Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

ன்றைய காலகட்டத்தில் 'நிதி மேலாண்மை' என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இதை சரியாக கையாளாததால் ''மைக்கேல் ஜாக்ஸன்" போன்ற பலர் புகழின் உச்சிக்கு சென்றும்கூட இறுதியில் சோக முடிவையே தேடிக் கொண்டார்கள். அதனால் நமது நிதி மேலாண்மை சரியாக இல்லையென்றால், அது நம்மை மட்டும் அல்லாது நமது சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை நம்முடைய குழந்தைகளின் எதிர்காலக் குரலில் ''வேர்களை வெறுக்கும் விழுதுகளாய் நமது உறவு மாறிவிடும்'' என்கிற எச்சரிக்கையை நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிடக் கூடாது.
 
 
 
நமது பெற்றோர்கள் சைக்கிளில் பயணித்து தனது பொருளாதாரத்தையும் தனது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்தார்கள். ஆனால் நாம் நம் பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்தாமல் நாம் விரும்பும் வாகனத்தை விதவிதமாக பயன்படுத்தும்போது நம் நிதி மேலாண்மைக்கு மட்டும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட பாரம்பரிய முதலீடு முறையை கையாள்வது எப்படி இன்றைய காலகட்டத்திற்கு சரியாக இருக்கும்?
 
அவர்களது காலத்தில் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டிலேயே 12% வரை ரிட்டன் கிடைத்தது. பணவீக்கமோ மிக குறைவு என்பதால் அவர்களால் நிலைமையை சமாளிக்க முடிந்தது. ஆனால் இன்று பண வீக்கத்திற்கு, பாரம்பரிய முதலீடு தரும் ரிட்டனுக்குமான இடைவெளி மிக அதிகம். ஒரு மாற்று வழி முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
 
தற்போதைய பணவீக்க அடிப்படையில் நமது அனைத்து எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 3 கோடியாவது தேவைப்படும். எனக்கு எதற்கு 3 கோடி என்று நக்கலாக சிரிப்பவர்களுக்கு கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுடன் உங்களுக்கு 3 கோடி கட்டாயம் தேவை என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
 
நாம் பள்ளிப்படிப்பை முடித்த பின்புதான் 3 வருட கல்லூரி படிப்பை மேற்கொண்டோம். ஆனால் இன்று Ist Std ல் அடியெடுத்து வைப்பதற்கே நான்கு நிலையை (pre kg, L kg, U kg) கடக்க வேண்டி உள்ளது. கல்வியின் நிலை இவ்வாறு இருக்க மருத்துவச் செலவோ இன்னும் ஒருபடி மேல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருந்த நம் முன்னோர்கள் மத்தியில் இன்று பலர் 45 வயதிலேயே சுகர் மற்றும் ஹார்ட் அட்டாக்கிற்கு உள்ளாகிறார்கள்.
 
மேலும் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் பலர் கேன்சர் போன்ற கொடிய நோய்க்கு உள்ளாகிறாகள். பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற புதிய நோய்களும் வருகிறது. நவநாகரீகம் என்ற பெயரில் மேலை நாட்டு கலாச்சாரம் என்ற முறையில் நம் வாழ்க்கைத் தரம் மேலும் நம்மை செலவாழி ஆக்குகின்றன. இது போன்ற பல காரணங்களை அடுக்கினால் நீங்கள் நான் சொன்ன 3 கோடி என்ற இலக்கே குறைவுதான் என்பதை உணர்வீர்கள்.
 
ஆனால் இன்று 3 கோடி சேவிங்க்ஸ் என்பது சாத்தியமா என்று அலசிப் பார்த்தால் ஒருவர் மாதந்தோறும் ரூ.10,000 வீதம் 30 வருடம் 8% வருமானம் தரும் வங்கிகளில் முதலீடு செய்தால் கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் தான் தேறும். நம்மால் மாதம் வெறும் 10,000 ரூபா சேமிக்க முடியுமா? வங்கிகள் 8% வட்டி 30 வருடத்துக்கு தொடர்ந்து தருமா என்பது நம்முடைய அடுத்தடுத்த கேள்விகள் ஆனால் உங்களது முதலீடு 18% ரிட்டன் கிடைத்தால் உங்களது இலக்கு 3 கோடியை நாள் ஒன்றுக்கு ரூ.70 சேமிப்பதன் மூலமே 30 வருடத்தில் உங்கள் இலக்கை எட்ட முடியும். உங்களது தேவை 3 கோடியில் வெறும் 3%மே உங்களது பங்களிப்பு, மீதமுள்ள 97% பங்களிப்பை கூட்டு வட்டி (Compound Interest) என்ற உலகத்தின் எட்டாவது அதிசயம் பார்த்துக் கொள்ளும்.
 
உங்கள் முதலீட்டில் சிறு மாறுதல் செய்வதன் மூலம் எட்ட முடியாத இமாலய இலக்கை சிறு தொகை முதலீட்டுடன் எட்ட முடிகிறது. 18% வருமானம் தரும் முதலீட்டு தகவல் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் நம்மை நெருங்கி வரும். இந்த சமயத்தில் சிலர், மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதெல்லாம் ரொம்ப ரிஸ்க்ப்பா என்று குட்டையைக் குழப்பிவிடுவார்கள். ஆனால், சீட்டுத் திட்டத்தில் இருந்து இரவோடு இரவாக ஓடிப் போகும் அத்தனை திட்டங்களிலும் பணத்தைப் போடுவார்கள். நாமும் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒதுங்கி நின்றால், நம் எதிர்கால வாழ்க்கையைத்தான் பறிகொடுத்து நிற்போம்.
 
சரி, 18% வருமானம்  தரும் முதலீடு எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்குள் வந்திருக்கும் என்று   நம்புகிறேன். இந்த மாற்று இன்வெஸ்மென்ட் வேறு ஒன்றும் இல்லை, 1994-ல் இருந்து இன்று வரை பொன் முடையிடும் வாத்து போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் மியூச்சல் ஃபண்ட்தான். இதை உறுதி செய்யும் வகையில் மற்ற முதலீடு ரிட்டன்களுடன் மியூச்சல் ஃபண்ட் ரிட்டன் ஒரு ஒப்பீடு.
 
 

1994ல் முதலீடு

 

முதலீட்டு தொகை

தற்போதைய அளவு

  ரிட்டன்

தங்கம்

1000

6500

650.00%

எஃப்டி

1000

5778

575.00%

பிபிஎஃப்

1000

6572

 

650%

மியூச்சல் ஃபண்ட்

1000

60000

6000.00%

 
 
 
 
நாம் ஏன் மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய ஆறு காரணத்தை பட்டியிலிடுகிறேன்.
 
1. மியூச்சுவல் ஃபண்ட் ஒரு மல்டிவிட்டமின் உணவு போன்றது. நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட விட்டமின் மட்டுமே இருக்கும் அனைத்து விட்டமின்களும் ஒரே உணவில் சாத்தியமில்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் இது சாத்தியம். டைவர்சிபைட் முறையில் அனைத்து செக்டாரிலும் பிரித்து முதலீடு செய்வதால் உங்களது ரிஸ்க் குறைவதோடு அனைத்து துறை வளர்ச்சியிலும் உங்களது பங்களிப்பை உறுதி செய்கிறது.
 
2. நீங்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது சந்தை இறக்கத்தில் உங்களுக்கு அதிக யூனிட் கிடைக்கிறது. தக்காளி ஒரு கிலோ ரூ.10  - ரூ.100 வரை விற்றதை நாம் அறிவோம். 10ரூ விற்கும் போது வாங்கி நாம் வீடு முழுவதும் நிரப்பி விட முடியாது. அடுத்த வாரத்திற்காக வாங்கி வைத்தால் கூட அழுகி விடும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி-ல் நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு நல்ல விலை வரும் போது விற்கலாம்.
 
3. மியூச்சுவல் ஃபண்டில் நம்மை மிகவும் கவர்ந்தது லிக்யூடட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் விற்று உடனடியாக பணத்தை பெற முடியும். தேவைக்கேற்ப சிறிய அளவில் கூட விற்று நம் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், நாம் பெரிதும் விரும்பி முதலீடு செய்யும் வீட்டையோ, நிலத்தையோ உடனடியாக செய்ய முடியுமா. பல நேரங்களில் சிறிய தேவைக்கு கூட முழு வீட்டையும் விற்க வேண்டிய சூழல். ஒரு வீட்டின் ஜன்னலை மட்டும் தனியாக விற்க முடியாது. ஆனால் நீங்கள் 1000 யூனிட் வைத்திருந்தால் வெறும் 10 யூனிட்டை விற்று தேவைகளை பூர்த்தி செய்யலாம். இந்த பார்சியல் புக்கிங் என்ற அற்புதமான வரப்பிரசாதத்தை நாம் கட்டாயம் வரவேற்க வேண்டும்.
 
4. அதிகம் சம்பாதிப்பவரிடம் நாம் கேட்கும் ஒரு மித்த புலம்பல் எது என்றால் சம்பாதிப்பதில் பெரும் பங்கு வரியில் சென்றுவிடுகிறது என்பார்கள். ஆனால் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருடத்திற்கு மேல் மேற்கொண்ட எந்த முதலீட்டை லாபத்திற்கும் நீங்கள் மூலதன ஆதாய வரி, வருமான வரி என (capital gain tax & Income tax) போன்ற வரி எதுவும் செலுத்த தேவை இல்லை.
 
5. SEBI, AMFI போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிப்பதால் நமது முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். மூடி விட்டு ஓடும் சீட்டு கம்பெனி மாதிரியான நிலை இங்கு இல்லை.
 
6. மிகக் குறைந்த அளவு முதலீடைக் கூட எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் வழிமுறையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சில மியூச்சுவல் ஃபண்ட்கள் மாதம் வெறும்  ரூ.100 கூட முதலீடு செய்ய வழிவகை செய்து ஏழை எளிய மக்களைக் கூட சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது. மாதம் ரூ.100 முதலீட்டில் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், எஸ்.பிஐ., எல் அண்ட் டி, கோல்கேட், எம்.ஆர்.எஃப்   போன்ற வரும் நிறுவனங்களின் வளர்ச்சியில் உங்களையும் ஈடுபடுத்துகிறது என்றால் இந்த Mutual fundஐ போற்ற வார்த்தைகள் இல்லை.
 
''விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்" என்ற பட்டுக்கோடையின் பாடலுக்கிணங்க காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டு வளமான வாழ்க்கைக்கு வித்திட்டு கொள்ள வாழ்த்துக்கள்.
 
ரமேஷ் ஆதிநாரயணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close