Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடி ரிட்டர்ன்: ஆகஸ்டு 5க்குள் தாக்கல் செய்யாவிடில் என்ன பாதகம்?

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்பதை தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஆகஸ்ட் 5 வரை நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. இந்தக் கெடு தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.
 
 
"வருமான வரிக் கணக்குத் தாக்கல் என்பது வருமான வரி வரம்பில் இருக்கும் எல்லோருக்கும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை ஆகும். அதை கடைசி நாளில் செய்ய நினைப்பதை முதலில் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லோரும் கடைசி நாளில் முண்டியடித்துக்கொண்டு தாக்கல் செய்ய முயற்சிப்பதால்தான் இணையதள சர்வர் முடங்கிப் போனது. ஆகஸ்ட் 5 வரை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை நீட்டிக்க இதுவே காரணம்.
 
இந்தப் புதிய கெடு தேதியான ஆகஸ்ட் 5க்குள்ளும் நம்முடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் போனால் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு வட்டி விதிக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்பது சட்டத்தில் இருந்தாலும்கூட பெரும்பாலான அசெஸ்மென்ட் அதிகாரிகள் அபராதத்தைச் சேர்ப்பதில்லை. ஆனால் அடுத்த நிதி ஆண்டில் இருந்து கெடு தேதிக்குள் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் இருக்கும். ஏனெனில் அபராதம் என்பதை தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் என்று மாற்றவிருக்கிறார்கள். 
 
மேலும் முக்கியமான ஒரு பிரச்னை என்னவென்றால் ரிவைஸ்ட் ரிட்டர்ன் செய்ய முடியாது. 2017 மார்ச் மாதத்துக்கான வருமான வரிக் கணக்குக்கு ரிவைஸ்ட் ரிட்டர்னை 2019 மார்ச் வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் வருமான வரிக் கணக்குத் தாக்கலை நிர்ணயிக்கப்பட்ட கெடு தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் உங்களால் ரிவைஸ்ட் ரிட்டர்ன் தாக்கல் செய்யவே முடியாது. உங்களுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதேனும் வருமானம் சேர்க்கப்படாமல் விட்டுப் போயிருந்தாலோ, ஏதாவது பிரச்னை இருந்தாலோ அதனை உங்களால் மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. 
 
அதுமட்டுமில்லாமல் பிசினஸில் ஏதேனும் நஷ்டம் இருக்கிறது என்றால் அதனை அடுத்த நிதி ஆண்டுக்கு கேரிஓவர் செய்ய முடியாது. பிசினஸ் செய்பவர்கள் கெடு தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு இது மிக முக்கியமான பாதகமாக இருக்கும்" என்று சொல்லி முடித்தார்.
 
வரிக் கட்ட வேண்டியது நாம் நாட்டுக்குச் செய்யும் கடமை ஆனால் வரிக்கு வட்டியும் அபராதமும் சேர்த்து கட்டுவது நமக்கு நாமே செய்துகொள்ளும் தீமை என்பதை உணர்ந்து கெடு தேதிக்கு முன்னரே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாமே!  

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close