Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய வகையில் மோசடி செய்து பணத்தை சுருட்டிய கும்பல்; அமைச்சர் பாராட்டியதால் ஏமாந்ததாக பொதுமக்கள் கண்ணீர்!

சிறுசேமிப்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான குடும்பங்களிடம் மோசடி செய்த பரிவார் அண்டு பி.டி.ஏ.பவுண்டேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (14.06.16) உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி, அரசாங்க அனுமதியில்லாமல் நிதி நிறுவனங்களை ஊருக்கு ஊர் திறந்து, போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் கம்பி நீட்டிய நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம். அதிலும் மதுரையை மையமாக வைத்து கிளம்பிய சீட்டிங் நிறுவனங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
சீட்டிங் செய்தவர்கள் கார், பங்களா, வெளிநாட்டு பயணம் என்று சுகமாக வாழ, பணம் கட்டி ஏமாந்த மக்களோ மிகவும் வருத்தத்துடன் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களுக்கு முன் பிக்செட் டெபாசிட்டுக்கு 30 முதல் 40 சதவிகிதம் வரை வட்டி தருவதாக விளம்பரப்படுத்தி சென்னையை மையமாக கொண்டு புற்றீசல் போல நிதி நிறுவனங்கள் தோன்றி, பொதுமக்களின் பல்லாயிரம் கோடிகளை லவட்டிக்கொண்டு சென்றார்கள். அந்த வழக்கு இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

அதில் ஏமாற்றப்பட்டவர்கள் இன்னும் தாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. பலர் வீடு வாசலை இழந்து பிச்சைக்காரர்களாகி விட்டார்கள். பலர், மன நோயாளிகளாகவும், சிலர் ஏக்கத்திலயே இறந்து விட்டார்கள்.

இந்த நிலையில்தான் சீட்டிங் நிறுவனங்கள் தங்கள் ஏமாற்று வித்தையை வேறு வடிவத்தில் மாற்றி கொண்டனர். இன்சூரன்ஸ் கம்பெனிகள் போல் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, இன்சூரன்ஸ் ஸ்கீம், ஆர்.டி. ஸ்கீம் மூலம் மக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தனர். இதற்காக ஏஜெண்டுகளுக்கு அதிகமான கமிஷன், அவார்ட், கார், வெளிநாட்டு டூர் என்று குஷிப்படுத்தினார்கள்.

அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் போல், பெரு நகரம் முதல் சிறு நகரங்கள் வரை கூட்டங்கள் போட்டார்கள். மக்கள் வாயை பிளந்தபடி பணத்தை கட்டினார்கள். இதனால் ஏஜெண்டுகள் கிராமங்களில் சுற்றி சுழன்று மக்களிடம் பணம் வசூலித்தார்கள். அப்படி உருவானவர்கள்தான் இந்திய அளவில் பி.ஏ.சி.எல் மற்றும் பரிவார் டைரீஸ் அண்ட் அலைடு லிட், மற்றும் பி.டி.ஏ.பவுண்டேஷன்.

தொடர்ச்சியான புகார்களால் கடந்த வருடம் பி.ஏ.சி.எல், எம்.ஆர்.டி.டி. நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பரிவார் டைரீஸ் மீது இந்த வருட துவக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பரிவாரின் சரிநிகர் பங்குதாரர் தேனி மாவட்டத்தை சேர்ந்த தெய்வம் என்பவர். இவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு உறவினர் என்று சொல்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அந்த நிறுவனம் நடத்திய பல நிகழ்ச்சிகளில்  அமைச்சர் கலந்து கொண்டிருக்கிறார்.

தமிழகம் முழுக்க இந்த நிறுவனத்தில் பலரும் பணம் கட்டி ஏமாந்துள்ளார்கள். போலிசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவருக்கு பெரிய இடத்து செல்வாக்கு இருப்பதால் போலிஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. அதனால் பணம் கட்டி ஏமாந்த மக்களும், வசூலித்து கொடுத்த அப்பாவி ஏஜெண்டுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த துவங்கிவிட்டனர்.

தமிழகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் மதுரையில் இன்று ஒன்று கூடி மிகப்பெரிய பட்டினிப் போராட்டத்தை நடத்தினார்கள். இவர்களுக்கு இடதுசாரி அமைப்புகளும் விவசாய சங்கங்களும் ஆதரவு கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மங்கையரசிடம் கேட்டபோது "நான் ஆரம்பத்தில் டெய்லராக இருந்தபோது குறைவான சம்பாத்தியத்தில் நிறைவாக வாழ்ந்து வந்தேன். ஆனால் சிலரின் ஆசை வார்த்தைகளால் இந்த நிறுவத்துடன் இணைந்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் குடும்பத்தின் கஷ்டம் நீங்கும் என்றனர். மாதம் 100 ரூபாய் வீதம் 5 வருடத்தில் 6 ஆயிரம் நம்மால் சேமிக்க முடியும் ஆனால் இந்த நிறுவத்தில் சேர்ந்தால் 8 ஆயிரம் கமிசன் கிடைக்கும் என்றனர். இந்த நிறுவனத்தின் முதலாளி தெய்வம் என்பவர் பலத்த நம்பிக்கை கொடுத்து பேசினார். ஆனால் அவரது பெயர் கூட உண்மை இல்லை என்பது ஏமாந்த பிறகு தான் தெரிந்தது. அவர் பெயர் தேவேந்திரன் என்று 15.8.15 அன்று மதுரையில் நடந்த மீட்டிங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போதுதான் தெரியும். இருந்தாலும் அமைச்சரே அவரை பாராட்டி பேசுகுறாரே என்று எங்களுக்கு நம்பிக்கை வந்தது. என்னைப்போல் பலரும் பல லட்சங்களை இழந்துள்ளார்கள். அதனால் அமைச்சர் செல்லூர் ராஜு பாதிகப்பட்டவர்களின் பணத்தை பெற்றுத்தர உதவ வேண்டும்" என்றார் .

சென்னை வியாசர்பாடியில் இருந்து வந்திருந்த கிருஷ்ணன், "நான் பியர்லஸ் என்ற நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்தேன் பிறகு அந்த நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் மூடப்பட்டுவிட்டது. ஆனால் செயல்பட்டவரை நியாயமான முறையில் இருந்தது. அதனால் இந்த பரிவார் நிறுவனமும் நேர்மையாக செயல்படும் என்று பரிவாரில் இணைந்து கொண்டேன். இதுவும் ஆரம்பத்தில் நல்லாதான் செயல்பட்டது. ஆனால் தீடீரென்று தேவேந்திரன் என்பவரால் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.

நாங்கள் பணம் வாங்கிகொடுத்தவர்கள் எல்லாம் எங்களை தூற்றுகின்றனர். எங்களை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தற்போது போராடுகிறோம். எல்.ஐ.சி நிறுவத்தின் லோகோவை இவர்கள் பயன்படுத்தினார்கள். எல்.ஐ.சி.யின் சார்பு நிறுவனம் என்றார்கள். அதை பார்த்துதான் பலர் இந்த நிறுவனத்தில் இணைந்தனர். மேலும் தபால் அலுவலகத்தில் ஆர்.டி. கட்டினால் குறைவான தொகைதான் கிடைக்கும் என்று சொல்லியே மக்களை ஏமாற்றினார்கள்." என்றார்.

செ.சல்மான். சே.சின்னதுரை.

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close