Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொழில் தொடங்க விருப்பமா? செட்டி நாடு சிமென்ட் முத்தையா சொல்லும் 10 ஆலோசனைகள்

தொழில் தொடங்க விருப்பமா?
செட்டி நாடு சிமென்ட் முத்தையா சொல்லும் 10 ஆலோசனைகள்
 
நகரத்தார் உலக வர்த்தக மாநாட்டின் மூன்றாம் நிகழ்வு இறுதிநாள் நிகழ்வுகளாக இருந்ததால், பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தன. தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத், தன்னம்பிக்கை பேச்சாளர் வெ.மு.கா. ராம.வேலு, டெக் மகேந்திரா நிறுவன கமிட்டி உறுப்பினர் சித.லட்சுமணன் ஆகியோர் பேசினர்.
 
அடுத்த அமர்வு ஆச்சிமார்களின் அமர்வாக அமர்களப்பட்டது. கனடா நாட்டின் நீதியரசர் வள்ளியம்மை ஆச்சி தலைமையில், ‘குடும்பத்திலும், தொழிலும் வெற்றி பெறும் ஆச்சிமார்கள்’ என்கிற தலைப்பில் குழு விவாதம் நடந்தது. 
 
சென்னை, அபிராமி தியேட்டர் பி.லிட் நிர்வாக இயக்குநர் நல்லம்மை ராமநாதன், வி.என்.சி.டி. குளோபல் வென்சர்ஸ் இயக்குநர் கீதா நாகு, மீனு சுப்பையா டயம்ண்ட்ஸ் நிறுவனர் மீனு சுப்பையா, கரட் - கேரட் டயமண்ட்ஸ் மற்று அபி வயிரவன் பிளம்பிங் கம்பெனி பார்ட்னர் ரெங்கநாயகி முத்துக்கண்ணன் மற்றும் கோவை அஸ்டர் அப்பாரல்ஸ் தலைமை செயல் அலுவலர் உண்ணாமலை முத்து ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று தங்கள் வெற்றிக்கான காரணங்களை எடுத்துச் சொன்னார்கள். பெண்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். அதற்கான சக்தி ஆச்சிமார்களிடம் உள்ளது என்பதை இவர்களது குழு விவாதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
 
 
அடுத்து, ‘தோல்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றியை எட்டிப் பிடிப்பது’ தொடர்பான குழு விவாதம் சென்னை, வி.என்.சி.டி. வென்சர்ஸ் மற்றும் சன் இன்டஸ்ரீஸ் மேலாண் இயக்குநர் நாகு. சிதம்பரம் தலைமையில் நடந்தது. இந்த விவாதத்தில் ஐக்கிய அமீரக்கத்தின் பிளாக் துலிப் குரூப் கம்பெனியின் தலைவர் முகம்மது கனி முகமது இசியா, எக்ஸ்குளூசிப் இந்தியா நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் கிருஷ்ணன், துபாய் வங்கியின் ஹோல்சேல் பிரிவு தலைவர் குமார் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர்.
இளைஞர்கள் தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தனது உரையில் குறிப்பிட்டு, தொழில் தொடங்கும் அந்தப் பயணத்தில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றி விளக்கமாகப் பேசினார் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சோம.வள்ளியப்பன். 
 
அடுத்து பேசிய தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் வேலுமணி, ‘உங்கள் விருப்பத்தை செயல்படுத்துங்கள்’ என்ற தலைப்பில் தொழில் முனைய விரும்புவோரை ஊக்கமளிக்கிற வகையில் உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்தினார். எந்தப் பின்னணியும் இல்லாமல், படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து கை நிறைய சம்பளம் பெற்றுவந்த அரசுப் பணியை உதறிவிட்டு, தொழில் தொடங்கிய விவரத்தை தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். ‘‘தொழிலில் மாற்றி யோசித்து புதுமையாக செயல்பட வேண்டும். அப்படி செய்ததால்தான் இன்று மும்பையில் 4 லட்சம் சதுர அடியில் அலுவலகம், 15 ஏக்கர் நிலம் என 3300 கோடி மதிப்பில் தொழில் சாம்ரஔயத்தை உருவாக்க முடிந்தது’’ என்று குறிப்பிட்டு, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
 
அடுத்து தொழில் தொடங்க விருப்பமா, இல்லையா என்கிற தலைப்பில் சென்னை டயானா பள்ளியின் இயக்குநர் கல்யாணி சிதம்பரம் தலைமையில் குழு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் ஆவிச்சி முத்தையா, சோலை அடைக்கலவன், வடிவாம்பாள் முத்துராமன் ஆகிய தொழில்முனைவோர்கள் பங்கு பெற்று தாங்கள் தொழிலில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து நல்ல முன்னேறி வருகிறோம் என்பதை தங்கள் அனுபவத்திலிருந்து எடுத்துச் சொன்னார்கள். 
 
இந்த மாநாட்டின் நிறைவு உரையை செட்டிநாடு குழும மேலாண் இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா நிகழ்த்தினார். தொழில் செய்ய விரும்புகிறவர்கள் அவர் 10 ஆலோசனைகளை அளித்தார்.
 
1. தொழில் முனைய விரும்புவர் முதலில் தன்னைத்தானே மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். பின்னர், சரியான தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
2. உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்யும் யுக்தி தெரிந்திருக்க வேண்டும்.
 
3. எந்தத் தொழிலும் லாபகரமானதுதான். தொழில் செய்ய சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம்.
 
4. தொழிற்சாலைகளில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களையே நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் தொழிலை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.
 
5. நிதி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்து கம்பெனியின் வரவுசெலவுகளை முறைப்படுத்தலாம்.
 
6. சிறிய அளவில் வர்த்தகம் தொடங்கினாலும், அதனை காலப்போக்கில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடுத்தான் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
 
7. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாதவர்கள் சிறிய அளவில் வர்த்தகம் செய்வதைவிட நல்ல சம்பளத்தில் வேலைக்குச் செல்வது லாபகரமாக இருக்கும்.
 
8. வெற்றிகரமான தொழிலதிபராக வேண்டும் என்றால் வர்த்தக நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடியாக இருக்க வேண்டும்.
 
9. தொழிலில் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும்.
 
10. தொழில் செய்ய விரும்புகிறவர்கள் இந்த விஷயங்களை அடிப்படைக் கொள்கைகளாக கொண்டு செயல்பட வேண்டும்.
 
முத்தையாவின் பேச்சைக் கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
 
நகரத்தார் உலக வர்த்தக மாநாடு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் நடக்கப் போகிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்!
 
-ஏ.ஆர்.குமார்
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close