Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் துறையில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

22.சும்மா வருமா வேலை
  

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

'எல்லாம் சரிதான். ஆனா, தனியார் துறை மட்டும் இந்த அளவுக்கு வளராம போய் இருந்தா, நம்ம நாட்டுல இத்தனை லட்சம் பேருக்கும் எப்படி வேலை கிடைச்சு இருக்கும்...?'

உண்மை.

நம் நாட்டில் சுமார் 80% வேலை வாய்ப்புகள், தனியார் துறையில்தான் இருக்கின்றன.

மிகப் பெரிய ராட்சத நிறுவனங்கள் தொடங்கி, நமது ஊரிலேயே இயங்கும் மிகச் சிறிய 'பொட்டிக் கடை', டீக் கடை வரையில், கண்ணுக்குத் தென்படுகிற, அனேகமாக அத்தனை வணிக நிறுவனங்களும் தனியார் நடத்துபவை.

கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டு வருகிற பொருளாதார வளர்ச்சி, தனியார் துறையின் நேரடி பங்களிப்பால் விளைந்ததுதான். இத்துறையினர் மூலம் நாடு முழுவதும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. அள்ள அள்ளப் பெருகும் அமுதசுரபி போல் வளர்ந்து கொண்டே இருக்கும் தனியார் துறையில்பணி கிடைக்க என்ன செய்ய வேண்டும்...?

இங்கெல்லாம் பொதுவாக போட்டித் தேர்வு என்றெல்லாம் எதுவும் இல்லை. அறிந்தவர், தெரிந்தவர், வேண்டியவர், ஏன்... உறவினர் யாரேனும் சொன்னால் போதும். வாய்ப்பு இருக்கிறபட்சத்தில், வேலைக்கு எடுத்துக் கொண்டு விடுகின்றனர். இந்தியாவைப் பொறுத்த மட்டில், சிறிய நிறுவனங்களில் இதுதான் நிலைமை.

ஆச்சரியமான செய்தி. 'சிபாரிசு' இருந்தால் மட்டுமே, அரசுத்துறைகளில் வேலை கிடைக்கும் என்று, இன்னமும் கூட பலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். பாமரத்தனமாகப் பலரும் இதை நம்பவும் செய்கிறார்கள். கள நிலவரம் அதற்கு நேர் எதிரானது.

போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுத்தான் அரசுப் பணியில் நுழையவே முடியும். ஆனால் தனியார் துறையில் அப்படி அல்ல. யாராவது ஒருவர் 'ரெஃபரன்ஸ்' (கவனியுங்கள் - 'ரெகமன்டேஷன்' அல்ல.) இருந்தால் ஒழிய, சில தனியார் நிறுவனங்களுக்கு, விண்ணப்பம் அனுப்பக் கூட முடியாது. காரணம், அங்கே வேலை காலி ('வேகன்சி') இருக்கிறது என்பதே கூட நமக்குத் தெரிய வர வாய்ப்பு இல்லை.

மேற்சொன்ன 'ரெஃபரன்ஸ்' மட்டுமே, வேலை கிடைக்கப்போதுமா..? நம்மை 'ரெஃபர்' செய்தவர், அந்த நிறுவனத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார் என்பதைப் பொறுத்தே இதற்கு விடை சொல்ல முடியும். அது எப்படி இருந்தாலும், 'ரெஃபரன்ஸ்' என்று ஒன்று இல்லாமல், பல நிறுவனங்களில் யாருடைய விண்ணப்பத்தையும் பரிசீலிப்பது கூட இல்லை. ஆக, இந்த 'ரெஃபரன்ஸ்', ஒரு அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக 'ரெஃபரன்ஸ்' பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறோம்..?

நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் எங்கெங்கு என்னென்ன பணியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். வேலைக்காக வேண்டியாவது, அவர்களுடன் சுமுகமான உறவை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
வேலை தேடும் முயற்சியில் முதல் படி இதுதான். உறவுகளைப் பராமரியுங்கள். (maintain good relationships)

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால், அடுத்து நேர்முகத் தேர்வு ('இன்டர்வியூ') நடைபெறும்.

வரும் ஜனவரி 1 முதல், பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கு, (க்ரூப் 2 நிலை வரை) இன்டர்வியூ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கி, இன்ஷூரன்ஸ் பணிகளுக்கு, இன்றைய நிலவரப்படி, இன்டர்வியூ முறை தொடர்கிறது. இவ்வகை இன்டர்வியூக்கள் பற்றி ஏற்கெனவே பார்த்து விட்டோம். இவற்றில் இருந்து, தனியார் துறை இன்டர்வியூ முற்றிலும் மாறுபட்டது.

நாம் எந்த நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கிறோமோ, அதைப் பற்றி சற்றேனும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
'உங்க விண்ணப்பத்துக்கு மகிழ்ச்சி, நன்றி. எங்க கம்பெனி பத்தி உங்களுக்கு என்ன தெரியும்...? கொஞ்சம் சொல்லுங்களேன்...'
அனேகமாக எல்லா தனியார் இன்டர்வியூக்களிலும் இந்தக் கேள்வி தவறாமல் இடம் பெறுகிறது. என்ன பொருள்..?

ஒரு நிறுவனத்தைப் பற்றி விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்பம் அனுப்புவதே புத்திசாலித்தனம். எப்படியும் யாரேனும் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம்...? அவரிடமே கேட்டால், விவரமாகச் சொல்லி விடுவார்.

'நீங்க ரொம்ப நேர்மையானவங்க... உலகத்துலேயே உங்க பிராண்டுதான் நம்பர் ஒன்...' போன்ற துதி பாடுகிற வேலையெல்லாம் வேண்டாம். மாறாக, எத்தனை ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறது...? முக்கியமாக எந்தத் துறையில் ('செக்டார்') வெற்றிகரமாகப் பயணிக்கிறது...? கடந்த ஆண்டு என்ன 'டர்ன் ஓவர்' (விற்பனை), எவ்வளவு லாபம் சம்பாதித்தது... போன்ற விவரங்கள்தான் வேண்டும்.

மேற்சொன்ன விவரங்கள் அனைத்தும், தேவைக்கு அதிகமாகவே, இணையத்தில் கிடைக்கும்.

நாம் செய்ய வேண்டியது என்ன...? இணையம் மூலம் வேண்டிய செய்திகளை சேகரித்து, குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

யோசித்துப் பாருங்களேன்... ஒரு 'இன்டர்வியூ'வில், தங்களது நிறுவனம் பற்றிக் கேட்கிறார்கள்.

ஓரிரு நாட்கள் முன்புதான், அந்த நிறுவனத்துக்கு, சர்வதேச பரிசு ஏதோ கிடைத்து இருக்கிறது. இணையத்தில் இது பற்றி, செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். நீங்கள் இதைப் பார்த்து, குறித்து வைத்து இருக்கிறீர்கள்.

உங்களிடம் கேள்வி வந்த மாத்திரத்தில், இணையத்தில் வந்த செய்தியை வைத்து, விவரமாக எடுத்து சொல்கிறீர்கள். சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தில் பணி செய்வது, மிகச் சிறந்த பேறு' என்று முடிக்கிறீர்கள்.
பணி உங்களுக்குக் கிடைக்குமா இல்லையா...?

சரி. நிறுவனத்தைப் பற்றி, ('கம்பெனி ப்ரொஃபைல்') தெரிந்து கொண்டால் போதுமா..?

அதை விடவும் முக்கியமானது வேறு ஒன்று இருக்கிறது. அது..', 'ஜாப் ப்ரொஃபைல்'. அதாவது, பணி பற்றிய குறிப்புகள்.

எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம்...? அதில், நாம் என்னென்ன பணிகள் செய்ய வேண்டி இருக்கும்..?
அவற்றை எந்த அளவு சிறப்பாய் செய்து முடிக்க முடியும்..? அதற்கான என்ன தகுதி அல்லது அனுபவம் இருக்கிறது... போன்ற விவரங்களித் தெரியப்படுத்த வேண்டும். இதுதான், இண்டர்வியூவின் மையப் புள்ளி. பணிக்குத் தேர்வு ஆவதும் நிராரிக்கப் படுவதும், இந்த மையப் புள்ளியை ஒட்டியே இருக்கும்.

இந்த விவரங்களை எப்படி அறிந்து கொள்வது...?

இந்தப் பணியில் எந்த அளவுக்குத் திறம்பட செயல்பட முடியும் என்பதை எப்படிக் கணிப்பது..?

(வளரும்)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close