Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிசினஸ் சூட்சமம்: மூணு லெவல்... மூணு வேலை!

 

 
சி.மதன், துணைப் பேராசிரியர், எம்பிஏ துறை,
மெப்கோ ஸ்ல்ங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.
 
 
 
அதிகாலை மணி ஐந்து, செல்வம் டீ கடை அரசமரத்தடி கிளை பையன் ரகு. ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்ற பழைய எம்.ஜி.ஆர். பாடலை அவன் முணுமுணுத்தபடி வந்திறங்கினான்.      
                    
கடையைத் திறந்தபடி ரகுவின் வருகைக்காகக்  காத்திருந்தார் டீ கடை மாஸ்டர் ஆறுமுகம். செல்வம்  டீ கடை பாலிசியின்படி, 5 வருடத்துக்குள் டீ மாஸ்டர் செய்யும் எல்லா வேலைகளையும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு கடை பையன்களும் டீ மாஸ்டர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். இந்த பாலிசியால் எப்போதுமே கடை பையன்களுக்கு செல்வம் டீ கடை மாஸ்டர்கள் மீது தனி பாசமுண்டு.
 
கடைக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் வேனில் வந்திறங்கவே, அவற்றை டிரைவரே இறக்கி வைத்தார். வேன் டிரைவர்,  டீ மாஸ்டரை பார்த்து, ‘அண்ணே, சரக்கு எல்லாத்தையும் இறக்கி வைச்சாச்சான்னு பார்த்துக்கோங்க’ என்றார். ‘‘ஒரு நிமிஷம்பா, எஸ்.எம்.எஸ்.ஐ செக் பண்ணிக்கிறேன்’’ என்றவர், மாஸ்டர் தனது செல்போனை எடுத்து கம்பெனி மேனேஜர் அனுப்பின எஸ்.எம்.எஸ்.ஐ பார்த்தார்.
 
ஒவ்வொரு நாளும் 21 கிளைகளுக்கும் எந்த அளவு பிசினஸ் இருக்கும் என்பதனை ஏற்கனவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேனேஜர் தனது கணினியிலுள்ள சாப்ட்வேர் மூலம் கணித்து, அதன்படி பொருள்களை அனுப்பி வைப்பார். மாஸ்டர் அன்றைக்கான எஸ்.எம்.எஸ்.ஐ வாசிக்க, வாசிக்க, ரகு பொருள்களை சரிபார்த்தான். 
 
‘மாஸ்டர் எல்லாம் கரெக்டா இருக்கு’
 
கடையில் விற்பனைக்குத் தேவையான டீ, வடை எல்லாம் தயாராக, கல்லாவில் உட்கார்ந்தபடி வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார் முத்து. சூரியனும் மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தான். அதுவரை நகரங்களில் வாகனங்கள் ஓட்டுவது மிகவும் சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கும். ஏனென்றால் அகலமான சாலைகள், பளீரென்ற சாலைவிளக்குகள், டிராபிக் சிக்னல்கள் ஏதுமில்லாமல், டிராபிக்கும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் சூரியன் உதயமானப் பின் மாநகர சாலைகளில் வாகனம் ஓட்டுவது நரக வேதனையாகிவிடும்.
 
சுமார் 10 மணிக்கு செல்வம் டீ கடை முதலாளி செல்வம் அரசமரத்தடி டீ கடைக்கு வந்து சேர்ந்தார். செல்வம் முதன் முதலாக ஆரம்பித்த டீ கடை இதுதான். இப்போது அவருக்கு 21 கிளைகள் உள்ளன, ஸ்வர்னபுரி மாநகராட்சியில். அரசமரத்தடி கடையிலிருந்த மூவரும் கைகூப்பி செல்வத்தை வரவேற்றனர்.
 
ஆறுமுகம் டீ மாஸ்டர் முதலாளியைப் பார்த்து, ‘‘முதலாளி, இன்னைக்கு நம்ம கடையைப் பத்தி பேட்டி எடுக்க ஓல்டு ஜெனரேசன் பத்திரிக்கை நிருபர் வர்றதா நம்ம மேனேஜர் சொன்னாரு’’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, நிருபர் தாஸ் டூவீலரில் வந்திறங்கினார்.    
 
‘‘ஆறுமுகம், ஒரு ஸ்பெஷல் எலாச்சி (ஏலக்காய்) டீ ஒன்னு நம்ம நிருபருக்கு போடு’’
 
செல்வம் டீ கடையின் ஸ்பெஷலே அதுதான். டீயைக் குடித்ததும், தாஸூக்கு செல்வம் டீ கடையின் ரகசியம் புரிந்துபோயிற்று. தாஸ், முதலாளி செல்வத்தைப் பார்த்து, ‘‘ஐயா, பேட்டியை ஆரம்பிக்கலாமா’’ என்று கேட்டார். ‘‘நான் ரெடி’’ என்றார் செல்வம்.தாஸ் தனது டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார். 
 
‘‘சார், நீங்க சின்னதா ஒரு கடைய ஆரம்பிச்சு 25 வருசத்துல 21 கிளைகளா ஆக்கிய வெற்றியின் ரகசியமென்ன? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’
 
‘‘பெரிசா ஒண்ணும் இல்ல. யார் யார் எந்தெந்த வேலைய எவ்வளவு நேரம் செய்யனுமோ, அவ்வளவு நேரம் செஞ்சா வெற்றி நிச்சயம். இது தவிர, எப்போதும் தரத்துக்கும் நாங்க முக்கியத்துவம் கொடுப்போம்’’
 
‘‘ஒன்னும் புரியலை சார்’’
 
‘‘விளக்கமா சொல்றேன். நாங்க எங்களது தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் வேலையாட்களை மூணு விதமாப் பிரிச்சுக்குவோம். 1. வழக்கமான வேலை, 2. மேம்படுத்தும் வேலை, 3. ஸ்டாரஜிக் வேலை என மூன்று வகைகளாக பிரிச்சுக்குசோம்.’’
 
‘‘இந்த மூணு வேலைகள் பற்றி கொஞ்சம் உதாரணத்தோட சொல்ல முடியுமா?’’
 
‘‘எங்க டீ கடை பையன் ரகு செய்யற பல வேலைகள் இதுல அடங்குவோம். டீ கிளாஸ் எடுத்து வைக்கிறது, கழுவுறது, காலைல கடையத் திறந்து வைக்கிறது, அதே சமயம் எங்க டீ மாஸ்டர் ஆறுமுகம் செய்யற, டீ போடுற வேலை, வடை போடுறது போன்றவை. அது போல எங்க மேனேஜர எடுத்துக்கிட்டா 21 கிளைகளுக்கும் தேவையான பொருட்களை அனுப்புறது எல்லாம் வழக்கமான வேலைகளில் அடங்கும்’’.
 
‘‘அத எப்படி நீங்க வழக்கமான வேலைகளை பிரிக்கிறீங்க?’’
 
‘‘பொதுவா வழக்கமான வேலைகளை தினசரி செய்ற வாடிக்கையான வேலைகள், அது மட்டுமில்ல அத செய்யறதுக்கு எதுவும் பெரிசா யோசிக்க தேவையில்லை. இப்போ மேனேஜரோட வழக்கமான வேலைய எடுத்துக்குவோம். எங்க சாப்ட்வேர் ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு பொருள் அனுப்பனும்னு ரிபோர்ட் கொடுக்கும். அதப் பார்த்து, அவர் எல்லா டீ கடை மாஸ்டருக்கும் அந்த பொருள் விவரங்கள எஸ்.எம்.எஸ். பண்ணுவாரு. டெலிவரி பண்ண போற டீமுக்கும் விவரங்கள சொல்லிடுவாரு’’
 
‘‘கரெக்ட், இதுல ஏதும் ரொம்ப யோசிச்சு செய்ய வேண்டியது ஒண்ணுமில்லதான். சாப்ட்வேர் ரிப்போர்ட் கொடுக்க போகுது, அத டீ மாஸ்டருக்கும், டெலிவரி டீமுக்கும் எஸ்.எம்.எஸ். பண்ண போறார்’’
 
‘‘வழக்கமான வேலைய பத்தி புரிஞ்சுதா, அடுத்த வகை வேலை மேம்படுத்துற வேலையை பத்தி பார்க்கலாம்’’
 
‘‘இதை இங்கிலீஸ்ல டெவலப்மென்ட் ரிலேட்டடுன்னு சொல்லலாமா?’’
 
‘‘ம்... அது சரியான ஆங்கில வார்த்தைதான். இத வேலைன்னு சொல்றதவிட யோசித்து முடிவு எடுக்கிறதுன்னு சொன்னா நல்லா இருக்கும். எங்க கடைகள்ல கோடை காலம் மற்றும் தண்ணீர் பஞ்சமா இருக்கிற காலத்துல டீய கஸ்டமர்களுக்கு கொடுக்க, கண்ணாடி டம்ளருக்கு பதிலா பேப்பர் கப்ஸ யூஸ் பண்ணுவோம். இந்த ஐடியாவ சொன்னது இதே ஆறுமுகம், ரகுவும்தான்.’’ 
 
‘‘இது மாதிரி யோசனைகள் வழக்கமான வேலைகளில் அடங்காது. ஆனா இந்த ஐடியாவால என்ன லாபம்?''
 
‘‘மேம்படுத்துற வேலைகள்னால அல்லது முடிவுகளால லாபம் கண்டிப்பா சிறிதளவாகவாது கூடும். அது மட்டுமில்ல, இத கொஞ்சம் யோசிச்சுதான் முடிவு பண்ணனும். உதாரணமா, மேல சொன்ன ஐடியாவயே எடுத்துப்போம். பேப்பர் கப்பா, டீ டம்ளரான்னு முடிவு எடுக்க எங்களுக்கு நிறைய விவரங்கள் தெரியனும். கோடை காலத்துல ஒரு குட தண்ணீரோட விலை கூடிடும் ஆக சராசரியா ஒரு டம்ளர் கழுவ எவ்வளவு தண்ணிர் ஆகும்?, அதோட விலை என்ன?, எவ்வளவு நேரம் அந்த வேலைய செய்ய ரகு எடுத்துக்கிறான். இது போல விவரங்கள பார்ப்போம். ஆக ஒரு டீய ஒரு கண்ணாடி டம்ளர்ல கொடுத்தா என்ன செலவு ஆகும், அதே சமயம் ஒரு பேப்பர் கப்ல கொடுத்தா என்ன செலவு ஆகும்னு பார்த்தபின்தான், டீய கண்ணாடி டம்ளர்ல கொடுக்கிறதா, பேப்பர் கப்ல கொடுக்கிறதான்னு முடிவு பண்ணுவோம். அது தவிர கஸ்டமருக்கு அதனால் ஏதும் பிரச்சனை இருக்கான்னும், டீயோட தரத்துக்கும் ஏதும் பிரச்சினை இருக்கான்னும் பார்த்துக்குவோம்’’.
 
‘‘ஒரு பேப்பர் கப்ல இவ்வளவு பிரச்னை இருக்கா...... அப்புறம் இந்த முடிவுகளால லாபம் கண்டிப்பா கூடுமா?’’
 
‘‘கண்டிப்பா கொஞ்சம் கூடும். ஆனா நான் சொல்லப் போற விஷயங்கள்ல ஏதோ ஒன்னு அல்லது ஒன்னுக்கு மேற்பட்டவை நடந்தாலுமே அது எங்களுக்கு போதும். மேம்படுத்துற வேலை முடிவுகளால, நிறுவனத்தோட வருமானம் கூடலாம். செலவு குறையலாம். வருமானமும் கூடாம செலவும் குறையாம, உற்பத்தி நேரம் மட்டும் குறையலாம். மேல சொன்ன மூணுமே நடக்காம கஸ்டமருக்கு கொடுக்கிற சர்வீஸ்ல தரம் கூடலாம்.’’
 
‘‘ஏதோ அமெரிக்காவில எம்.பி.எ படிச்சவர் மாதிரி பேசறீங்க சார்’’. செல்வம் தன்னையறியாமலேயே மனம் விட்டு சிரித்தார்.
 
‘‘நாங்க கஷ்ட நஷ்டங்கள சந்திச்சு அதுல ஏற்படற அனுபவங்கள வைச்சிதான் பிஸினஸ புரிஞ்சுக்கிறோம். அப்புறம் மூணாவது வகை ஸ்ட்ராட்டஜிக் வேலைகள். முதல் இரண்டு வகைல பணமுதலீடு ரொம்ப தேவைப்படாது. நாம எடுத்த முடிவுல தவறு ஏதும் இருந்தாலும், நிறுவன லாப நஷ்டத்தில ஏதும் ரொம்ப பாதிப்பிருக்காது. ஆனா ஸ்ட்ராட்டஜிக் முடிவுல தப்பு பண்ணா, அது நிறுவன லாபத்தையே பாதிக்கும்’’. நிருபரும் சிரித்துக்கொண்டே ‘‘உதாரணம் சார்’’ என்றார். 
 
‘‘முதல்ல இந்த அரச மரத்தடிக் கடை மட்டும்தான் இருந்தது. அப்புறம், இரண்டாவது கிளையை புதுசா கலெக்டர் ஆபிஸ் பக்கத்துல ஆரம்பிச்சோம். அந்த இடத்துல கிளை துவங்கலாமா, வேண்டாமான்னு எடுக்கிற முடிவு ஸ்ட்ராட்டஜிக் வேலை. அந்த கிளைல நாங்க முதலீடு பண்ண பணத்த இரண்டு வருசத்திலேயே எடுத்துவிட்டோம்’’.
 
‘‘சார் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இந்த வகை ஸ்ட்ராட்டஜிக் வேலைல ஏதும் தப்பான முடிவ எடுத்திருக்கிறீங்களா?’’
 
‘‘இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு. தொழில்னு வந்திட்டா, சரியான முடிவுகளும் இருக்கும், தப்பான முடிவுகளும் இருக்கும். ஆனா தப்பான முடிவுல இருந்து கத்துக்க வேண்டியதக் கத்துகிட்டு, அப்புறம் மறந்திடனும் அவ்வளவுதான். நீங்க நிற்கிற இந்த டீ கடைல, காலை மற்றும் இரவு டிபன் போடலாம்னு ப்ளான் பண்ணி, இட்லி சட்டி, கிரைண்டர், அடுப்பு, தோசை கல்லுன்னு குறைந்தது ரூ.1.5 லட்சம் முதலீடு பண்ணோம். ஆனா சரியா ஓடலை. அந்த முதலீடு வேஸ்டா போயிருச்சு.’’
 
‘‘நீங்களும் நிறைய நஷ்டங்களை சந்திச்சுத்தான் பெரிய நிறுவனமா ஆகி இருக்கீங்க. வேலை வகைகளை பற்றி புரிஞ்சுக்கிட்டேன். நீங்க வேலை ஆட்களை எப்படி மூணா பிரிக்கிறீங்க?’’
 
‘‘எங்க நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியுறவங்கள மூணு வகையா பிரிக்கிறோம். சப்போர்ட் லெவல், மிடில் மேனேஜ்மென்ட் மற்றும் டாப் மேனேஜ்மென்ட். சப்போர்ட் லெவல் ஊழியர் வழக்கமான வேலையை ஐந்து மணி நேரம் செய்யவேண்டும். ஒரு மணி நேரம் மேம்படுத்தும் வேலையை செய்ய வேண்டும்.’’
 
‘‘கலக்குறீங்க சார். டீக்கடை பையனுக்கும் மரியாதை கொடுத்து ஐடியா கேட்கிறீங்க. அவங்க லீவு போட்டா மாத்திவிட ஆள் போட்டிருக்கீங்க. கடைசியா ஒரு கேள்வி. புதுசா தொழில் தொடங்குபவர்களுக்;கு என்ன சொல்ல விரும்புறீங்க?’’
 
‘‘முதலாளிமார்கள் பொதுவா எல்லா வேலையையும் நம்மளே பார்த்தா வேலையாளுக்கு கொடுக்கிற சம்பளம் மிச்சம்னு பார்ப்பாங்க. நானே எல்லா வேலையையும் நேரடியா பார்த்தா, ஒரு கடைய மட்டும்தான் நடத்த முடியும். அதுல இருந்து அதிகபட்சம் 15 ஆயிரம்தான் லாபம் வரும். ஆனா நான் வேலைக்கு தேவையான ஆட்களை போட்டு, இரண்டு மேனேஜர்கள போட்டு பார்க்கிறதால தனி ஆளா 21 கடைய நிர்வகிக்க முடியுது. வேலைக்கு ஆள் போட்டதால ஒவ்வொரு கடைல இருந்தும் லாபம் ரூ.5000ர வரைதான் கிடைக்குது, அதே சமயம், மொத்தமா பார்க்கும்போது என்னால மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியுது. நான் உட்கார்ந்து டீ போட்டுகிட்டு இருந்தா ஒன்னும் ஆகாது. ஆக நாமளே எல்லா வேலையையும் ஆள் போடாம பார்க்கனும்னு நினைக்கக்கூடாது. அப்பதான் முன்னேற முடியும்.’’
தனக்கு ஒரு அருமையான கிடைத்தது என்கிற திருப்தியுடன் செல்வத்துக்கு நன்றி சொன்னார் நிருபர் தாஸ். ரகு, ஆறுமுகம் மற்றும் செல்வம் அனைவரும் டீக்கடை முன் நின்று போட்டோவை எடுத்த கையோடு நிருபர் விடைபெற்றார்.
 
(திங்கள்கிழமை அன்று மீண்டும் சந்திப்போம்)
 
இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close