Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

50 கோடி பயன்பெறுவார்கள்.. இந்தியா அஞ்சல் வங்கிகள்!

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 
பழைய நினைவுகளில் மூழ்கிப் போவது யாவருக்குமே பிடித்த ஒன்றுதான். சுகங்களை மட்டும் அல்ல; கூடவே சில சோகங்களையும் சுமந்தே வருகின்றன 
இந்த நினைவுகள். அந்த வகையில் கடந்த தலைமுறை, இன்னமும் பசுமையாய் பதித்து வைத்து இருக்கும் ஒரு குரல் - 'சார்.. போஸ்ட்!' 
 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நமது குடும்பத்து உறுப்பினராக இருந்த 'தபால்காரர்', இன்று நம் கண்ணில் கூட படுவதே இல்லை. கைப்பேசி, இணையம் எல்லாம் 
வந்த பிறகு, 'தபால்' மறைந்து போனது. 'மணி ஆர்டர், தந்தி, வாழ்த்து அட்டை..' எதுவுமே இல்லை. 
அஞ்சல் அலுவலகங்கள், ஏறத்தாழ, புராதனச் சின்னங்களாக மாறி விட்டன. 
 
ஏதேனும் ஓர் அஞ்சல் அலுவலகத்தைக் கடந்து செல்கிற ஒவ்வொரு முறையும், இந்த இடம், முன்பு இருந்தாற் போன்றே மீண்டும் பரபரப்பாக இயங்காதா என்கிற ஏக்கம் 
மிக ஆழமாக ஏற்படத்தான் செய்கிறது.  
 
மீண்டும் அத்தகைய ஒரு நாள் வரும் என்றுதான் தோன்றுகிறது.  நம்பிக்கை ஊட்டும் வகையில் வந்திருக்கின்றன - 
'இந்தியா அஞ்சல் செலுத்து வங்கிகள்'. (India Post Payment Banks - IPPB) 
 
7000 பேருக்கு ஒன்று வீதம், 2,96,000 கிராம ஏஜெண்டுகள் உட்படப் பல லட்சக் கணக்கான ஊழியர்களுடன்,  
1,55,000க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகள் இயங்கி வருகின்றன. (90% - உட்கிராமங்களில் உள்ளவை.) 
இவை மூலம், 26 கோடி சேமிப்பு கணக்குகளில், 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் கொண்டுள்ளது.  
 
சிறு சேமிப்பு, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக வேலைத் திட்ட ஊதியம் வழங்கல் ஆகிய பணிகள்  தற்போது இங்கே நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 'செலுத்து வங்கிகள்' (Payment Banks) திட்டத்தை 
முன்னெடுத்தது இந்திய அரசு. 
 
2006 ம் ஆண்டே, 'இந்தியா போஸ்ட்', வங்கிச் சேவையில் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. 
அதன் பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து, பிப்ரவரி 2013ல் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. 
 
திட்டக் கமிஷன் ஆகஸ்ட் 2013 ல் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும், கடுமையான நிதி நெருக்கடியால், இந்தத் திட்டம் அப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி விட்டது. போதாக்குறைக்கு, வங்கியைத் திறம்பட நடத்துதற்கு, அஞ்சல் துறையில் போதிய நிபுணத்துவம் இல்லை;  மேலும் வங்கிப் பணிகள், அஞ்சலகங்களின் 
அடிப்படைப் பணியாகிய அஞ்சல்களைக் கையாள்வதில், பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.  

முடிவில், ஆகஸ்ட் 2013 இல் மத்திய அமைச்சகம் இத்திட்டத்தை நிராகரித்தது. 
 
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது டிசம்பர் 2013இல், இந்தியா போஸ்ட் சார்பில்,  1000 தானியங்கி மையங்கள் (ஏ.டி.எம்) அமைக்கப்படும் என்றது. சொன்னாற் போலவே, அதன் முதல் ஏ.டி.எம்., 27 பிப்ரவரி 2014 அன்று சென்னையில் திறந்து வைக்கப்
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பட்டது. 
   
ஏப்ரல் 2014இல் ரிசர்வ் வங்கி, 26 நிறுவனங்களுக்கு, வங்கி நடத்துவதற்கான,  கொள்கை அளவிலான அனுமதி வழங்கியது. ஆனால், அரசின் முறையான அங்கீகாரம் கிடைக்காததால்  இந்தியா போஸ்ட்டுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி அப்போது கிடைக்கவில்லை. 
தனியே இது குறித்து அரசுடன் பேச இருப்பதாக அறிவித்தது. 
 
டிசம்பர் 2014இல், அஞ்சலக ஏ.டி.எம்., டெபிட் கார்டுகள் வழங்க, அஞ்சல் துறை முடிவு செய்தது. 
 
ஜனவரி 2015இல்தான், அஞ்சலக வங்கிக்கு என்று தனி சட்டம் இயற்ற அரசு, முன் வந்தது.  28 பிப்ரவரி 2015 பட்ஜெட் உரையில், 'இந்தியா போஸ்ட்', 'பேமெண்ட்' வங்கிகளை நடத்தும் என  அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டது.   17 ஆகஸ்ட் 2016 அன்று, பொதுத் துறை நிறுவனமாக உருவானது. 
 
உலகின் 'மிக எளிய அணுகு வங்கி' (most easily accessible) இதுவாகத்தான் இருக்கும்.  ரூபாய் 800 கோடி செலவில் மார்ச் 2017 முதல் தனது செயல்பாட்டைத் தொடங்கும் இவ்வங்கி, படிப்படியாக கிளை விட்டுப் படர்ந்து, செப்டம்பர் 2017 இல் சுமார் 850 கிளைகள், 5000 ஏ.டி.எம்.கள் 
கொண்டதாக இருக்கும். திட்டம் முழுமை அடையும் போது, இந்திய மக்கள் தொகையில் 40%க்கு மேல், 
ஏறத்தாழ 50 கோடி பேர் பயன் பெறுவார்கள்.   
 
இந்திய அரசின் 100 சதவிகிதப் பங்குகளுடன், அஞ்சல் துறையின் கீழ், இவ்வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்பு, நடப்புக் கணக்குகளை இவ்வங்கிகள் வழங்கும். 
 
டிஜிட்டல் வசதியுடன் கூடிய இக்கணக்குகள் மூலம், தனி நபர்கள், நிறுவனங்கள் உட்பட அனைவரும் 
அனைத்து வகை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். 
காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியம் தொடங்கி சர்வதேச பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் 
அன்னியச் செலாவணி நடவடிக்கைகள் வரை அனைத்து வசதிகளையும் இவ்வங்கிகள் தர இருக்கின்றன. 
 
அஞ்சல் துறையின் இவ்வங்கிகள் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று 
இவ்வங்கியின் அதிகாரபூர்வ இணையப் பக்கம் தெரிவிக்கிறது. 
 
நிதி சார்ந்த விழிப்பு உணர்வு: யாரும் சேமிக்கலாம்; நிதி குறித்த தகவல், ஆலோசனை பெறலாம்; 
அவர்கள் எங்கே எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது பொருட்டல்ல. அதாவது, நிதி ஆலோசனைகளும் 
நிதித் திட்டமிடலும் சமூகத்தின் ஒரு சாராருக்கே கிடைக்கும் என்கிற நிலை மாறும். 
 
தமது வருமானத்தை எவ்வாறு முறையாகக் கையாளலாம்; எவ்வெவ் வகைகளில்,  தமது 'சக்திக்கு' உட்பட்டு எவ்வாறு, எந்தக் கணக்கில், எவ்வளவு சேமிக்கலாம் போன்ற விவரங்களை குறைந்த வருவாய் உடையோரும் இனி, எளிதில் பெறலாம். 
 
அஞ்சல் வங்கிகள், விரிந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான கிளைகள், ஊழியர்கள் மூலம் 
மிகப் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும். வங்கிப் பயன்பாடு, நிதித் திட்டமிடல், முறையான சேமிப்பு என்று பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, 
சாமான்யனின் நிதி மேலாண்மையில், மிகப் பெரிய தர மாற்றத்தையே ஏற்படுத்தலாம். 
 
நிதி மேலாண்மையில் இந்தியாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது எனலாம். 
 
பணம் செலுத்துதல், பெறுதலை ஒழுங்குப்படுத்துதல்: அரசாங்கம் சொல்கிற நேரடி பணப் பரிவர்த்தனை 
முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரும். சமூகப் பாதுகாப்பு பென்ஷன், உதவித் தொகைகள், 
தண்ணீர், மின்சாரம் போன்ற பயன்பாடுகள் மற்றும் பள்ளி, கல்லூரிக் கட்டணங்களை, இருந்த இடத்தில் இருந்தே எவரும் செலுத்தலாம். நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று பணம் செலுத்துகிற சங்கதிகள் எல்லாம் விரைவில் பழங்கதை ஆகாலாம். செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற பல வசதிகள், சாமான்யனுக்கும் கிடைக்கலாம். வருமானத்துக்கு என்ன வழி...? அதற்கு என்ன செய்வது... போன்ற 
கேள்விகள் வங்கி வசதி வட்டத்துக்கு அப்பாற்பட்டது. பணம் செலுத்துதலை எளிமையாக்கும் வழிமுறையாக 
மட்டுமே பார்த்தல் வேண்டும்.
 
அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் செயல்பாடுகள் - பல லட்சக்கணக்கான மக்களுக்கு முறையான வங்கி சேவை 
இன்னமும் சென்று சேர்ந்த பாடில்லை; இதன் காரணமாய், அரசுத் திட்டங்களின் பயன், உரித்தானவர்களுக்கு 
உரிய நேரத்தில் கிடைக்காமல் போகிறது. காப்பீடு, சேமிப்புக்கான வட்டி கூட பெறாதவர்கள் இருக்கிறார்கள். 
அஞ்சல் செலுத்து வங்கிகள், அத்தனை பூகோள சமூக எல்லைகளையும் உடைத்துக் கொண்டு செல்லும்; 
அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒட்டு மொத்த வளமையை நோக்கிய முதல் நகர்வாக இருக்கும்.  
 
எளிதில் அணுகும் வசதி: இந்தியர்களின் நம்பிக்கைக்கு உரியதாக அஞ்சல் துறை இருக்கிறது. 
தபால் கொண்டு வருபவர், இவ்வங்கிகளில் முக்கிய பங்காற்றுவர். அஞ்சல் துறையின் 'நெட்வொர்க்', 
மிக அகன்றது; மிக ஆழமானது. எல்லாராலும் எளிதில் அணுக முடிகிற, 'அச்சம் ஊட்டாத' அரசுத் துறையாக 
அஞ்சல் துறை, மக்களின் நண்பனாக செயல் பட்டு வருகிறது. இது, அஞ்சல் வங்கிகளின் வெற்றிக்கு 
மிக முக்கிய காரணியாக விளங்கும். இணையத் தொடர்பு, மொபைல் பேசிச் சேவை, டெபிட் கார்ட், ஏ.டி.எம். 
என்று பிற வங்கிகளின் வசதிகளும் உண்டு. ஆகவே இது முழுமையான வங்கியாக செயல் படும். 
 
முதல் கட்டமாக, வங்கியின் நிர்வாக முதன்மை அதிகாரி / நிர்வாக இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. விரைவில் தகுதியான நபர் பொறுப்பு ஏற்க உள்ளார். 
அதனைத் தொடர்ந்து, வங்கிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் வரையறுக்கப்படும்; வடிவமைக்கப் படும். 
 
அஞ்சல் வங்கியில் பணி புரிய, துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஏற்கனவே 
அறிவிக்கை வெளியாகி உள்ளது. 1000 பணியிடங்களுக்கு மேல் நிரப்பப்பட உள்ளன. நவம்பர் 1ஆம் தேதி, விண்ணப்பம் அனுப்ப நிறைவு நாள். 
 
'கடைசி புள்ளி' வரை, அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாட்டை உறுதி செய்தல்,  
தொழில் நுட்பம், தனிப்பட்ட தொடர்புகளை ஒருங்கிணைத்தல்; டெலிகாம், நிதிச் சேவைகளில் உள்ள பங்குதாரர்களை அடையாளம் காணுதல்; வணிக, கல்வி நிறுவனங்களை இணைத்துக் வருதல், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தன்னைத் 
தகவமைத்துக் கொள்ளுதல்... என, இவ்வங்கியின் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன.  
 
தனிநபர் நிதி மேலாண்மை, சாமான்யருக்கு வங்கி வசதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி போன்ற பல குறிக்கோள்களைத் தாங்கியபடி வருகிறது -'இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி'. 
 
வாசல் தேடி வரும் இப்புதிய வசந்தம், வெற்றி பெற வாழ்த்துவோம். 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close