Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை வெள்ளத்தால் வீடுகளுக்கு பாதிப்பு : ஹவுஸ் ஹோல்டர் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்குமா?


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை, வெள்ளம் என தமிழகத்தின் பெரும்பகுதிகள் நீரில் முழ்கி உள்ளன. சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. வீடுகளில் புகுந்துள்ள மழை நீரினால் பலரும் தெருவில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிவதும்,சுற்றுச் சுவர் விழுவது, வீட்டில் உள்ள எலெட்ரானிக் பொருட்கள் உள்பட அத்தனை பொருட்களும் சேதம் அடைவது என பல்வேறு வகையில் மக்களுக்குப் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது.  இந்தப் பொருட்களை மீண்டும் புதிதாக வாங்க வேண்டும் எனில், பல ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதே நிஜம். 

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து கைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி. ஆனால், இந்த பாலிசியை மிக மிக குறைவானவர்களே எடுத்திருப்பதால், இழப்பீட்டை எந்த வகையிலும் ஈடுகட்ட முடியாத நிலையில் இருக்கின்றனர். 
 
இந்த ஹவுஸ் ஹோல்டர் பாலிசியை யார் எடுக்கலாம், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் (ஓய்வு) பாகுயிடம் கேட்டோம். 
 
ஹவுஸ் ஹோல்டர் பாலிசி ஏன்?
 
மனிதர்களைப் போலவே வீட்டின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். ஏனெனில், வீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மழை, வெள்ளத்தின் பாதிப்பினால் வீடு சேதம் அடைந்திருந்தால், அதைச் சரிசெய்வதற்கு பெரும் தொகை செலவாகும். அதைப் பொருளாதாரரீதியாக தாங்கிக் கொள்வதற்காகத்தான் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி. 
 
மழை மற்றும் வெள்ளம் காரணமாக வீட்டுச் சுவரின் பெயிண்ட் பாதிப்பு, விரிசல் ஏற்பட்டிருப்பது, சுவர் இடிந்து வீழ்வது போன்றவற்றுக்கு இந்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்ய முடியும். 
ஹவுஸ் ஹோல்டர் பாலிசியின் கீழ் 10 வகையான பாலிசி உள்ளது. அந்த பாலிசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒருவகையான கவரேஜ் இருக்கும். இதில் குறைந்தபட்சம் நான்கு வகையான பாலிசி எடுப்பது அவசியம். இதில் தீ பாதுகாப்பு பாலிசி கட்டாயம் இருக்க வேண்டும். 
 
1. தீ விபத்து, 2. வீடு பாதிப்படைவது, 3. அனைத்து வகையான ரிஸ்க்கும் கவர் செய்வது, 4. வீட்டில் இருக்கும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றுக்கான கவரேஜ், 5. லோப்டாப், கம்பியூட்டர், 6. தங்க நகைகள் மற்றும் ரொக்க கையிருப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பாலிசிகள் உள்ளன. இதில் பாலிசிதாரர்களுக்கு தேவையான நான்கு வகையான திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  
 
யாருக்கு எந்த பாலிசி?
 
சொந்த வீடு இருப்பவர்கள் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேர்த்து இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் தங்களின் பொதுவான இடத்தை இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது குறிப்பிடுவது அவசியம். அதாவது, கார் பார்க்கிங் தனியாக இருந்தால் அதைக் குறிப்பிடுவது நல்லது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும் எடுத்துக் கொண்டாலே போதும். 
 
குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கும் ஹவுஸ் ஹோல்டர் பாலிசியின் கீழ் பாலிசி எடுக்க முடியும். வீட்டின் தன்மைக்கு ஏற்ப பிரீமியம் வித்தியாசப்படும். 
 
எப்படி க்ளெய்ம் செய்ய வேண்டும்?
 
ஹவுஸ் ஹோல்டர் பாலிசியை பொறுத்தவரை, மழை, வெள்ளம் அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டால், அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். அதாவது, மழை காரணமாக ஒருவரது வீட்டில் வெள்ள நீர் புகுந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தகவலை உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இலவச தொலைபேசி மையம் அல்லது இன்ஷூர்னஸ் நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் வசிக்கும் பகுதி மழை மற்றும் வெள்ள நீரால் பதிக்கப்பட்டிருந்தை உறுதி செய்வதற்காக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் அறிக்கை வாங்க வேண்டும் அல்லது வீட்டில் வெள்ள நீர் புகுந்திருப்பதற்கான ஆதாரத்தைப் புகைப்படமாக எடுத்துத் தருவது அவசியம். அல்லது அந்தத் தகவல் செய்தித்தாளில் வெளியாகி இருந்தால் அதையும் க்ளெய்ம் படிவத்துடன் இணைப்பது முக்கியம். 
 
வெள்ளத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அதற்குக் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தையும் க்ளெய்ம் படிவத்துடன் இணைக்க வேண்டும். 
 
எப்படி க்ளெய்ம் வழங்கப்படும்?
 
உங்கள் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது, அதற்கான மதிப்பு என்ன, தங்க நகை எவ்வளவு உள்ளது, ரொக்க கையிருப்பு எவ்வளவு என்பதை எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே குறிப்பிடுவது அவசியம். அதன் அடிப்படையில்தான் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். 
 
பிரீமியம் எவ்வளவு?
 
ஹவுஸ் ஹோல்டர் பாலிசிக்கான பிரீமியமானது வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களின்
மதிப்பில் 2-3% இருக்கும். இது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நிறுவனம் வித்தியாசப்படும்.
 
கவனிக்க வேண்டியவை!
 
ஹவுஸ் ஹோல்டர் பாலிசி எடுக்கும்போது ‘ஆக்ட் ஆஃப் காட்’ பிரச்னைகளுக்கு க்ளெய்ம் உண்டா, இல்லையா என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இயற்கையின் ஏற்படும் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு க்ளெய்ம் கிடையாது எனக் குறிப்பிட்டிருக்கும். எனவே, பாலிசி எடுப்பதற்குமுன் உங்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வகையில் பாலிசி உள்ளதா என்பதை ஒருமுறைக்குப் பலமுறை ஆய்வு செய்து பாலிசி எடுப்பது நல்லது.
 
இரா.ரூபாவதி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close