தெரிந்த, தெரியாத யாரிடம் வேலை கேட்டுப் போனாலும் அனேகமாக இந்த பதில்தான் கிடைக்கும்.

 

'எங்க போனாலும் அனுபவம் இருக்கான்னு கேட்கறாங்களே... வேலைக்கு யாராவது சேர்த்துக்கிட்டாதானே அனுபவமே

கிடைக்கும்..? இவங்க எல்லாம், முதல்ல சேரும் போதே அனுபவத்தோடதான் சேர்ந்தாங்களா..?'

 - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இது, அறியாமையால் எழுகிற வினா. கோபம் அல்லது விரக்தியின் வெளிப்பாடு. திரைப் படங்களின் மோசமான பாதிப்பு. வேலை தேடுதலில் கடைப் பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப் பற்றிய புரிதல் இன்மை.

 

'அனுபவம்', எதற்காக எதிர்பார்க்கப்படுகிறது..? ஏற்கனவே வேலை தெரிந்து இருக்கிறது என்பதற்காக மட்டுமே அல்ல.

'பணி நேரம்' என்று ஒன்று இருக்கிறது அல்லவா...? அதற்கு, பழக்கப்பட்டு இருக்கிறாரா என்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம். உதாரணத்துக்கு ஒருவர், பட்டப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் வரை எந்த வேலைக்குமே போகவில்லை என்று கொள்வோம். இவருடைய அன்றாட நிகழ்வுகள் எப்படி இருக்கும்...?

 

நிதானமாகத் தூங்கி எழுந்து, 'இஷ்டம் போல்' ஊர் சுற்றி விட்டு வந்து, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,

எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற 'தான் தோன்றித்தனமான' வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருப்பவர். இவரால், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 'ஒரே இடத்தில்' அமர்ந்து வேலை பார்ப்பது இயலாத

காரியம் என்று, வேலை தருபவர் கருதுகிறார். என்ன தவறு..?

 

இளமையில் சோம்பேறித் தனம் என்பது, மீள முடியாத சோகம்.

கடின உழைப்புக்கு ஏற்ற இளைஞர்களைத்தான் யாருமே பணியில் வைத்துக் கொள்ள விரும்புவர்.

'அறிவு', 'தொழில் திறன்' எல்லாம் சொல்லிக் கொடுத்தால் வந்து விடும்.

'உழைக்க வேண்டும்' என்கிற எண்ணம்...? தானாக வந்தால்தான் உண்டு.

 

'ஏதோ ஒரு வேலை.. எதோ ஒரு சம்பளம்..' காலை முதல் மாலை வரை, எதிலாவது தன்னை ஈடுபடுத்திக் கொண்டு

இருக்க வேண்டும். (புரியற மாதிரி சொல்லணும்னா, 'பிஸியா இருக்கணும்') இது போல, 'பணி அட்டவணை'க்குப்

பழகிய, பக்குவப்பட்ட ஒருவர்தான் வேண்டும் என்பதற்குத்தான், 'அனுபவம்' கேட்கிறார்கள்.

 

ஏன் இத்தனை விரிவாகச் சொல்கிறோம்..?

'சின்ன சின்ன' வேலை செய்து கொண்டு இருப்பவர்கள்,

'இதெல்லாம் ஒரு அனுபவம்னு எப்படி குடுக்கறது..? என்று தயங்குகிறார்கள்.

ஊஹூம். அப்படி இல்லை.

 

விண்ணப்பிக்கும் பணிக்குச் சற்றும் தொடர்பு இல்லாமல், எங்கோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு பணி செய்து கொண்டு இருந்தாலும், சொல்லியே தீர வேண்டும்.

 

இனி, சுய குறிப்புக்கு வருவோம். பணி அனுபவம்.

இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்வோம்.

1. விண்ணப்பிக்கும் பணிக்குத் தொடர்பான அனுபவம்;

2. பொதுவான பணி அனுபவம்.

 

சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

தொடர்புடைய அனுபவம், முதலில்.

பொது அனுபவம் அடுத்து.

 

என்னென்ன விவரங்கள் தர வேண்டும்..? அனேகமாக அனைத்தும்.

கல்வித் தகுதிக்குச் சொன்னதில் இருந்து அப்படியே மாறானது.

 

மிகக் குறைந்த காலம் (ஒரே ஒரு மாதமாக இருந்தாலும்) பணி ஆற்றி இருந்தாலும், குறிப்பிட வேண்டும்.

இயன்றவரை, காலக் கிரமப்படி ('chronological order') தருவதே சிறந்தது.

 

பணியின் தன்மை, பணிபுரிந்த காலம், பெற்ற சம்பளம் ஆகியனவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

'தெளிவாக' என்று சொல்வதில் காரணம் இருக்கிறது.

 

பணியின் பெயரை வைத்து (name of the Post) ஒருவர் எந்த 'நிலை' (Grade) வகித்தார் என்பதைக் கணிக்கவே முடியாது. உதாரணத்துக்கு, 'அக்கவுண்டண்ட்'.

சில நிறுவனங்களில், இது மிகச் சாதாரண பணி.

சில நிறுவனங்களில் இதுவே மிக உயரிய பதவி!

 

பணியின் தன்மையை (nature of job) வைத்தே, 'க்லெரிகல் ஜாப்' அல்லது 'எக்சிக்யூடிவ் போஸ்ட்' என்பதைப்

பிரித்துப் பார்க்க முடியும். சற்றே விரிவாகப் பார்ப்போம்.

 

ஒரு நிறுவனத்தில், 'ரொக்கக் கையேடு' (cash book) எழுதுதல், அன்றாடம் வங்கிக்குச் சென்று வருதல் போன்றவற்றை

ஒரு 'அக்கௌண்டண்ட்' செய்கிறார் என்றால், அது 'purely a clerical job' என்றுதானே பொருள்..? இதுவே, வங்கிக் கடன்

பெற்றுத் தருதல், ஆண்டுக் கணக்குகளை முடிவு செய்தல் (finalising annual accounts) போன்ற பணிகளை ஒரு 'அக்கௌண்டண்ட்' செய்தால், மிக நிச்சயமாக அவர் ஒரு 'எக்சிக்யூடிவ்'க்கு உரிய பணியைச் செய்து வருகிறார் என்பது புரிகிறது.

 

ஆகவே, வெறுமனே பணியின் பெயர் மட்டுமே போதாது. அந்தப் பணியில் நாம் என்ன பணிகளையெல்லாம் செய்தோம் என்பதை விவரித்தே ஆக வேண்டும். இதில் 'சுருக்கமாக' இருக்கக் கூடாது. விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய பகுதி இது.

 

நாம் யாருக்கு 'ரிப்போர்ட்' செய்தோம், நமக்குக் கீழ் எத்தனை பணியாளர்கள் இருந்தனர், நம்முடைய பணி நேரம் என்ன, நிறுவனத்தின் ஒட்டு மொத்த வெற்றியில் நமது பங்களிப்பு என்ன.. போன்ற விவரங்களைப் பலர் தருவதே இல்லை.

இதுதான் மிக மிக முக்கியம். இதைச் சொல்லாமல் சுய குறிப்பு எதற்காக..?

 

தற்போதைய அல்லது முன்பிருந்த பணியில் பெற்ற சம்பளம், ஊக்கத் தொகை, தான் நிறைவேற்றிய தனதே தனதான 'ஐடியா'க்கள், பணியில் தான் நிகழ்த்திய புதுமைகள் & சாதனைகள் (எத்தனை சிறியதாக இருப்பினும்) பெற்ற பாராட்டுகள்,

சான்றிதழ்கள்.. என எல்லாம்,, எல்லாமே நாம் குறிப்பிட வேண்டியன.

 

நிதானமாக யோசித்து யோசித்து, நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதைப் பட்டியல் இட்டு, அவற்றில் எவை யெல்லாம் முக்கியம் என்று இனம் பிரித்துக் கொண்டு,

தகுதி வாரியாக, சுய குறிப்பில் ஏற்றிக் கொள்ளவும்.

பலர் இதனைச் செய்வதே இல்லை.

 

விளைவு..?

சுய குறிப்பின் மிக வலுவான பகுதியாக இருக்க வேண்டியது, நமது அசிரத்தை, மெத்தனம் காரணமாக,

மிகவும் பலவீனமான பகுதியாக இருந்து, பல்லிளிக்கிறது!

 

'படிப்பவர்களுக்கு' எளிதாக இருக்கும் என்பதால், இந்தப் பகுதியைத் தனியே, அட்டவணை வடிவில் தருவதே

பொதுவான வழக்கமாக இருக்கிறது. அதையே தொடர்ந்து கடைப் பிடிக்கவும்.

 

பணி அனுபவம் பற்றி மேலும் பல தகவல்களைப் பின்னர் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

 

இப்போதைக்கு இது போதும். இனி, அடுத்த கட்டத்துக்கு நகர்வோமா...?

 

- வளரும்.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close