Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீட்டின் முதல் விதி!

சி.மதன், துணைப் பேராசிரியர், எம்பிஏ துறை,
மெப்கோ ஸ்ல்ங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.
 
 
அலங்கார நுழைவு ஆர்ச்சிற்கு, வாழை மரங்கள் வாழைக் குலையுடன் அழகு சேர்த்தன. சென்னை அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்டில் உள்ள பர்மா பிளாஸ்டிக் நிறுவனத்தின் சிறிய உதிரிப்பாகங்கள் இல்லாத வெளிநாட்டு மற்றும் இந்திய நான்கு சக்கர வாகனங்களைப் பார்க்கவே முடியாது. பர்மாவிலிருந்து அகதியாக வந்த முகம்மது, தனது சொந்த முயற்சியால் 35 வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது இந்நிறுவனம். இன்று முகம்மதிற்கு அறுபது வயதாகிவிட்டதால், நிறுவனப் பொறுப்பை அவரது மகன் கபீருக்கு வழங்குவதற்கான விழா.
 
இந்தியாவின் டெட்ராய்டு என்றழைக்கப்படும் சென்னையின் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவன ஆபீஸர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ஊழியர்களின் குழந்தைகள் புது உடைகளோடு அங்குமிங்கும் ஆரவாரத்தோடே சுற்றித் திரிந்தது என்னவோ கல்யாணம் நடக்கும் வீட்டையே நினைவுபடுத்தியது. அவ்விழாவில் ரவி மற்றும் அபாகஸ் நிறுவன அதிகாரி கிருஷ்ணனும் கலந்துகொண்டார்கள். அவர்களது நிறுவனம் குழந்தைகளுக்கு அபாகஸ் கற்றுக்கொடுக்கும் நிறுவனம். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்கள் நிறுவனத்திற்கு தேவையான அபாகஸை, பர்மா பிளாஸ்டிக்கே வடிவமைத்து கொடுத்து வருகிறது.
 
விழா, அறுசுவை உணவோடு அரங்கேறியது. கிருஸ்ணனை முகம்மது பாய், கபீருக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்திருந்தாலும் அதிகம் பேசியதில்லை, புன்சிரிப்பைத் தவிர. 
‘கபீர்,  நம்ம கிருஷ்ணன் ரொம்பவும் துடிப்பான இளைஞர். அவரிடம் நிறைய கத்துக்கலாம். முக்கியமாக பர்மா பிளாஸ்டிக் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்’ என்றார் முகம்மது.  
 
கிருஸ்ணனும் முகம்மதுவைப் பார்த்து, ‘‘ஐயா நீங்க அதிகமா புகழ்ற மாதிரி இருக்குது. ஆனா உங்களோட ஆசீர்வாதம் எனக்கு என்னைக்கும் இருக்கும்னு எனக்குத் தெரியும்’’.
 
‘‘கிருஸ்ணா போக போக கபீரே உன்னை பத்தி புரிஞ்சிக்கிடுவான். நான் இப்ப புகழ்றதெல்லாம் உண்மையின்னு’’ மூணு பேருமே சிரித்துக்கொண்டே விடை பெற்றனர்.
 
பிப்ரவரி மாதம் கபீரிடமிருந்து கிருஷ்ணனுக்கு போன் வந்தது.
 
‘‘சார் நான் கபீர், பர்மா பிளாஸ்டிக்கில இருந்து பேசறேன்’’.
 
‘‘சொல்லுங்க கபீர், எப்படி இருக்கீங்க,பிஸினஸ் வாழ்க்கை எப்படி இருக்கு?’’
 
‘‘சார் நல்லா த்ரில்லிங்காவே போகுது. ஒரு ஹெல்ப். எனக்கு அவசரமா ஒரு ரெண்டு லட்சம் வேணும், ஏப்ரல் மாச அபாகஸ் ஆர்டருக்கு அட்வான்ஸா நெனச்சு குடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும்’’.
 
‘‘எப்பவும் அப்பாவுக்கு மார்ச் மாசம் அட்வான்ஸ் குடுக்கறதுதான் வழக்கம். எங்க பாஸ்கிட்டே கேட்டு இன்னைக்குள்ள உங்களுக்கு சொல்லிடுறேன்’’
 
‘‘சரி சார். ரெம்ப நல்லது. நல்லா பதிலா சொல்லுங்க’’. கிருஷ்ணன் அவரது பாஸ் ரவியைப் பார்த்து இந்த விஷயத்தைப் பத்திக் கூறினார்.
 
‘‘கிருஷணனும் போன வருசம் 6000 அபாகஸ் 40ரூ மேனிக்கு ஆர்டர் பண்ணோம். இந்த வருசம் ராமெட்டீரியல் விலை ரெண்டு மடங்கு ஆயிற்று. முன்னாடி இந்த ராமெட்டீரியல அரசு நிறுவனம் தயாரிச்சது. இப்போ அத தனியார் நிறுவனம் வாங்கினதால இன்னும் விலை கூடுவதற்கான சாத்தியம் அதிகம்’’.
 
‘‘பாஸ், இப்போ 50ரூவாயின்னு விலைய பிக்ஸ் பண்ண வேண்டியிருக்குமோ?’’
 
‘‘அத ஏன் குத்து மதிப்பா சொல்றே?’ மொத்தம் ஒரு அபாகஸுக்கு 130 கி ABS பிளாஸ்டிக் ஆகும். கால்குலேட்டர குடு இப்பவே பாத்திடலாம்’’
 
‘‘எவ்வளவு வருது பாஸ்?’’
 
‘‘போன வருசத்தவிட இரண்டரை மடங்கு விலை ஏறினாலும் 49ரூ வரைதான் ஆகும். நீ யூகிச்ச மாதிரியே 50ரூ வச்சுக்க. ஆனா இந்த வருசம் 8000 அபாகஸ் தேவைப்படும். மக்கள் மத்தியில அபாகஸ் பயிற்சி பிரபலமாயிட்டதால மொத்தத்துல இந்தியா முழுவதும் நம்ம கம்பெனிக்கு 8000 குழந்தைகள் பயிற்சி எடுக்க வருவாங்கன்னு எதிர்பாக்கிறேன். அப்போ 50% அட்வான்ஸா 2 லட்சம் குடுக்கலாம். இன்னிக்கு நீ டூட்டி முடிஞ்சி வீட்டுக்கு போகும்போது செக்கை கொண்டு குடுத்திடு. நான் கையெழுத்து போட்டு வச்சுடுறேன். பர்சேஸ் ஆர்டர் 8000 அபாகஸ்கு ரெடி பண்ணிக்கோ’’
 
செக் ரெடி ஆயிட்டாலும் கிருஷ்ணனுக்கு, இந்தப் பணம் கபீருக்கு எதுக்காக இப்போ தேவைப்படுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தார். அன்றிரவு 8.00 மணியளவில் கபீர் வீட்டிற்கு வருவது பற்றி கபீருக்குத் தகவல் கொடுத்தார்.
 
8.00 மணியளவில் சரியாக கிருஷ்ணன் செக்கோடு சென்றார்.
 
‘‘வணக்கம் கிருஷ்ணன் சார்!’’
 
‘‘எங்க பாஸ் 2 லட்சம் அட்வான்ஸா குடுத்திட்டார். இந்த வருசம் 8000 அபாகஸ் தேவைப்படும் ஆக நீங்க மார்ச் கடைசி வாரத்திலிருந்து அபாகஸ்காக மிசின ஓட்ட ஆரம்பிச்சாத்தான் மே மாதம் ரெடி பண்ண முடியும்’’
 
‘‘கிருஷ்ணன் சார் அதெல்லாம் பத்தி நீங்க ஏதும் வருத்தப்பட வேண்டாம், கரெக்டா டெலிவெரி பண்ணிடலாம். அடுத்த வாரத்துக்குள்ள டெலிவரி செட்டியூல் அனுப்பிச்சு வச்சுடுறேன்’’
 
‘‘அப்படியே பண்ணிடுங்க கபீர். ஆமா ஏன் அவசரமா 2 லட்சம் கேட்கறீங்க?’’
‘‘அது ஒரு ஃபாரின் மோல்டிங் மிசின் ஸ்குரு பீடிங்கோட ரூ.3 லட்சத்துக்கு கிடைக்குது புதுசா வாங்கி ஆறு மாசம்கூட ஓடல. நம்ம மார்க்கட்டுல இதே மிசின வாங்கினா ரூ.9 லட்சத்துக்கு மேல ஆகும். அதான் வாங்கிப் போடலாம்னு தோணுச்சுது’’
 
‘‘நீங்க தயாரிக்கிறதெல்லாம் சின்னச் சின்ன உதிரி பாகங்கள்தானே, உங்களுக்கு எதுக்கு அவ்வளவு பெரிய ஸ்குரு பீடிங்கோட மோல்டிங் மிசின்’’
 
‘‘சார், அதுல பினிசிங் நல்லா வரும்.அது தவிர பெரிய ஜாப்பா பண்ணலாம்’’
 
‘‘அந்த மாதிரி பெரிய ஜாப் ஆர்டர் உங்ககிட்ட இப்போ இருக்கா?’’
 
‘‘அந்த மிசினுக்கு ஓட்டற மாதிரி ஆர்டர் இப்போ ஏதுமில்ல, இனிமேதான் பிடிக்கணும்’’
 
‘‘எனக்கென்னவோ ஆர்டர் கொஞ்சம் கைல இருந்ததுன்னா தாராளமா அந்த மிசின்ல முதலீடு செய்யலாம். அது என்னோட அபிப்பிராயம், மற்றபடி அது உங்க இஷ்டம். செக்க வாங்கிக்கோங்க’’
 
கிருஷ்ணனுக்கென்னவோ நடக்கிற விஷயங்கள் எல்லாம் சரியாப் படவில்லை. முகம்மது பாய்க்கு நடக்கிற விஷயங்கள் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. அவர் பாம்பேயில இருக்கிற பெரிய மகன் வீட்டுக்குச் சென்றிருந்தார். மார்ச் கடைசி வாரம் கிருஷ்ணன் அம்பத்தூருக்கு ஒரு வேலையாப் போனப்ப பர்மா ப்ளாஸ்டிக் அபாகஸ் வேலைய ஆரம்பிச்சுட்டாங்களான்னு பார்க்கப் போனார். அங்க போனால் அபாகஸ் செய்யறதுக்காக எந்த ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை. மூணு லட்சம் மிஷின் வெயில்ல காய்ந்துகொண்டு யூனிட்டுக்கு வெளியே கிடந்தது. 
 
‘‘கபீர், என்ன அபாகஸ் வேலைய ஆரம்பிச்ச மாதிரியே இல்ல, வெளியில இருக்கிறது நீங்க வாங்கின புது மிசினா?’’
 
‘‘கொஞ்சம் பணம் வரவேண்டியது மாட்டிக்கிடுச்சு. அதான் புது மிசின லயன் அப் பண்ண முடியல உங்க அபாகஸ ஓட்ட ABS பிளாஸ்டிக் ரா மெட்டிரியலும் வாங்க முடியல’’.
 
கிருஷ்ணன் பயந்தது போலவே எல்லாம் நடந்துவிட்டது. கேட்ட உடனே அவரது பாஸ் பணத்த குடுத்திட்டார், ஆனா 8000 அபாகஸுக்கான வேலை ஆரம்பிக்கப்படலனா என்ன சொல்வாரோ என்று அவருக்கு பயம்.
 
‘‘என்ன கபீர்? இப்படிச் சொல்றீங்க, சம்மர் சீசன்லதான் குழந்தைகளுக்கு விடுமுறை... அப்போதான் எங்க பிஸினஸே நடக்கும். அபாகஸ் இல்லாம எங்கள என்ன பண்ண சொல்றீங்க? நீங்க பணம் கேட்டதும் எங்க பாஸ் உடனே குடுத்தார், இப்போ அவருக்கு நான் என்ன பதில் சொல்றது?’’
 
‘‘கொஞ்சம் தப்பா ஆயிருச்சு. இன்னும் ஒரே ஒரு லட்சத்த அட்வான்ஸா குடுங்க நான் ராமெட்டீரியல வாங்கி ஓட்ட ஆரம்பிச்சிடுறேன்’’
 
‘‘நீங்க பண்றதெல்லாம் அப்பாவுக்குத் தெரியுமா?’’
 
‘‘தெரியாது.......’’
 
‘‘நான் அவருகிட்ட போன்ல பேசிக்கிறேன்’’
 
கபீர் தான் தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்ததால் அமைதியாக இருந்தார். கபீர் தனது நிறுவனத்தின் வருமானத்தை ஒரு வருடத்திற்குள் ரெண்டு மடங்கு ஆக்க வேண்டுமென நினைத்தார். அகலக் கால் வைத்து மாட்டிக் கொண்டார். அடுத்த நாளே நிலைமையை பாஸிடம் சொல்லிவிட்டு முகம்மது பாயிடம் போன் பண்ணினார், கிருஷ்ணன். 
 
‘‘கிருஸ்ணன், கபீர் எங்கிட்ட ஒன்னுமே சொல்லலியே! நாளைக்கு எனக்கு ட்ரெயின் டிக்கெட் முன்னாடியே புக் பண்ணிட்டேன். நீ கோவிச்சுக்காத, வந்து எல்லாத்தையும் நான் சரி பண்ணிடறேன்.’’
‘‘பாய், உங்களுக்குத் தெரியும் அபாகஸ் இல்லாம எங்க பிஸினஸே இல்ல. வெளியே மார்க்கட்டுல அபாகஸ் வாங்குனா கண்டிப்பா எங்களுக்குகட்டுபடியாகாது’’
 
மூன்று நாட்கள் கழித்து முகமது பாய், கிருஷ்ணனுக்கு போன் செய்து விட்டு, கிருஷ்ணனைப் பார்க்க பூங்காவுக்கு வந்தார். மனசு விட்டுப் பேசனனும்னா இருவரும் மாநகரப் பூங்காவுக்கு வருவார்கள்.  இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்களுக்கு இடையே இருந்த நட்பு அந்த வித்தியாசத்தைக் குறைத்தே வைத்திருந்தது.
 
வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கவலையுடன் இருந்தார் முகம்மது. ‘‘என்ன பிரச்னை சார்?’’ என்று கேட்டார் கிருஷ்ணன்.
 
‘‘கபீர் ஃபாரின் மோல்டிங்மிசின ஆசைப்பட்டு வாங்கி மாட்டிக்கிட்டானே!’’
 
‘‘பாய், நான் குடுத்த பணம் செலவு செய்யிறதுக்கு, ஆனா கபீர் முதலீடு செஞ்சதுதான் பிரச்னை. பாய், நான் கொடுத்த 2 லட்சம் அட்வான்ஸ் 8000 அபாகஸக்குத் தேவையான ABS பிளாஸ்டிக் வாங்க, அதைத் தயாரிக்கிற ஆள் கூலிக்காக, மிஷினுக்காகும் கரண்ட் பில்ல கட்ட, மிஷின் தேய்மானம் மற்றும் பராமரிப்புக் கூலி செலவுக்காக இது தவிர உங்க லாபத்துக்காக. 
 
ஆனா உங்க பையன் லாபத்தையும் தாண்டி 8000 அபாகஸ் செய்யறதுக்கான செலவுக்குள்ள பணத்தையும் சேர்த்து ஃபாரின் மோல்டிங் மிசின்ல முதலீடு பண்ணிட்டார். அதுல முதலீடு பண்ண பணத்தை எடுக்கணும்னா, அந்த மிசினோட முழு கெப்பாசிட்டிய ஓட்டி பொருள உற்பத்தி பண்ணி வித்து கெடைக்கிற லாபத்தில இருந்துதான் எடுக்க முடியும். ஆனா அப்படியே முழு கெப்பாசிட்டிய ஓட்டினாலும், முதலீடு செஞ்ச 3 லட்சத்த எடுக்க குறைஞ்சது ஒரு வருசமாவது ஆகும்’’ என்றார் கிருஷ்ணன்.
 
அந்தக் கவலைதான் முகம்மதுக்கும். ‘‘இப்ப என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுச் சொல்லு’’ என்றார்.
 
‘‘ஃபாரின் மோல்டிங் மிசின வித்திடலாம்’’
 
‘‘என்னப்பா சொல்ற?’’
 
‘‘நம்ம 8000 அபாகஸ ஓட்டுறதுக்கு உங்க ஃப்ரண்ட் ஒருத்தர சொன்னீங்கள்ல, அவங்களுக்கு இந்த ஃபாரின் மிசின் வேணுமான்னு கேளுங்க’’ என்று சொன்னவுடன், ‘‘சூப்பர் ஐடியா’’ என்றபடி நண்பருக்கு போன் செய்தார் முகம்மது. அவருக்கும் இந்த மிஷின் தேவைப்பட்டது. அதற்கு தேவையான ஆர்டரும் அவர் கையில் இருந்தது.
 
‘‘இதுக்குத்தான் கிருஷ்ணன் வேணும், பத்து நிமிஷத்துல பிரச்னை தீர்ந்தது. ஆனா ஒன்னு, கபீர் தொழில நல்லாக் கத்துக்கிட்டு இருப்பான் இந்த பிரச்னைனால’’.
 
‘‘ஆமா பாய். நம்ம அட்வான்ஸாகவோ, கடனாகவோ வாங்குற பணத்த, எதுக்காக வாங்குறோமோ அதுக்கே செலவு செய்யணும், இல்லேன்னா கஷ்டமாயிடும்’’.
 
‘‘அப்போ என் பையன் பாங்ல லோன் போட்டு ரெண்டு லட்சத்த வாங்கி, அந்த மிசின வாங்கியிருந்தா கொஞ்சம் செட்டாயிருக்கும், பணம் இப்படி லாக்காயிருக்காது.’’
 
‘‘அப்படி பாங்க் கொடுத்த ரெண்டு லட்சத்த கொஞ்சம் கொஞ்சமா 36 தவணையிலதான் திரும்ப கொடுக்க வேண்டியிருக்கும். ஆனா நான் குடுத்தது 8000 அபாகஸ்க்கான அட்வான்ஸ். அதுக்குரிய பொருளை தயாரிச்சு ஏப்ரல் மாதம் அதாவது ரெண்டு மாசத்துக்குள்ள குடுத்தாகணும்’’.
 
‘‘ஆமா, உன் அட்வான்ஸ ரா-மெட்டீரியல் வாங்கி அபாகஸ் தயார் செய்யவே சரியாயிரும். அத மிசின்ல போயி முதலா போட்டா எப்படி. உனக்கு ரெண்டு மாசத்துக்குள்ள பொருளைக் குடுக்க முடியாது.’’
 
‘‘இப்போ நம்ம எடுத்த முடிவு சரியானதுதான், பாய்! பாஸ்ட்ட பேசி ஒரு லட்சத்த அட்வான்ஸா குடுக்கிறேன். நீங்க ABS பிளாஸ்டிக்க வாங்கி வேலைய ஆரம்பிங்க. உங்க நண்பருக்கு ஆர்டர் இருக்கிறதால உங்க ஃபாரின் மிஷினை வாங்கச் சொல்லி பிரச்சினைய முடிங்க.’’
 
‘‘நீ இருக்கும்போது நான் ஏனப்பா கவலப்படப் போறேன்?’’
 
இருவருக்கும் அவங்கவங்க பிரச்னை தீர்ந்தது பற்றி உள்ளூர சந்தோசம்தான்.
 
‘அதெல்லாம் சரிதான். சின்ன பையன் கிட்ட நிறுவனத்தை குடுத்துட்டு, பெரிய பையன்ட்ட ஜாலியா போய் தங்கிட்டா எப்படி? சின்னப் பையன் கூடவே இருந்து தொழில கத்துக் கொடுத்துட்டு 65 வயசுல ரிடையர் ஆகிக்கோங்க’’ என்றார் கிருஷ்ணன்.
 
முகமதுவும் கிருஸ்ணனும் பார்க்கில் இருந்து விடைபெற்று சென்றனர். அந்த புது மிசின முகம்மதுவின் நண்பர் பேங்க் கடன் மூலம் வாங்கிக் கொண்டார், 15 நாளைக்குள்ளே. ஆக பாய்க்கு பணப் பிரச்சினை எளிதாகத் தீர்ந்தது. அந்த வருடம் ரவி அபாகஸ் நிறுவனத்துக்கு நல்ல பிஸினஸ் ஆனதால் 10,000 அபாகஸ் வரை விற்பனை ஆனது. வித்த ஃபாரின் மிஷின் போலவே கபீர் இரண்டு மிசினை, தேவையான ஆர்டரைக் கையில் வைத்து கொண்டு மூணு வருட பேங்க் லோன் மூலம் வாங்கினார்.
 
இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க:

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close