Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

11. சும்மா வருமா வேலை..?

 

 வழக்கமா..? பழக்கமா..?


- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி'ஆத்தா...., நான் பாஸாயிட்டேன்....!' என்று கையில் ஒரு செய்தித் தாளை வைத்துக் கொண்டு ஓடி வருகிற
காட்சி எல்லாம், அரதப்பழசாகி விட்டது என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.

'ஆத்தா..' 'மம்மி..' ஆகி விட்டது; 'பேப்பர்', இடத்தில், மொபைல் ஃபோன்.
ஓடியும் வருவதில்லை; டூ-வீலரில் 'பறந்து' வருகிறார்கள்.
'பாஸ் ஆயிட்டேன்' என்று சொல்வது தேர்வில் அல்ல; தேர்ச்சியில். குழம்புகிறதா..? 'டெஸ்ட்' அல்ல; 'செலக்க்ஷன்'.
('நான் செலக்ட் ஆயிட்டேன்...!' - இப்போ, சரியா இருக்கா..?)

வேலைக்கான போட்டித் தேர்வுகள் பொதுவாக இரண்டு நிலைகள் கொண்டதாக இருக்கின்றன.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அதாவது இன்டர்வியூ. (இது நேர்முகத் தேர்வு என்றால், மற்றது 'மறைமுக' தேர்வு..?)

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால், நேர்முகத் தேர்வு. அங்கே என்னவெல்லாம் கேட்பார்கள்..?
இது குறித்துப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஆனால், 'எதை வைத்துக் கொண்டு' கேட்பார்கள்..?
இன்னும் எளிமையா..., 'எங்க இருந்து' கேள்வி வரும்..?

சந்தேகமே வேண்டாம். நாம் தருகிற பயோ-டேட்டாவின் அடிப்படையில்தான் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
அப்படின்னா..? பேரு.., ஊரு, என்ன படிச்சோம்.. எங்க படிச்சோம்.. (எங்க படிச்சோம்..? எப்பப் பார்த்தாலும், அரட்டை.. ஊர் சுத்தறது இதேதான்.. ஊஹூம். அந்த 'எங்க படிச்சோம்' இல்லை. எந்தப் பள்ளி / கல்லூரியில் படித்தோம்.. அது.)
இதைத்தான் கேட்பாங்களா..? ச்சே.. ஒண்ணுமே இல்லை. கலக்கிடலாம்.

கரெக்ட். கலக்கலாம்தான். ஆனா, எதாவது பொய் சொல்லிட்டா, மாட்டிக்குவோம்.
இன்டர்வியூல 'ஊத்திக்கும்'. வேலை கிடைக்காது.
'பொய்யா..? பேரு, ஊரு, படிப்பு.. இதுதானே..? இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு..?'
நல்லது. இந்த பயோடேட்டாவுல, 'ஹாபி'ன்னு ஒரு கட்டம் இருக்குதே..
அதுல என்ன எழுதி இருக்கீங்க...?

'அதுவா..? எதாவது எழுதி இருப்பேன். ஆங்.. ஞாபகம் வந்துருச்சி. 'ரீடிங் புக்ஸ்', 'புத்தகம் படித்தல்'னு போட்டு இருக்கேன்'.
ஓ...! புத்தகம் நிறைய படிப்பீங்களா...? வெரி குட். கடைசியா என்ன புத்தகம் படிச்சீங்க..?

'என்ன சொல்றது...? அது வந்து.. ஞாபகம் இல்லையே..?'
என்ன அர்த்தம்..? இல்லாத ஒன்னு, இருக்கறதா சொல்லி இருக்கீங்க. பொய்தானே..?

இன்டர்வியூல தெரிஞ்சுடுமா இல்லையா..?
'ஆமாம் இல்ல..? என்ன செய்யலாம்..?'

எழுத்துத் தேர்வு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வருகிறது. (இப்போதெல்லாம் 'மெய்ல்'தான்)
கூடவே ஒரு படிவம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இணைக்கப்பட்டு இருக்கும் படிவத்தை நிரப்பி, இந்தத் தேதிக்குள் அனுப்பி வைக்கவும். நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் தெரியப் படுத்தப்படும்.
இதுதான் கடிதத்தின் சராம்சம்.

பொதுவாக என்ன நடக்கிறது..?
உடனடியாக படிவத்தை எடுத்து ('டவுன்லோட்' செய்து)
எல்லாக் கட்டங்களையும் நிரப்பி விடுகிறார்கள் ஒரே ஒரு கட்டத்தைத் தவிர.
நிரப்பப்படாதது..? 'பர்ட்டிகுலர்ஸ் ஆஃப் ஹாபி'. அதாவது, பொழுதுபோக்கு பற்றிய விவரங்கள்.

'படிவம் அனுப்புவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றனவே.. அதற்குள்ளாக, என்னுடைய ஹாபி என்னவென்று முடிவு செய்து கொள்ளலாம்'.
அப்போது தொடங்குகிறது 'வேட்டை'. 
'ஒரு நல்ல' ஹாபி எது..?
என்ன ஹாபி போட்டா, இன்டர்வியூல ஈசியா இருக்கும்..?'

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், வருகிறவர்கள், போகிறவர்கள், உறவினர்கள், நண்பர்கள்...
எல்லார் கிட்டயும் நாம் கேட்கும் ஒரே கேள்வி - 'ஹாபி என்ன போடட்டும்..?'.
அடுத்த சில நாட்களுக்கு, தன்னுடைய ஹாபி என்னவென்று கண்டுபிடிப்பதுதான் பிரதான ஹாபியே!

'ஸ்டாம்ப் கலக்க்ஷன் போடு.. எங்கிட்ட பழைய ஸ்டாம்ப்ஸ் நாலஞ்சு இருக்கு.. கேட்டா, அதை எடுத்துக்காட்டு. சரியா..?'
'பேர்ட்ஸ் வாட்ச்சிங்தான் பெஸ்ட். யாரும் இந்த ஹாபியை போட்டு இருக்க மாட்டாங்க..
இதப் பத்தி, கேள்வியும் பெருசா கேட்க முடியாது..'
'என்னைக் கேட்டா.. 'ட்ராவலிங்' நல்ல சாய்ஸ். போன வருஷம் கூட கேரளா போயிட்டு வந்தே இல்லை..?
இப்போ போயிட்டு வந்த மாதிரி சொல்லிக்கலாம்..'
'அதெல்லாம் வேணாம். ஃபாரின் மூவீஸ் பார்க்கறதுன்னு சொல்லிடு. முதல் காரியமா, கடைக்குப் போயி,
ரெண்டு மூணு கொரியன் மூவியோட சி.டி. வாங்கி வந்து போட்டுப் பார்த்துடு. மேட்டர் க்ளோஸ்..'

'ஆஹா... ஆளாளுக்கு ஒரு 'ஐடியா' குடுக்கறாங்களே.. இதுல இருந்து, 'என்னோட' ஹாபியை எப்படி எடுக்கறது..?
ஊம்.. நல்ல ஐடியா. என் ஃப்ரெண்ட் தினேஷ், போன மாசம்தான் வேற ஒரு இண்டர்வியூல செலக்ட் ஆனான்.
அவனோட ஹாபியே போட்டுரலாம். அவனைக் கேட்டா, என்னென்ன கேள்வி கேட்டாங்கன்னு சொல்லிடுவான்.
அதுதான் கரண்ட் ட்ரெண்டுக்குக் கரெக்டா இருக்கும்.'  

பிரசினை என்ன..? 'வெளியில் சொல்லிக் கொள்ளும் படியான' ஹாபி எதுவும் நமக்கு இல்லை என்பது; அல்லது,
அப்படி நாம் எண்ணிக் கொள்வது. நம்முடைய படிப்பு, வேலை சாராத, அன்றாட 'அலுவல்'களில் வராத,
பொழுது போக்குக்காக செய்கிற ஒன்றுதான் 'ஹாபி'. அடிப்படையில் இது ஒரு மேற்கத்திய நடைமுறை.

நம் நாட்டைப் பொறுத்த வரை, தனியே 'ஹாபி' என்கிற ஒன்று, வைத்துக் கொள்வது இல்லை.
நம்முடைய பொருளாதாரச் சூழலும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

விடுமுறையில் சுற்றுலா செல்வது, ஏரிகளில் படகு சவாரி செய்வது, கையில் 'காமிரா'வுடன் படம் எடுக்கக் கிளம்பி விடுவது.. போன்ற விஷயங்கள் எல்லாம், 'நம்ம படங்கள்ல' செல்வந்தர்களின் அடையாளமாகவே பார்த்து இருக்கிறோம்.

மணிக் கணக்கில் ஆறு, ஏரி, குளங்களில் குளிப்பது(!!!),
'பாழடைந்த மண்டபத்தில்' நண்பர்களுடன் சீட்டு விளையாடுவது (பணம் வைத்து அல்ல),
டீக்கடை வாசலில் கூடி நின்று அரட்டை அடிப்பது,
கோயில்களுக்கு சென்று வருவது...
இவற்றையெல்லாம், 'ஹாபி' என்று ஏற்றுக்கொள்ள நாமோ நம் சமுதாயமோ தயாராக இல்லை.

'கலை', விளையாட்டு தொடர்பானதுதான் ஹாபி என்கிற சற்றே தவறான கருத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம்.
எதையெல்லாம் நாம் வழக்கமாகக் கொண்டு இருக்கிறோமோ, அதுவெல்லாம் ஹாபிதான்.
கவனம். வழக்கம்; பழக்கம் அல்ல.

ஒரு, வாழ்க்கை முறையாக இருப்பது வழக்கம்.
காலையில் எழுந்தவுடன் முதல் காரியமாக குளித்து விடுவேன். இதை நான் வழக்கமாக வைத்து இருக்கிறேன்.
இது, ஒரு 'ஹேபிச்சுவல் ஆக்ட்'. இது பொழுதுபோக்கு அல்ல. 'ஹேபிட் இஸ் நாட் ஹாபி'.

பழகி வருவது பழக்கம். சைக்கிள் விடுதல், நீந்துதல், ஏன்.., சீட்டாட்டம் கூட, பயிற்சியினால் வருவது.
'பழகப் பழகத்தான் பிடிக்கும்' என்பது போல. இவையெல்லாமே பொழுதுபோக்குதான். அத்தனை எளிதில்
எல்லாருடனும் நாம் அரட்டை அடிக்க முடியாது. 'பழகிய'வர்களுடன் மட்டுமே உரிமையுடன் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகவே, நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசுதல், 'பொழுதுபோக்கு' ஆகிறது.

மேலே சொன்ன வித்தியாசம், அகராதியில் எங்கும் சொல்லப்படவில்லை.
பயோ-டேட்டாவில் எழுதுவதற்காக, ஒரு மேம்போக்கான பார்வைதான்.
நூற்றுக்கு நூறு இப்படித்தான் என்று சொல்ல, கடுமையான விதிமுறை அன்று.
 
நம்முடைய 'ஹாபி'யை நாமேதான் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறர் சொல்லி அல்ல.
எதை நாம் மனம் களித்து செய்கிறோமோ, அதையே 'பயோ-டேட்டா'விலும் குறிப்பிட வேண்டும்.
அப்போதுதான், நேர்முகத் தேர்வை, நேர்மையாக எதிர் கொள்ள முடியும்.

ஆக, 'ஹாபி'யைப் பொறுத்த மட்டில், இதுதான் 'தம்ப்-ரூல்' -
'ஹாபி' என்று எதைக் குறிப்பிட்டாலும் அது, உண்மையில் நாம் பழகி வருகிற ஒன்றாக இருக்கட்டும்.

ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு 'ஹாபி'களை எழுதினால் போதுமானது.
தனியே ஒரு பட்டியலாக இணைக்கிற அளவுக்கெல்லாம் வேண்டாமே...!

இது போதும். அடுத்து நாம் பார்க்க வேண்டியது..
நம்முடைய 'சாதனைகள்'(!) பற்றிய குறிப்புகள்.

(வளரும்).


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close