Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

12. என்.ஆர்.ஐ - களும் வரியும்

NRI வீடு வாங்க கடன் பெற முடியுமா?
-    ஆடிட்டர் G. கார்த்திகேயன், கோவை

துபாயில் வசிக்கும் கணேஷ் பாண்டே எஃஸ்போர்ட் தொழிலில் கலக்கி கொண்டிருந்தார். தன் மகன் மற்றும் மனைவியுடன் துபாயிலேயே செட்டில் ஆகியிருந்த அவர் மகனை ஆடிட்டர் படிப்பிற்காக சென்னை அனுப்ப முடிவு செய்தார். மகனுடன் சென்னைப் புறப்பட்டார். காலை 6 மணிக்கு கையில் புத்தகத்தோடு சிட்டாகப் பறந்த வாலிபர்களை பார்த்த கணேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. கார் டிரைவரிடம் “நம்ம ஊர் பசங்களா பா இது?” என்றார். “ஆமாம் சார், மைலாப்பூர் காலைல எப்பவுமே இப்படி தான். நம்ம தம்பியும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் இப்படித்தான் இருபாரு” என்றார். பிள்ளை எப்படியும் ஆடிட்டர் ஆகி விடுவான் என்ற நம்பிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமானது கணேஷுக்கு. துபாயில் ஜாலியாக இருந்தோமே இனி தூக்கமே கெட்டது என்று மனசுக்குள் அலுத்துக் கொண்டான் மகன். ஊருக்குள் சென்றதில் சொல்லிக்கொள்ளும்படி சில மால்களும் கடற்கறையும் இருந்ததால் சரி எப்படியாவது ஓட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டான்.   எப்படியாவது  பல இடங்களில் விசாரித்து ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்தார். முதலில் மகனை விடுதியில் விட முடிவெடுத்தவர் அவற்றை பார்த்ததும் அந்த நினைப்பை அறவே அகற்றிவிட்டார். தீர விசாரித்ததில் சென்னையில் வீடுகள் அவர் நினைத்ததை விட மலிவான விலையில் கிடைப்பது தெரிய வந்தது. டாலர் விலையும் ஏறியிருக்கும் நிலையில் ஆகட்டும் என்று ஒரு வீட்டை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தார்.தரகரிடம் விசாரித்ததில் 4 கோடிக்கு ஒரு அருமையான வீடு இருப்பதை அறிந்தார். பார்த்ததும் பிடித்துவிடும் அழகான வீடு. வாட்சாப்பில் மனைவிக்கு சில போட்டோக்களை தட்டி விட்டார். “ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்போதான் ஒரு உறுப்படியான காரியம் செய்திருக்கீங்க” என்று கட்டை விரல் உயர்த்தினார் அவர் மனைவி. இங்கே ஹோம் தியேட்டர், அங்கே பாஸ்கெட் பால் கூடை என அடுக்கிக்கொண்டிருந்தான் மகன். “படித்து விடுவாயா டா?” என்று சிரித்துக்கொண்டே கண்டித்தார் அப்பா. “நான் உங்க பையன் அப்பா! கலக்கி விடலாம்” என்றார். “என் சந்தேகமே அதுனால தான்” என்று ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டனர்.

தன் வங்கி மேனேஜரை அழைத்து வீட்டுக் கடனுக்கான நடைமுறைகளைப் பற்றி விசாரித்தார். அவர் கூறியதாவது, கவலையை விடுங்க சார் இப்போதெல்லாம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடன் பெறுவது பிரம்ம ப்ரயத்தனம் இல்லை. மிக எளிதாக குறைந்த செயலாக்க நேரத்தில் கடன் பெற்று விடலாம். சுய தொழில் செய்பவராக இருப்பின் குறைந்தது 3 ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொதுவாக வங்கிகளில் இருக்கிறது. ஒருவருடைய ஆண்டு வருமானத்தில் 4 மடங்கு வரை வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. ஆனால் NRE/ FCNR கணக்குகளுக்கு எதிராக 1 கோடி ருபாய் வரை மட்டுமே கடன் அளிக்க முடியும் என்ற விதி FEMA சட்டத்தில் உள்ளது. உங்கள் ஆண்டு வருமானம் 50 லட்சம் என்பதால் 2 கோடி வரை எங்கள் வங்கி உங்களுக்கு கடன் அளிக்க முடியும். கடன் விண்ணப்பப் படிவத்தோடு, பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டி ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் 2 கோடியை சேமிப்புகளிலிருந்து எடுக்க வேண்டுமே என்று கவலை கொண்டார் கணேஷ். வீட்டை விட மனசில்லாததால், சரி என மனைவியும் ஒப்புக்கொண்டார்.

நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், “இவ்வளவு பெரிய வீட்டில் பிள்ளையை தனியா விட வேண்டாமே கணேஷ். என் தம்பியும் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறான். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டு விடு. மேல் தளத்தில் உன் பையன் தங்கிக்கொள்ளட்டும். அவன் வந்துவிட்டால் உன் மகனுக்கு சாப்பாட்டுக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். பையனுக்கு படிப்பு செலவிற்கும், வங்கிக்கு வட்டி செலுத்தவும் பயன்படும்தானே” என்றார். “அது போக, வரிப்படிவத்தில், வரும் வாடகையிலிருந்து வங்கிக்கு கட்டும் வட்டியையும் கழித்துக்கொள்ளலாம். 30% வாடகையும் கழிந்துவிடும். துபாயில்தான் வரியில்லையே! யோசிக்காமல் தலையை ஆட்டிவிடு” என்றார். அவர் சொல்வதும் சரியாகத்தான் தோன்றியது.   பணம் இவ்வளவு விரைவாய் கிடைத்ததே ஒரு நல்ல சகுனமாய் பட்டது, அதோடு மகனை ஒரு அழகான சௌகரியமான வீட்டில் அமர்த்திவிட்ட நிம்மதியுடன் வீட்டை அடுத்த மூன்று மாதத்தில் வாங்கி துபாய் திரும்பினார் கணேஷ் பாண்டே.       

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close