Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20. சும்மா வருமா வேலை..?

'இலக்கணம்'..? சுத்தம்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி'எது வேணும்னாலும் படிச்சுருவேன். இந்த.. 'கிராமர்' மட்டும் வேனாம். சொல்லிட்டேன். சரியான 'போர்'ப்பா அது.
அதை போய் படிக்கச் சொல்றியே... யாருமே படிக்க மாட்டாங்க. நீ வேணும்னா பாரேன்...
எல்லாருமே அதை 'சாய்ஸ்'லதான் விடுவாங்க. அப்படியே படிச்சாலும், புரியாது. இல்லைனா ஞாபகம்
வச்சிக்க முடியாது. அதுக்கு எதுக்கு டைம் 'வேஸ்ட்' பண்றது..? சொல்லு. அந்த நேரத்துக்கு வேற எதாவது படிச்சாலும் 'யூஸ்'ஆ இருக்கும்...'

எல்லாப் போட்டித் தேர்வுகளிலும், மொழி அறிவு, முக்கிய இடம் வகிக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், தமிழ் அல்லது ஆங்கிலம், ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்கிற வசதி இருகிறது. அப்படியும் தமிழ்நாட்டில், தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்தைத் தேர்வு செய்கிறவர்கள் அதிகம்!

காரணங்கள் பல. அவற்றுள் முதன்மையானது - 'கிராமர்'.
ஒப்பிடும் போது, பெரும்பாலோர்க்கு, இலக்கணம் கடினமானது. 'கிராமர்', எளிமையானது.

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் பிழையின்றி எழுதப் பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறது. போட்டித் தேர்வுகளில் தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை தருகிறவர்களின்
எண்ணிக்கையைப் பார்க்கிற போது, நாம் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயம் ஏற்படுகிறது.

பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்குமே கூட எவ்வளவு வேறுபாடு..?
இ, ஈ, எ, ஏ, ஒ, ஓ ஆகிய எழுத்துக்கள், பேச்சுத் தமிழில் வழக்கொழிந்து போய், பல ஆண்டுகள் ஆகி விட்டன.

'இங்கே' என்பது இல்லை; 'யிங்கே' தான்.
'ஈகை'. ஊஹூம். 'யீகை' தான்.

'எங்கே', 'எப்போது', 'எப்படி' எல்லாமே ('யெல்லாமே') 'யெங்கே' யெப்போது' யெப்படி' ஆகி விட்டன.
'ஏன்' 'ஏற்றம்' 'ஏளனம்' - முறையே 'யேன்', 'யேற்றம்', 'யேளனம்'.

'ஒலி', 'ஒன்று', 'ஒற்றுமை'..... 'வொலி', 'வொன்று', 'வொற்றுமை' தான். 
'ஓரம்' 'ஓட்டம்' 'ஓய்வு'..... மறைந்து, 'வோரம்', 'வோட்டம்', 'வோய்வு' மட்டுமே இன்றைய நிலையில் மிஞ்சி நிற்கின்றன.

இது மட்டுமே அல்ல.
நான், நாம், நாங்கள், நீ, நீங்கள் இல்லை; னான் னாம், னாங்கள், னீ, னீங்கள்.
இப்படிப் பேசுவதே சரி என்று ஏற்றுக் கொண்டு விட்டோம்.

'இலக்கணம்' எதற்காக..? 'இலக்கனம்' என்று எழுதினால் என்ன தவறு..? என்று 'புத்திசாலித் தனமாக' கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எப்படிப் பேசுகிறோமோ, அப்படியேதான் எழுத வேண்டும் என்று வாதம் செய்கிறார்கள்.

ஒருமைக்கும் பன்மைக்கும் வெவ்வேறு வினைச் சொற்கள் என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
அதனால்தான், மலைகள் நிற்கிறது; மரங்கள் தருகிறது; மாடுகள் வருகிறது; மாலைகள் விழுகிறது.

'ர'வுக்கும் 'ற' வுக்கும் இடையே 'தகறாரு' வருகிறது.
'பழம்' என்றால் எப்போதுமே 'பயம்'தான்.

போதாக் குறைக்கு, திரைப் பாடல்கள் வேறு.
இலக்கண சுத்தமாய் எழுதுவதோ பேசுவதோ செய்யக் கூடாத அவமானகரமான செயல் போல் ஆகி விட்டது.
இதுவே, ஆங்கிலத்தில் பிழையாக எழுதவோ பேசினால் மட்டும், பெரும் குற்றம் ஆகி விடுகிறது.

மொழிப் பிரசினை பற்றி பேசுவது நமது நோக்கம் அல்ல.
'ஒதுக்கி வைக்க' வேண்டிய அளவுக்கு, இலக்கணம் ஒன்றும் கடினமானதோ, சலிப்பு ஊட்டக் கூடியதோ அல்ல.
அப்படியே இருப்பினும், கற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்..? விட்டு விட முடியுமா..?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில், தமிழ் மொழித் தாளுக்கான பாடத் திட்டம் தரப் பட்டு இருக்கிறது.
நேர்ச் சொல், எதிர்ச் சொல், ஒருமை, பன்மை வேறுபாடு, ஓர் எழுத்துச் சொற்கள், பல பொருள் படும் ஒரு சொல்,
ஒரே பொருள் படும் பல சொற்கள்..... அத்தனையும் மிக எளிமையானவை; சுவையானவையும் கூட.

வாக்கிய அமைப்பு, வினைச் சொல்லைப் பெயர்ச் சொல் ஆக்குதல், தனி வாக்கியம், கலவை, கூட்டு வாக்கியம்,
பழமொழிகள், மேற்கோள்கள்.... மிகவும் சுவாரஸ்யமான பகுதிகளைக் கொண்டதாக, தமிழ் மொழித் தாள்,
அமைக்கப் பட்டு இருக்கிறது. இது தெரியாமலே பலரும், 'தமிழா..? வேண்டாம்.' என்று தவிர்த்து வருகிறார்கள்.

ஆங்கில இலக்கணமும் அப்படியே, பள்ளிப் பாடங்களில் வருவதேதான். தனியாக யாரிடமாவது சென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமே இல்லை.
கடந்த ஆண்டுகளின் வினாத் தாட்களைப் பார்த்தாலே, தேர்வு எத்தனை எளிமையானது என்பது புரிந்து விடும்.

ஆனாலும், அவ்வப்போது, கதை, கட்டுரை போன்று ஏதேனும் படித்துக் கொண்டே இருந்தால், முடிந்தால் எழுதிக் கொண்டே வந்தால், எந்த மொழியிலும் பிழைகள் வர வாய்ப்பே இல்லை.

தமிழ்த் தாளில், ஒரு வாக்கியத்தைத் தந்து, பிழையின்றி எழுதச் சொல்லி குறைந்தது ஐந்து வினாக்கள் வருகின்றன.
மிகச் சாதாரணமாக அன்றாடம் புழக்கத்தில் உள்ள வாக்கியங்கள்தாம் தரப்படுகின்றன.
இதை விட என்ன வேண்டும்...?

தரமான பத்திரிகளையும் புத்தகங்களையும் தவறாமல் படித்துக் கொண்டே வந்தாலே போதும்.
பிழையின்றி பேச எழுத, தானாக வந்து விடும்.
மதிப்பெண்களை முழுமையாக (நூற்றுக்கு நூறு) பெற நல்ல வாய்ப்பு உள்ள ஒரு பகுதிதான், மொழித் தாள் பகுதி.

சற்றே, மிகச் சற்றே, ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.
தேர்ச்சி பெறுவது உறுதி.

கணிதம், அறிவியல், சரித்திரம் போன்ற பாடங்களைப் பொறுத்த மட்டும், ஏற்கனவே சொன்னதுதான்.
பாடப் புத்தகங்களைப் படிப்பதைத் தவிர, வேறு ஒரு வழி இல்லவே இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

நடப்புச் செய்திகள். (current affairs) பொது அறிவு என்றாலே, இந்தப் பகுதியைத் தான் எல்லாரும் குறிப்பிடுகிறார்கள்.
தவறு இல்லை. நாட்டு, உலகச் செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வர வேண்டும். தரமான நாளிதழ்களாகப் பார்த்துப்
படிக்க வேண்டும். தலையங்கம், நடுப் பக்கக் கட்டுரைகள், வணிகச் செய்திகள், சர்வ தேசச் செய்திகள் போன்றவை
மிக முக்கியம். சினிமா, கிரிக்கெட், (உள்ளூர்) அரசியல்.... கட்டாயம் வேண்டவே வேண்டாம்.
இவற்றால், 'பைசாவுக்கு பிரயோசனம் இல்லை'.

நிறைவாக, பயிற்சி.
கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும்.
இவற்றை பதிவிறக்கம் ('டவுன்லோட்') செய்து, மாதிரித் தேர்வுகளாக, அவ்வப்போது எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வினாக்களுக்கான விடைகளும் இணையத்திலேயே கிடைக்கும். ஆகவே நமக்கு நாமே மதிப்பீடும் செய்து கொள்ளலாம்.

எத்தனை விரைவாக நம்மால் விடை எழுத முடிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எத்தனைக்கு எத்தனை பயிற்சி செய்கிறோமோ, அத்தனைக்கு விரைவாகத் தேர்வின் போது செயலாற்ற முடியும்.

எழுத்துத் தேர்வுகளுக்கான அடிப்படை அம்சங்களைப் பார்த்தோம்.

'இன்ட்ரஸ்டிங்'கான அடுத்த கட்டத்துக்கு நகர்வோமா...?

'இன்டர்வியூ'!

(வளரும்)  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close