தங்கம், ரியல் எஸ்டேட் வேண்டாம்! ஈக்விட்டி தான் பெஸ்ட்!
மாறி வரும் முதலீட்டாளர்களின் மனநிலை
பெரும் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வதைக் குறைத்து அதிகளவில் லாபம் தரும் ஈக்விட்டியில் முதலீடை குவித்து வருவதாக சமீபத்திய புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் பெரும் முதலீட்டாளர்கள்(ரூபாய் 5 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட பணத்தை நிர்வகிப்பவர்கள்) லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஈக்விட்டியில் பங்குகளை வாங்கி வைப்பது மட்டும் இல்லாமல், அடிக்கடி அந்த பங்குகளை கூர்ந்து கவனித்து போர்ட்ஃபோலியோ முதலீடுகளை மாற்றியும் வருவதாக இந்த துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஒரு ஆண்டில் லார்ஜ் கேப் ஃபண்டுகள் 6.6 சதவிகிதம் ரிடர்ன் தந்துள்ளது.
ஆனால் மிட் கேப் ஃபண்டுகள் 19.27 சதவிகிதம் ரிடர்ன் வழங்கியுள்ளது. பார்மா ஃபண்டுகள் மட்டும் 35 சதவிகிதம் ரிடர்ன் தந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மிட் கேப் ஃபண்டுகளின் விலை அதிகளவில் உயர்ந்த காரணத்தினால், பெரும் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட 3 மடங்கு வரை ஈக்விட்டியில் லாபம் கிடைப்பதால், பெரும் முதலீட்டாளர்கள் பணத்தை வெவ்வேறு திட்டங்களிலிருந்து ஈக்விட்டியில் முதலீடுகளை அதிகளவில் குவித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தைகளில் போதிய லாபம் இல்லாத காரணத்தினால், பெரும் முதலீட்டாளர்கள் படிப்படியாக ஈக்விட்டி திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இதற்கு முன் இல்லாத வகையில் பெரும் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அடிக்கடி மாற்றி வருவதாகவும், கடந்த 2 ஆண்டுளுக்கும் மேலாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டின் அளவு பாதியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.