Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்!

வாரம் ஒரு தொழில்!


நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.

விர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.  

சந்தை வாய்ப்பு!

 

பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.  

தயாரிப்பு முறை!

சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி,  போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 'டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

தரக்கட்டுபாடு

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25  லட்சம் வரை செலவாகும்.

இயந்திரம்!

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.


கூடுதல் செலவுகள்!

தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

மூலப் பொருள்கள்!

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

வேலையாட்கள்!

முன்னனுபவம் உள்ள நபர் - 1

உதவியாளர்கள் - 2

விற்பனையாளர் - 1

வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.


உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!

நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.

மானியம்

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.

சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!

-பானுமதி அருணாசலம்

''அவசரத்துக்குப் பசியைத் தணிக்கவும், நொறுக்குத் தீனியாகவும் பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு எப்போதுமே டிமாண்ட்தான். அதேநேரத்தில் பெரிய எம்.என்.சி. நிறுவனங்களும் லோக்கல் பிராண்ட்களுக்கு நிகராக குறைந்த விலையில் விற்பனை செய்ய இறங்கிவிட்டதையும் சமாளிக்க வேண்டும். விதவிதமான சுவைகளுடன், வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்திகளோடு இறங்கினால் இந்தப் போட்டியை சமாளிக்கலாம், தனியரு அடையாளமும் பெறலாம். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. தென்ஆப்பிரிக்க நாடுகளில் நமது தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த பிஸினஸில் இருக்கும் டிமாண்டை போலவே சில ரிஸ்க்கான விஷயங்களும் இருக்கிறது. முன்பு சிறுதொழிலாக பிஸ்கெட் தயாரிப்பவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற மூலப்பொருட்களை அரசு கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மானிய விலையில் கொடுப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை ஏறியுள்ளதால் மீண்டும் மானிய விலையில் அவைகளை வழங்கினால் ஏற்றுமதி செய்வதற்குக் கூடுதல் பலனாக இருக்கும். இந்த ரிஸ்க் அனைத்தையும் சமாளித்து பிஸ்கெட் தயாரிப்பில் நிலைத்துவிட்டால் நீங்களும் பிராண்டட் நிறுவனமாக வளரலாம்.''

(நாணயம் விகடன் இதழில் இருந்து)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close