Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு ஊழியர்களுக்கு ஒரு ரூபாய் மாதச் சந்தாவில் உருவான உயிர்க் காப்பீட்டுத் திட்டம்


1974-ஆம் ஆண்டு...

இன்றைய தேதியில் நம்மில் பலரிடம் ஓரளவாவது பணம் கையிருப்பில் உள்ளது. அன்றைய நிலைமை அப்படி இல்லை. அவசரத் தேவைக்கு அக்கம்பக்கத்தவரிடம் பணம் புரட்டுவது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அடகுக்கடை, வட்டிக்கடைதான் வழி!

'தேசியமயமாக்கப்பட்டிருந்த வங்கிகளில் கடன் பெறலாம்' என்பதே பெரும்பாலோர்க்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால், 'கடன்' என்ற சொல், ரகசியமாக உச்சரிக்கப்பட வேண்டிய ஒரு கெட்ட வார்த்தை என்று கருதப்பட்ட காலகட்டம் அது.

இன்றைக்கு 'நிதி நிர்வாகம்' சொல்லித்தர, நாணயம் விகடன் போன்ற புறநிதி ஆலோசகர் (External Financial Advisor) உள்ளது போல், அன்றைக்கு 'பணப்பாடம்' சொல்லித்தர ஏதுமில்லை; யாருமில்லை.

பணம் பரவலாக்கம் பெறாத இப்படியான காலகட்டத்தில் ஓர் அரசு ஊழியர் இறந்துபோனால்?

'இறந்துபோன ஊழியரின் குடும்பம் நிதி ஆதாரமின்றி அல்லப்படும் அவலநிலைக்கு தள்ளப்படக் கூடாது' என்ற உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குடும்ப நலநிதித் திட்டம் (Tamilnadu Government Servants's Family Benefit Fund Scheme). 01.01.1974-ல் துவக்கப்பட்ட இந்தத்  திட்டத்துக்கு, முதலில் 10 ரூபாய் மாதச்சந்தா பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர், சந்தா தொகை மாதத்துக்கு ஒரு ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

பணியில் சேர்ந்த முதல் மாதம் முதல், ஓய்வுபெறும் கடைசி மாதம் வரை சந்தா தொகை சம்பளத்தில் பிடிக்கப்படும். இடைக்காலத்தில் இறந்து போகும் ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பபாதுகாப்பு நிதியாக ரூ.10,000/- என்பது அப்போதைய குறைந்தபட்ச ஊதியத்தைப் போல் 50 மாத ஊதியத்தை விடவும் அதிகமான தொகை!

திட்டத்தின் விரிவாக்கம்

முறையான சம்பள ஏற்ற முறையில் (Regular Scale of Pay) ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம், கிராமப்பணியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பின்னர், திட்டமானது மேன்மேலும் விரிவாக்கம் பெற்று, தற்போது,  தொகுப்பூதியம் (Consolidated Pay) பெறுவோர், மதிப்பூதியம் (Honororium) பெறுவோர், பகுதி நேர பணியாளர்கள், சில்லரைச் செலவின நிதியிலிருந்து (Paid from contigencies) ஊதியம் பெறுவோர் என பல்வேறு பதவி நிலைகளில் உள்ளோருக்கும் பலன் தரும் வகையில் பல்கிப் பெருகி விட்டிருக்கிறது.

உயர்த்தப்பட்ட சந்தா


திட்டம் துவங்கிய ஜனவரி 1974-ல் ஒரு ரூபாயாகத் துவங்கிய மாதச்சந்தா, 01.04.19ல் ரூ3/ எனவும், 01.07.1989-ல் ரூ5/- எனவும், 01.07.1991-ல் ரூ.10/- எனவும், 01.09.1997-ல் ரூ.20/- எனவும், 01.02.2006-ல் ரூ.30/- எனவும் படிப்படியாக உயர்ந்து, 01.02.2016முதல் ரூ.60/- ஆக நிலை கொண்டுள்ளது.

பணியிடை நீக்கம் (SUSPENSION) செய்யப்பட்ட ஊழியருக்கு, அவரது பிழைப்பூதியத்தில் சந்தா பிடித்தம் செய்யப்படும். இதேபோல், சம்பளம் இல்லாத விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்குத் திரும்பி பெறும் முதல் ஊதியத்தில் விடுபட்ட சந்தா ஒட்டு மொத்தமாக பிடிக்கப்படும்.

பணியிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் பணியமர்வு பெற்றுள்ளோரிடமும், பணி நீட்டிப்பில் உள்ள ஊழியரிடம் சந்தா பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஏனெனில், இவர்களுக்கு இத்திட்டம் பொருந்தது.
சந்தா தொகை வரிவிலக்குக்கு உரியது.


அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நிதி

குடும்ப பாதுகாப்பு நிதியானது ரூ.10,000/- ல் துவங்கி, சந்தா தொகை உயர்வுக்கு ஏற்ப, ரூ.20,000/- ரூ.40,000 - ரூ.60,000 - ரூ.1,00,000  மற்றும் ரூ.1,50,000- என உயர்த்தப்பட்டு 01.02.2016 முதல் நிதி உதவித்தொகை ரூ.3,00,000-ஆக நடைமுறையில் உள்ளது. குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வருமான வரி கிடையாது.
 

 

பெயர் மாற்றம்

01.01.1974-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குடும்ப நல நிதித்திட்டம் என்ற பெயரில் துவங்கிய திட்டமானது, 14.11.1990 முதல் 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம்' (TAMILNADU GOVERNMENT SERVANTS' FAMILY SECURITY FUND SCHEME) என பெயர் மாற்றம் பெற்றது.

திட்டநடைமுறை:


* குடும்பம் இல்லாத அரசு ஊழியர் தவிர்த்து, மற்ற அனைத்து ஊழியர்களும் திட்டத்தில் சேர வேண்டும்.
* திட்டத்தின் பயன் யாருக்குச் சேர வேண்டும் என, ஊழியர் வாரிசு நியமனப்படிவம் (Nomination Form) எழுதித் தந்த பிறகே அவரது முதல் ஊதியம் (FIRST MONTH'S SALARY) வழங்கப்படும்.

* மணமாகாத ஊழியர், தனது தந்தை, தாய், சகோதர சகோதரிகளை வாரிசாக நியமிக்கலாம். மணமான உடன் கணவர் / மனைவி, பிள்ளைகளை வாரிசாக நியமிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தக்க மாறுதலை செய்ய வேண்டும்.

* விபத்து, தீக்காயம், நீரில் மூழ்கி இறத்தல், பாம்பு கடி, தற்கொலை, படுகாயம் முதலான காரணங்களால் அகால மரணம் ஏற்படும் ஊழியரின் வாரிசுக்கு, உரிய விதிமுறைகளைப்பின்பற்றி தொகை வழங்கப்பட்டு விடும்.


* கொலை செய்யப்பட்ட ஊழியர் என்றால், கொலை செய்தவர் 'வாரிசுதாரரே' என சந்தேகிக்கப்பட்டால், வழக்கின் தீர்ப்பு வரும் வரை நியமிக்கப்பட்டுள்ள வாரிசுக்கு தொகை வழங்கப்படமாட்டாது. அவரே கொலையாளி என நிரூபணமானால் வேறு வாரிசுதாருக்கு தொகை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசு எனில், தொகை சமமாக பிரித்து வழங்கப்படும்.

* ஊழியரால் வாரிசுதாரராக நியமனம் செய்யப்பட்ட ஒருவர், ஊழியர் இறந்த போது உயிரோடு இருந்து, குடும்ப பாதுகாப்பு நிதியை பெறுவதற்கு முன் அவர் இறந்து போய் விட்டால், நிதியானது வாரிசுதாரரின் வாரிசுக்கு வழங்கப்படும்.

* ஊழியர் நியமனம் செய்த வாரிசு படிவம் செல்லுபடி ஆகாமல் (INVALID) போனாலும், வாரிசுதாரரை நியமிக்காமலே ஊழியர் இறந்து போய் விட்டாலும், தகுதியான வாரிசு / வாரிசுகளுக்கு பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு விடும்.

* எந்தக்  காரணத்தை முன்னிட்டும் குடும்ப பாதுகாப்பு நிதியானது, 'வாரிசுகளுக்கு வழங்க இயலவில்லை' என்ற காரணத்துகாக மீண்டும் அரசுக்கணக்கில் போய் சேர்ந்து விடாது (WILL NOT LAPSE TO GOVERNMENT) என்பதுதான் முக்கிய அம்சம். குடும்ப உறுப்பினர் (family member) என்ற வரையறைக்கு உட்படாத வாரிசு என்றாலும், நிதி அவருக்கு / அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.

* காணாமல் போன ஊழியரின் குடும்பத்துக்கும் தொகை வழங்கப்படும். அதாவது, ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் முதல் தகவல் (F.I.R.) அறிக்கை பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் 'ஊழியரை கண்டுபிடிக்க முடியவில்லை' என்று சான்றளிப்பார்கள். இதன் அடிப்படையில், காணாமல் போனவர், இறந்து போனதாக நீதிமன்ற ஆணை பெற்று, பாதுகாப்பு நிதி வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

* பணியிலிருந்து ஓய்வு பெற்று அன்று இரவு 12.00 மணி வரை இறந்து போன ஊழியர் குடும்பத்துக்கும் நிதி வழங்கப்படும்.

சிறப்பம்சம்


'தமிழ்நாடு அரசுப்பணியாளர் குடும்ப பாதுகாப்பு நிதியை' போல், பணத்துக்கு பங்கமில்லாத ஒரு நிதியம் FUND இருப்பதரிது. ஏனெனில், இறந்து போன ஊழியர் பாக்கி வைத்து விட்டுப்போன எந்த ஒரு கடன் தொகையையும் இந்த நிதியில் பிடித்தம் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, நீதிமன்ற ஆணைப்படியான (Court Attachment) பணப்பிடித்தமும் இதிலிருந்து தரப்பட மாட்டாது. இவ்வாறு எந்த வித பிடித்தத்துக்கும் உட்படாத பாதுகாப்பு நிதியிலிருந்து இறந்து பட்ட ஊழியரின் இறுதுச் சடங்குகளுக்கு ரூ.25,000/- முன்பணம் பெறலாம். இந்த முன்பணத்தொகை போக மீதியுள்ள ரூ.2,75,000/- பின்னர் வழங்கப்படும்.

இறந்துபோன ஊழியர் எந்த அலுவலகத்தில் பணியாற்றி இறந்து போனாரோ அந்த அலுவலகத் தலைவரால் பட்டியல் மூலம் கருவூலத்திலிருந்து பணம் பெற்று வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலணைத்தும் 'அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி' சார்ந்தவை.

குழு காப்பீட்டுத் திட்டம்
நகராட்சி, நகரப்பஞ்சாயத்து, நகரியம் போன்ற உள்ளாட்சி (Local Body) ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன (Government Aided Educational Institution) ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர் ஆகியோருக்கும் மேற்கண்ட குடும்ப பாதுகாப்பு நிதி நீட்டிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர், இந்தத் 'திட்டமானது உள்ளாட்சி ஊழியர்களுக்கு இசைவானதல்ல' என மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) சுட்டிக்காட்டியதன் பேரில் 01.01.1978 முதல் உள்ளாட்சி மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 'குழுக்காப்பீட்டுத் திட்டம்' அமலாக்கம் பெற்றது.

குழுக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி, உதவி பெறும் கல்வி நிறுவன ஊழியர்களுடன் சத்துணவு திட்ட பணியாளர்கள், பகுதி நேர பஞ்சாயத்து எழுத்தர், பகுதி நேர சுகாதாரப் பணியாளர், மேல்நிலை நீர்த்தொட்டி மற்றும் விசைப்பம்பு இயக்குவோர் உள்ளிட்ட பலரும் பயன் பெறுவர்.

'தமிழ்நாடு அரசுப்பணியாளர் குடும்ப பாதுகாப்பு நிதி'யைப் போன்று குழுக்காப்பீட்டுத் திட்ட ஊழியர் சந்தோஷம் நாளது தேதியில் ரூ.60/-தான். இழப்பீட்டுத் தொகையும் 3,00,000-தான்.

ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையானது எல்.ஐ.சி. நிறுவனத்தால் வழங்கப்படும். அத்துடன், பாதுகாப்பு நிதி உயர்த்தப்படும் போது அதற்குரிய ஆண்டுச்சந்தா எவ்வளவு என்பதை எல்.ஐ.சி. அறிவிக்கும் ஊழியர் செலுத்தியது போக, மீதமுள்ள சந்தா தொகையை அரசு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும். அதன்படி,

01.02.2016 முதல் குழுக்காப்பீட்டுத் திட்ட நிதி ரூ.3,00,000. ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்குமான ஆண்டுச்சந்தா ரூ.9. எனவே, ரூ.3,00,000-க்கான ஆண்டுச்சந்தா 300000x9 /1000 = 27000

இந்த ஆண்டுச்சந்தா 2700-ல் ஊழியர் செலுத்தும் சந்தா (12x60) ரூ.720/- போக மீதித்தொகையை உள்ளாட்சி நிறுவனங்கள் செலுத்தும்.

மேற்கண்ட இரு திட்டங்களும் கருவூலக் கணக்குத்துறை இயக்குநரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


- ப.முகைதீன் சேக்தாவூது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close