Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யாரும் எதிரி இல்லை!

 

சி.மதன், துணைப் பேராசிரியர், எம்பிஏ துறை,

மெப்கோ ஸ்ல்ங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.

 

வி.வி. நகர் உருவாகி இருபது, இருபத்தைந்து வருடங்கள் ஆகியிருக்கும். ஆனால், முதல் தெருவில் மருது தாத்தா வீட்டைச் சுற்றி மட்டுமே மரங்கள் இருக்கும். மற்றவர்கள் கொஞ்ச நாள் வளர்ப்பார்கள். ஆனால், காம்பவுண்டு சுவரினை மர வேர்கள் லேசாக பதம் பார்த்ததும் மரத்தினை வெட்டிவிடுவார்கள். மருது தாத்தா வீட்டிலும் காம்பவுண்டு சுவர் பாதிக்கப்பட்டது. ஆனால், இடித்துவிட்டு இரண்டாவது முறையாகக் கட்டிவிட்டார் காம்பவுண்டை, மரங்களை வெட்டாமலே.

 
தாத்தா மாடி வீட்டிலும், கீழ் வீட்டில் வாடகைக்கு நாதனும் வசித்து வந்தார்கள். ஞாயிறு அன்று சாயங்காலம் நாதனும், தாத்தாவும் வீட்டைச் சுற்றி மண் வெட்டியை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
 
‘‘நாதா, உன் பையன் வேகமா சைக்கிள்ல வர்ற மாதிரி இருக்குது’’.
 
‘‘அவன்தான்  வர்றான்…  தாத்தா’’
 
‘‘பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான், மூணு டியூசன் போறான், ஒரு மொபெட்ட வாங்கி கொடுக்க கூடாதா?’’
 
‘‘தாத்தா! என் பையன் சோம்பேறித்தனத்தை சொகுசு வாழ்க்கையின்னு நெனச்சுடக் கூடாதுன்னுதான் சைக்கிள்ல அனுப்புறேன்’’
 
நாதன் மகன் ராகவ் வீட்டருகில் வந்ததும்தான் தெரிந்தது அவன் காதிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த தாத்தா பதட்டத்துடன்,
‘‘எலே, ராகவ்  என்னாச்சு?’’ என்று கேட்டார்.
 
‘‘தாத்தா, நம்ம மூடு பாலத்துக்குக் கீழே நான் சைக்கிள்ல வரும்போது எதிரில பைக்ல வந்த பையன் கை என் சைக்கிள் ஹேண்டில் பார்ல இடிச்சிருச்சு. அவனுக மேலதான் தப்பு ஆனா திரும்பி வந்து என்னை அடிச்சுட்டாங்க’’
 
‘‘என்ன அடிச்சுட்டாங்களா?’’ உடனே பக்கத்துல நின்ன அவர் பைக்கை ஸ்டார்ட் செய்தார் தாத்தா.
 
‘‘ராகவ், பைக்கில ஏறுல. எங்க அதுக்குள்ள போயிடப் போறானுங்க அவனுங்கள ஒரு கை பாத்துருவோம்’’.
ராகவும் ரத்தம் கொட்டுவதைப் பொருட்படுத்தாமல் வேகமாக ஏறினான். ஆனால் அதுக்குள்ளாக நாதன் ஒடி வந்து பைக் சாவியை உருவினார்.
 
‘‘தாத்தா ஏன் கோபப்படுறீங்க? துஷ்டனைக் கண்டா தூர விலகுன்னு சொல்லுவாங்க, அந்த துஷ்டனுங்களப் பிடிச்சு, அடிச்சு என்ன ஆகப் போகுது? நம்ம பையன் அடி வாங்கினது என்னவோ அடி வாங்கினதுதான். மொதல்ல நம்ம ராகவ டாக்டருகிட்ட கூட்டிக்கிட்டு போய் முதலுதவி பண்ணுவோம்’’. 
 
தாத்தாவின் கோபம் குறைந்து ராகவுக்கு முதலுதவி செய்தனர். திரும்ப வந்து நாதனும் தாத்தாவும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
 
டியூசன் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, ராகவ் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கும்போதும் அவனது கோபம் அடங்கவில்லை. பக்கத்தில் படுத்திருந்த அப்பாவை வம்புக்கு இழுத்தான்.
 
‘‘அப்பா! என் மேல தப்பே இல்ல, ஆனா அவங்க என்ன அடிச்சுட்டாங்க. தாத்தா அத தட்டிக் கேட்க கௌம்பினதுக்கப்புறம்கூட நீங்க எங்கள ஏன் விடல?’’
 
நாதன் சிரித்துக்கொண்டே, ‘‘இன்னும் அதையே நீ நெனச்சுக்கிட்டு இருக்கிறயா? நான் எப்பயோ அத மறந்துட்டேன். நாம எப்பவுமே, நமக்கு மேல உள்ளவங்களா இருந்தாலும் சரி, கீழ உள்ளவங்களா இருந்தாலும் சரி, யாரிடமும் குரோதத்தை வளத்துக்கிடக் கூடாது'.’
 
அதை கேட்டதும் ராகவ் கோபமாக, ‘‘அதுக்காக தப்பே பண்ணாதவங்கள அடிப்பாங்க, அதப் பாத்துக்கிட்டு சும்மா இருக்கச் சொல்றீங்களா?’’
 
‘‘நீ அடிச்சவங்கள மன்னிச்சு விட்டிருந்தா...... அந்த நிகழ்ச்சி நடந்து 5 மணி நேரமா அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு.... நீ உன்னோட மனசு, உடல வருத்தியிருக்கமாட்டே. உன்னோட கோபத்தால இன்னிக்கு டியூசன் கிளாஸகூட ஒழுங்காக் கவனிச்சிருக்கமாட்டே, போய் அவங்கள அடிச்சா மட்டும் உன்னோட வலி குறைஞ்சுடப் போகுதா?, அப்படியே நீங்க அடிச்சாலும் அவங்களும் திரும்பி வந்து உங்கள அடிப்பாங்க, பிரச்சினை பெரிசா வளர்ந்துகிட்டேதான் போகும், வன்முறையால எந்த பிரச்னைக்கும் தீர்வு ஏற்படாது’’.
சிறிது நேரம் ராகவும் அப்பா சொன்னதைப் பத்தி யோசித்தான். அவன் இன்று டியூசன் வகுப்பை சரியாகக் கவனிக்கவில்லை. மன்னித்திருந்தால் பிரச்னை அப்பொழுதே முடிந்திருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப்  புரிந்தது.
 
‘‘என்னடா யோசிக்கிற, கோபப்படுறது கோழைத்தனத்தோட வெளிப்பாடு, இயலாத்தனத்தோட வெளிப்பாடு. மகாத்மா காந்தியப் பார்த்து துப்பாக்கி வச்சிருந்தாலும் பிரிட்டிஷ் காரங்க பயப்பட்டதே அவரது கோபமற்ற அஹிம்சையப் பார்த்துதான். இயலாதவன் கோபப்பட்டு கல்லெடுத்து துப்பாக்கிக்காரன் மேல எறிஞ்சிருப்பான் பதிலுக்கு அவனும் கோபப்பட்டு சுட்டுக் கொன்னுருப்பான்.’’
 
‘‘எனக்கு கொஞ்சம் கொஞ்சமா கோபப்படுறது வேஸ்டுன்னு புரியுதுப்பா’’
 
‘‘மனுசாள் மனுசாள தண்டிக்கிறதுக்கு உரிமையே கிடையாது, எல்லாத்தையும் பகவான் பாத்துக்குவார்’’
எல்லாம் ராகவுக்குப் புரிஞ்சாலும், ‘‘சரி, உன் கம்பெனியில வேலை பார்க்கிறவங்க தப்புப் பண்ணா நீ என்ன பண்ணுவ?’’
 
‘‘மூன்று தடவை திருந்த சந்தர்ப்பம் கொடுப்பேன். அதயும் தாண்டினா மூன்று மாச சம்பளத்தை கொடுத்து அனுப்பிவிடுவேன் சந்தோசமா, பிரிவு உபச்சார விழாவோடு’’.
 
‘‘என்னது? தப்ப மூணு தடவை பண்ணுறவனுக்கு எதுக்கு மூணு மாச சம்பளமெல்லாம்’’
 
‘‘அது நம்ம கம்பெனிய நம்பி இருக்கிற அவனது குடும்பத்துக்காக. அந்த குடும்பமே நம்ம இப்படி மூணு மாச சம்பளத்தை கொடுக்கிறதப் பார்த்து, தப்பு செய்த அந்த ஊழியரை திருத்திடுவாங்க. அப்படி இல்லேன்னா அந்த குடும்பமும் சேர்ந்து நம்ம கம்பெனிய அனாவசியமா திட்டித் தீர்த்திடுவாங்க’’.
 
‘‘பயங்கரமான ஆளுப்பா! சரி, ஒரு ஊழியன் தானாகவே உங்க கம்பெனிய விட்டு போகனும்ன்னு நினைச்சா?’’
‘‘நமக்கு பிடிக்கலேன்னா ஒரு ஊழியர சந்தோசமா அனுப்புற மாதிரி, நம்ம கம்பெனிய ஒரு ஊழியருக்கு பிடிக்கலேன்னாலும் சந்தோசமா அனுப்பிவிடுவேன்’’. 
 
‘‘அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டியா?’’
 
‘‘ஒரு ஊழியருக்கு வேற ஒரு நல்ல வேலை கிடைச்சிருந்தா, இல்ல அவனுக்கு நம்ம கம்பெனியில வேலை செய்ய பிரியப்படலன்னாதான் வேலைய விட்டுப் போக ஆசைப்படுவான். அவன் நல்லா இருந்துட்டு போகட்டுமே, அவன் நம்ம கம்பெனியோட என்ன கான்ட்ரேக்ட் போட்டிருந்தாலும் பரவாயில்ல, அவன தொந்தரவு பண்ணாம போக விட்டிடுவோம்’’.
 
‘‘அவன் பண்ற வேலைக்கு வேற ஆள் எப்படிக் கெடைக்கும்?’’
 
‘‘நம்ம கம்பெனியில 300 பேர் வேலை பார்க்கிறாங்க. இப்படி உண்மையிலேயே வேலைய விட்டு போறது வருசத்துக்கு 3 அல்லது 4 பேர்தான். அதனால நம்ம தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது. இப்படிப் போற நாலு பேர தொந்தரவு பண்ணா மிச்சம் இருக்குற 296 பேரும் நமக்கும் இதே கதிதான்னு மனச போட்டு குழப்பிக்கிட்டு ஒழுங்கா வேலை செய்யமாட்டாங்க, வேலைய விட்டு போகணும்கிற எண்ணம் இல்லாட்டினாலும்கூட’’.
 
‘‘ஆமா. மனசுல சின்ன குழப்பம் இருந்தா நம்ம வேலைய சரியா செய்ய முடியாதுதான், நான் இன்னைக்கு டியூசன்ல ஒழுங்கா கவனிக்காத மாதிரி.......’’.
 
நாதன் தனது மகன் கோபப்படுறதும் பழிவாங்குற எண்ணமும், சரியான விசயமல்ல என்று புரிந்துகொண்டான் என்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இந்த விஷயத்தை இன்னும் ஆழமாகப் பதிய வைக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி இன்னும் சில விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். 
 
‘‘சமீபத்தில் தவறாக ஓட்டிய லாரி டிரைவரை தட்டிக் கேட்க லாரி முன் நின்ற அரசு பஸ் டிரைவரை, கோபத்தில் ஏற்றிக்கொன்றார், அந்த லாரி டிரைவர். இதில் பஸ் டிரைவரின் தவறு என்ன? ஒன்றுமில்லை ஆனால், அவரது உயிரே போய்விட்டது.’’
 
‘‘அப்பா, எங்க சார் சொன்ன விஷயம் ஒன்னு ஞாபகம் வருது.  நம்ம தப்பா பைக்க ஓட்டி எதிரில ஒழுங்கா வர்றவன் மேல மோதி கீழே விழுந்தால் நமக்கு நஷ்டம்தான். அதே சமயம்,  நாம ஒழுங்கா பைக்க ஓட்டி எதிரில வர்றவன் தப்பா ஓட்டி, நம்ம மேல மோதி கீழே நாம விழுந்தாலும் நமக்கு நஷ்டம்தான்னு எங்க சார் சொல்லுவார். ஆக, சில நேரம் நம்ம சரியான பாதையில போனாலும், வர்றவன் சரியில்லன்னா வழிய விட்டு விலகி, போய்ட்டு போறான்னு விட்டுறனும், அப்படித்தானே அப்பா?’’
 
‘‘ரொம்ப நல்லாவே புரிஞ்சிக்கிட்டே ராகவ், நம்ம கம்பெனி கொள்கை படி, நம்ம கம்பெனிக்குன்னு எதிரி யாரும் கிடையாது. நாம சம்பாதிக்கிறது மனிதர்களை மட்டும்தான்’’.
 
‘‘அப்பா என் சைக்கிள்ல போ.போ.ன்னுஎழுதி வச்சுடப் போறேன். போயிட்டுப் போறானுங்க போயிட்டுப் போறானுங்க. ஹா.... ஹா... என்ற பெரிய சிரிப்போட தூங்கறதுக்கு அப்பாவும் மகனும் ஆயத்தமானார்கள்.’’
 
பெரிய  சிரிப்புச் சத்தத்தக் கேட்ட ராகவோட அம்மா, லட்சுமி, ‘‘என்ன இன்னும் தூங்காம என்ன அரட்டை?’’
‘‘அம்மா, காலையில உங்களுக்குச் சொல்றேன். இப்ப நீங்க தூங்குங்க’’
 
மொத்தக் குடும்பமும் எந்த கவலையுமில்லாமல் அன்றைக்கு அவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்களை பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டு தூங்கியது.
 
இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close