Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிறுவனங்களின் வெற்றிக்குப் பின்னால்..!

- சித்தார்த்தன் சுந்தரம்

ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் வெற்றி காண்பது அனைவருக்கும் கைவந்த கலையில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறிப்பிட்ட சில தொழில்களில் வெற்றிக் கொடி நாட்டிவருகின்றனர். பொதுவாக, வியாபாரிகளை `பனியா (Baniya)’ என அழைக்கும் வழக்கமுண்டு. வடக்கிலும், மேற்கிலும் பனியா என அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஈடுபடும் தொழில் பணம் கொடுக்கல் வாங்கல், கமாடிட்டி டிரேடிங், ஸ்டாக் புரோக்கிங், சில்லறை வணிகம் போன்றவையாகும். இவர்களை ஒரு சமூகத்துக்குள்ளோ, மதத்துக்குள்ளோ அடைக்கா மல் தொழில் / வணிகம் செய்யும் அனைவரையும் ஏன் `பனியா’ என அழைக்கக்கூடாது என்கிற தனது கருத்தோடு `ரோக்டா – ஹெவ் பனியாஸ் டூ பிசினஸ்’ என்கிற புத்தகத்தை ஆரம்பித்திருக்கிறார் நிகில் இனாம்தார்.
இந்தப் புத்தகத்தில் ஐந்து தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கான சூத்திரங்களை அலசி ஆராய்ந் திருக்கிறார். அந்த ஐந்து நிறுவனங்கள் பற்றியும் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூத்திரங்களைப் பற்றியும் இனி பார்ப்போம். 
 

மெரு கேப்ஸை ஆரம்பித்த நீரஜ் குப்தா பம்பாயில் பிறந்து வளர்ந்தவர். இவர் இரண்டாவது தலைமுறை தொழில்முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலும், நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் `தூக்கலாக’ இருப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடத்துவதிலும் விருப்பம் கொண்டிருந்தார். கல்லூரியில் நடந்த ஒரு கலைவிழாவை ஏற்று நடத்தியதில் ரூ.20,000 சம்பாதித்தார். அப்போது இவரது வயது இருபதுக்கும் குறைவு. 

தீபாவளி சமயத்தில் நிறுவனங்களிடமிருந்து பரிசுப்பொருட்களுக்கான ஆர்டர் எடுத்து அதன் மூலம் சம்பாதித்தார். அதன்பின் நண்பரின் உதவியுடன் பிரீமியம் சேவை அளிக்கக்கூடிய வகையில் கராஜ் ஒன்றை ஆரம்பித்து கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்கினார். இப்படியாக ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான தொடர்பு ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில்தான் (2000- மாவது ஆண்டில்) அலுவலக பிக்-அப், ட்ராப் சேவை ஆரம்பமானது.
டாடா இன்ஃபோடெக் நிறுவனத்தின் டெண்டர் இவருக்குக் கிடைக்க பிக்-அப், ட்ராப் சேவையை ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின் குளிர்சாதன வசதியுடன், ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட `கேப்’களின் சேவைக்கான டெண்டரை மஹாராஷ்ட்ரா அரசு அறிவித்தது. அதிலும் நீரஜூக்கு வெற்றி. 

இண்டியா வேல்யூ ஃபண்ட் என்கிற முதலீட்டு நிறுவனம் நீரஜின் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆரம்பமானது `மெரு கேப்ஸ்’. இது கேப் சேவைத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஆரம்பத்தில் ரூ.10 கோடி முதலீடு செய்த இண்டியா வேல்யூ ஃபண்ட் இன்றைக்கு இதில் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. 

இந்த நிறுவனத்தின் கீழிருக்கும் 8000 கார்கள் மூலம் ஆறு  நகரங் களில் நாளொன்றுக்கு சுமார் 25,000 புக்கிங்களை 400 பணியாளர்களைக் கொண்டு கையாண்டு வருகிறது. இவரது இலக்கு 2022-ஆம் ஆண்டில் 1 லட்சம் கார்களை நாடெங்கிலும் இயக்க வேண்டும் என்பதுதான்.
எதிலும் புதுமையைப் புகுத்த வேண்டும் என்கிற ஆசையும், ரிஸ்க் எடுக்கக்கூடிய துணிவும் தான் இவருடைய வெற்றியின் சூத்திரங்களாக அமைந்தது. இவருடைய வெற்றிக்கு  மும்பை நிழலுலக மிரட்டல்களுக்குப் பணியாத துணிவும் ஒரு காரணம் ஆகும்.

அடுத்து ராஜஸ்தானிலிருந்து கொல்கத்தாவுக்கு பிரிட்டிஷ் இந்தியாவின்போது புலம் பெயர்ந்த மார்வாரி குடும்பங் களான ராதேஷ்யாம் அகர்வால், ராதேஷ்யாம் கோயங்கா பற்றியது. 
ராதேஷ்யாம் அகர்வாலின் அப்பா பன்ஷிலால் கொல்கத்தாவுக்கு வந்து பெயின்ட், ஹார்டுவேர், காஸ்மெட்டிக்ஸ், பென்சில் விற்பனை எனப் பல தொழில்களில் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதித்தார். பிற்பாடு  தொழிலில் நசிவு ஏற்படவே,  நொடிந்து போனார் ராதேஷ்யாம்.

இவரது மகன் ராதேஷ்யாம் படித்த பள்ளியில் அவனுக்கு இன்னொரு ராதேஷ்யாமின் (கோயங்கா) நட்பு கிடைத்தது. 1968-ஆம் ஆண்டு இரண்டு ராதேஷ்யாம்களும் தங்களது படிப்பை முடித்தனர். இரண்டு ராதேஷ்யாம்களும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்யச் சொல்லி ரூ.20,000 கொடுத்தார் கோயங்காவின் தந்தை கேஷர்தேவ். அதை வைத்து `கெம்கோ கெமிக்கல்ஸ்’ என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆனால், தொழில் சரியாகப் போகவில்லை. இதன் மூலம் அவர்கள் கற்றுக் கொண்ட பாடம், `சரியான முறையில் கணக்குவழக்குகளைக் கையாள வேண்டும்’ என்பதுதான்.

இந்தத் தோல்விக்குப்பின் மீண்டும் கேஷர்தேவ் முன்னால் இருவரும் ஆஜரானார்கள். 
அவர் மீண்டும் ரூ.1,00,000 தந்்ததுடன், ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியினால் இப்போது எடுக்கப் 
போகும் பொறுப்பிலிருந்து ஓடிவிட வேண்டுமென்று நினைக்காதீர்கள் என்கிற அறிவுரையும் வழங்கினார். அதன்பின், மலிவான காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி, அதை `ரீ-பேக்’ செய்து கெம்கோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் கீழ் விற்க ஆரம்பித்தனர். 

சில ஆண்டுகளுக்குப் பின் அதில் சோர்வு ஏற்பட, இமாமி நிறுவனத்தை ஆரம்பித்தனர். `இமாமி’ என்பதற்கு அர்த்தம் எதுவுமில்லை. ஆனால், `இத்தாலிய மொழிச் சொல்’ போல இருந்ததால், அதையே நிறுவனத்துக்கும், அதில் தயாராகும் பொருட்களுக்கும் வைத்தார்கள்.
அதன்பின் இந்த நிறுவனம், ஹிமானி நிறுவனம் தயாரித்துவந்த போரோலினுக்குப் போட்டியாகப் போரோப்ளஸ் என்கிற ஆண்டி-செப்டி க்ரீமை அறிமுகப்படுத்தியது. கூடிய சீக்கிரத்தில் ஹிமானியும் இமாமியானது! 

1995-ஆம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் இமாமி லிமிடெட் பங்குகள் பட்டியலி  டப்பட்டது. 2005-ஆம் ஆண்டுப் பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்டபோது 36 மடங்குக்குப் பங்குகள் வேண்டி விண்ணப்பம் வந்தன. சில ஆண்டுகளுக்குப்பின் ஜண்டு நிறுவனமும் இமாமி ஆனது. இன்றைக்கு எஃப் எம்சிஜி துறையில் ரூ.6,000 கோடி விற்பனையை ஈட்டும் நிறுவன மாக இது வளர்ந்திருக்கிறது.

ராதேஷ்யாம்களின் விடா முயற்சியும், ரிஸ்க் எடுக்கக்கூடிய துணிவும், தோல்வியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களும் இமாமி வெற்றிபெற காரணமாக இருந்திருக்கிறது.
அடுத்து, இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஆரம் பிக்கப்பட்ட ஸ்நாப்டீல்.காம். முன்பெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டு மெனில் கடைக்குப் போயாக வேண்டும். ஆனால்,  இப்போது உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு பட்டனை சொடுக்கினால் போதும், அனைத்தும் நமது இல்லம் தேடி 24 மணிநேரத்துக்குள் வந்துவிடும். இதைச் சாத்திய மாக்கியது ஸ்நாப்டீல்.காம். 
ஆரம்பத்தில் கூப்பன்களை மட்டும் விநியோகம் செய்யும் நிறுவனமாக இருந்தது நாளடைவில் மின்வணிகத் தளமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து சுமார் ரூ.6,000 கோடி (1 பில்லியன்) மதிப்பிலான பரிவர்த்தனை நடக்கக்கூடிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

2010-ஆம் ஆண்டு ரோஹித் பன்சால் தனது பால்ய கால நண்பனான குனால் பெஹலுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் ஸ்நாப்டீல்.காம். ஆரம்பத்தில் இவர்களுடைய யோசனையை 23 முதலீட்டாளர்கள் நிராகரித்து விட்டனர். ஆனால், இண்டோ யுஸ் வென்ச்சரைச் சேர்ந்த வாணி கோலாவுக்கு இந்த இளைஞர்களின் யோசனை பிடித்திருந்தது. முதல் சந்திப்பின் முடிவிலேயே ஸ்நாப்டீலில் 2 மில்லியன் டாலர் முதலீடு செய் வதாக அறிவித்தார்.  கூப்பன்களைத் தங்கள் வலைத்தளம் மூலம் வழங்குவதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் படிப்படியாக ஒரு `ஆன்லைன்’ சந்தைக்கான இடமாக உயர்ந்து, ஆண்டுக்கு ரூ.6,000 அளவுக்கு விற்பனை செய்து வருகிறது. 
ஸ்நாப்டீல், தனது பணியாளர்கள் அவர்களது யோசனைகளை மூத்த அதிகாரி களுடன் பகிர்ந்து கொள்ள ஊக்கமளிப்பதோடு, அதை நிறைவேற்ற  அந்தப் பணியாளர் களுக்கே முழுச் சுதந்திரத்தையும் தருகிறது.  தனது ஊழியர்களை வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு  வைத்திருக்க ஊக்குவிக்கிறது.  ஸ்நாப்டீலின் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம். 

அடுத்து, ஹிந்துஸ்தான் சானிட்டரிவேர் இண்டியாவின் உரிமையாளர் ஆர்.கே. சோமானி. இவரது குடும்பத்தினர் கண்ணாடி, ஜவுளி எனப் பல தொழில்களில் ஈடுபட்டனர். அப்போது `லைசென்ஸ் ராஜ்’ இருந்த காலகட்டம். சென்னை யில் கட்டப்பட்டுவந்த மருத்துவ மனைக்குக் கழிவறை சாமான்கள் தேவையாக இருந்தன. ஆனால், அவை இறக்குமதி செய்து  வந்துசேர ஒன்பது மாதங்கள் ஆகும் என்றார்கள். எனவே, டெல்லியில் இருந்த டைரக்டர் ஜெனரல் டெக்னிக்கல் டெவலப்மென்ட் அலுவலகத்தை  அணுக, அவர்கள் உள்ளூர் தயாரிப்பாளர் யாரேனும் விருப்பப்பட்டால் வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தப் பொருட்களைத் தயாரிக்க  உரிமம் தருவதாகக் கூறினார்கள். 

இப்படியாக ட்விஃபோர்ட் நிறுவனத்துடன் சேர்ந்து டெல்லிக்கு சற்று வெளியே உள்ள பகதூர்ஹர்க் பகுதியில் தொழிற்சாலை கட்டும் வேலை ஆரம்பமாயிற்று. அதன்பின் அக, புற வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. 1996-ஆம் ஆண்டு ஹெச்எஸ்ஐஎல் (HSIL) என்கிற இந்த நிறுவனம் ரூ.2,000 கோடி வருமானத்தை எட்டியது.   இன்றைக்கு இந்த நிறுவனத்தை இரண்டாம் தலைமுறையினர் நிர்வகித்து வருகின்றனர்.

கடைசியாக, ஐஐடி, ஐஏஎஸ் கோச்சிங் வகுப்புகளுக்குப்  புகழ்பெற்ற, ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்கிற இடத்தில் இயங்கிவரும் `பன்சால் க்ளாஸஸ் (Bansal Classes)’. `கோட்டா’ என்றவுடன் `இந்தியா வின் கோச்சிங் தலைநகரம்’ என்பதுதான் நினைவுக்கு வரும். இன்றைக்கு நாடு முழுக்க கோச்சிங்  சென்டர்கள் நிறைய உருவாகக் காரணமாக இருந்தார்  `வி.கே.சார்’ என அழைக்கப்படுகிற `வினோத் குமார் பன்சால்’. 

இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஜான்சி யிலிருந்து தந்தையின் வேலை நிமித்தம் லக்னோவுக்கு  இடம்பெயர்ந்தவர். படிப்பில் சூட்டிகையாக இருந்ததால், வி.கே.க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன்பின் பனாராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் (இன்றைக்கு அது ஐஐடி-பனாராஸ்) படிப்பு, அதன்பின் ஜே.கே.சிந்தட்டிக்ஸில் வேலை கிடைத்தது. 

1974-ஆம் ஆண்டு அவருக்கு தசைப்பிடிப்பினால் வலி ஏற்பட அதுவே குணப்படுத்த முடியாத நோயாகி அவரைச் சக்கர நாற்காலிவாசி ஆக்கியது. அவரது நாற்பதாவது வயதைத் தாண்டு வது கடினம் என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், அவர் தளரவில்லை. தான் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து விலகினார். அடுத்து என்ன செய்வது என யோசிக்கையில், `கோச்சிங்க் அட் ஹோம்’ என்கிற சொற்கள் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தது. என்ஜினீயரான இவர் கணக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியரானார். ஆங்கிலப் பாடம் தவிர்த்து அனைத்துப் பாடங்களிலும் பெயிலாகும் மாணவர்கள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வந்தனர். வந்தவர்கள் எல்லாம் தேரிச் சென்றனர். 1981-ஆம் ஆண்டு ஒரு மாணவனுக்கு ஆசிரியராக ஆரம்பித்து, 2008-ஆம் ஆண்டில் 25,000 மாணவர்களுக்கு ஆசிரியராக அவரை உயர்த்தியது. 

பன்சால் வகுப்புகளின் வருமானம் ரூ.120 கோடியை எட்டியது. அன்றிலிருந்து இன்றைக்கு வரை அயராது உழைத்து வருகிறார். 2009-ஆம் ஆண்டு வரை, இவருடைய வகுப்பு மாணவர்கள்தான் அகில இந்திய அளவில் 1 முதல் 3 ராங்கில் இருப்பார்கள். ஆனால், போட்டி கடுமையாக இருப்ப தாலும், சிறந்த ஆசிரியர்களை அடிக்கடி போட்டியாளர்களிடம் இழக்க வேண்டியிருந்ததாலும் அந்த நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது இவரது இரண்டு மகள்களும், மகனும் பன்சால் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

போட்டியாளர்களிடமிருந்து தங்களது ஆசிரியர்களைத் தக்கவைத்துக் கொள்ள அவர்களையும் பங்குதாரர்களாக ஆக்கியிருக்கின்றனர். பன்சாலிலிருந்து விலகிய ஆசிரியர்களே அவருக்கு  போட்டியாகப் பல கோச்சிங் கல்லூரிகளை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர்களின் சம்பளம் ரூ.2 கோடியாகும். 

2009-க்குப்பின் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும், மீண்டும் தன்னால் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் ராங்க் எடுக்கக்கூடிய மாணவனை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையில் கடினமாக உழைத்து வருகிறார் பன்சால். 
 

ஆக ரிஸ்க் எடுக்கக்கூடிய துணிவும், வாடிக்கையாளர் களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதும், கூட்டுக் குடும்பச் சூழ்நிலையும், சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் தன்மையும் `பனியா’க்களிடம் இருப்பது அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவதுடன் வெற்றிக்கும் வழிவகுக்கின்றன.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)
 
இந்த வார நாணய விகடன் இதழில் வெளியாகும் இந்தப் புத்தக அறிமுகம் உங்களுக்காக முதலில் ஆன்லைனில்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close