Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான  விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.      

சந்தை வாய்ப்பு!

 

எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.

தயாரிக்கும் முறை!

உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன், மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கி, இதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.


தரக்கட்டுப்பாடு!

எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும், சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.


இயந்திரம்!

300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.  

அத்தியாவசிய தேவைகள்!

தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

மூலப்பொருட்கள்!

உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும்.  உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.


வேலையாட்கள்!

சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2

பேக்கிங் வேலையாட்கள்- 2

உதவியாளர்கள் - 2

விற்பனையாளர் - 1


செயல்பாட்டு மூலதனம்!

முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

சிறிய அளவிலும், கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

-பானுமதி அருணாசலம்
  படங்கள் : இரா. கலைச்செல்வன்

முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை

''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.

குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close