Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - மார்த்தாண்டம்.

 

கன்னியாகுமரி என்றாலே உடனே நம் எல்லோரது ஞாபகத்துக்கும் வருவது முக்கடல் சங்கமம்தான். தென்னை, வாழை, காய்கறி, ரப்பர் என மாவட்டம் முழுவதும் விவசாயம் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. இந்த பயிர்களுக்கு நடுவே, ஊடுபயிர் சாகுபடியாக தேனீ வளர்க்க, அதிலிருந்து விவசாயிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த மாவட்டம் முழுக்க தேன் உற்பத்தி பெரிய அளவில் நடப்பதால், குறைந்த விலையில் தரமான தேன் கிடைக்கிறது.

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேன் விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனையாகிறது. இன்னும் சிலர் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலர் ஜான் வெஸ்லியைச் சந்தித்தோம். ''இங்கு பெரும்பாலான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து, இருப்பு வைத்து அக்மார்க் சான்றிதழ் பெற்று விற்பனை செய்கிறோம். 1937-ம் ஆண்டு இருபத்தைந்து நபர்கள் சேர்ந்து தொடங்கிய இந்த சங்கத்தில் தற்போது 1,361 பேர் உறுப்பினராக இருக்கின்றனர்.
 
எங்கள் சங்கத்திலிருந்து மட்டும் கடந்த வருடத்தில் 2,67,496 கிலோ தேன் இந்தியா முழுவதுக்கும் அனுப்பிருக்கோம். விவசாயிகள் கொண்டுவரும் தேனை பதப்படுத்தி ஒரு கிலோ பாட்டில் 186 ரூபாய்க்கும், அரை கிலோ 101 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். வாங்குபவர்கள் பாட்டில் கொண்டுவரும்பட்சத்தில் 500 ரூபாய்க்கு, தேன் வாங்கினால் பத்து சதவிகித தள்ளுபடியும், பாட்டில் இல்லையென்றால் ஐந்து சதவிகித தள்ளுபடியும் கொடுக்கிறோம். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை என மார்த்தாண்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சுற்றுலா வருபவர்கள் மார்த்தாண்டம் தேனை வாங்காமல் செல்வதில்லை. இதே அளவுக்கு தரமான தேனை வேறு ஊர்களில் வாங்க வேண்டுமென்றால் விலை அப்படியே டபுளாகும்' என்றார்.
 
தேனை பதப்படுத்திச் சொந்தமாக விற்பனை செய்துவரும் அன்பு செழியனிடம் பேசினோம். ''என்னோட வீட்டு புழக்கடை, ரப்பர், அன்னாசி, வாழைத் தோட்டங்களில் தேனீ பெட்டிகளை வைச்சுருக்கேன். தேனீ பெட்டி தயாரிப்பு, பாதுகாப்பு நுட்பங்கள்னு நுணுக்கமான நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் மேல ஏக்கருக்கு பத்து பெட்டிதான் வைக்கணும். அதிகமா வைத்தால் தேன் கிடைக்குறது குறைஞ்சுடும். கூடவே பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதிலும் சிக்கலை ஏற்படுத்திடும். பொதுவாகத் தோட்டங்களில் பயிர்கள் பூ பூக்கும் காலங்களில் கூடுதலா தேன் கிடைக்கும். அதை எடுத்து நானே பிராசஸ் பண்ணி பாட்டிலில் அடைச்சு விற்பனை பண்ணிட்டு இருக்கேன். நுகர்வோர்களே தேடி வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. எங்க பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை குடிசைத் தொழிலாச் செஞ்சுட்டு இருக்காங்க'' என்றார் மகிழ்ச்சியோடு.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்த்தாண்டத்திலிருந்து தொடங்கி, குழித்துறை வரை சாலையின் இருபக்கமும் தேன் விற்பனை கடைகளின் அணிவகுப்புதான். கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவது போக, இங்குள்ள கடைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிலோ தேன் தினசரி வெளி இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அதிலும் 'அக்மார்க்’ முத்திரை பெற்றுவிட்டால் அதற்கான விற்பனை வாய்ப்பும் ஏறுமுகம்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகத்தில் வேளாண் அலுவலராக இருக்கும் ஆரோக்ய அமலஜெயனிடம் பேசினோம். ''தேனைப் பொறுத்தவரை பத்து கட்ட ஆய்வுக்கு உட்படுத்தி ஸ்டாண்டர்டு, ஏ, ஸ்பெஷல் என மூன்று பிரிவாக வகைப்படுத்துறோம். ஒரு குவிண்டால் தேனை தரம் பிரிப்பு செய்ய மத்திய அரசுக்கு 12 ரூபாய், மாநில அரசுக்கு 15 ரூபாய் என மொத்தம் 27 ரூபாய்தான் செலவாகும். அதாவது ஒரு கிலோவுக்கு வெறும் 27 பைசாதான். ஆனால், அக்மார்க் முத்திரை குத்திய தேனுக்கு உள்ளூர் முதல் உலகம் முழுவதும் விற்பனை வாய்ப்பும் பிரகாசம்தான்.
தேனைப் பொறுத்தவரை நாங்கள் நேரடியாகவே விவசாயிகள் தேனை சேமித்து வைத்துள்ள குடோன்களுக்குச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துறோம். அக்மார்க் முத்திரை வாங்கிய தேனை பதினெட்டு மாதங்கள் வரை விற்கலாம். மார்த்தாண்டம் தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால் நிறைய போலி தேன்களும் உலாவுகிறது. நுகர்வோர்கள் எச்சரிக்கையாக அக்மார்க் முத்திரை குத்திய தேனை வாங்கி பயன்படுத்தலாம்'' என்று பயனுள்ள தகவல்களை எடுத்து வைத்தார்.
மார்த்தாண்டத்தைச் சுற்றி பல நூறு கடைகள் இருந்தாலும், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெந்நி கூட்டுறவு சங்கத்திலும், மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்திலும், கதர் கிராமத் துறை அலுவலகத்திலும் சுத்தமான தேன் கிடைக்கும். இங்கு சென்று வாங்க முடியாதவர்கள் அக்மார்க் முத்திரைகொண்ட தேனை மட்டும் வாங்கலாம்! அடுத்தமுறை நாகர்கோவிலுக்கோ, கன்னியாகுமரிக்கோ போனால், ஒரு பாட்டில் தேனை மறக்காமல் வாங்கி வரலாம்!
- என்.சுவாமிநாதன்,
படங்கள். ரா.ராம்குமார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close