Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

23. சும்மா வருமா வேலை..?

என்ன செய்யப் போகிறோம்..?
           
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்திவேலைக்கு முயற்சிக்கிற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முதல் வேலை - தான் முயற்சிக்கும் வேலை பற்றித் தெரிந்து கொள்வதுதான்!

பொத்தாம் பொதுவாக வேலை தேடுகிறவர்கள்தாம் அதிகம். இது சரியன்று.

தனக்கு இந்த வேலை தெரியும்.. இன்ன வேலை வேண்டும்.., என்று தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் மூலம், தனக்கு வேண்டிய, தனக்கு 'ஒத்து வருகிற' பணி பற்றி சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிக முக்கியம். ஆனால், இதைப் பலர் செய்வதே இல்லை. இதனால்தான்

பல சமயங்களில் பலருக்கு, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்குத் தகுதியான பணி வந்து சேர்வதே இல்லை.

நாம் எந்தத் துறையில் எந்தப் பணி வேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ அது பற்றி,
'அக்கு வேறு ஆணி வேறு'ஆகத் தெரிந்து கொண்டாலே, அனேகமாக வேலை கிடைத்தாற் போலத்தான்.

கலூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, இந்த முயற்சியைத் தொடங்கி விட வேண்டும்.

மூன்று வழிகளில் பணி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

முதலில், மிகவும் எளிய, ஆனால் மிகவும் கடினமான வழி. என்ன குழம்புகிறதா...? இருக்கட்டும்.

ஏற்கனவே நாம் விரும்பும் பணியில் இருக்கும், ஒரு நண்பர் அல்லது உறவினர் மூலம் பணி குறித்த விவரங்களைத்
தெரிந்து கொள்ளுதல் மிக எளிது. நமக்கு இருக்கும் சந்தேகங்களை பொறுமையாக, நமக்கு விளங்குகிற விதத்தில் எடுத்துச் சொல்பவர் கிடைத்து விட்டால், அது போன்ற வெகுமதி எதுவுமே இல்லை. இதில் 'கடினம்' என்ன இருக்கிறது என்கிறீர்களா...?

எத்தனை பேருக்கு இத்தகைய நண்பர் அல்லது உறவினர் கிடைப்பார்கள்...? அப்படியே யாரும் இருந்து விட்டாலும், அவர்களில் எத்தனை பேர், தம் பணி பற்றி, 'வேறு ஒருவருடன்' தமது அறிவைப் பகிர்ந்து கொள்வார்கள்?
இதையெல்லாம் விட, இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர், (மன்னிக்கவும்) தமக்குத் தெரிந்தவர்களிடம்,
'அறிவார்ந்த' உரையாடலுக்குத் தயாராக இருக்கிறார்கள்?

நாம் எந்த அளவுக்கு அக்கறையுடன் சற்றேனும் விவரத்துடன் (கேள்வி) கேட்கிறோமோ, அதை வைத்துத்தான், எதிரில் இருப்பவரும் நமக்கு விவரங்களைச் சொல்ல நினைப்பார்கள்.

சிலரிடம் நாம் பார்க்கும் சங்கடம் இது: பணி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதை விட, 'சம்பளம்..., இன்சென்டிவ், இன்க்ரிமென்ட்.., ப்ரமோஷன்..' தொடர்பான கேள்விகளையே கேட்டு, 'படுத்துவார்கள்'.

பொதுவாக யாருமே, தன்னுடைய வருமானம், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றி எல்லாம், பிறருடன் பகிர்ந்து
கொள்வதை விரும்புவது இல்லை. அதனால், வேலை தேடும் இளைஞர்கள், வேலை பற்றிய குறிப்புகளுடன், தன்னுடைய 'விசாரணை'யை நிறுத்திக் கொண்டு விட வேண்டும். 'ரொம்ப எல்லாம், உள்ளே நுழைஞ்சு கேள்வி கேட்கக் கூடாது'.

சினிமா, அரசியல், கிரிக்கெட் போன்ற ஒன்றுக்கும் உதவாத விஷயங்கள் அன்றி, வாழ்க்கைக்கு மிகவும் தேவையான விவரங்களைக் கேட்டுப் புரிந்து கொள்ள, தேடித் தெரிந்து கொள்ள, இளைஞர்களைப் பழக்க வேண்டி இருக்கிறது.
 
தெளிந்த சிந்தனையுடன் கூர்ந்த கவனத்துடன் எதையும் அறிந்து உள்வாங்கிக் கொள்கிற 'பக்குவம்', கல்லூரிப் பருவத்தில் வந்து இருக்க வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்களிடம் இந்த சிந்தனை குறைவாகவே இருப்பதாக உணர்கிறோம். என்ன காரணம்..? இந்த திசை நோக்கிய பயணத்தை, ஊக்குவிப்பார் மிகக் குறைவு. மாறாக, மேலும் மேலும் கேளிக்கைகளிலும் வீண் விவாதங்களிலும் இளைஞர்களை இழுக்கும் முயற்சியே வலுப் பெற்று வருகிறது.

இதை மீறித்தான் இன்றைய தலைமுறை பொறுப்புடன் செயல்பட வேண்டி இருக்கிறது. என்ன செய்ய..?

சிறிது சிறிதாக, வாழ்க்கைக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றிப் பிறரிடம் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேடிப் பாருங்கள். நம்மிடம் இது குறித்துப் பேச, யாராவது கிடைப்பார்கள். அவருடன் இணக்கமாகப் பேசிப் பழகுங்கள். வேலை பற்றிய 'கள நிலை'யை அறிந்து கொள்ளுங்கள். அரைக் கிணறு தாண்டி விடுவீர்கள்.

இரண்டாவது வழிமுறை: இணையம். இது, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வழி. தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற
பணி குறித்த விவரங்களை, 'நெட்' மூலம், கற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு சங்கடம்தான்.

ஒரு 'வெப்சைட்' எந்த அளவுக்கு நம்பகமானது... அதில் உள்ள விவரங்கள் எந்த அளவுக்குத் துல்லியமானது..
அதை எந்த அளவுக்குப் பின்பற்றி நடக்கலாம் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

இணையத்தில் போலிகள் மிக அதிகம். அதிலும், வேலை தேடும் இளைஞர்களைக் குறி வைத்தே, ஏராளமான தளங்கள் இயங்கி வருகின்றன.

இணைய தளங்களில் இரண்டு வகைகள் உண்டு.
ஒன்று, எந்த உள் நோக்கமும் இன்றி, தமக்குத் தெரிந்த, தாம் உண்மை என்று நமுகிற தகவல்களைத் தருகிற தளங்கள்.
இவற்றைப் படிப்பதனால், நாமும் தவறான அல்லது தரமற்ற (sub-standard) தகவல்களால் வழி நடத்தப் படுகிறோம்.
இதனால், பணிச் சந்தையில் நாம் பின் தங்கி விடுகிறோம். மற்றபடி, நேரடியாகப் பண இழப்பு ஏதும் இல்லை.

சில தளங்கள் இருக்கின்றன. இவை வேலை பெற்றுத் தருவதாகச் சொல்லி, கட்டணம் வசூலிக்கின்றன. இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இவர்களால் பயன் அடைந்ததாய் 'கதை' விடுகிற தளங்கள் இவை. இங்குதான் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில், இணையம் மூலம் பணி பெறுவது என்பது, அனேகமாக நடைமுறையில் இல்லை.
ஒரு அம்சத்தை நாம் கவனத்தில் கொள வேண்டும்.

இணையம் மூலம் விண்ணப்பம் அனுப்புவது ('இ- அப்ளிகேஷன்), 'ஆன்-லைன்' தேர்வு... ஆகியன வேறு.
முற்றிலும் இணையம் வழியே பணிக்குத் தேர்ந்து எடுப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்...?

முன்னதில், எந்த நிறுவனம் பணி தரப் போகிறதோ, அதனுடன் தொடர்பில் இருப்போம். அல்லது அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆள் சேர்ப்பு நிறுவனம் (recruiting agency) நம்முடன் தொடர்பில் இருக்கும். இவர்களுக்கு விண்ணப்பிப்போம்.

இவர்கள் நடத்துகிற எழுத்துத் தேர்வு, 'இன்டர்வியூ' போன்றவை மூலம் முயற்சிக்கிறோம். இது ஒரு வகை 'ஆன்'லைன்' தேர்வு முறை. நடைமுறையில் உள்ள, பிரபலம் அடைந்து வரும், ஆள் சேர்ப்பு வழிமுறை. (process of recruitment)

மற்றொரு வகை உண்டு. 'வெப்சைட்' இணைய தளங்கள், தாமாகவே விண்ணப்பங்களை வரவழைத்து, தேர்வு நடத்தி,
நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்து, பணி பெற்றுத் தருகிற நடைமுறை.

'எச்.ஆர். வெப்சைட்ஸ்', 'ரெக்ரூட்மென்ட் வெப்சைட்ஸ்', 'ஜாப் சைட்ஸ்'... என்று பல பெயர்களில் அறியப்படும் இத்தகைய
தளங்கள், பொதுவாக நம்பத்தக்கன அல்ல. முன்னரே சொன்னதுதான். தற்போது வரை இந்திய நிறுவனங்களில்,
'ஆள் சேர்ப்பு இணைய தளங்கள்' (recruitment sites) மூலம், ஊழியர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.

சில நிறுவனங்கள், முகமை (agency) நியமித்து, அதன் மூலம் ஊழியர்களைத் தேர்ந்து எடுக்கிறது என்பது உண்மைதான்.
இத்தகைய முகவர்கள், தாம் எந்த நிறுவனத்துக்கு, எந்தப் பணிக்கு ஊழியர்களைத் தேர்ந்து எடுக்கிறோம்... எத்தனை
பணியிடங்கள் இருக்கின்றன.. போன்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கின்றன. குறிப்பிட்ட நிறுவனங்களின் இணைய தளத்துக்குச் சென்று, மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

இத்தகைய அதிகாரபூர்வ முகவர்களின் தளங்கள் மூலம், தமக்குத் தகுதியான பணி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும்.

இனி, 'கை மேல் பலன்' தரக் கூடிய மூன்றாவது வழிமுறை!

(- வளரும்.)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close