Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2016 - மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

 

மு.சா.கெளதமன், ஜெ.சரவணன்

நாட்டுக்கும் வீட்டுக்கும் வளர்ச்சியை உறுதி செய்யும் மிக முக்கியமான விஷயம் பட்ஜெட்.2016 - 17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 29-ம் தேதி அன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இந்த பட்ஜெட்டில் சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை  அறிந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பல தரப்பினரையும் சந்தித்தோம். இந்த பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள்.

கிராம மக்களையும் கவனியுங்க!

மதுரை, மேலூர் பகுதியைச் சேர்ந்த ரத்னம் முருகேசன், ‘‘எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, இந்த பட்ஜெட் அறிக்கைகள் அடித்தட்டு மக்களையும் கவனத்தில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பான ஒன்று. இது போன்ற திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி முறையான மேற்பார்வையில் செயல்படுத்த வேண்டும். மேலும், இந்த 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு இருந்தால், விலைவாசி ஏற்றத்துக்கேற்ப வாழ்க்கையைச் சமாளிக்க வசதியாக இருக்கும். மேலும், இந்த 100 நாள் என்பதும் நீட்டிக்கப்பட வேண்டும். பெரும்பாலான கிராமப்புற பெண்களுக்கு இந்த ஒரு திட்டம்தான் வருமானமே” என்றார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக மானியம்!

மதுரை லேடி டோக் கல்லூரியின் பொருளியல் துறை பேராசிரியை முனைவர். சுகந்தா ராமமூர்த்தி, ‘‘பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா, மேக்-இன், ஸ்கில், ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் வரவேற்கக் கூடியது. இந்தத் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும். இந்தியாவில் பட்டதாரிகள் அதிகம், வேலைவாய்ப்புகளுக்கும் குறைவில்லை. ஆனால், இந்தத் திட்டங்கள் மக்களை நோக்கி செயல்படுத்தப்படாததால்தான் வேலைவாய்ப்புகளில் மிகப் பெரிய இடைவெளி உண்டாகிறது.பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதைக் குறைத்து இங்குள்ள சிறு, குறு மற்றும் குடிசை தொழில்களுக்கு மானியங்களை அதிகரித்து ஊக்கப்படுத்த வேண்டும். அடுத்ததாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகையை 5% வரையாவது உயர்த்த வேண்டும்’’ என்றார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துங்க!

சென்னையைச் சேர்ந்த வங்கி ஊழியர் ச.ராஜராஜேஸ்வரி,  “விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் தற்போது குடும்பத்தில் இருவர் சம்பாதித் தால்தான் குடும்பத்தையும் பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது” என்று சொன்னார்.

ரூ.5 லட்சம் வரிச் சலுகை!

நெய்வேலி என்.எல்.சி. ஊழியர் கி.கோவிந்தசாமி, “என் போன்ற சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு, வருமானத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கும், ரூ.15 லட்சம் வரை, 20 சதவிகித சீரான வரியும் ரூ. 15 லட்சங்களுக்கு மேல், 30 சதவிகித வரியும் விதித்து சீர்திருத்தம் செய்யலாம். மேலும், குறைந்த சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியர்கள் ஓய்வு பெறும் வரையில்கூட சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்தால், அவர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்க ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு என எந்த வகை ஓய்வுக்குப் பின்னும் கையில் கிடைக்கும் பெரிய தொகைக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஊழியர்களின் ஓய்வுக்குப்பின் மருத்துவக் காப்பீட்டை அரசாங்கமே ஏற்க லாம். ஓய்வு பெற்றபின் கிடைக்கும் பணத்தை வங்கிகளில் சேமித்தால் அளிக்கும் வட்டி விகிதத்தை இன்னும்கூட சற்று அதிகப்படுத்தினால் உதவியாக இருக்கும்” என்றார்.

ஜிஎஸ்டி மசோதா!

கோவை, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையைச் சேர்ந்த டி. நந்தகுமார், ‘‘தனித்தனியாக அதிக வரியைச் செலுத்த வேண்டிய சூழலிலிருந்து ஒரே வரியாக செலுத்துவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் உற்பத்தி நிலையிலிருந்து பல நிலைகளில் எங்கள் செலவுகள் வெகுவாகக் குறையும்.

இதன் மூலம் முதலீட்டை பெருக்கி இன்னும் போட்டிக்குரியதாக செயல்பட முடியும். புதிதாக தொழில் தொடங்க 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் ஒப்புதல் தரக்கூடிய ‘சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்’ தேவை. தற்போது இருக்கும் அப்ரெண்டிஸ் ஆக்ட்டின்படி, குறைந்த எண்ணிக்கையில்தான் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். அப்ரெண்டிஸ் களின் எண்ணிக்கையை 50% வரை உயர்த்த வேண்டும். இதனால் திறன் மேம்பாட்டை அதிகரிக்க முடியும்” என்றார்.

விளைபொருட்களுக்கு உகந்த விலை தேவை!

நாமக்கல் விவசாயி ஜெகநாதன், “நாட்டில் விவசாயமும் தொழில் களும் வளர்ந்தால்தான் நமது மொத்த உற்பத்தி சதவிகிதம் அதிகரிக்கும். இதனால் தனிநபர் வருமானமும் உயர்ந்து, பணவீக்கமும் குறையும்.

எனவே, விவசாயத்தை அதிகரிக்க, விவசாய விளைபொருட்களுக்கு உகந்த விலை கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும். மேலும், நீர் மேலாண்மை வழிமுறைகள் மற்றும் நீர் ஆதாரங்களை பெருக்க கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யவேண்டும். பொதுவாக, இந்த பட்ஜெட் வரிச்சுமையற்ற வளர்ச்சி நோக்கத்துடன் அமைய வேண்டும்” என்று கூறினார்.

கல்விக் கடனுக்கு கால அவகாசம்!

சென்னையில் பொறியியல் கல்லூரி மாணவர் ஹெச். ராமநாராயணன், “தொழில் முறை கல்வி பயிற்சி மையங்களில் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து ‘ஸ்கில்-இந்தியா’ திட்டத்தை தீவிரமாக செயல் படுத்தினால், திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்கலாம்.

பெண்களுக்கான கல்விக் கடனில் மேலும் சலுகை களைத் தருவதன் மூலம் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். மேலும், படிப்புக்குப்பின் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த ஆரம்பிக்கும் அவகாசமான ஆறு மாதத்தை ஒரு வருடம் வரை அதிகரிக்கப்பட வேண்டும்’’என்றார்.

நெசவாளர்களுக்கு...!

“நெசவாளர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட ரூ.35,000 மெடிக்கல் இன்ஷூரன்ஸ் முறை மாற்றப் பட்டுவிட்டது. ராஸ்டிரிய ஸ்வாஸ்திய பிமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தத் திட்டம் எல்லா மருத்துவமனைகளிலும்  செயல்பட வேண்டும்.

மேலும், 1 லட்ச ரூபாய் வரை யிலான மருத்துவ உதவிகள் பெற வழிவகை செய்யவேண்டும். மத்திய அரசு 1 கட்டு நூலுக்கு 10% மானியம் தருகிறது. இதை இனி நேரடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்க வேண்டும்’’ என்றார் சென்னிமலை பொன்னுசாமி.

மக்களின் எதிர்பார்ப்பில் எவை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.ராகினி ஆத்ம வெண்டி, ஐ.மா.கிருத்திகா, கோ.இராகவிஜயா, அ.நிவேதா, ச.ஆனந்தப்பிரியா, மு.சித்தார்த், மு.பிரதீப் கிருஷ்ணா.

படங்கள்: சே.சின்னதுரை,  மா.பி.சித்தார்த், கி.சரண் பிரசாத்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close