Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிபிஜ பிடியில் பிஏசிஎல் !


நீரை.மகேந்திரன்

மார்ச் 9-ம் தேதியிட்ட நாணயம் விகடனில் ஷேர்லக் பகுதியில் பி.ஏ.சி.எல் நிறுவ னத்தில் சிபிஐ சோதனை நடத்தி பல ஆவணங்களை எடுத்துச் சென்றது குறித்து எழுதியிருந்தோம். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்கப் பொதுமக்களிடமிருந்து நமக்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகள் வந்தன... இந்த நிறுவனம் எப்படிப்பட்டது, இந்த நிறுவனத்திடம் கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா? இது  நம்பத் தகுந்த நிறுவனம்தானா என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு நம்மைத் துளைத்தெடுத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த நிறுவனம் பற்றி நாம் திரட்டிய தகவல்கள்  இதோ:

 அன்று பி.ஜி.எஃப்., இன்று பி.ஏ.சி.எல்!

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது பேல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட் நிறுவனம் (PGF).இந்த நிறுவனத்தின் முக்கிய தொழிலே ரியல் எஸ்டேட்தான். அதாவது, மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி நிலத்தை வாங்குவது. இதன்மூலம் கிடைக்கும் லாபத்தை மீண்டும் மக்களுக்கே திரும்பத் தருவதாகச் சொன்னதால், பல லட்சம் பேர் பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனத்திடம் தந்தனர். இந்தத் திட்டம் முறைகேடாக நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. 2002-ல் செபி, பிஜிஎஃப் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற பணத்தை அவர்களுக்குத் திருப்பித்தர வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி இந்த நிறுவனம் நடக்காததால் திரும்பவும் 2008-ல் இந்த நிறுவனமும் அதன் இயக்குநர்களும் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யத் தடை செய்தது.   அதேசமயம், இந்தக் குழுமத்தைச் சேர்ந்த பேல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஏசிஎல்)  பழைய தொழிலை மீண்டும் செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவு, தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் 5 கோடி முதலீட்டாளர் களிடமிருந்து ஏறக்குறைய 45,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சிபிஐயின் விசாரணையில்  தெரிய வந்துள்ளது.   

 

எறும்பு ஏஜென்ட்கள்!

இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம்  என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவின் நான்கு திசைகளிலும் பேருந்து எட்டிப் பார்க்காத கிராமங்களில்கூட இந்த நிறுவனத்தின் ஏஜென்ட்கள் எறும்புகள்போல இரவு, பகல் பாராமல் ஆள்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களிடமிருந்து திரட்டப்படும் பணம் ஐந்தரை வருடங்களில் வட்டியுடனோ அல்லது இரட்டிப்பாகவோ திருப்பித் தரப்படும் என்கிற உத்தரவாதம் தருகிறது இந்த நிறுவனம். மக்கள் செய்யும் முதலீடுகளுக்கேற்ப நிலம் ஒதுக்கித்தரப்படும் என்று உறுதி அளிக்கிறது. இதனை நம்பும் மக்கள் கொழுத்த லாபத்துக்குப் பேராசைப் பட்டு, கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இந்த நிறுவனத்திடம் கொட்டுகின்றனர். ஈரோடு பகுதியைச் சுற்றிலும் உள்ள பல கிராமங்களிலிருந்து மட்டும் சுமார் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறதாம். இதுபோல ஒவ்வொரு ஊரிலிருந்தும் வசூலான தொகை எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.

கமிஷன், கமிஷன்!

இந்த நிறுவனத்தின் முக்கிய பலமே இதன் ஏஜென்ட்கள்தான். பகுதிநேரம், முழுநேரம் என இரண்டுவகைகளிலும் ஏஜென்ட்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் ஏஜென்ட்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 1.50 லட்சம் பேர் இருப்பதாகச் சொல்கின்றனர். பி.ஏ.சி.எல் தவிர, இந்தக் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான விட்டல் சீ Wittel see)  நிறுவனத்தின் மூலமாகவும் ஏஜென்ட்கள் பணிபுரிகின்றனர். ஏஜென்ட்களுக்கு சம்பளம் கிடையாது. ஆனால், ஒரு முதலீட்டாளரைக் கொண்டுவந்தால் 12 % வரை கமிஷன் கிடைக்கிறது.

முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு 'திறமை’யாகப் பதில் சொல்லத் தெரிந்தவர்களே இந்த வேலையில் நீடித்திருக்க முடியும். இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பணிபுரிந்தால், எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும்போது நாமும் பொறுப்பேற்க வேண்டுமே என்று நினைத்து, நீண்டகாலத்தில் இந்த நிறுவனத்தில் பணியாளர்கள் தங்குவதில்லையாம்.

நிலம் எங்கே?

மிகக் குறைந்தபட்ச முதலீடாக மாதம் ரூபாய் 160 இந்த நிறுவனம் நடத்தும் திட்டங்களில் கட்டலாம். ஐந்தரை ஆண்டுகளுக்குப்பிறகு குறிப்பிட்ட அளவு வட்டி கிடைக்கும் என உறுதியளிக்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் விபத்துக் காப்பீடு இன்ஷூரன்ஸ் கவரேஜும் கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறது. மக்களிடமிருந்து திரட்டிய பணத்தைவைத்து இந்த நிறுவனம் ஏறக்குறைய 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாகத் தகவல். இத்தனை லட்சம் ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனம் இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் வாங்கியிருக்கிறது, என்ன விலையில் வாங்கியது, யார் பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? இன்றைக்கு அந்த நிலத்தின் மதிப்பு என்ன? வாங்கிய நிலத்தில் எவ்வளவு முதலீட்டாளர்களுக்குப் பிரித்துத் தரப்பட்டு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை இந்த நிறுவனம் சொல்வதே இல்லை.

ரியல் எஸ்டேட் முதலீடு!

விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களைத் தமிழகத்திலும் இந்தியா முழுக்கவும் இந்த நிறுவனம் கொஞ்சம் வாங்கியிருக்கிறது என்றாலும், இந்த நிலம் எப்போது வளர்ச்சிகண்டு மக்களுக்கு லாபத்தைத் தரும் என்கிற கேள்விக்குப் பதிலில்லை. மதுரைக்கு அருகே நிலத்தை வாங்கி அங்கு பி.ஏல்.சி.எல் பேல்ஸ் சிட்டி அமைத்து வருவதாகச் சொல்கிறது இந்த நிறுவனம். இங்கு கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் உறுப்பினர்களுக்கு மட்டும் விற்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், பல வருடங்கள் கடந்த பின்னும் அந்த இடத்தின் முகப்பில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டதோடு சரி, வேறு எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.

தமிழகம் உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி விவசாய உற்பத்தி செய்வதாகச் சொல்கிறது. அதுபோல, இந்தியாவின் பல நகரங்களிலும் கட்டுமான வேலைகள் நடந்து வருவதாக இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சொல்லப்படுகிறது. உண்மையில்  யாரும் இவற்றை நேரில் பார்த்த மாதிரி தெரியவில்லை.

இது ஒரு பொன்ஸி நிறுவனமா?

இந்த நிறுவனத்தில் ஒரு முதலீட்டாளர் சேரும்பட்சத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகே பணம் எடுக்க முடியும். இடைப்பட்ட காலத்தில் பணத்தை வற்புறுத்திக் கேட்டால், அதுவரை கட்டிய பணமே கிடைக்கும். இதை எப்படி செய்வார்கள் தெரியுமா? கடைசியாக திரட்டப்பட்ட பணத்தைவைத்து, முதலில் திரட்டிய முதலீடுகளுக்கு செட்டில்மென்ட் செய்வார்கள்.  இப்படி செய்கிறபோது மக்களிடம் நிறுவனத்தைப் பற்றிய நம்பிக்கை வரும். இதனால் மேலும் மேலும் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள் மக்கள். இப்படி நடத்தப்படும் திட்டங்கள்தான் பொன்ஸி திட்டம் என்று சொல்லப்படுகிறது. திருப்பூரில் மாட்டிய பாஸி நிறுவனம், கோல்டு குவஸ்ட் நிறுவனம், தற்போது பெரும் சிக்கலில் மாட்டியிருக்கும் சஹாரா நிறுவனங்கள் எல்லாமே பொன்ஸி திட்டங்களை நடத்திய நிறுவனங்கள். பி.ஏ.சி.எல் நிறுவனமும் இதுபோன்ற ஒரு நிறுவனமா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.  

ஆந்திர அனுபவம்!

ஆந்திராவில் நடந்த சம்பவம் ஒன்றை இதற்கு ஓர் உதாரணமாக எடுத்துச் சொன்னார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர். அந்த மாநிலத்தில் இந்த நிறுவனம் மோசடிப் புகாரில் சிக்கவே, நம்பிக்கை இழந்த மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தருமாறு கும்பலாக வந்து கேட்டனர். உடனே உஷாரான பி.ஏ.சி.எல் நிர்வாகம், வேறு மாநிலங்களிலிருந்து முதலீடாக வசூலான பணத்தை எடுத்து, ஆந்திர மக்களுக்கு உடனுக்குடன் தரவே, மக்களே அசந்துபோனார்களாம். 'நல்ல நிறுவனத்தை தப்பா நினைச்சுட்டோமே’ என்று சொல்லி, மீண்டும் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். பிரச்னை வரும்போது இதுமாதிரி டெக்னிக்குகளை ஃபாலோ செய்து, தப்பிப்பது இதுமாதிரியான  நிறுவனங்களுக்கு கைவந்த கலை என்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த அந்த மனிதர்.

தாமதமாகும் பணம்!

இத்தனைநாளும் போட்ட பணத்தைத் திரும்பக் கேட்பவர்களுக்கு சத்தமில்லாமல் உடனுக்குடன் கொடுத்துவந்த பி.ஏ.சி.எல் நிறுவனம், இப்போது பணத்தைத் திருப்பித்தர சிறிது காலம் எடுத்துக்கொள்வதாக பேச்சு எழுந்திருக்கிறது. ஈரோடு பகுதியில் பணத்தைத் திரும்பக் கேட்கும் 100 முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஒருநாளைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் தினமும் காலையிலேயே வந்து டோக்கன் பெற்று, வரிசையில் நிற்கிறார்கள் பலர். அவர்களுக்கு  பணம் திரும்பக் கிடைக்க ஆறு மாதம் வரை ஆகிறதாம். இத்தனை மாதம் காத்திருந்து பெற்ற செக்குகளும் வங்கியில் போட்டால் பணம் கிடைக்காமல் பவுன்ஸ் ஆவதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.

ஆர்.பி.ஐ அனுமதி அவசியம்!

இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டவேண்டுமெனில், மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியை பி.ஏ.சி.எல் நிறுவனம் இதுவரை பெறவில்லை. காரணம், நாங்கள் நிதி நிறுவனம் அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனம்தான். எனவே, ஆர்.பி.ஐ.யிடம் நாங்கள் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது. ஆனால், ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெறாத ஒரு நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்து, அதில் குளறுபடி ஏதேனும் நடக்கும்பட்சத்தில், ஆர்.பி.ஐ அதற்குப் பொறுப்பேற்காது. மக்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கின் அடிப்படையிலேயே அந்த முதலீட்டை மேற்கொண்டதாகவே கருதப்படும்.

பி.ஏ.சி.எல் தரும் விளக்கம்!

இந்த நிறுவனம் தொடர்பாக இத்தனை தகவல்களைத் திரட்டியபிறகு, நமக்கு எழுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டு, பி.ஏ.சி.எல் நிறுவனத்தை அணுகினோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு உரிய  பதில் சொல்லாமல், நம்முடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது அந்த நிறுவனம். சென்னையின் ஒரு முக்கியமான மாலுக்கு வரச்சொல்லி, 'இப்போது இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டாம். எங்களுக்கு உதவி செய்யுங்கள். பதிலுக்கு நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்'' என்று சமரசம் பேசினார்கள். தாங்கள் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்றும் கன்சல்டன்ட் என்றும் சொல்லிக்கொண்டவர்களை அந்த நிறுவனத்தினர் நம்முடன் பேச அனுப்பியதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

நாங்கள் கேட்ட எழுத்துப்பூர்வமான பதிலை அனுப்பி வையுங்கள் என்று நாம் சொல்லிவிட்டு வந்துவிட்டோம். இதன்பிறகே பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து மின் அஞ்சல் மூலம் நமக்கு பதில்  வந்தது. நாம் கேட்டிருந்த கேள்விகளும் அதற்கு பி.ஏ.சி.எல் நிறுவனம் தந்த பதிலும் இனி:

 

1 பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்ட ஆர்.பி.ஐ.யிடமிருந்து அனுமதி பெற்றிருக்கிறீர்களா?

''நிறுவன விவகாரத்துறையின் கீழ் பி.ஏ.சி.எல் நிறுவனம் பதிவு பெற்றிருக்கிறது. நாங்கள் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மட்டுமே. வங்கி அல்லாத நிதிச் சேவைகளில் நாங்கள் ஈடுபடவில்லை. மக்களிடமிருந்து எந்த டெபாசிட்டையும் பெறுவதில்லை. எனவே, நாங்கள் ஆர்.பி.ஐ.யிடமிருந்து அனுமதி பெறவேண்டியதில்லை. 24.05.2006 அன்று ஆர்.பி.ஐ எழுதிய கடிதத்தில், 'பி.ஏ.சி.எல் இந்தியா நிறுவனம் ஆர்.பி.ஐ.யின் விதிமுறைகளின் கீழ் வரவில்லை’ என்று தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.  

2 நீங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி தருகிறீர்களே! ஐ.ஆர்.டி.ஏ.வின் அனுமதி பெற்றிருக்கிறீர்களா?

''நாங்கள் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. இதனால் ஐஆர்டிஏ-விடம் அனுமதி வாங்கத் தேவையில்லை.''

3 மக்களிடம் பெற்ற பணத்தை வைத்து என்ன தொழில் செய்கிறீர்கள்?

''இது ரியல் எஸ்டேட் நிறுவனம். திரட்டப்படும் முதலீடுகளைக்கொண்டு நிலங்கள் வாங்குகிறோம். அப்படி வாங்கியுள்ள நிலங்களில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.''

4 ரியல் எஸ்டேட் கடந்த வருடங்களில் எதிர்பார்த்த வளர்ச்சியைத் தரவில்லை. அப்படியிருக்க முதலீடுகளுக்கு எப்படி லாபம் தரமுடியும்? நீங்கள் வாங்கிய இடங்களின் இன்றைய வளர்ச்சி என்ன?

5 மக்களிடமிருந்து திரட்டிய பணத்தைத் திருப்பிதர ஆறுமாத காலம்வரை காலதாமதம் ஆவதாக சொல்கிறார்கள். இதில் உண்மை என்ன?  

4 மற்றும் 5-ம் கேள்விக்கான பதில்:

''பிஏசிஎல் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு நிலத்தை ஒதுக்கித்தருகிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை எனில் அந்த நிலத்தை நிறுவனம் விற்று பணத்தைத் திருப்பித் தருவோம். இதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்ல முடியாது.''

6 பிஏசிஎல் நிறுவனம் பொன்ஸி திட்டம்போல நடத்தப்படுவதாகச் சொல்கிறார்களே!

''இதை நாங்கள் மறுக்கிறோம். நாங்கள் பொன்ஸி திட்டம் நடத்தும் நிறுவனம் அல்ல.''

7 உங்களது டெல்லி அலுவலகம் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்?

''கூட்டு முதலீடுகளைத் திரட்டுவது தொடர்பாக செபியின் வழக்கு நீண்ட காலமாக இருந்துவருகிறது. (11AA)  இதுதொடர்பான வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2003 நவம்பர் 28 வழங்கிய தீர்ப்பில் பிஏசிஎல் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்கிறது என்றும், இது செபியின் 11 கிகி பிரிவின் கீழ் வராது என்றும் குறிப்பிட்டுள்ளது. பி.ஏ.சி.எல் நிறுவனம் நிலங்களை வாங்குவது, நிலங்களை மேம்படுத்தும் வேலைகளை மேற்கொள்கிறது என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது செபி. இந்த வழக்கில்தான் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் கூட்டு முதலீட்டுத் திட்டத்தை செபி விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி.ஏ.சி.எல் நிறுவனம் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை.''

8 பொதுமக்களிடமிருந்து திரட்டிய பணம் திரும்ப கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

''நாங்கள் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். எங்கள் முதலீட்டாளர்களுடன் நாங்கள் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நிலத்தை வழங்குகிறோம்''.

9 பி.ஏ.சி.எல் நிறுவனம் பணத்தைத் தர காலதாமதப்படுத்துவதாகவும் செக்குகள் பவுன்ஸ் ஆவதாகவும் சொல்லப்படுகிறதே! இதுவரை எத்தனை பேருக்கு பணத்தைத் திரும்பத் தந்திருக்கிறீர்கள், எத்தனை பேருக்கு செக் பவுன்ஸ் ஆகியிருக்கிறது?

''ஏராளமான கணக்குகளை ஆராய்ந்து பார்த்தபிறகு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். இப்போது ஹோலி பண்டிகை என்பதால், எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் விடுமுறையில் இருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை 20-ம் தேதிக்குப் பிறகு தருகிறோம்!'' என்றது பி.ஏ.சி.எல் நிர்வாகம்.

பொதுமக்களிடமிருந்து 22,000 கோடி ரூபாயை வாங்கிவிட்டு, அதைத் திரும்பத் தரமுடியாமல் திஹார் ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறார் சஹாராவின் சுப்ரதா ராய். இந்த நிலையில், பி.ஏ.சி.எல் நிறுவனம் பற்றி எங்கள் காதுக்கு எட்டிய செய்திகளை  வாசகர்களுக்குத் தந்துவிட்டோம்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படியே, பிஜிஎஃப் மற்றும் பிஏசிஎல் நிறுவனங்களில் சோதனை செய்து பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது சிபிஐ. செபியின் அலுவலகத்தில் விசாரித்ததில், பி.ஏ.சி.எல் மீதான விசாரணை நடந்து வருவதாகக் கூறினார்கள்.

சட்டப்படி எது சரியான முதலீடு என்பதை விளம்பரங்கள் மூலம் தொடர்ந்து மக்களுக்குத் தெரிவித்து வருகிறது செபி.  ரிசர்வ் வங்கி மற்றும் செபி அங்கீகரிக்கும் நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களில் உள்ள ரிஸ்க்கைத் தெரிந்துகொண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது நாணயம் விகடன்.

பதினைந்து, இருபது வருடங்களுக்குமுன் நம்பமுடியாத வட்டியை கொடுப்போம் என பல கம்பெனிகள் கூறி மக்களிடமிருந்து பல கோடி ரூபாயைச் சுருட்டிச் சென்றன. இன்னும் சில நிறுவனங்கள் தேக்கு, ஆடு, ஈமு என கோடிக்கணக்கில் மக்கள்  பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம்விட்டன. பேராசை பெருநஷ்டம் என்பதைப் புரிந்துகொண்டு, சரியான முதலீடு செய்தால் நம் பணம் பாதுகாப்பாக இருக்கும்!

படங்கள்: பா.காளிமுத்து,
ரமேஷ் கந்தசாமி.  


சி.பி.ஐ.யின் விசாரணை வளையம்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 22-ம் தேதியே சிபிஐ தனது தொடக்க விசாரணையை [preliminary]பதிவு செய்தது. இதன் மறுநாளே சிபிஐ இந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலும் இயக்குநர்கள் வீடுகளில் ஐந்து நாட்களாக 120 மணி நேரம் தொடர் சோதனைகளையும் மேற்கொண்டது. டெல்லி, சண்டிகர், மொஹாலி, ஜெய்ப்பூர், ஹரியானா என்று சோதனைகள் நடந்தன. சிபிஐயின் வங்கிப் பத்திர மோசடிகளுக்கான பிரிவு [Bank Securities & Fraud Cell (BS&F)] இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தொடக்க விசாரணையிலேயே இந்த நிறுவனம் நடத்தும் திட்டத்தில் சுமார் 5 கோடி முதலீட்டாளர்கள் சுமார் 45,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கலாம் என்று சிபிஐ தரப்பில் கணக்கிடுகிறது. ''இந்த நிறுவனத்தில் மோசடிக்கான முகாந்திரம் இருப்பது தெரிந்ததால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ள முழுமையான விவகாரங்கள் வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடும்போது தெரியவரும்'' என்கிறார் சிபிஐயின் பேச்சாளர் காஞ்சன் பிரசாத்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து 1.25 கோடி பேரும், மஹாராஷ்ட்ராவிலிருந்து 61 லட்சம் பேரும் ராஜஸ்தானில் 45  லட்சம் பேரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பதாக சிபிஐக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் தொடர்பாக 35 வங்கிகளில் உள்ள பல நூறு கணக்குகளை முடிக்கியுள்ளது சி.பி.ஐ. இதிலிருந்து கிடைத்தத் தொகை எவ்வளவு என்பதை சி.பி.ஐ. வெளியிடவில்லை என்றாலும் தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டுதான் வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்கள் முறையே நிர்மல் சிங் பாங்கோ[ Nirmal singh Bhangoo], சுக்தேவ் சிங் மற்றும் ஆறேழு இயக்குநர்களும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கூடியவிரைவில் சி.பி.ஐ.யின் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சரோஜ் கண்பத்

(நாணயம் விகடன் இதழில் 23.3.2014இல் வெளியான இக்கட்டுரை காலமும் தேவையும் கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close