Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சில பல நேர்முகத் தேர்வில் சொதப்பி விட்டீர்களா? வேலை கிடைக்கவில்லையா?

டித்து முடித்துவிட்டு புதிதாக வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டு இருப்பவரா நீங்கள்? சில பல நேர்முகத் தேர்வுகளில் சொதப்பி விட்டீர்களா? உங்களுக்கே உங்களுக்கான கட்டுரைதான் இது. 

உங்கள் வேலையை நல்ல மதிப்பெண்ணைத் தாண்டி பல விஷயங்கள் நிர்ணயிக்கின்றன. நம்மை வேலைக்கு எடுக்க நினைப்பவர்கள், நம் திறனைத் தவிர நிறைய விஷயங்களை அமைதியாக கவனிக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. முதல் நேர்முகத் தேர்வை, இல்லை நாம் வாழ்வில் சந்திக்க இருக்கும் அனைத்து நேர்முகத் தேர்வுகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.

1. காலம் தவறாமை (Punctuality):

நாம் வேலைக்கு எப்படி வருவோம் என்பதை, நாம் முதல் நாள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அன்றே கண்டுபிடித்து விடுவார்கள். நம்முடைய வெற்றியை காலம்தான் நிர்ணயிக்கிறது. ஆம், 10 மணி நேர்முகத் தேர்வுக்கு அனைவருக்கும் முன்னால் 9:45கு சென்று பாருங்கள். உங்களை முதலில் குறித்து வைப்பார்கள். அதுமட்டுமின்றி, நாமும் பதட்டமின்றி இருக்க நேரம் கிடைக்கும். காலையில் அவசர அவசரமாக பேருந்து கிடைக்காமல் ஓடி வந்து நேர்முகத்தேர்வில் பதட்டம் குறையாமல் சொதப்புவதற்குப் பதில், நிதானமாக வெற்றியைத் தட்டிச் செல்லலாம். சரியான நேரத்திற்கு வருவதற்கு சின்ன டிப்ஸ்:

√இரவே உடை, கொண்டு செல்ல வேண்டிய ஆவணம், பேனா, பேப்பர் என அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

√கடிகாரத்தில் 15 நிமிடம் முன்னதாக வைத்துக் கொள்ளுங்கள்.

√நாம் செல்ல இவ்வளவு நேரம்தான் ஆகும் எனக் கணிக்காதீர்கள்.

2. மரியாதை (courtesy):

மரியாதை என்றதும், முதலாளி வருகையில் எழுந்திருப்பது, 'சார்' போட்டுப் பேசுவது தவிர்த்து நிறைய விஷயங்கள் உள்ளன. நமக்கு தேநீர் தரும் பையனுக்கும், ரிசெப்ஷனில் அமர்ந்திருப்பவருக்கும், மற்ற சக நண்பர்களிடமும் ஒரே மாதிரி பழகுவதுதான் இந்த மரியாதைக்கான அர்த்தம். முதல் நாள் சென்றதும் குடிக்க தண்ணீர் தரும் அண்ணாச்சியைப் பார்த்து "தேங்க்ஸ் அண்ணே!" என்று கூறுவதில் இருந்து உங்கள் ஆளுமை தொடங்குகிறது! இப்படி உங்கள் பண்புகளை கிடைக்கும் ஒவ்வொரு சிறு சிறு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்துங்கள். அது அனைத்தும் குறிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது.

3. உற்சாகம் மட்டும் போதுமே:

ஆம், நமக்கு இந்த வேலை மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், அது எந்நிலையிலும் அவர்களுக்குத் தெரியக் கூடாது. நாம் உற்சாகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வேலையை விட்டால் வேறு வேலை இல்லை என்பது போல எந்நிலையிலும் பேசிவிடக் கூடாது. அதேபோல, ஏற்கெனவே வேலை செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் முந்தைய முதலாளியை குறைகூறுவது போல பேசி விடாதீர்கள். அது உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.4. பேசும் முறை (way of talking):

நம்முடைய எதிராளியை நம் கட்டுக்குள் வைக்க ஒரு எளிமையான வழி, அவர்களின் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்து பேசுதல். ஆம், நம்முடைய தைரியத்தை வெளிப்படுத்த இதுதான் சிறந்த வழி. என்ன பேசினாலும் கண்ணைப் பார்த்து பேச வேண்டும். மேலும், நாம் ஒரு நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன்னால், அந்நிறுவனத்தைப் பற்றிய பழைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்கள் கேட்கும் கேள்விக்கு, அந்நிறுவனம் சந்தித்த முந்தைய பிரச்சனையை எடுத்துக்காட்டாக கூறி தீர்வு சொல்லலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது எவ்விதத்திலும் இது அவர்களைக் குற்றம் கூறுவது போல மாறி விடக் கூடாது. நம்முடைய தெளிவான சிந்தனையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.

5. Stay in touch:

சரி நேர்முகத் தேர்வு முடிந்து விட்டது. வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. நீங்கள் அனைத்தையும் சரியாக செய்திருந்தாலும், சொதப்பி இருந்தாலும் பரவாயில்லை. ஒரு வேலை நாள் முடிவதற்குள், உங்களிடம் பேசிய அலுவலர்களுக்கு ஒரு தேங்க் யூ நோட் அனுப்பி விடுங்கள். அது ஈ-மெயில் அல்லது கிரீட்டிங் மூலமாக இருக்கலாம். அவர்களின் பேச்சும் கேள்விகளும் உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம், அவர்கள் நிறுவனத்தில் உங்களைக் கவர்ந்த விஷயம் என சில முக்கிய விஷயங்களை சுருக்கமாக தெளிவாக எழுதி அனுப்பி விடுங்கள்.

ஒரே மெசேஜை அனைவருக்கும் அனுப்பாமல், தனித்தனியாக அனுப்புவது நல்லது. இது உங்கள் மீது ஒரு புதிய அபிப்ராயத்தை ஏற்படுத்தும். இந்த வேலை கிடைப்பது இப்போது 95% உறுதி. சரி, அப்படியே கிடைக்காமல் போனாலும், ஏதாவது பண்டிகை தினத்திலோ முக்கியமானோ தினத்திலோ ஒரு வாழ்த்து தெரிவியுங்கள். அடுத்து ஏதேனும் வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நீங்கள்தான் முதலிடத்தில் இருப்பீர்கள்! இல்லையெனில் அவர்களின் நட்பின் மூலமாக ஒரு புதிய வாய்ப்பு உங்கள் கதவை தட்டும். 

இப்படி, ஒரு நிறுவனத்தை, அலுவலர்களை பல பரிமாணத்தில் இருந்தும் நாம் கவர வேண்டும். நம் ஆளுமைத் திறன், நம் பேச்சுத் திறன், நம் அடிப்படை குணம் ஆகியவை எந்த ஒரு நிறுவனத்திலும் கண்காணிக்கப் படும். ஆனால், நாம் இதை சிறு விஷயம் என எண்ணி ஒதுக்கி விடுகிறோம். இனிமேல், சிறு விஷயங்களில் கவனம் செலுத்தி, நினைத்ததை நடத்தலாம். அடுத்த நேர்முகத் தேர்வில் வேலை உங்களுடையது!

-ந. ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close