Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாற்றம், முன்னேற்றம், விவசாயம்!

சி.மதன், துணைப் பேராசிரியர், எம்பிஏ துறை,
மெப்கோ ஸ்ல்ங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.
 
 அதிகாலையில் சேவல் கூவியது. தூக்கக் கலக்கத்தில் எழுந்த வேலம்மாள் தனது கணவனை எழுப்பினாள் உரத்த குரலில். 
 
மொட்டை மாடியில் படுத்திருந்த பூலப்பனுக்கு புரண்டுப் புரண்டு படுக்கும் அந்த ஐந்து நிமிடம் ஐந்து மணி நேரத்துக்குச் சமம். வியர்வை சிந்தத் தினமும் உழைக்கும் மனிதர்களுக்கு மட்டுமே அந்த அதிகாலை எக்ஸ்ட்ரா ஐந்து நிமிட தூக்கத்தின் மகிழ்ச்சி பற்றித் தெரியும். வேலம்மாள் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து விட்டு மாட்டுக்குக் கூளம் பிடுங்கி போட்டார். சாணம் கொண்டு முற்றம் தெளித்து அரிசி மாவு கோலம் போட்டு விறகு அடுப்பில் சுக்கு காப்பி தயார் செய்தார். 
 
‘‘எய்யா… காப்பித் தண்ணி போட்டாச்சு. கீழே இறங்கி வாங்க. விட்டா மதியம் வரை தூங்குவீங்க. வந்து வேலைய பாருங்க’’.
 
இறங்கி வந்து காப்பியக் குடிச்சதும் குளத்தாங் கரையோரம் போயிக் காலைக் கடன்களை முடித்துவிட்டு வீடு திரும்பினார், பூலப்பன். மாடுகளைத் தனது மாட்டு வண்டியில் பூட்டிக் கொண்டு தோட்டத்திலுள்ள குப்பைக்குழியில் போடுவதற்காக குப்பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.  கோவணத்தையும் தலைப்பாகையையும் மட்டுமே கட்டிக் கொண்டு காலைக் குளிரில் தோட்டத்தை நோக்கி காளைகளில் ஜல் ஜல் சத்தத்தோடு பயணிக்கலானார்.
 
குளங்களிலுள்ள மீன் இரையைத் தேடி, வெண்ணிற பட்டாளங்களாய் கொக்குகள் பறந்து வருவதும், மருத மரங்களில் தங்கியிருந்த குருவிகளின் இரைச்சலும், மாட்டின் சலங்கை ஒலியும் பூலப்பனது மனதினை லேசாக்கின. தோட்டத்துக்குச் சென்றதும் மின்சார மோட்டாரை இயக்கி தண்ணீரைப் பாத்திகளுக்குப் பாய்க்க ஆரம்பித்தார்.
 
காலை 8:30 மணி அளவில் வேலம்மாள், தூரத்து உறவினரின் மகன் சேகருடன், ஆட்டுக்குட்டிகளைக் கையில் பிடித்துக்கொண்டு, காலை மற்றும் மதியத்துக்குத் தேவையான சாப்பாட்டினை மண்பானையில் கொண்டு வந்தனர். வேலம்மாள் பாட்டி மோட்டாரை ஆப் செய்து விட்டு பூலப்பனை அழைத்தார் சாப்பிடுவதற்காக.
 
‘‘யோவ், தம்பி சேகர் உன்ன பாக்கனும்னு வந்திருக்கான். கஞ்சித் தண்ணிய சாப்பிட்டுவிட்டு தண்ணிய பாய்ச்சுக்கலாம்.... இப்போ கஞ்சிய குடிக்க வாங்க...அப்படியே கடிக்க ரெண்டு மொளகாயும் பறிச்சுட்டு வாங்க’’. 
 
காலையில் சுமார் இரண்டு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சியதால் பசி எடுக்க ஆரம்பித்திருந்தது பூலப்பனுக்கு.
‘‘ஏப்பா சேகர் என்ன இந்தப் பக்கம்? ஊர்ல எல்லாரும் சௌக்கியந்தானே?’’ சேகர் பூலப்பனது மருமகன்.
‘‘எல்லாரும் சுகந்தான் மாமா. என் படிப்புக்கு கவர்மெண்ட்ல வேலை கிடைச்சுருக்கு. அதான் உம்மகிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.’’
 
‘‘ரொம்ப சந்தோசம்யா. லஞ்சம், கிஞ்சமுன்னு ஏதும் வாங்காம வேலைய நல்ல முறையில பாரு. கவர்மெண்ட் வேலை கிடைக்கிறது கஷ்டம். உங்கய்யா பட்டினியா கிடந்து பணத்தை புரட்டி உன்ன படிக்க வச்சாரு. என்னைக்கும் அதை மறந்துடாதே’’.
 
‘‘உம்ம சொல்ல என்னைக்கு நான் தட்டியிருக்கேன்’’.
 
சாப்பாட்டை மண்தட்டில மூணு பேருக்கும் எடுத்து வைத்துவிட்டு இருவரையும் அழைத்தாள் வேலம்மாள். சேகர் சாப்பிட்டுக்கொண்டே பூலப்பனைப் பார்த்து, ‘‘நம்ம கதிரேசன் மாமா பொழியில  நீ தண்ணி பாய்ச்சுற மாதிரி இருந்தது’. 
 
உடனே பூலப்பனும் சிறிது பெருமிதத்துடம், ‘‘அது போன வருசம் வரை அந்தப் பொழி அவன்கிட்டேதான் இருந்துச்சு. போன வருஷம் மாமரம் நல்லா பூ பிடிச்சதால குத்தக விலை நல்லா போச்சு, அதுல கெடச்ச பணத்த வச்சும், உன் அத்தை நகைய பேங்கில அடகு வச்சு அந்தப் பொழிய வாங்கினேன். கதிரேசன் பயக எல்லாம் மெட்ராஸ்ல வேலை பார்க்கிறதால, அங்க அவன அழைச்சுட்டு போயிட்டானுக’’.
 
‘‘அப்படியா மாமா? ஆமா ரெண்டு வருசத்துக்கு இல்ல, மூணு வருசத்துக்கு ஒரு தடவை ஏன் இப்படி பொழியா வாங்கிப் போடுறே? உனக்குத்தான் வயசாயிக்கிட்டே போகுதுல்ல’’
 
இதைக் கேட்டதும் வேலம்மாள், ‘‘அப்படிக் கேளுய்யா! பொம்பளப் பிள்ளைங்களுக்கு நகை நட்டு எடுத்துப் போட்டாலும் பரவாயில்லை’’ என்று அவளது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொண்டாள்.
 
‘‘அதெல்லாம் ஏன்னு ஒனெக்கெல்லாம் புரியாது சேகர்.’’
 
‘‘அத்தை சொல்றதும் சரியாத்தான் தோணுது மாமா’’
 
‘‘அவ சொல்றதப் போய் கேட்டுக்கிட்டு, விவசாயம் செய்றவனுக்கு முன்னேற்றம் ரொம்ப ரொம்ப முக்கியம். மூணு விசயத்துக்காக... ஒன்னு, என்னைத் தற்காத்துக் கொள்ள... ரெண்டு, வாழ்றதுக்கு....  மூணாவது, வளர்றதுக்கு...’’
 
‘‘என்ன மாமா! காலையிலேயே பெரிய பெரிய தத்துவமா பேசுறீரு’’ என அதிசயமாக கேட்டார் சேகர். வேலம்மாளும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கணவரின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார். 
 
‘‘இப்ப காலையில நாம குடிக்கிற கஞ்சி நமக்கு முக்கியம் அது மாதிரியே விவசாயம் செய்யறவனுக்கோ அல்லது எந்த தொழில் செய்யிறவனுக்கும் முன்னேற்றம்ன்றது முக்கியம். கவர்மெண்ட்ல வேலை செய்யப்போற உனக்கும்கூட’’.
 
‘‘ஆமா, மாமா கஞ்சி குடிக்கிறது, எதிரி யாரும் சண்டைக்கு வரும்போது நம்மள காத்துக்க தேவையான சக்திய கொடுக்கும். அது மாதிரியே அன்றாட வேலைய செய்ய, உயிர் வாழ தேவையான சக்திய கொடுக்குது. அதுவுமில்லாமல் சின்ன கொழந்தையா இருந்த நாம பெரிய ஆளா வளரவும் உதவுது’’.
 
‘‘கப்புன்னு சொன்னத புரிஞ்சுக்கிட்டடா.....’’
 
‘‘அதெல்லாம் சரி, முன்னேற்றம் உன் விவசாயத்தில் என்ன செய்யப்போவுது, மாமா நம்ம குடிக்கிற கஞ்சி மாதிரி’’.
 
‘‘ஏலே, நீ என்னைய தண்ணி பாய்ச்ச விடமாட்டே போல...!’’
 
‘‘ஒன்னும் கவலப்படாத மாமா! பத்தரை மணிக்குத்தான் நான் திருநெவேலி போவனும்.’’
 
‘‘நான் சொன்ன மூணு காரணம் ஞாபகமிருக்கா? அத வச்சு சொல்றேன். முதல்ல தற்காத்துக்கொள்ள… நம்ம தோட்டத்த சுத்தி வேலிக்கருவ போட்டிருப்பேன். அதனால பயிர் செய்ற இடம் குறையும். ஆனாலும் ஆடு, மாடு பயிர வந்து உளப்பிடாம இருக்கதுக்கு போட்டிருக்கேன்’’.
 
‘‘அதுக்கும் நிலம் வாங்கி போடறதுக்கும் என்ன இருக்கு?’’
 
‘‘இருக்கு பயலே, நிலம் வாங்கிச் சேத்தாத்தான் நம்ம பயிரிடற இடப்பரப்போட, வேலிக்கருவை போட்ட இடப்பரப்ப ஒப்பிட்டுப் பாத்தா ஒன்னுமில்லாம போவும். சின்ன பிஞ்சையா இருந்து நாலு பக்கமும் கருவவேலி போட்டா பின்ன பயிரிட இடமே இல்லாம போயிரும். இப்ப என்னிடம் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கு. இப்ப வேலி போட்டதால பயிரிடுற இடத்துக்கொன்னும் பஞ்சமில்ல, இல்லையா?’
சரியாக மாமா பதில் சொல்லிட்டதாலும் பஸ்ஸ விட்டுட்டா மதியம் 2:30-க்குத்தான் அடுத்த பஸ் என்பதாலும் தனது சந்தேகத்தை விரைவாக சேகர் தீர்க்க ஆசைப்பட்டார்.
 
‘‘சரி மாமா, அடுத்து, உயிர் வாழ’’
 
‘‘என் பயக மூணு பேரும் படிச்சிட்டுருக்கானுக, அவங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பனும், நாங்க கஞ்சி குடிக்கனும் அதுக்காவ அஞ்சு ஏக்கர்ல கீரை, கத்தரி,வெண்டையின்னு குறுகிய காலப்பயிரா போட்டுருக்கேன். அத நம்ம காசி நாடார்ட வித்தா அன்னன்னிக்கே பணம் கிடைச்சுரும் அத வச்சு மாச செலவை செஞ்சிருவேன்.’’
 
‘‘ஆமா உங்க ரெண்டு பேரால மூணு ஏக்கரத்தான் பாக்க முடியும். அப்புறமும் நீ ஏன் இன்னும் இடம் வாங்குற? 3 ஏக்கர மட்டும் பாத்தா போதாதா?’’ 
 
‘‘இந்தப் பய பஸ்ஸை விடத்தான் போறான்போல, நான் எப்பயும் மூணு ஏக்கரத்தான் காய்கறிப் பயிரிட பயன்படுத்துவேன். ஆனா, அதுக்கு மேல வாங்கிப் போட்ட பொழியில புளியமரம், மாமரம், தேக்கு மரம்ன்னு வைப்பேன். அதுங்கல நான் ரொம்ப பராமரிக்கத் தேவையில்ல. அதே சமயம் வருசா வருசம் குத்தகைக்கு விடும்போது மொத்தமா பணம் கிடைக்கும். இந்த பணத்தை வச்சித்தான் இடம் கிடம் வாங்கிப் போடுவேன்’’.
 
‘‘மாமா, உன்ட்ட நிறைய விசயம் கத்துக்கணும் போல. 2:30 மணி பஸ்ஸுக்குப் போனாலும் தப்பில்ல.’’
‘‘நாந்தான் முதல்லயே சொன்னேனே. நீ பஸ்ஸை விட்டுருவேன்னு. இப்ப மூணாவது வளர முன்னேற்றம் அவசியம் என்பது பத்தி கேப்ப. எதுன்னாலும் அப்படியே இருந்தா அதுக்கு மரியாதை கிடையாது. நீ இப்ப கிளர்க்கா சேர்ற, ரிடையர் ஆகும்போதும் கிளர்க்காவே இருந்தா நல்லாவா இருக்கும்?’’
 
‘‘அது சரியா வராது.  கண்டிப்பா ப்ரமோசன் வாங்கனும்.’’
 
‘‘என் பயக நல்லாப் படிக்கிறாங்க. நல்ல நிலைமைக்கு வந்துருவாங்க. அதே சமயம் பொன்னுங்களையும் நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கணும். இந்த மரத்துல வர்ற பணத்த வச்சு ஒன்னு... இடம் வாங்குவேன். இல்லேன்னா... நகைநட்டு வாங்குவேன். அப்படி இடம் வாங்கினாத்தான் வருமானம் கூடும். மொத்த குடும்பமும் வளர முடியும். வருசா வருசம் புதுசா இடம் வாங்கலன்னா, போன வருசம் சம்பாதிச்சதுதான் இந்த வருசமும் கிடைக்கும் அது மட்டுமில்ல, வருமானத்துலயும் சரி குடும்பதுலயும் வளர்ச்சி இருக்காது’’.
 
‘‘மாமா நீங்க கில்லாடிதான்’’
 
‘‘நம்ம ஊர்ல நம்ம முன்னேறதுல ஒண்ணும் பயமில்ல. எல்லாம் நம்ம பயகதான். ஆனா வேற ஏதாவது நகரத்துல நல்ல தொழில் செய்தா நிறைய பிரச்னை வரும். சின்ன பிசினஸ் பண்றவங்கள பெரிய பிசினஸ் பண்றவங்க அமுக்க பார்ப்பாங்க, நம்ம சொத்தை அபகரிக்க பார்ப்பாங்க. அத சமாளிக்க பணபலம், ஆள் பலம், அரசியல் பலம் வேணும். அந்த பலங்களெல்லாம் வேணும்னா நம்ம வளர்ந்தாத்தான் முடியும்; ஒரே அளவுலேயே தொழில் செஞ்சா அது அமையாது’’.
 
‘‘பிஸினஸையும் பத்திகூட பேசுற மாமா’’
 
நமட்டு சிரிப்பை சிரித்துக்கொண்டே, ‘‘மாமாவ சும்மான்னு நெனைச்சியா? நம்மளவிட பெரிய ஆளுங்ககிட்ட இருந்து தப்பிக்க நம்ம எல்லா விதத்திலயும் பெருசாயிக்கிட்டே போய்த்தான் ஆகனும். நீயும் வேலை கிடைச்சிருச்சின்னு வேலைய மட்டும் பார்க்கக்கூடாது. கிளப்புகள்ல சேர்ந்து புது ஆட்கள தெரிஞ்சுக்கிடணும். அண்ணாமலை யுனிவர்சிட்டியில சேர்ந்து ஏதாவது படிச்சு அறிவ வளர்த்துக்கிடணும். அப்போதான் வாழ முடியும்.... வளரவும் முடியும்’’.
 
‘‘மாமா, நீ தோட்டத்துக்கு வந்துட்டதால அத்தைய மட்டும் வீட்டுல பாத்துட்டு போயிடலாமுன்னு நினைச்சேன். ஆனா தோட்டத்துல உம்ம வந்து பாத்ததுனால நிறைய கத்துக்கிட்டேன்’’. 
 
சாஸ்டங்கமா மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு கிளம்பினார், சேகர். பூலப்பனும் மோட்டாரை ஆன் செய்து தண்ணி பாய்ச்சச் சென்றார். சாயங்காலம் மணி அஞ்சானதும் வேலம்மாள் சாப்பிட்டு முடித்த மண்பானை சட்டிகளை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு கையில் ஆடுகளை இழுத்துக் கொண்டு சென்றார்.
 
பூலப்பனும் ஆடு மாடுகளுக்குத் தேவையான கூளங்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பும்முன் இரவு அரிசி சாப்பாடு சூடாக நெத்திலிக் கருவாட்டுக் குழம்புடன் தயாராகி இருந்தது. மண்பானை சமையலின் ருசி அதை சாப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும்.
 
வார்த்தைகளால் திருவள்ளுவர்கூட விளக்க முடியாது. சாப்பாட்டை வெண்கலக் கும்பாவில் வைத்து விளாசிவிட்டு பூலப்பன் மந்தையை நோக்கிச் சென்றார்.
 
மந்தையில் நண்பர்கள் புடைசூழ அன்று பாட்டுக் கச்சேரியில் தனது ஹார்மோனியத்தை வைத்து பூலப்பன் கலக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுக்கள் தங்களது திறமைகளை மந்தையில் வெளிப்படுத்துவர். அதை மற்றவர்கள் கண்டுகளிப்பர். ஒருபுறத்தில் இவர்கள் வியர்வை சிந்த உழைத்தாலும் மனதில் கவலை ஏதுமில்லாமல், தொலைக்காட்சியைப் பார்த்து சோம்பேறியாகி, உடலைக் கொழுப்படையச் செய்து, கண்ணைக் கெடுக்காமல் சந்தோசமாக கிராமங்களில் எந்தவித எரிச்சலுமில்லாமல் வாழ்ந்திருக்கின்றனர். மாசுபடாத காற்று, நீர், உணவு இவற்றை அனுபவித்து எண்பது,தொண்ணூறு வயதுகளிலும் கண்ணாடி போடாது, சர்க்கரை வியாதி, கொழுப்பு மற்றும் ரத்தழுத்த நோய் இல்லாது வாழ்ந்திருக்கின்றனர்.  
 இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க: 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close