Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எழுதப்படிக்கத் தெரியாத தாயின் ஒரே லட்சியம்?

கடந்து போன காலத்தை மாற்றியமைக்கின்ற வலிமை மனிதர்களிடம் கிடையாது. ஆனால் வரப்போகிற எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வலிமை மனிதர்களிடம் இருக்கிறது. தன் அன்பின் வழியாக மகளின் நாளைய வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு அம்மாவின் கதை தான் எஸ்டர்டே திரைப்படம்.


ஆப்பிரிக்க பாலைவனத்தின் சிறுபகுதி போல காட்சியளிக்கும் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வாழ்ந்து வருகிறாள் எஸ்டர்டே என்ற பெண். அந்த கிராமத்திற்கு மருத்துவமனையோ, சரியான போக்குவரத்து வசதிகளோ கிடையாது. அவளின் தினசரி வாழ்க்கை, விவசாயத்திலும், தண்ணீர் பிடிப்பதிலும், துணி துவைப்பதிலும், சமைப்பதிலும், சமைப்பதற்காக விறகு பொறுக்குவதிலும், மகளுடன் இருப்பதிலும், அண்டை வீட்டாருடன் பேசுவதிலும் நகர்கிறது.


அவளை சுற்றியிருக்கும் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையும் இந்த மாதிரி தான் சுழல்கிறது. அவளின் கணவன் நகரில் இருக்கும் சுரங்கத்தில் வேலை செய்கிறார். பணம் மட்டும் அனுப்புவார். அவர் வீட்டிற்கு வந்து பல மாதங்கள் ஆகிறது .


அன்பு மகள் அருகில் இருப்பதால் அவளின் வாழ்க்கை சுவை மிகுந்ததாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறது. மகளுடன் சேர்ந்து தோட்டத்தை பராமரிக்கும் நேரமும், அனல் பறக்கும் வெயிலில் விறகு சேகரிக்கும் நேரமும் கூட அவளுக்கு ரம்மியமானவை. அவளின் கனவுகளும், ஆசைகளும், விருப்பங்களும் மகளை பற்றியது மட்டுமே. மகளுடன் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவளின் வாழ்க்கை எதிர்பாராத நோயினால் நலிவடைகிறது.


தீராத இருமலும், உடல் சோர்வும் அவளை வதைக்கிறது. முன்பு போல எந்த வேலையையும் இப்போது அவளால் செய்ய முடிவதில்லை. இதெல்லாம் அவளுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ஒரு பறவையை போல் பறக்க துடிக்கும் மகளின் முன் இருமவே அவள் வேதனைப்படுகிறாள். அவளின் நிலையைப் பார்த்ததும் மகளின் புன்னகை பூத்த முகம் சட்டென வாடிவிடுகிறது. இது உடல் சோர்வை விட அவளை இன்னும் நிலைகுலைய செய்து விடுகிறது.


கிராமத்தில் இருந்து மருத்துவமனை வெகு தொலைவில் உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் நடந்தே அம்மாவும் மகளும் அங்கே செல்கிறார்கள். ஒரே ஒரு மருத்துவர் இருப்பதாலும் பலபேர் முன்பே காத்துக்கிடப்பதாலும் பலமுறை அங்கு சென்றும் மருத்துவரை காண முடிவதில்லை. அம்மாவுக்கும் மகளுக்கும் அற்புதமான நண்பர் ஒருவர் கிடைக்கிறார். அவர் மருத்துவரை சந்திக்க கார் ஏற்பாடு செய்து தருகிறார். மருத்துவரை சந்தித்தபோது அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வருகிறது. சுரங்கத்தில் வேலைப் பார்க்கும் தன் கணவனின் வழியாக தனக்கு எய்ட்ஸ் வந்திருக்கிறது என்பதை உணரும் அவள் இன்னும் வேதனையடைகிறாள்.


அன்பையும், ஆதரவையும் நாடி பல மாதங்களாக வீட்டிற்கு வராத கணவனை பார்த்து பேசுவதற்கு அவன் வேலை செய்யும் நகரத்தில் இருக்கும் சுரங்கத்திற்கு செல்கிறாள். ஆனால் அவளுக்கு மிஞ்சியது கணவனின் இறக்கமற்ற அடியும் ஏமாற்றமும் தான். நாட்கள் செல்ல செல்ல நோயின் தீவிரம் அதிகமாகிறது. மகளை பிரிந்து சென்று விடுவோமோ என்ற வேதனை இன்னும் அவளை துயரத்தில் ஆழ்த்துகிறது.


சில நாட்களுக்கு பிறகு அவளை அடித்து ஒதுக்கிய கணவன் நோயின் இயலாமையால் அவளைத் தேடி வருகிறான். அவனை மகளுக்காக ஏற்றுக்கொள்கிறாள்.


தங்களின் அறியாமையால், பயத்தால், கல்வியறிவு அற்ற அண்டை வீட்டார் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட அவளையும், அவளின் கணவனையும் வெறுக்கவும், விலகி செல்லவும் செய்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை. மரணம் அவளை நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. எழுதப்படிக்கத் தெரியாத அவளின் ஒரே லட்சியம், ஆசை, தன்னுடைய மகளை முதல் நாள் பள்ளியில் கொண்டுபோய் விடும்வரை உயிரோடு இருக்க வேண்டும் என்பதே. அந்த ஆசை நிறைவேறும் நாள் வந்தது. மகளை பள்ளியில் முதல் நாள் கொண்டு போய் விட்டு வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் அவள் திரும்பி வருவதோடு படம் நிறைவடைகிறது.


அம்மாவின் பெயர் எஸ்டர்டே, மகளின் பெயர் பியூட்டி, அம்மாவின் பெயரைப் போல கடந்த காலம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மகளின் பெயரைப் போல எதிர்காலம் அழகாக இருக்க வேண்டும் என்றால் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படம் ஆழமாக நமக்கு உணர்த்துகிறது.

படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க: 


ஜூலு மொழியில் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் டாரெல் ஜேம்ஸ் ரூட். சிறந்த வெளிநாட்டு படத்துகான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது இப்படம். தென் ஆப்பிரிக்கா நாட்டு திரைப்படங்களில் முக்கியமான படமாக இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது எஸ்டர்டே.

- த. சக்திவேல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close