Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி ஆட்சி: ‘’குறைகளைவிட நிறைகளே அதிகம்!’’ டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பேட்டி

ண்மையில் சென்னைக்கு வந்திருந்தார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன். உலகப் பொருளாதார நிலைமை குறித்து தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து சொல்லி வருவதில் இவரது பங்கு முக்கியமானது. க்ரெடிட் சூஸ், ஜூலியஸ் பேயர் பேங்க், ஏசியானமிக்ஸ் ஆகிய புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றியவர், தற்போது எம்.பி.ஏ. மாணவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கற்றுத் தருகிறார். இதோ அவர் நமக்குக் கொடுத்த பேட்டி:
 
 
 
மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நரேந்திர மோடியின் ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
 
‘‘இந்த ஆட்சி திறமையாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நம் நாட்டில் கச்சா எண்ணெய் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரிஷியஸ் நாட்டுடன் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தம் பல குழப்பங்களை விளைவிப்பதாக இருந்தது. அதையும் சீர்படுத்தி இருக்கிறார்கள். உஜ்வல் டிஸ்கம் அஷ்ஷூரன்ஸ் யோஜனா (Uday) திட்டம், மின்மயமாக்கல் என பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இவற்றின் விளைவு, நமது பொருளாதாரத்தில் உடனே தெரிய ஆரம்பிக்காது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெரியவரும்.
 
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. அதை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்ததில் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட பங்கு இருக்கிற அதே நேரத்தில், இந்த ஆட்சிக்கும் உண்டு. அரிசி, கோதுமை போன்றவற்றை கொள்முதல் செய்வதில் நிதானமான போக்கை இந்த ஆட்சி கடைபிடித்திருக்கிறது. விவசாய விளைபொருட்களுக்கான ஆதார விலையை மிதமாக உயர்த்தியதன் மூலம் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட்டில் துண்டு விழுவது அதிகமாக இருந்தது. அதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 
இப்படி பல நல்ல விஷயங்களை செய்திருந்தாலும், சில முக்கியமான விஷயங்களை செய்யவும் தவறியிருக்கிறார்கள்.
 
உதாரணமாக, அரசு வங்கிகளில் முதலீட்டை கொஞ்சம் சீக்கிரமாகவே அதிகப்படுத்தி இருக்க வேண்டும். இன்றைக்கு ​இந்திய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய இயலாமல் இருக்க காரணம், வங்கிகளின் கடன் சுமை அதிகமாக இருக்கிறது. முதலீட்டுக்கான கடனை அரசு வங்கிகள்தான் தரமுடியும். ஆனால், அவர்களால் நிறைய கடன் தரமுடியாமல் போவதற்குக் காரணம், வாராக் கடன் அதிகமாக இருப்பதே. இந்தப் பிரச்னைக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் மெத்தனமாக செயல்படுவதாக தோன்றுகிறது. ​ஆனால், மொத்தத்தில், இந்த ஆட்சியில் குறைகளைவிட நிறைகளே அதிகம் பார்க்க முடிகிறது!’’
/
 
ஆனால், வேலை வாய்ப்பு பெருகவில்லை என்கிறார்களே!
 
‘‘வேலைவாய்ப்பு பெருகி இருக்கிறதா, இல்லையா என்பதை சரியாக கண்டுபிடித்துச் சொல்கிற அளவுக்கு நம் நாட்டில் எந்த சிஸ்டமும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அப்படியொரு சிஸ்டத்தை உருவாக்கியபிறகுதான், நாம் இது குறித்து தெளிவாக பேச முடியும். இ.பி.எஃப். திட்டங்கள் மூலம் கிடைக்கிற தகவல்களைத் தவிர்த்துப் பார்த்தால், போதுமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். புதிதாக ஒருவர் வேலைக்குச் சேரும்போது அவருக்கு நிறுவனம் தரக்கூடிய பிராவிடன்ட் ஃபண்டில் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாக அரசாங்கம் அதிகரித்திருப்பது வேலைவாய்ப்பை இன்னும் அதிக அளவில் பெருக்குவதற்கான ஒரு முக்கிய சலுகைதான்.
 
இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிறிய அளவில் இயங்கும் நிறைய தொழில்முனைவோர்களை (Personal sector) உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். முத்ரா கடன் இப்போது அதிக அளவில் இப்போது தரப்பட்டு வருகிறது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். பெரிய தொழில்கள்தான் வேண்டும் அல்லது சிறிய தொழில்கள்தான் வேண்டும் என்று நினைக்காமல், எல்லா வழிகளையும் பின்பற்றினால்தான் வளர்ச்சி காண முடியும்.’’
 
நமது பொருளாதாரம் இன்னும் வேகமான வளர்ச்சி அடைய என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்?
 
‘‘பொருளாதாரம் வேகமாக வளரவேண்டும் என்கிற நோக்கில் முடிவுகளை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தோம் எனில், எதிர்பாராத பின்விளைவுகள் உருவாவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரை, செய்ய வேண்டிய வேலைகளை செய்தாக வேண்டும். உதாரணமாக, நல்ல சாலை வசதி, நல்ல தண்ணீர் வசதி, கல்வி, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். சுற்றுச்சூழலை பேணிக் காக்க வேண்டும். தொழில் தொடர்பான சரியான சட்டங்கள் இயற்றப்பட்டு, அது அடிக்கடி மாறாமல் இருக்க வேண்டும்.
 
இந்த வேலைகளை எல்லாம் சரியாக செய்தாலே போதும், பொருளாதாரம் வளரும். அதிக அளவில் கடன் தருவது, நிறைய சலுகைகள் தருவது போன்றவற்றினால் நாம் கடந்த 2003 - 2008 வரை நன்கு வளர்ந்தோம். ஆனால், அதை நம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தவிர, கரண்ட் அக்கவுண்ட் டெபாசிட், நமது நாணயத்தின் மதிப்பு குறைந்தது, பணவீக்கம் என பல பிரச்னைகளினால் நாம் பாதிக்காப்பட்டோம். ஆக, 8%, 9% வளர்ச்சி காண வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படாமல், அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதே அவசியம்.’’
 
நமது ஜி.டி.பி. குறித்து கணக்கீடு செய்வதில் குறைபாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பி இருப்பது நம் நாட்டின் வளர்ச்சியின் மீது சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறதே!  
 
‘‘இந்தக் கணக்கீட்டை எதன் அடிப்படையில் செய்தார்கள் என்பது எனக்கும் புரிபடவில்லை. மத்திய புள்ளியியல் துறை, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் துறை போன்றவை எந்த அடிப்படையில் இந்தக் கணக்கீட்டை செய்தது என்பது பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நம் பொருளாதாரம் 7.9% வளர்கிறது எனில், அதன் தாக்கம் பல இடங்களில் தெரியும். உதாரணமாக, கார், டூவிலர், மொபைல் போன் விற்பனை அதிகரிக்கும். ரயிலில் கொண்டு செல்லும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும். இது மாதிரி எதுவும் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு நடக்காதபோது, இப்போது நாம் அடைந்து வருவதாக சொல்லப்படும் வளர்ச்சி மீது சந்தேகம் வரத்தான் செய்கிறது. ​வங்கிகள் கடன் வழங்குவதும் தேக்கம் கண்டிருக்கிறது. வீடு வாங்கவும், வீட்டு வசதி சாதனங்கள் வாங்கவும் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
மேலும், ஜி.டி.பி. வளர்ச்சி இந்த அளவு இருப்பது உண்மை எனில், ரிசர்வ் வங்கி ஏன் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்? வளர்ச்சி இல்லை என்றால்தானே வட்டியைக் குறைக்கும்படி கேட்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பக்கூடிய அளவில்தான் இந்தக் கணக்கீடு இருக்கிறது. இது குறித்து வெளிப்படையான, தெளிவான விளக்கங்கள் இனியாவது தர வேண்டும். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் நெருக்கடி ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது கணக்கிடும் முறையில் உள்ள பிரச்னை மட்டுமே.’’
/
 
ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இரண்டு ஆண்டு பதவி நீட்டிப்பு தந்திருக்கலாமா? இந்த விஷயத்தில் அரசாங்கம் செய்தது சரியா?
 
‘‘ஆர்.பி.ஐ. கவர்னராக பணியாற்ற ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு தந்திருக்க வேண்டும். அவரது பதவி நீட்டிக்கப்படாமல் போனதற்கு பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். அவை எதுவுமே சரியான காரணங்களாக எனக்குப் படவில்லை. அவர் கவர்னராக இருந்த இந்த மூன்று ஆண்டுகளில் ஆர்.பி.ஐ.க்கும் அரசாங்கத்துக்கும் இடையே இணக்கமான உறவுதான் இருந்தது. அவர் சில விஷயங்களை பற்றி சுதந்திரமாக கருத்து வெளியிட்டது எல்லாம் சிறிய விஷயங்கள்தான். இவற்றை எல்லாம் சரிசெய்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.
 
ஒருவேளை அவருக்கு பதவி நீட்டிப்பு தரவேண்டாம் என முடிவு செய்திருந்தாலும் அதை அரசாங்கம் செயல்படுத்திய விதம் கண்ணியமானதாகப் படவில்லை. அரசியல் கட்சியில் சிலர் நீக்கப்படுகிற மாதிரி, அரசியல் கலப்பு இல்லாத ஒரு நிறுவனத்தின் தலைவர் வெளியே அனுப்பப்படுவது ஆரோக்கியமான முன்னுதாரணமாக இல்லை. இது அடுத்துவரும் கவர்னர்களிடம் ஒருவித பயத்தையே உண்டாக்கும். மனசாட்சிப்படி முடிவெடுக்க தயங்கும் போக்கை உருவாக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும்; நாட்டின் இமேஜும் வெளி உலகத்தில் பாதிப்படையும். அடுத்து யார் ஆர்.பி.ஐ. கவர்னராக வந்தாலும், அவர்கள் சுயமாக முடிவெடுக்க அரசுத் தரப்பில் உத்தரவாதம் தரப்படவேண்டும்.’’
 
ஜி.எஸ்.டி. மசோதா சட்டமாகாமல் தள்ளிக்கொண்டே போகிறதே!
 
‘‘ஜி.எஸ்.டி சட்டமாகிவிட்டாலே நம் நாடு மிகப் பெரிய வளர்ச்சி கண்டுவிடும். அது வராவிட்டால் நமக்கு மிகப் பெரிய பாதிப்பு என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களே. ஜி.எஸ்.டி. வந்தபிறகு பொருட்களின் விலை உயருமா, குறையுமா என்பது வந்தபிறகுதான் தெரியும். மத்திய அரசாங்கத்தின் வெற்றியானது ஜி.எஸ்.டி. என்கிற ஒன்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவது எனக்கு சரியாகப்படவில்லை.’’
 
பிரெக்ஸ்ட்-னால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? 
 
‘‘நேரடியாக பெரிய பாதிப்பு எதுவும் வந்துவிடாது. இந்தியாவுக்கு ஐரோப்பிய கண்டத்து நாடுகளுடனும், இங்கிலாந்துடன் நல்ல தொழில் உறவு இருக்கிறது. இது எதிர்காலத்திலும் இருக்கவே போகிறது. ஆனால், மறைமுகமான வழிகளில் தாக்கல் வரலாம். உதாரணமாக, அங்கு பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால், நம் சந்தையும் இறங்கலாம். அந்நிய செலாவணி மதிப்பு ஏறி, இறங்கலாம். தவிர, பிரெக்ஸ்ட் முடிவினால் உலக அளவில் தொழில் செய்வதற்கான நம்பிக்கை குறையும்பட்சத்தில், அதன் தாக்கம் நமது பொருளாதாரத்திலும் தெரியலாம். பாதிப்பு இப்படிப்பட்டதாகத்தான் இருக்குமே தவிர, நேரடியாக பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை.’’
 
அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தை உயர்த்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறதே!
 
‘‘இது அவர்களுக்கே நல்லதல்ல. இதனால் அமெரிக்க ஃபெட்டின் மீது இருக்கும் மதிப்பு, நம்பிக்கை, நாணயம் போன்ற எல்லாமே கேள்விக்குள்ளாகிறது. வட்டி விகித உயர்வை தள்ளிப் போட்டுக் கொண்டே போவதால், பங்குச் சந்தை அங்கு உயர்ந்துகொண்டே போகிறது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பங்குச் சந்தையின் மதிப்பு உயர்ந்திருப்பதால், ஒரு குமிழ் (bubble) உருவாகி இருக்கிறது. இப்போது வட்டி விகிதத்தை உயர்த்தினால் பங்குச் சந்தை சரிந்துவிடும். இதனால் பிசினஸ் செய்வதற்கான நம்பிக்கை குறையும். அது குறைந்தால் மக்கள் செலவு செய்வது குறையும்.
 
அப்போது தொழில் வளர்ச்சி குறையும் என்று நினைத்து வட்டி விகிதத்தை உயர்த்தாமலே இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்கல்ல. பங்குச் சந்தையை மனதில் வைத்து ஒரு மத்திய வங்கி எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. வட்டி விகிதம் இவ்வளவு குறைவாக இருப்பது அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது. வட்டி விகிதம் குறைவாக இருந்தால், யாருக்கும் கடன் வாங்கி தொழில் செய்ய இஷ்டம் இல்லை என்றுதான் அர்த்தம். வட்டி விகிதம் உயர்கிறது எனில் மக்கள் போட்டி போட்டு பொருட்களை வாங்கத் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். இதைப் புரிந்துகொண்டு வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்கா ஃபெட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
 
சீனப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி கண்டிருக்கிறதே! 
 
‘‘சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி கடந்த ஆண்டில் எழுந்த கேள்விகள் இப்போதைக்கு கொஞ்சம் மறைந்திருக்கலாம். அங்கு பொருளாதாரம் கொஞ்சை உயர்ந்திருப்பதற்குக் காரணம், மீண்டும் அதிக அளவில் பணத்தை புழங்கவிட்டதுதான். இதனால் வீட்டு மனைகளின் விலை அதிகரித்துடன், கட்டுமானம் தொடர்பான வேலைகளும் அதிகரித்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு ஸ்டெராய்ட் மருந்து கொடுத்து பிழைக்க வைக்கிற மாதிரியான விஷயம் இது. இதெல்லாம் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கல்ல. மேலும் மேலும் கடன் தந்து, பொருளாதாரத்தை நீண்ட காலத்துக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. இரும்புத்திரைக்கும் பின்னால் இருக்கும் நாடு என்பதால் அழிவு நாளை அவர்களால் தள்ளிப் போட முடிகிறது. எத்தனை ஆண்டு காலத்துக்கு இப்படி செய்ய முடியும் என்பதே கேள்வி.’’
 
பங்குச் சந்தை: இறக்கம் வரலாம்!
 
‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசாங்கம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. தவிர, இந்த ஆண்டு பருவ மழை நல்லபடியாகவே இருக்கிறது. சில இடங்களில் தேவைக்குவிட அதிகமாக பெய்திருக்கிறது. இதை எல்லாம் மனதில் கொண்டு பார்த்தால், பங்குச் சந்தை நன்றாகவே இருக்கும். ஆனால், அமெரிக்க சந்தை ஏற்கெனவே அதிக அளவில் மதிப்பு உயர்ந்து, குமிழ் நிலையில் இருக்கிறது. இந்தக் குமிழ் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அப்படி உடைந்து நம் பாதிப்படைந்து இறங்கும். தவிர, உலக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துவிட்டன. பல்வேறு நாடுகளுமே மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பல முடிவுகளை எடுத்து வருகின்றன. தெற்குக் கடல் சீனாவின் ஆக்கிரமிப்பு இதற்கொரு உதாரணமாக சொல்லலாம். ஜப்பானும், ஜெர்மனியும் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இப்படி உலகப் பொருளாதாரத்தைவிட உலக அரசியல் நிகழ்வுகள் பெரும் கவலை தரக்கூடிய விதத்தில் இருப்பதால், அதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, உலக அளவில் சந்தை இறக்கம் காணும்போதும், நம் சந்தையும் இறங்கலாம்.’’
 
தங்கம் விலை: உயரும்!
 
‘‘சிறிய பிரிமியத்தைக் கட்டி பெரிய ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் இன்ஷூரன்ஸ் எடுக்கிற மாதிரிதான் நாம் தங்கத்தை அணுக வேண்டும். அது ஒரு முதலீடு அல்ல. அபாயத்துக்கு எதிராக செய்யப்படும் காப்பீடு. தங்கம் விலை உயர வேண்டும் எனில், உலக அளவில் மோசமான நிலைமை நிலவ வேண்டும். இப்படி மோசமான நிலைமை நிலவுவது யாருக்குமே நல்லதல்ல. எனவே, தங்கம் விலை உயரும் என்பதற்காக அதை வாங்காமல், நாம் வாங்கி வைத்திருக்கும் கொஞ்சம் தங்கம், மோசமான பொருளாதார நிலை நிலவும்பட்சத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்றுதான் நினைக்க வேண்டும். உலக அளவில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க நமது போர்ஃபோலியோவில் கொஞ்சம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் உலக அரசியலில் அபாயகரமான நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் தங்கம் விலை உயரும் என்றே எதிர்பார்க்கலாம்.’’
 
ஏ.ஆர்.குமார்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close