Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சகலகலா வல்லவர் டோனி..! கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆர்.எஸ்.வீரவல்லி

 சகலகலா வல்லவர் டோனி..!

கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆர்.எஸ்.வீரவல்லி

மஹேந்திர சிங் டோனி பிறந்த நாள் & சிறப்பு கட்டுரை
 
28 ஆண்டு காலமாக கைக்கெட்டாமலே போன உலகக் கோப்பையை நமக்கு வெற்றிகரமாக வாங்கித் தந்தவர் டோனி. அவர் மாதிரி ஒரு கேப்டன் ஒவ்வொரு பிஸினஸ் நிறுவனத்துக்கும் கிடைத்தால், அந்த நிறுவனம் வெற்றி பெறுவது நிச்சயம்.
 
கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்-ன் பேராசிரியர் ஆர்.எஸ்.வீரவல்லி டோனியின் சிறப்பை எடுத்துச் சொன்னார்..
 
''விளையாட்டும் பிஸினஸும் ஒன்றல்ல. இரண்டையும் இயக்கும் விதிகள் வேறு வேறானவை. ஆனால், ஒரு பிஸினஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அல்லது எம்.டி. என்பவர் எப்படிப்பட்ட தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தால் அந்த நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை டோனியிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ள முடியும். அந்த விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.''
 
ஆங்கிலத்தில் இதை 'விஷன் என்பார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம் இலக்கு என்ன அல்லது நாம் எதை அடையப் போகிறோம் என்கிற 'விஷன் முக்கியம். சுதந்திர இந்தியா என்பது காந்தியின் விஷனாக இருந்தது. சுயசார்பு பொருளாதாரம் நேருவின் விஷனாக இருந்தது. அது மாதிரி டோனிக்கும் கிரிக்கெட்டில் ஒரு தெளிவான 'விஷன் இருந்தது. உலகக் கோப்பையை நாம் மீண்டும் பெற வேண்டும் என்பதே அந்த 'விஷன். எந்த ஒரு பிஸினஸ் நிறுவனமாக இருந்தாலும் இது மாதிரி ஒரு 'விஷன் கட்டாயம் வேண்டும்.
 
ஒரு சரியான குழுவினைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பது என்பது ஒரு சிறந்த தலைவனின் அடுத்த பணி. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரும் திறமையானவராக இருக்க வேண்டும், அதோடு அவர்கள் எல்லோரையும் முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும். லட்சியம் எதுவாக இருந்தாலும் குழு உறுப்பினர்கள் அனைவரையும் அதை நோக்கி ஒருசேர அழைத்துச் செல்வது ஒரு தலைவனின் முக்கியப் பணி.
 
நோக்கம் இன்னதென்று தெரிந்தவுடன் அதை நடைமுறைச் சாத்தியமான விஷயமாக மாற்றும் திறமை ஒரு தலைவனுக்கு வேண்டும். எந்த இலக்கானாலும் அதை அடையத் தகுந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நம் முன் இருக்கும் சவால்கள் என்ன, தடைகள் என்ன, வாய்ப்புகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை விருப்பு, வெறுப்பில்லாமல் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
 
வெற்றிக் கோப்பையைப் பெறத் தேவையான சூழலை டோனி நமது அணி வீரர்களிடம் சிறப்பாக உருவாக்கினார். அதற்கு அவரது, சூழ்நிலையினை துல்லியமாக உணரும் திறன் ஒரு முக்கியமான காரணம். மேனேஜ்மென்ட் படிப்பில் இதனை 'ஸ்வாட் அனாலிசிஸ் என்கிறோம். பல சமயங்களில் நாம் லட்சியத்தை அடைய முடியாமல் போகக் காரணம் வெற்றி நோக்கிச் செல்வதற்கான உத்தியை, வழியை, வியூகத்தை அமைப்பதில் நாம் கோட்டை விட்டுவிடுவதுதான்!
 
எந்த லட்சியத்தை, எத்தனைபேர் உதவியோடு அடையப் போகிறோம் என்பதோடு, அதை எப்படி அடையப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். இந்த விஷயத்தில் நம் பிஸினஸ் நிறுவனங்கள் கொஞ்சம் வீக் என்பது இன்னொரு பெரிய குறைபாடு. உற்பத்தியை இருமடங்காகப் பெருக்குவது என தீர்மானித்துவிட்டால், மூலப்பொருளை எங்கிருந்து வாங்குவது? அதற்கான பணத்தை எங்கிருந்து திரட்டுவது என்பதை கவனிக்க வேண்டும். எத்தனை பெரிய லட்சியமாக இருந்தாலும் அதை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து, அதை உங்கள் டீம் முழுக்க கொண்டு போய் சேர்த்தாலே நிச்சயம் வெற்றிதான்.
திட்டமிட்டால் மட்டும் போதாது; அதை நடைமுறைப்படுத்த வேண்டும். உலகக் கோப்பை போட்டிகளின்போது, எந்த அணியோடு மோதும் போது எந்த விதமான ஆட்டமுறையை பின்பற்ற வேண்டும்? நிதானமான ஆட்டமா, இல்லை அதிரடி ஆட்டமா? முதலில் யாரை களத்தில் இறக்குவது? யாருக்கு எத்தனை ஓவர்? என்பது போன்ற அத்தனை விஷயங்களையும் சரியாகவே தீர்மானித்து அதன்படியே நிறைவேற்றியதால்தான் டோனியால் ஆஸ்திரேலியா போன்ற மிகப் பெரிய அணியைக்கூட எளிதில் வெற்றிகாண முடிந்தது.
 
வெற்றி இலக்கினை எட்டியவுடன் ஒரு தலைவன், குழுவினரின் பங்களிப்பைப் பாராட்டிப் புகழ்ந்து அதனைக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பாக விளையாடிய வீரர்களை, அங்கத்தினரை கௌரவித்துப் பரிசுகள் அளிக்க வேண்டும். உலகக் கோப்பையில், ஒவ்வொரு போட்டி முடிந்தபிறகும் ஆட்ட நாயகனை அறிவித்து பரிசளித்து கொண்டாடியதை நாம் டி.வி-யில் பார்த்தோம்.
 
வெற்றி பெற்றபோது அதை தனது குழுவின் சாதனையாகவும் தோல்வி என்று வரும்போது அதை தனது தவறாகவும் எடுத்துக்கொள்பவனே சிறந்த தலைவன். ஒரு அணியின் தலைவனை அந்த அணியின் உறுப்பினர்கள் அனைவருமே கருத்து வேறுபாடு இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். டீமின் சீனியர் - ஜூனியர் உறுப்பினர்கள் அனைவருமே மதித்து நடப்பவராக அவர் இருக்க வேண்டும். சீனியர் வீரரான சச்சின் டெண்டுல்கர்கூட டோனியை தனது தலைவனாக ஏற்றுக் கொண்டார்.
 
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவனால்தான் எந்த லட்சியத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட முடியும்!''
 
2012 நாணயம் முக நூல் பக்கத்தில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close