Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொழிலில் நஷ்டம் வரக் காரணம்!

சி.மதன், துணைப் பேராசிரியர், எம்பிஏ துறை,
 
மெப்கோ ஸ்ல்ங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.
 
தமிழக அரசு பேருந்து காலை சரியாக 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடைந்தது. நடத்துனர் தனது தூக்கத்தை கலைத்துவிட்டு அவசர அவசரமாக பேருந்திலுள்ள அனைத்து லைட் சுவிட்சுகளையும் ஆன் செய்து விட்டு ‘தாம்பரம் இறங்கறவங்க எழுந்திரிச்சு வாங்க’ என்றார் எரிச்சலுடன். ‘ஸ்டாப் வந்தாச்சு, ஆனாலும் தூங்குறாங்க’ என்று தனக்குத் தானே முணுமுணுத்தார். 
நடத்துனரின் சத்தத்தால், குரு தனது தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டார். ஆனாலும் அவரது ஸ்டாப் வடபழனி வர இன்னும் அரை மணி நேரம் ஆகும். அதிகாலை சென்னை அனைவருக்குமே பிடிக்கும் விசாலமான சாலைகள் சோடியம் ஒளி வெள்ளத்தில் அகப்பட்டிருக்கும், நகரமே அமைதியாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் காலைப்பொழுது விடிய விடிய நகரம் நரகமாகிவிடும், டிராபிக்கில் சிக்கி. 
வடபழனி வந்தவுடன் இறங்கினார் குரு. மொபைல் போனில் அவரது அண்ணன் சாமியைத் தொடர்புகொண்டார். 
‘‘அண்ணே, வடபழனி வந்து சேந்தாச்சு.’’
‘‘வந்தாச்சா! சிக்னல் பக்கதிலேயே இரு, நான் பைக்கல 5 நிமிஷத்துல வந்துடறேன், வெயிட் பண்ணு குரு’’
‘‘சரி அண்ணே’
சிக்னல் விளக்குகள் தனது வேலையை இன்னும் ஆரம்பிக்கவில்லை எனச் சொல்வது போல் விட்டு விட்டு, அணைந்து எரிந்த வண்ணம் இருந்தது. காலியான அந்த நூறடி ரோட்டில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வானில் பறக்கும் ஏரோப்பிளேன் போல் நாலா புறமும் பறந்து கொண்டிருந்தன.
குரு இவற்றையெல்லாம் தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கையில் அவரது அண்ணணும் வந்து சேர்ந்தார். குருவின் தோளில் சாமி கையை வைத்ததும், திடுக்கிட்டாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல், ‘‘அண்ணே எப்படி இருக்கீங்க?’’
‘‘எல்லாரும் நல்லா இருக்கோம், பிரயாணமெல்லாம் எப்படி இருந்ததது?’’
‘‘எல்லாம் நல்லபடியா இருந்தது?’’
‘‘சரி, வா போகலாம்.’’
வீட்டுக்கு வந்ததும் அண்ணி பாசத்துடன் வரவேற்றார். அவரது அண்ணி, சொந்த தாய்மாமன் மகள்தான். ஆக, குருவுக்கு அண்ணன் வீட்டில் சில மாதம் தங்கி, அவர் படித்த எம்.பி.ஏ.க்கான வேலையைத் தேட எந்த தயக்கமும் இல்லாமல் சிவகாசியிலிருந்து வந்து சேர்ந்தார்.
வாரம் ஒன்றிரண்டு இண்டர்வியூவுக்குப் போய் வந்துகொண்டிருந்தார் ஆனாலும் வேலை இன்னும் கிடைத்தபாடில்லை. சென்னையில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த வேளை, அந்த வழியே சென்ற சாமியின் நண்பர் சிலம்பரசன் மழைக்காக சாமி வீட்டுக்குள் வந்து சேர்ந்தார். சிலம்பரசன் பேசிக்கொண்டிருக்கையில் குரு வேலையைத் தேடிக் கொண்டு வந்ததை தெரிந்துகொண்டதும்,
‘‘ஏம்பா சாமி, உன் தம்பிய ஏன் என்னோட பிளாஸ்டிக் மோல்டிங் யூனிட்ல சேல்ஸ பாத்துக்க சொல்லக்கூடாது?’’
‘‘உடனே கேட்டு சொல்றேன், ஏம்பா குரு இப்படி வா’’
ஹாலுக்கு வந்தவுடன் மரியாதையுடன் சிலம்பரசனையும் அண்ணனையும் வணங்கினார்.
‘‘ஏம்பா.. என் நண்பனது யூனிட்ல சேல்ஸ் வேலை இருக்காம், சேந்துகிறியா?’’
‘‘அண்ணே நீங்க சரின்னா சேந்துடறேன்’’
‘‘ஏம்மா அவனுக்கு சாப்பாட்ட குடுத்து ரெடி பண்ணு, இப்பவே சிலம்பரசனோட அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு போகட்டும்’’.
குருவுக்கு ரொம்ப சந்தோஷம். அவனுக்கு சேல்ஸ் வேலைன்னா ரொம்ப பிடிக்கும். இன்டர்வியூக்கு போன எஃப்.எம்.சி.ஜி கம்பெனிகள்ல இங்கிலீஸ் சரியாக பேசவில்லை என்று குருவை வேலைக்கு எடுக்கவில்லை. தமிழ்நாட்டுல உள்ள மளிகைக் கடையில் விக்கிறதுக்கு எதுக்கு இங்கிலீஸ் தேவைன்னு தெரியவில்லை.  
முதல் நாள் பிளாஸ்டிக் மோல்டிங்னா என்னவென்று யூனிட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் விளக்கினார்கள். குருவும் கொஞ்சம், கொஞ்சம் புரிந்த சந்தோஷத்தில் திருப்தியில் வீடு வந்து சேர்ந்தார்.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, குரு அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, தனது இரண்டாவது நாள் வேலைக்கு அண்ணியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்பினார். குருவுக்கு சாமி பக்தி அதிகம் இல்லேன்னாலும், சாமி கும்பிடாவிட்டால் அண்ணி கையால் சாப்பாடு கிடைக்காது.
யூனிட்ல சக தொழிலாலர்கள் சந்தோஷமாக வரவேற்றனர். வெள்ளிக்கிழமை சக்கர பாயாசத்துடன் சிலம்பரசனும் வந்து சேர்ந்தார்.
‘‘குரு, இன்னைக்கு உன்னோட முதல் வேலை ஆரம்பிக்கப் போகுது. 80 ஜோடி நகை டப்பாவை அண்ணா நகர்ல இருக்குற அலி ஜுவல்லர்ஸ்ல போய் குடுத்து விட்டு வந்துடுங்க. பைக் ஓட்டுவீங்கள்ல, லைசென்ஸ் இருக்கா?’’
‘‘சார், 10-வது படிக்கும்போதே ஓட்டுவேன். இப்ப ஓட்டுறதுக்கு என்ன, எங்கிட்ட லைசென்ஸும் இருக்கு சார்’.
‘‘உங்க ஊர்ல ஓட்டுறது வேற, பட்டணதுல ஓட்டுறது வேற, கூடவே ஆனந்தன துணைக்கு அனுப்பறேன். அவன் வழியையும் காட்டுவான். அலி ஜுவல்லர்ஸ் கடைக்காரரையும் அறிமுகப்படுத்திருவான்’/.
‘‘சரி சார்’’
‘‘இந்த யமஹா பைக்ல ஃபர்ஸ்ட் கியர் கீழ, மத்ததெல்லாம் மேல’’.
‘‘இதே யமஹா பைக்க மாதிரியே என் ஃப்ரண்டும் வச்சிருக்கான், நானும் அடிக்கடி ஓட்டியிருக்கேன், சார்’’. 
‘‘சரிப்பா கவனமா போயிட்டு வாங்க, வரும்போது பணத்தயும் கையோடே வாங்கி விட்டு வாங்க’’
அலை பாயுதே மாதவன் ஸ்டைலில் யமஹா பைக்கை அனுபவித்தபடி, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி பைக்கை ஓட்டிச் சென்றார் குரு. பின்னால் உட்கார்ந்திருந்த ஆனந்தனுக்கோ ஆச்சரியமாக இருந்தது.
‘‘சார், கலக்கலா பைக் ஓட்டுறீங்க’’
‘‘எல்லாப் புகழும் என் நண்பன் குமாருக்கே’’ என்றார் குரு. 
‘‘சார், அடுத்த சிக்னல்ல தாண்டுனதும் இடதுபுறமே நம்ம ஜுவல்லரி கடை இருக்கும்’’.
‘‘முன்னாடியே வந்திருக்கிறியா இங்க?’’
‘‘ஆமாம் நான்தான் எப்பவுமே டெலிவரி பண்ணுவேன் இதே பைக்ல வந்துதான்’’
‘‘பேமெண்ட் கரெக்டா பண்ணிடுவாரா?’’
‘‘உடனே பணத்த கைல கொடுத்துடுவார், ஜோடிக்கு 1 ரூபா வீதம் கொடுப்பார். டப்பா தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை அவர் வாங்கி குடுத்துருவார்.’’
இருவரும் கடையை அணுகியதும் பாட்சா பாய் அன்புடன் வரவேற்றார்.
‘‘தம்பி, நீங்கதான் குருவா? உங்க முதலாளி போன் பண்ணியிருந்தார்.’’
‘‘ஆமா சார்.’’
‘‘உங்களுக்கு சொந்த ஊர்?’’
‘‘நமக்கு சிவகாசி’’
‘‘ஏய் எனக்கு திருநெல்வேலி தாம்பா! மழை ஏதும் அங்கிட்டு உண்டா?’’
‘‘இரண்டு நாள் பெய்தது. ஆனா, ஆடிப் பட்டம் தவறிருச்சு. யாரும் விதைக்கல’’.
‘‘விஞ்ஞான உலகத்துல பேக்ட்ரில அரிசிய செய்ய கத்துக்கிட்டாதான் இனிமேல சாப்பாடு கிடைக்கும்’’.
‘‘கூடிய சீக்கிரத்துல கண்டுபிடிச்சிருவாங்க பாய்! வந்த வேலைய மறந்துட்டேன். ஆனந்து 80 சோடி நகை டப்பிய குடுப்பா. பாய் கொஞ்சம் எண்ணிப் பாத்துக்கோங்க.’’
‘‘பத்து வருசமா உங்ககிட்டதான் டப்பி வாங்கிட்டு இருக்கேன். ஒரு தடவைகூட எண்ணுனது கிடையாது. எல்லாம் சரியாக இருக்கும்.’’
இதை எல்லாம் பாத்துக்கிட்டு இருந்த ஆனந்து குருவைப் பார்த்து,
‘‘குரு சார், நம்ம தொழில் எப்பவும் சுத்தமா இருக்கும், வந்து ரெண்டு நாளுதானே ஆகுது. போக போக தெரிஞ்சிப்பீங்க.’’
‘‘ஆனந்து இப்படி நல்ல பேரு இருக்குற கம்பெனில வேலை செய்யிறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. எங்க அண்ணன் உருப்படியா ஒரு வேலையில சேர்த்து விட்டிருக்கார்’’.
‘‘குரு, 80ரூ கூலியப் பிடிப்பா’
‘‘சரி சார், முதலாளிகிட்ட டெலிவரி பத்தியும், நீங்க பண்ண பேமன்ட பத்தியும்  சொல்லிடுறோம்’’.
இருவரும் யமஹா பைக்கில் சென்றனர். யூனிட்டுக்கு வந்ததும் முதலாளியைப் பார்த்து குரு, ‘‘முதலாளி ஜுவல்லரி வேலை முடிஞ்சது. ஆனா வாங்குன காசுக்கு பெட்ரோல் செலவுக்கு சரியாயிடும் போல’’.
‘‘என்னப்பா சொல்ற’’
‘மொத்தம் அப் அண்டு டவுண் 28 கி.மீ. உங்க வண்டி மைலேஜ் 40 தான். அப்போ முக்கால் லிட்டர் பெட்ரோல் காலியாயிருக்கும். முக்கால் லிட்டர் பெட்ரோல்விலை ரூ50ஐ நெருக்கிரும். ஆயிலோட சேர்த்து ஒரு கி.மீ பராமரிப்பு செலவு 0.5 ரூ.ன்னு வச்சுக்கிட்டாக்கூட டெலிவரிக்கு நாம பண்ணின செலவு 75 ரூ. அப்ப டப்பி செஞ்ச கூலிக்கு பணம் எங்க, மோல்டிங் மிசினுக்கான காசு எங்கே, யூனிட் வாடகைக்கான செலவு எங்கே. இந்த பிஸினஸ செய்யாம விட்டிருந்தாகூட கம்பெனிக்கு லாபம் கிடைச்சிருக்கும்’’.
வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. ஆனாலும் குரு, இளங்கன்னு பயம் அறியாதது போல பட படவென்னு 20 வருஷம் தொழில் பண்ணிக்கொண்டு இருக்கிறவர்கிட்ட, அவர் பண்ணிக் கொண்டு இருக்கிற தப்பை யூனிட்ல உள்ள எல்லார் முன்னாடியும் போட்டு உடைச்சது எல்லாருக்கும் அதிர்ச்சிதான்.  
ஆனாலும் அதுல ஏதோ ஒரு உண்மை இருக்குது என முதலாளி யோசிக்க ஆரம்பிச்சார். டீ வந்தது. எல்லாரையும் மிசினுங்கள ஆஃப் பண்ணிட்டு முதலாளி டேபிள் கிட்ட வந்து டீ குடிக்க சொன்னாரு. அதிலிருந்தே எல்லா ஊழியர்களுக்கும், முதலாளி ஏதோ ஒன்னப் பத்தி பேசப் போறாருன்னு தெரிஞ்சி, எல்லாரும் வந்து நின்னாங்க. மொத்த தொழிலாளர்கள் 10 பேர்தான்.
‘‘இன்னிக்கு வந்த இந்த பையன் நம்மள யோசிக்க வச்சிட்டார். பயமில்லாம நம்ம குரு பேசினதைப் பத்தி யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம். நானும் யோசிச்சேன் அவர் சொன்னதுல நியாயம்  இருக்கு’’
‘‘முதலாளி ஏதோ அறியாம சொல்லிட்டேன்….. சொல்லனும்னு தோணிச்சுது. அதான் பைக்க விட்டு, எறங்கியும் எறங்காமலே சொல்லிட்டேன்’’
‘‘பரவாயில்ல நல்ல விசயத்த நீ சொன்னா என்ன, ஆனந்து சொன்ன என்ன, இல்ல வேற யாரும் சொன்னா என்ன.. சொன்னவங்க முக்கியம் இல்ல, சொல்லப்பட்ட விசயம்தான் முக்கியம். ஜேம்ஸு நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க’’.
ஜேம்ஸ் அந்த யூனிட்டின் மேனஜர். அவரை அழைத்தார். 
‘‘ஜேம்ஸ், நம்ம கடை வாடகை எவ்ளோ?’’
‘‘6,000 ரூ’’
‘‘அப்ப ஒரு நாளுக்கு, ஒரு மிசினுக்கு’’
‘‘மொத்தம் 6 மிசின். ஆக நாளொன்னுக்கு 33ரூ’’
‘‘அப்போ மணிக்கு’’
‘‘தோராயமா 4ரூ முதலாளி’’
‘‘ஒரு மணி நேரத்துல எத்தனை நகை குப்பி மோல்டு பண்ணலாம்?’’
‘‘ஒரு மணி நேரத்துக்கு ABS பிளாஸ்டிக் சிப்ஸ உருக்க ஆகும் கரண்ட் செலவு எவ்வளவு?’’
‘‘ஆயிரம் வாட் ஹீட்டர் ஆக 1 யூனிட் கரண்ட், மோல்டிங் மெசின் பராமரிப்பு செலவு ஒண்ணும் பெரிசா இல்ல. ஆக பராமரிப்பு செலவ விட்டுருவோம். நம்ம ஆனந்துக்கு 1 மணி நேர கூலி குடுப்போம் அது எவ்வளவு?’’
‘‘உத்தேசமா 30ரூ முதலாளி’’
‘‘சரி, இப்போ நகைக் கடை டப்பி 80 ஜோடி செய்ய எவ்வளவு காசு ஆகுது நமக்கு?’
‘‘கடை வாடகை                        33 ரூ
கரண்டு பில் 1 யூனிட்              10 ரூ
ஆனந்து கூலி                          30 ரூ
டெலிவரி காசு                       106 ரூ
ஆக மொத்தம்                       179 ரூ
நம்ம லாபம் 20 வச்சுக்கிட்டா, ரூ.79ம்.... 36ம்... சேர்த்தா 205ரூ வருது’’
‘‘ஜேம்ஸ் அப்போ நம்ம இவ்வளவு நாளா நஷ்டத்துக்குத்தான வேலை செஞ்சு கொடுத்துட்டுருக்கோமா? சில நேரம் பிஸினஸ் பண்ணாம இருந்தா கூட கம்பெனிக்கு லாபம்தான் போல’’
‘‘சரி, அலி ஜுவல்லரிக்கு சப்ளை பண்ணனுமா, வேண்டாமா?’’ என குரு கேட்டார்.
‘ஜேம்ஸ் ஏன் உடனே முடிவு எடுக்கணும், நம்ம பாட்சா பாய்தானே, அவர் நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர். அவர்கிட்ட நேர்ல போய் பேசிட்டாலே அவரே பைசாவ கூட்டி குடுப்பார்’’.
‘‘ஆமாம் அதுவும் அவரால நமக்கு நெறைய ஆர்டர் வந்துருக்கு’’
‘‘வந்திருக்கில்லியா, இன்னிக்கு சாயங்காலம் அவர்ட்ட பேசிடறேன். ஜேம்ஸ் நீங்க நம்ம நகை குப்பி ஆர்டருக்கான செலவு கணக்கு பண்ணது போல எல்லா ஆர்டருக்கும் கணக்கு பண்ணுங்க’’
‘‘சரி ஐயா’’
குருவை தன் பக்கம் அழைச்சுட்டு சாமிக்குப் போன் போட்டார்.
‘‘இந்தப் பக்கம் சிலம்பு, அங்கிட்டு சாமியா?’’
‘‘சொல்லுங்கண்ணே, சாமிதான், நம்ம பய என்ன செய்றான்?’’
‘‘உன் தம்பி கலக்கிட்டான், வந்த மறுநாளே ரொம்ப சந்தோசமா இருக்குப்பா, நைட் குருவ உன் வீட்ல விட்டுட்டு சாப்பிட்டுதான் போறேன், கொழுந்தியாள்ட்ட சொல்லிடு’’
‘‘சரி வாங்கண்ணே’’
யூனிட்டே ஒரு சுறுசுறுப்போட வேலை பார்க்க ஆரம்பிச்சுது, புது தெம்போட. ஜேம்ஸும் ஒவ்வொரு ஆர்டருக்கும் எவ்ளோ ஆகுதுன்னு பேப்பரும், பேனாவும் கால்குலேட்டரும் கையுமா மதிய சாப்பாட்டக்கூட மறந்து, கணக்கு பண்ணிக்கிட்டு இருந்தார்.
சாயங்காலம் டீயும் வந்தது; முதலாளியும் வந்தார். அனைவருக்கும் பாட்சா பாய் என்ன சொன்னாருன்னு தெரிஞ்சுக்கிற ஆவல் அவர்களது கண்கள்ல தெரிஞ்சது.
முதலாளியப் பார்த்து ஜேம்ஸ், ‘‘என்னாச்சு முதலாளி?’’
‘‘நான்தான் சொன்னேனே, பாட்சா பாய் நம்மளோட நலம் விரும்பின்னு, இந்த வருசம் பூரா பட்டுவாடா பண்ண 500 குப்பிக்கும் அரியரா 1000 ரூபாய் கொடுத்தார். ஒரு குப்பிக்கு 3ரூன்னு அவரே கூலியை நிர்ணயம் பண்ணிட்டார், என்ன ஜேம்ஸ் சரிதானே?’’
‘‘சரி பாஸ். நம்ம குருவுக்குத்தான் நன்றி சொல்லணும்’’
‘‘எனக்குப் போய் நன்றி... அது, இதுன்னு சொல்லாதீங்க. நம்மெல்லாம் ஒரு டீம். நம்ம முன்னேற்றத்த யாரும் தடுக்க முடியாது’’.
டீம் எல்லாத்துக்கும் ஒருவித புல்லரிப்பு ஏற்பட்டது. குரு பேச்சைக் கேட்டதும்.... பின்னர் இந்த நிறுவனம் நன்றாக செயல்பட்டது. இதற்கப்புறம் ஆர்டர் எடுப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் லாபத்தோடுகூடிய ஆர்டர் என்ற குறிக்கோளாக மாற்றி ஒற்றுமையாக வேலை செய்தனர்.
(நிறைந்தது)
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close