Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

12. சும்மா வருமா வேலை..?

 


          
என்னவெல்லாம் செஞ்சிருக்கோம்...?


- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

'எனக்கு ஒரு சந்தேகம்... நான் ஸ்கூல்ல படிக்கறப்போ, என்.சி.சி.யில, இருந்தேன். டில்லியில ஆகஸ்ட் 15
சுதந்திர தின நிகழ்ச்சி ஊர்வலத்துல கலந்துக்கிட்டேன். இதை என்னுடைய 'பயோ-டேட்டா'வுல எழுதலாமா...?'

'நான் ப்ளஸ் டூ படிக்கறச்சே, கோயம்புத்தூர்ல, மாநில அறிவியல் கண்காட்சி நடந்துச்சி.. அதுல நான் ஒரு 'ஸ்டால்' வச்சிருந்தேன். அதுக்குதான் சிறந்த ஸ்டால்னு பரிசு கிடைச்சுது. இதைச் சொல்லலாமா வேணாமா..?'

'2008ல, ....... கழகம் நடத்துன பேச்சுப் போட்டியில, எனக்கு முதல் இடம் கிடைச்சுது. இது எனக்கு பயன்படுமா..?'

'மாநில மகளிர் கால்பந்துப் போட்டியில, ஃபைனல்ல விளையாடி இருக்கேன். எங்க டீம்தான் அந்த வருஷம்
'வின்' பண்ணி, 'கப்' ஜெயிச்சுது. இதை நான் சேர்த்துக்கலாம் இல்லை...?'

இது போல, பலப்பல வினாக்கள்; ஐயங்கள்.
எது சாதனை? எது சாதனை ஆகாது..? என்பதிலே பொதுவாக ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. நியாயம்தான். காரணம், இது பற்றிய தெளிவான ஒரு வரையறையோ விதிமுறையோ எதுவும் இல்லை.
ஆனால் சில 'எதிர்பார்ப்புகள்' உண்டு. அவை என்ன...?

1. மத்திய அரசு, மாநில அரசு நடத்துகிற போட்டிகள், வழங்குகிற சான்றிதழ்களுக்கு எங்குமே மதிப்பு உண்டு.
2. அரசு சார்ந்த, அல்லது அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுக்கு இரண்டாம் இடம்.
3. உலக / தேசிய அளவில் பிரபலமான கல்வி/ கலை/ அறிவியல் / விளையாட்டு / ஊடக நிறுவனங்கள் - மூன்றாவது இடம்.
4. உலகப் புகழ் பெற்ற (தொண்டு) நிறுவனங்கள் எனில், நான்காவது இடம். இந்தப் பட்டியலில் வராத எந்த நிறுவனம்/ நபர் வழங்கும் எந்தச் சான்றிதழும் 'வேலைக்கு ஆகாது'.

அது மட்டுமல்ல. முதல் இரண்டு இடங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மூன்றாவது, நான்காவது, ஆறுதல் பரிசு, பங்கேற்போர் சான்றிதழ் போன்றவை, எதற்கும் பயன்படாது. வெளியிலேயே சொல்ல வேண்டாம்.

தொடக்கத்தில் நான்கு கேள்விகள் பார்த்தோம். மேற்சொன்ன விதிமுறையின் படி, எவையெல்லாம் தகுதி பெறும்..?

முதலாவது, சுதந்திரதின அணி வகுப்பில் பங்கு பெற்றது.
கட்டாயம் கட்டாயம், 'பயோ-டேட்டா'வில் குறிப்பிடப்பட வேண்டியதுதான்.
என்.சி.சி.யில் பயிற்சி, அதிலும், குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பில் பங்கு பெற்றது... சாதாரண விஷயமா என்ன...? அதிலும், அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வில், இந்தத் தகுதி, மிகப் பெரிய சாதகமான அம்சம்.
தவற விட வேண்டாம்.

இரண்டாவது, அறிவியல் கண்காட்சி. இதை நடத்தியவர்கள் யார்...? இதில் கலந்து கொள்ள தகுதி நிலைப் போட்டி எதுவும்
நடைபெற்றதா..? எத்தனை பேர் கலந்து கொண்டனர்..? எதன் அடிப்படையில் இது தேர்வு செய்யப்பட்டது...? அது முழுக்கவுமே நீங்களே செய்தது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்..? ஆசிரியர்களும், உடன் படித்த மாணவர்களும் எந்த அளவுக்கு உங்களுக்கு உறுதுணையாய் இருந்தார்கள்...? இப்படிப் பல கேள்விகள். இவற்றுக்கான விடைகள் பெரும்பாலும்
உறுதிப்படுத்த முடியாதவையாக இருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகம். ஆகவே, பெரிய அளவிலே 'உதவியாக' இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும், குறிப்பிடலாம். தவறு இல்லை.

அடுத்ததாக, பேச்சுப் போட்டி. ஊஹூம். மன்னிக்கவும், சுய குறிப்பில் இடம் பெற வாய்ப்பே இல்லை.
நம்முடைய திறமை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு இத்தகைய போட்டிகள், ஒரு களம் அமைத்துத் தருகின்றன. அவ்வளவே. அதற்கு மேல், நம்முடைய 'தகுதி'யாகக் குறிப்பிடும் அளவுக்கு, இவை தகுதி படைத்தன அல்ல.

இது ஒருவகையில், இல்லாத தகுதியை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியாகத் தவறான பொருள் தந்து விடுகிற அபாயம் உள்ளது. கவனம். ஆகவே, சுய குறிப்பில் இத்தகவல் இடம் பெறவே கூடாது.

நிறைவாக, விளையாட்டுப் போட்டியில் சாதனை. ஆம். இது சாதனைதான். மாநில அளவிலான போட்டி; அதுவும்,
கால் பந்து விளையாட்டு. அதிலும், மகளிருக்கானது. இதை விடவும் சிறந்த அம்சம், ஒருவரின் சுய குறிப்பில்
இருக்க முடியுமா..? இதுவும், அரசுப் பணிக்கான தேர்வில் மிகச் சிறந்த சாதகமான அம்சம்.

இப்போதெல்லாம், தனியார் துறைகளிலும் கூட, விளையாட்டு வீரர்களுக்கு தனிப் பிரதி நிதித்துவம் வழங்கப் பட்டு வருகிறது. ஆகவே, தயக்கம் வேண்டவே வேண்டாம். தான் ஒரு, கால்பந்து 'சாம்பியன்' என்று தாராளமாக, இப்பெண், 'கூரை மீது நின்று கொண்டு கூவலாம்'.

இவைதானா இன்னும் உண்டா...?
இருக்கின்றன.

ஏதேனும் தரம் வாய்ந்த, பிரபலமான பத்திரிகையில் தன்னுடைய எழுத்துகள் பிரசுரம் ஆகி இருந்தால்....,
இயற்கைப் பேரிடர் போன்ற சமயங்களில், களத்தில் இறங்கிப் பணி செய்து இருந்தால்.....,
இலவச வகுப்புகள் நடத்துதல், இரத்த தானம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு இருந்தால்....,
அரசியல், மதம் சார்பற்று, பொது மக்களுக்கு உதவுகிற விதத்தில் எந்தச் செயல் செய்து இருந்தாலும்,
சுய குறிப்பில் ஏற்றிக் கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை. அது உண்மையாக இருத்தல் வேண்டும்.

எந்த ஒரு குறிப்பாக இருந்தாலும், அதை உறுதிப் படுத்துகிற விதத்தில், தக்க சான்றிதழ், ஆவணம்,
அது குறித்த பத்திரிகைச் செய்தி அல்லது வேறு ஏதாவது இருந்தே ஆக வேண்டும்.
அப்படி எதுவும் இல்லையா...? குறிப்பிடவே கூடாது.

விளம்பரத்துக்காகச் செய்யப்படுகிற, 'இத்தனை மணித் துளிகளில் இத்தனை 'பிளேடுகள்' தின்றேன் போன்ற,
'கின்னஸ்' சாதனை முயற்சிகள் எல்லாம், 'பயோ-டேட்டா'வில் கூடவே கூடாது.

குக்கிராமத்தில் படித்துப் பட்டதாரி ஆனேன்..., இவ்வின்ன குறைபாடுகளைக் கடந்து வெற்றி பெற்றுள்ளேன்..
என் குடும்ப சூழல் இப்படி இருந்தது... 'போராடிப் போராடி' இந்த இடத்துக்கு வந்து உள்ளேன்... போன்ற, மன்னிக்கவும், சுய தம்பட்டக் கதைகள் எல்லாம், வேலைக்கான விண்ணப்பம்/ சுய குறிப்பில் இடம் பெறத் தகுதியானவை அல்ல.

சிலருக்கு இது, மன வருத்தம் தருவதாக இருக்கலாம்.
வேலை வேண்டும். அதற்கு, தான் தகுதியுடையவன் என்பதை நிறுவுவதே, விண்ணப்பம்/ சுய குறிப்பின் நோக்கம்.

அனுதாபம் பெறுவது அல்லவே... ஆகவேதான் வேண்டாம் என்கிறோம். மற்றபடி, சொந்த வாழ்க்கையில் கண்ட சோதனைகளை, சாதனைகளாக மாற்றி, புகழின் உச்சிக்கு நீங்கள் வர வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

'சரி.. இவை யெல்லாம் சாதனைகள் இல்லை. ஒப்புக் கொள்கிறேன். 'அனுபவங்கள்' என்று சொல்லலாமா..?'
அதுவும் இல்லை.
'அப்படியா...? அப்போ...., 'அனுபவம்'னு எதைச் சொல்லலாம்..?'

-வளரும். 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close